Thursday, September 15, 2016



நன்றி - விகடன் தடம் 


அன்பின் பெருங்கோபக்காளி 

மஹாஸ்வேதா தேவி 




2014-ம் ஆண்டு, ஒரு மழைக்கால மாலையில், கொல்கத்தா மாநகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பொன்றில் மஹாஸ்வேதா தேவியை சந்தித்த தருணம் அலாதியானது. "ரேப் நேஷன்"(Rape Nation) என்ற என் ஆவணப்படத்திற்காக அவரை நேர்காணல் செய்வது தான் திட்டம். அவர் அமர்ந்து எழுதும் நாற்காலி, புத்தகங்கள் குவிந்திருக்கும் மேசை, குறிப்புகள் எடுத்து வைத்திருக்கும் நோட்டுப்  புத்தகங்கள், இங்க் பேனாக்கள், அவர் பேசும்போது சுருங்கி விரியும் முகரேகைகள், கண்களின் மாறா ஒளி, கையசைவுகள் என அவரின் தரிசனத்தை நொடி நழுவாது வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்ததில்,  கேமிரா இத்யாதிகளை எடுத்துச் சென்றதையும், என் குழுவினரையம் சுத்தமாக மறந்துவிட்டேன். அவருடைய "திரௌபதி" சிறுகதையை மணிப்பூரின் ஆகச்சிறந்த நாடக ஆளுமைகள் கன்ஹையாலாலும் சாவித்திரியும் மேடையேற்றியதை பார்த்த அதே பரவசத்துடன் அந்தக்  கதையை அவர் எழுதிய சந்தர்ப்பம் குறித்து கேட்டேன். உடனே அவர் அந்த சிறுகதை இருந்த தொகுப்பை அருகில் இருந்த அலமாரியிலிருந்து தேடி எடுத்து வாசிக்க ஆரம்பித்தார். "துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னை நிர்வாணமாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா? சீ.. நீ ஒரு ஆம்பளையா?" என்று மஹாஸ்வேதா தேவியின்  திரௌபதி தன் சிதைக்கப்பட்ட முலைகளோடு நின்று ராணுவ அதிகாரியைக்  கேள்வி கேட்பதையும்    "நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல் துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளண்ட்டர் பண்ணு" என்று ரத்தம் ஒழுகும் தன் குதறப்பட்ட உதடுகளால்  அதிகாரியின் முகத்தில் துப்புவதையும் சிறுகதையின்  காட்சிகளாக  அவர் வங்காள மொழியில் வாசித்துக்காட்ட, அது மணிப்பூர், ஈழம், காஷ்மீர், போஸ்னியா, காங்கோ, சிரியா என உலகமெங்கும் அதிகாரத்தால் வேட்டையாடப்படும்  பெண்ணுடல்களின் ஒட்டுமொத்த அசரீரியாக ஒலித்தது. 2004-ல் மணிப்பூரில் தங்ஜம் மனோரமா ராணுவத்தால் மானபங்கப்பட்டு கொல்லப்பட்டபோது, தாய்மார்கள் ஒன்றுகூடி திரௌபதிகளாக மாறி நிர்வாணப்போராட்டம் நடத்தியபோது மஹாஸ்வேதா தேவியின் வார்த்தைகளைத்தான் தங்கள் குரலாயுதங்களாகவும்  கொடிகளாகவும் பயன்படுத்தினர் என்பதை நான் நினைவுறுத்திய போது அவர் கண்கள் பனித்தன. "வேறெதற்காக எழுதுகிறோம்" என்று மெல்லிய ஆனால் தீர்க்கமான  குரலில் அவர் கேட்டபோது ஒரு செவ்வியல் ஓவியம் போல என் மனதில் ஆழப்பதிந்து விட்டார். தமிழில் நான் எழுதி வருகிறேன் என்றும், 1998-ல் ஒரு கல்லூரி மாணவியாக, இயக்குனர் கோவிந்த நிகாலனியின் "ஹசார் சௌரசி கி மா" திரைப்படத்தை ஒரு ஃபிலிம் சொஸைட்டி திரையிடலில் பார்த்த கணத்திலிருந்து, அவரைப் பற்றிய தேடல்  தொடங்கியது என்றும் மெல்ல என்னை அறிமுகப்படுத்திக் கொண்ட போது அவரின் கைகள் என்னைப் பற்றிக்கொண்டிருந்தன. "ஆங்கில மொழிபெயர்ப்பிருந்தால் உன் கவிதைகளை எனக்கு அனுப்பிவை" என்று ஒரு சீனியரின் அக்கறையோடு கேட்டபோது தான், ஆதர்சங்களை சந்திக்கும் கனவொன்றின் வெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த நான் சகஜமாகி நிஜ உலகத்திற்கு திரும்பினேன். வந்த வேலையைப் பற்றிய பிரக்ஞை தட்ட  படக்குழுவினரை தேடிய வேளை, அந்தி சாய்ந்து இரவு படரத் தொடங்கியிருந்தது. படப்பிடிப்பை அடுத்த நாள் வைத்துக் கொள்ள அனுமதி கேட்டபோதும் அவர் முகத்தில் அதே புன்னகை. 



