Thursday, April 8, 2010

சிட்டுக்குருவி

குறிப்பு -  புத்தகம் பேசுது - முதல் பிரேவசம் பகுதிக்காக எழுதப்பட்டது


என் முதல் பிரேவசம் என்பது என் பதினோரு வயதில், கோகுலம் என்ற குழந்தைகளுக்கான பத்திரிகையில் வெளிவந்த "சிட்டுக்குருவி" பற்றிய கவிதை தான். என் காலஞ்சென்ற தந்தை பேராசிரியர் இரா.இரகுபதி அப்போதெல்லாம் குமுதம், விகடன் கூட வாசிக்க விட மாட்டார். தாமரை, செம்மலர், கோகுலம், பூந்தளிர், ஆங்கிலத்தில் வரும் சோவியத் பத்திரிகைகள் தவிர மற்றவற்றிற்கெல்லாம், வீட்டில் தடை.நாங்கள் குடும்பமாக போவதென்றால் தாத்தா வெங்கடசாமியுடன்(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர்) கட்சியின் மாவட்ட கவுன்சில் போன்ற கூட்டங்களுக்கோ அல்லது அப்பாவுடன் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வருடாந்திர முகாம்களுக்கோ தான் செல்வோம். எனக்கு அந்த சமயங்களில் ஒரே கொண்டாட்டமாகிவிடும். தோழர் எம்.வி.எஸ்ஸின் சேர்ந்திசைப் பாடல்களில் கோரஸ் பாடுவதற்கும், தோழர் கே.ஏ.குணசேகரனின் நாட்டுப்புறப் பாடல்களில் தன்னானே போடுவதற்கும் எனக்கொரு வாய்ப்பு கிடைக்கும்.

பாடல்களோடு தான் கவிதைக்கான என் பரிச்சயம் தொடங்கியது. கர்நாடக இசையை முறைப்படி படித்திருந்தாலும், "அனுமதியோம், அனுமதியோம், நாட்டைத் துண்டாட அனுமதியோம்" என்ற சேர்ந்திசையிலும், "பாவாடை சட்டைக் கிழிஞ்சுப் போச்சுதே", "ஓலையக்கா கொண்டையில ஒரு கூட தாழம்பூ" என்ற தெம்மாங்கு பாடல்களிலும் தான் மொழி என் வசமாவதை உண்ர்ந்தேன். பரதத்தில் ஆடும் பதங்களிலும், வர்ணங்களிலும் சமஸ்கிருதத்தையும், தெலுங்கையும் அந்நியமாக உணர்ந்ததால்.எளிய தமிழில் அடவமைக்கப்பட்டிருந்த குறவஞ்சியையும், பாம்பு நடனத்தையும் மட்டும் விரும்பி ஆடுவேன்.

பள்ளிப் பருவங்களில் எதுகை, மோனை எல்லாம் போட்டு எளிய சொற்களில், பாடலுக்கான சந்தத்தோடு கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. கான்வென்டில் படித்ததால்,ஆங்கில கிறிஸ்தவ கோரஸ்களை நிறைய கற்றுத் தருவார்கள். அதை தமிழ்ப்படுத்தி,அதிலிருக்கும் வார்த்தைகளையெல்லாம் புரட்சி, எழுச்சி என்று மாற்றிப் பாடி பார்த்து தீவிரமாக டைரியில் எழுதி வைப்பேன். கட்சி மேடைகளில் தலைவர்களின் உக்கிரமான பேச்சுக்களின் நடுவே எனக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்பில் ஒரு மக்கள் கவிஞராக என்னைக் கற்பனை செய்துக் கொண்டு சொந்த வரிகளுக்கு மெட்டுப் போட்டு போடுவேன். பல மணி நேரங்கள் தலைவர்கள் உரையாற்றுவதை என் பாடல் ஒரு சில நிமிடங்களிலேயே சாதித்துவிடும் என்றும், சமூக மாற்றத்திற்கு முதல் படியே எல்லா தோழர்களையும் சேர்ந்திசைக்க வைப்பது தான் என்றும் திட்டவட்டமாக நிம்பியிருந்த காலங்கள் அவை.கவிதைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் என்று எல்லாவற்றிலும் என் சொந்த வரிகளை எழுதும்போது,சொற்களால் சமூகத்தையே புரட்டிப் போட்டுவிடுகின்ற திமிருடன் ஒரு காவல்தெய்வத்தின் ஆணவத்தோடு திரிந்திருக்கிறேன்.