எழுத்து மட்டுமே ஒருவரை எழுத்தாளராக்கி விட முடியாது என்ற என் நம்பிக்கையின் உயிர்வடிவம்  மஹாஸ்வேதா தேவி என்பதை அவரை வாசிக்க தொடங்கிய காலத்திலிருந்தே உணர்ந்திருக்கிறேன். வெறும் பிரச்சார எழுத்து, மானுடவியல் ஆய்வுக்குறிப்புகள் என்றெல்லாம் அவரின் எழுத்துக்களை இலக்கியத்திலிருந்து வெளியே சதா வெளியே தள்ளிக்கொண்டிருந்த விமர்சனங்களும் வாசிக்க கிடைத்தன. 1084 இன் அம்மா, காட்டின் உரிமை இரண்டு நாவல்களும் சாகித்ய அகாதெமியின் வெளியீடுகளாக சு.கிருஷ்ணமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வந்திருந்தாலும், தமிழில் பொதுவாக வெளிவரும் இப்படியான மொழிபெயர்ப்பு நூல்களின் வாசிப்புத்தன்மைக்கு அஞ்சி,  Breast Stories, Imaginary Maps, Old women, Outcast போன்ற அவரின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்களின்  உதவியை  நாடினேன். எனக்கு மிகவும் பிடித்த இலக்கிய வகை (genre) ஆவணப்புனைவு( docu-fiction) என்பதால் மஹாஸ்வேதா தேவி விரைவில் என் ஆதர்சமானார். கடுமையாக சுரண்டப்படுபவர்கள் , தோல்வியை ஏற்க மறுப்பவர்கள் , அதிகாரம் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்த விளிம்புநிலை ஜீவன்கள்  தான் மஹாஸ்வேதா தேவியின் நாயகர்கள். நூறு நாவல்கள், இருபது சிறுகதை தொகுதிகள் என மனுஷி "காட்டு"த்தனமாக  உழைத்திருப்பதைக் கண்டு மலைத்துப் போனேன். காதல் முறிவுகள், விவாகரத்து, போராட்ட வாழ்வின் தொய்வுகள், கைவிட்டுப் போன நட்புகள், தன மகனுடனான சிக்கலான உறவு, அன்பின் போதாமைகள், தனிமை, விரக்தி என  எல்லாவற்றையும் எழுதி எழுதியே கடந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு சத்திய வேட்கை  போல சராசரி 15 மணி நேரம் எழுதிய மஹாஸ்வேதா தேவி, "என்  எழுத்துக்களை நான்  நாள்தோறும் சந்தித்த எளிய மனிதர்களே எழுதினார்கள்" என்று சொல்வதின் மாண்புக்கு முன் அவருக்கு தரப்பட்ட பத்ம, ஞானபீட , மகசேசே விருதுகளும், நோபல் பரிசுக்கான பரிந்துரையும் மிகச் சாதாரணமானவையே.