பதினாலு வயதில் காதல் வந்த போது தான் குழப்பமே வந்தது. டைரியில் நான் எழுதத் தொடங்கியிருந்த காதல் கவிதைகளை அப்பா உளவு பார்த்து கண்டித்தது என்னை கடுமையாக பாதித்தது. வாழ்த்து அட்டைகள், காதல் கடிதங்கள், பரிசுகள், இவற்றோடு கவிதைகளையும் பதுக்குவது பெரிய சாகசமாயிருந்தது."உன் கண்களால் நான் கொஞ்சம் தூங்கி கொள்கிறேன்", "நீ நலம், நான் அங்கு நலமா" போன்ற கவிதைகள் கவர்ந்த காலங்கள் அவை.எனக்கு வந்து சேரும் காதல் கவிதைகளில் சிறிது கவித்துவம் கூடி எழுதும் பசங்களுக்கு அதிகம் கரிசனம் காட்டுவது, ஒரு கவிதை டீச்சர் போல வரிகளைத் திருத்திக் கொடுப்பது என்று அட்டகாசமாய் காதலியை விட காதலை நேசிக்கும் விடலைப் பசங்களோடு என் கவிதைப் பிரயத்தனங்கள் வளர்ந்தது. கவிதைப் போட்டிகளில் நண்பர்களுக்கு எழுதிக் கொடுத்து பரிசு வாங்கித் தருவது, அதைக் கொண்டாடுவது என்று நட்புக்கும் கவிதை உதவியது.

குடும்பத்தின் கண்களிலிருந்து கவிதையை மறைக்க ஆரம்பித்ததில் கவிதை எனக்கு ரகசியங்களின் கிடங்காக மாறியது.பெண், சாதி, குடும்பம், வர்க்கம்,நம்பிக்கைகள்,இருப்பு என்று எல்லாவற்றையும் பற்றிய கேள்விகளும், தேடல்களும் தீவரமடைந்த போது, கவிதை எனக்கு நானே நடத்திக் கொண்ட உரையாடல் களமானது. பதிப்பிக்க வேண்டும், பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும், மேடைகளில் வாசிக்க வேண்டும் என்று எந்த நோக்கமும் இல்லாது என் உடல்தட்ப வெப்பத்திற்கேற்ப நீளும் அல்லது மறையும் நிழலாக கவிதை என்னைத் தொடர்ந்தது.நான் படித்த முதல் நாவல் தாய் தான் என்றாலும் நம்ம ஊர் படைப்பாளிகளைத் தேட தொடங்கினேன். ரமணிச்சந்திரன், சுஜாதா, பாலகுமாரனைத் தாண்டி ஜெயகாந்தனும், அம்பையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். சுபமங்களாவை புரிந்தும் புரியாமலும் மேலிருந்துக் கீழாக, கீழிருந்து மேலாக பல தடவை வாசித்துப் பழகுவேன்.

கல்லூரி நாட்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தோடு சேர்ந்து, கிராமங்கள் தோறும் வீதி நாடகங்களில் பங்காற்றியிருக்கிறேன். அப்போது நான் அறிந்துக் கொண்ட கிராமத்து சொலவடைகளும், நாட்டுப் பாடல்களும் நான் எந்த புத்தகத்திலும் படித்தறியாத அனுபவத்தையும் உணர்வையும் தந்தது. அப்பா நூலகத்தில் நான் பார்த்தறிந்த அகராதிகள், நிகண்டுகள் , அபிதான சிந்தாமணிகள் எதிலும் கற்றுக் கொள்ள முடியாத கிராமத்து பெரிசுகளின் சொற்களும் அர்த்தங்களும் மொழி, அழகியல்,பண்பாடு குறித்த புதிர்த்தனமான மனநிலையை தோற்றுவித்தன..ஆனால், பொறியியல் கல்லூரியில் படித்ததால், கவிதை ஒன்று தான் என்னை மொழியோடு,நான் வாழும் சமூகத்தோடு பிணைத்திருந்தது. எனக்கென்று ஒரு அரசியல் பார்வையையும் மொழிமூலமே பெற முடிந்தது. தொழில்படிப்பென்பதால், பாடங்களும் பயிற்சி வகுப்புகளும் கடுமையாக இருக்கும். ஆனாலும் அப்பாவின் நூலகங்களிலிருந்து உருவிய புதுமைப்பித்தனும், கி.ராஜநாராயணனும்,கு.அழகிரிசாமியும் என்னை சுண்டி இழுத்தார்கள்.வாசிப்பில் கதைகள் தான் அதிகமென்றாலும், தனியே நான் எழுதிப் பார்க்கையில் கவிதை மாதிரி ஒன்றைத்தான் என்னால் எழுத முடிந்தது.ஆனால்,நவீன கவிதை என்றால் என்ன என்ற அனா,ஆவன்னா தெரியாத காலத்தில் கூட நான் எழுதும் கவிதைகள் மிகவும் நாடகத்தனமாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்கிருந்தது. அதனால் யாரிடமும் நான் எழுதியதைக் காட்டுவதற்கு வெட் கமாகவும் தயக்கமாகவும் இருக்கும். கணினிகளோடும், எலக்டிரானிக் சிப்களோடும், மெஷின்களோடும் வாழப் போகும் எனக்கு கவிதை சாத்தியமாகுமா என்ற கேள்வியும் அவ்வப்போது என்னை ஒடுக்கிவிடும்.

இயக்குநர் பாரதிராஜா, கவிதைக்கான என் வேட்கையை அடையாளம் கண்டவர். அவரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் அவர் மேஜையில் அன்று மலர்ந்தப் பூக்களும்,என்னுடைய கவிதை ஒன்றுமிருக்கும். அவர் அதைப் படித்துவிட்டு உயர்த்தும் புருவத்திலும், சுருக்கங்கள் நெளிய காட்டும் முகபாவத்திலும் என் அடுத்தடுத்த கவிதைக்கான முகவரி இருக்கும்.என் தந்தையின் கண்டிப்புக்கும், ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் அஞ்சி பதுங்கியிருந்த என் மொழி, இயக்குநரின் நேசத்திலும் உரையாடல்களிலும் பாராட்டுகளிலும் ஒரு காட்டாறு போல பாயத்தொடங்கியது.

ஆத்மநாம், நகுலன், இன்குலாப், வ.ஐ.ச ஜெயபாலன், கலாப்ரியா, சுகுமாரன், சேரன், சிவரமணி என்று தேடி தேடி வாசித்தேன்."தாமரை" என்னுடைய கவிதைகளை பிரசுரித்தது. கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாட்டுக் கவியரங்கத்தில் முதல் தடவையாக கவிஞர் லீனா மணிமேகலை என்று அச்சிட்டு வந்த அழைப்பிதழை வெகு நாள் பாதுகாத்து வைத்திருந்தேன். கவிஞர் குட்டிரேவதியின் "பூனையைப் போல அலையும் வெளிச்சம்" படித்தபோதுதான் நானும் ஒரு தொகுப்பு வெளியிடுமளவு கவிதைகள் எழுத வேண்டும் என்று உந்துதல் வந்தது. மாலதி மைத்ரி, சல்மா, கிருஷாங்கனி,லதா ராம்கிருஷ்ணன் இவர்களையெல்லாம் படித்து என் கவிதைகளைப் பலவாறு சுயவிமர்சனம் செய்து கொண்டு, இன்னும் எழுதிப் பழகனும், தொகுப்பெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

ஜெரால்ட் தோழனான பிறகு, தமிழ் மாணவரான அவர், நான் எழுதுவதையெல்லாம் காட்டமாக விமர்சிப்பார். இலக்கியம், சினிமா, அரசியல், கலை என்று கன்னா பின்னாவென்று சுற்றித்திரிந்தபின் எழுது, அனுபவம் போதாது என்பார்.கணையாழி,தீராநதி, என்று எல்லா சிறுபத்திரிகைகளுக்கும் எழுதினேன். ஒரு தொகுப்பு வெளியிடுமளவுக்கு பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் சேர்ந்தபோதும் தயக்கம் தான். சரி, நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் சுகுமாரனுக்கு அனுப்பி பார்க்கலாம்.அவர் முன்னுரை அளித்தால் வெளியிடலாம் என்று தோன்றியது.கவிஞர் சுகுமாரன் "தமிழ்க் கவிதையில் கேட்கும் அசலானதும், தீவிரமானதுமான குரல்களில் லீனா மணிமேகலையின் குரலும் ஒன்று என்றும், சில ஆண்டுகளுக்கு முன் அவர் கணையாழியில் அவரெழுதிய "பெண் கவிதை மொழி, கணையாழி ஏப்ரல் 94" என்ற கட்டுரையைத் திரும்ப பெற்றுக் கொள்வதாகவும்" எழுதியது எனக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்தது. ஜெரால்டு தன் கல்லூரிக்காலங்களிலிருந்து கண்ட பதிப்பக கனவை கனவுப்பட்டறையாக உருவாக்கினார். என் "ஒற்றையிலையென" அதன் முதல் புத்தகமாக வெளியானது.அப்போது எனக்கு வயது 23.என் தந்தையிடம் காட்டவே முடியாத பிரதி.எனக்கு அவரோடு இருந்த நட்பு முரண் இன்னும் தீர்த்துக் கொள்ள முடியாத கணக்கு.

சினிமாவும், தொலைக்காட்சியும் பிரதான ஊடகங்களென நான் தெரிவு செய்து பணியாற்றத் தொடங்கியபோது சுளீரென்று உரைத்த உண்மை ஒன்று தான். கவிதை என்பது உண்மையில் நான் எழுதிப்பார்க்கும் வரிகள் மட்டும் அல்ல. கவிதை என்பது ஒரு மனநிலை.ஒன்றை கதையாக்கி விரிப்பதும், காட்சிகளாக்கி பார்ப்பதும் கவிமனம் தான். எந்த ஒரு படைப்பாளிக்கும் கவிமனம் தான் ஆரம்பப் புள்ளி. எந்த கலையனுபவமும் அடிப்படையில் கவிதானுபவம் தான். ஒரு சொல், ஒரு பிம்பம், பல சொற்கள் ஒரு பிம்பம், பல பிம்பங்கள் ஒரு சொல் என்று கலையும், உணர்வும், தொழில்நுட்பமுமாய் சினிமா எனக்கு கவிதையின் நீட்சியாய் புலப்பட்ட போது தெளிவு பிறந்தது.

இன்று வெகு தூரத்திற்கு வந்துவிட்டேன்.கவிதைகளைப் பற்றிய என் அரசியல் பார்வை தீர்க்கமடைந்திருக்கிறது. வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று எழுத்தின் செயல்பாடுகளை கூர்மைபடுத்த விரும்புகிறேன்.என் கவிதை எதிர் கலாச்சார நடவடிக்கையாக மேலும் மேலும் தொழில்படும். எல்லா சட்டங்களையும் மீறும், வெளியேறும்,திளைக்கும். என் கலை வெட்டிவிட்ட பாதையில் ஒருபோதும் போகாது.

"உலகின் அழகிய முதல் பெண்" என்ற எனது இரண்டாவது தொகுப்பிற்கு சர்வதேச விருதும் கிடைத்திருக்கிறது, வக்கிரமான அவதூறு கட்டுரைகளும் நடந்திருக்கிறது ,போலீஸ் கேஸ், கட்சி வழக்குகளையும் இனி சந்திக்கும்.

ம.க.இ.க, இந்து மக்கள் கட்சி இன்னும் எங்கிருந்து எந்த தாக்குதல் வந்தாலும் என் படைப்பு ஒன்றே என்னிடமிருக்கும் முதலும், கடைசியுமான ஆயுதம்.



லீனா மணிமேகலை 25 . 03. 2010

12 comments:

  1. தோழர் எம்.வி.எஸ்ஸின், it is MBS

    ReplyDelete
  2. "14 வயதில் காதல்" quite interesting!. உங்கள் காதலை பற்றி கூறியிருக்கும் இப்பத்தி ஒரு சிறுகதையாக நீட்டி எழுதுங்கள்.(it reflects some sort of innocence). கவிதை/கதை எழுதுகிறவர்களை கையை வெட்டுவேன்/காலை வெட்டுவேன் கேஸ் போடுவது என்பதெல்லாம் ஒரு மோசமான அவல சூழ்நிலையையே பறைசாற்றுகிறது. கிஞ்சித்துக்கும் நுண்ணிய இலக்கிய அறிவும்/ஆழ்ந்த தத்துவ கண்ணோட்டங்கள் / அறமில்லாத அரசியல் பின்புலம் சார்ந்தவர்கள்தான் எதை எழுதவேண்டும் எதை எழுதக்கூடாது என்று தீர்மானிப்பது மிகந்த கண்டனத்துக்குரியது. பிரதியை பார்க்காமல்,பிரதியை எழுதியவர்களின் பின்புலத்தையும் நோக்கத்தையும் விமர்சிப்பது மிகுந்த ஆபத்தான போக்கு. இது ஒரு பாசிசத்தின் கூறு.

    ReplyDelete
  3. என் கலை வெட்டிவிட்ட பாதையில் ஒருபோதும் போகாது. // எக்ஸலண்ட்!

    நான்காண்டுகளுக்கு முன் ஒரு புத்தாண்டு இரவினை சுமார் முன்னூறு விவசாயிகளோடு கொண்டாடிக் கொண்டிருந்தேன். அதில் ஒருவர் ’ஓலையக்கா கொண்டையிலே’ பாடினார். மனதிற்குள்ளே ஊறிக்கொண்டே இருக்கிறாள் ஓலையக்கா! முழு வரிகள் கிடைக்குமா லீனா?!

    ReplyDelete
  4. ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ
    தாழம்பூ சித்தாட தல நிறைய முக்காடு
    ஓலையக்கா ஓல

    காங்கேயச் சந்தையில கண்கொள்ளா கடைவரிசை
    கடைவரிசை முன்னால கலங்கி நின்னா ஓலையக்கா
    கையிருப்போ காப்பணந்தான் கைசெலவோ வெகுஜனந்தான்
    கைகாசு பத்தாம கலங்கி நின்னா ஓலையக்கா

    மஞ்சள ரெப்பணமா மைக்கோதி காப்பணமா
    மஞ்சக் குறைச்சலுன்னு மயங்குறாளாம் ஓலையக்கா
    சீலை யரப்பணமா சித்தாடக் காப்பணமா
    சீலைக் குறைச்சலுன்னு சிணுங்கிறாளாம் ஓலையக்கா

    மேக்ஸிமம் மெமரியை கசக்கி எழுதினது.பிழைகள் இருக்கலாம், மன்னியுங்கள்.

    ReplyDelete
  5. உங்களுக்கு பேஸ் புக்கில் நட்பு விண்ணப்பம் ஒன்று விட்டிருந்தேன். நீங்கள் கவனிக்கவில்லை போலும்.
    உங்களுடைய கவிதை உலகின் முதல் அழகிய பெண், தொடக்கம் அருமை. முழுமையாக வாசிக்கும் அளவிற்கு எனக்கு பொறுமை இல்லை.
    உங்களுடைய உரைநடை அருமை. நட்புடன்,
    அமலசிங்

    ReplyDelete
  6. லீணா,

    வாழ்த்துக்கள். உங்களது "உலகின் அழகிய முதல் பெண்", பாடகர்கள் Erykah Badu மற்றும் Matt and Kim ஆகியோரின் சமீபத்தீய வெளிப்பாடுக்களை ஒத்திருக்கிறது. I know for sure your recent Poems are not inspired by them. Erykah Badu in her interview said that she was inspired by Matt and Kim and dedicated her contagious act of liberation and freedom to them. Here is some information about their video songs:

    Matt and Kim portray "I-don't-give-a-fuck-anymore" attitude for the song Lessons Learned, by baring it all in the middle of Times Square, New York in mid-Feburary (winter) 2010.
    http://pitchfork.com/news/35215-directors-cut-matt-and-kims-lessons-learned/

    Erykah Badu's song “Window Seat” is about liberating yourself from layers and layers of skin or demons that are a hindrance to your growth or freedom, or evolution. In order to portray that she walks through Dealey Plaza in downtown Dallas, where JFK was assassinated in 1963, taking off her clothing as she walks until she is completely nude. She is then "shot" by an unseen gunman near the site where JFK was shot.
    http://www.dallasnews.com/sharedcontent/dws/ent/stories/0330quickbadu.1f733ed77.html

    Mohan

    ReplyDelete
  7. உங்களை எனக்குத் தெரியாது ஆனால் உங்களின் இருப்பு இன்றுமுதல் என்னைப் நிம்மதிகலந்த பெருமிதமடைய வைக்கும்.என்மகளும் (7 வயது) ஒருநாள் உங்கள் போல் மன உறுதிமிக்க முழுமையான சுதந்திரமான திறமைகள் மட்டுப்படுத்தப்படாத பெண்ணாக வளர ஒரு சாத்தியமிருப்பதை உங்களின் ஆளுமை முன்னுதாரணமாகின்றது.
    இந்தத்துணிவுதான் இன்றைய பெண்களுக்குக் கட்டாயமாகத் தேவையான ஒன்று.

    துள்ளிஓடும் ஓர் வெள்ளைப்புரவியின் அழகை அதன் கம்பீரத்தைக் கண்டு பெருமையுறும் ஒரு தாயின் மனநிலைதான் எனக்கு ஏற்படுகிறது.

    கண்கள் பனிப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.

    ReplyDelete
  8. அருமையான பதிவு.எல்லா எழுத்தாளர்களுக்கும் முதல் பிரவேசம் என்பது மறக்க முடியாத ஒன்று.குறிப்பிடபட வேண்டிய மற்றொரு விஷயம்.சில கவிகளை போல பதிப்பகம் ஆரம்பித்து தனது புத்தகங்களை மட்டும் பதிப்பிக்க வில்லை லீனா. பல புதிய எழுத்தாளர்களை அறிமுக படுத்தினார்.என்.ஸ்ரீராம்,இந்திரா,மீரா கதிரவன் என.இந்த விஷயம் மற்றவர்களும் பின்பற்ற வேண்டியது.

    ReplyDelete
  9. HI Leena,

    Your Kavithai arumai. i like it very much. keep writing.

    ReplyDelete
  10. லீனா ,
    என் பெயர் ஆயிரம் ராஜா.(நேஷனல் பொறியியல் கல்லூரி.கோவில்பட்டி). உங்களோடு கவிதை போட்டிகளில் கல்லூரி காலங்களில் பங்கெடுத்து உள்ளேன்.எங்கள் கல்லூரி விழாவில் உங்களோடு பேசியது நினைவிருக்கிறது. அப்போது எனக்கு உங்களை பற்றிய பார்வை ' இவள மிகவும் திமிர் பிடித்த பெண்' (ஆணாதிக்கம் !!!).என்னை நினைவிருகிறதா..?

    ReplyDelete
  11. hi leena
    vanakkam
    i read the article in puthagam pesuthu.fine

    ReplyDelete
  12. I chanced upon your blog only recently.you have grabbed attention by your offbeat approach which is bold and at the same time thought provoking. keep up the good work. expecting more such creative thoughts from you

    ReplyDelete