 எழுத்துக்கும் வாழும் வாழ்க்கைக்கும் இடைவெளி விடாத  மஹாஸ்வேதா தேவி காடுகளை கொன்று நாடாக்கும் வங்காள மார்க்சிய அரசாங்கத் திட்டங்களைக் கடுமையாக விமர்சித்தார். சிங்கூர்  நந்திகிராம் பிரச்சினையில், அரச பயங்கரவாதத்தை நாடறியச்  செய்து எதிர்ப்பை திரட்டியதில் மஹாஸ்வேதா தேவியின் பங்கு அளப்பரியது. ஆதிவாசிகளுக்கும் தலித்துகளுக்கும் மார்க்சிய அரசாங்கம் செய்த வரலாற்று துரோகங்களுக்காக மாவோயிஸ்டுகளுக்கும்,  மம்தா பானர்ஜிக்கும்  தன் வெளிப்படையான ஆதரவை தெரிவித்ததின் பேரில் இடதுசாரிகளால் தனிமைப் படுத்தப்பட்டார். குஜராத் இனப்படுகொலைகளின் போது மோடியை 'சைத்தான்' என நேரடியாக விமர்சித்த முதல் குரல் இவருடையது.ஞானபீட விருது வாங்கிய கையோடு, அப்போது ஆந்திர சிறைகளில் தூக்குக்கயிற்றை எதிர்நோக்கியிருந்த  மூன்றுபேருக்காக மஹாஸ்வேதா தேவி அளித்த  கருணை மனு ஜனாதிபதியால் பரிசீலிக்கப்பட்டது தனி வரலாறு. மத்தியப் பிரேதசம், பிகார், சட்டிஸ்கர், மேற்கு வங்காள மாநிலங்களின் புழுதியிலி ருந்தும்,  நாட்டுப்புற கதைப்பாடல்களிலிருந்தும், தொன்மங்களில் இருந்தும், வாய்மொழி வரலாறுகளிலிருந்தும் தன் புனைவுகளை உருவாக்கிய மஹாஸ்வேதா தேவியின் களப்பணியும் ஆய்வுகளும் தனிமனித சக்திக்கு அப்பாற்பட்டவை. அதனால் தான் தன்னை சூனியக்காரியாக, மந்திரக்காரியாக விவரித்துக்கொண்டாரோ தெரியவில்லை.

மஹாஸ்வேதா தேவி என்ற அன்பின் பெருங்கோபக் காளியின் ஆன்மா  எளிய மனிதர்களின் எளிய கனவுகளின் காவல் தெய்வம். அதற்கேது மரணம்?


இது நினைவுகள் என்னை பரிகசிக்கும் காலம் 

ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழாவில் மஹாஸ்வேதா தேவியின் உரை

மொழிபெயர்ப்பு - லீனா மணிமேகலை 

நேற்றென்பது ஆயிரத்தியொரு சாத்தியங்கள் நிரம்பியிருந்த நாளல்லவாஅதுதானே வாழ்க்கைஒன்றும் மாறிவிட வில்லையேபின்பு எதற்காகஅவ்வளவு பலவீனமாகவும்சுவாரஸ்யமற்றும்அதிபயங்கரமான வெறுமையுணர்வோடும்மலேரியா காய்ச்சல்போல இந்த நாள் பரவ வேண்டும்ஏனெனில் எல்லாவற்றையும்விட மோசமானது தனிமை” 

மீள வாழ்தல் 
வார்த்தைகள்வேதனையில் இருக்கும் எழுத்தாளரிடமிருந்து பிறந்தவையா என எனக்குத் தெரியாதுஆனால் அறிவேன்என்னுடைய தொண்ணூறாவது வயதில்மீள வாழ வேண்டும் என்ற எனது வேட்கை விஷமமானதுஅதிசயங்களின் வலைகளில் சிக்கிய பட்டாம்பூச்சிகள் என்ற பாடல் வரியைப் போன்று எனது ஆயுளும் ஒரு விருப்ப வேட்கைதான்இது ஒரு பக்கம் இருக்கஎதிர்பார்த்ததைவிட அளவுக்கு அதிகமான நாட்கள் வாழ்வதின் பேரில்எவ்வளவு சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறேன் என்று சற்று நினைத்துப்பார்க்கிறேன்.

எண்பத்தியேழு வயதில்என் முன்னெடுப்புகள் அநேகமும் நிழல்களை நாடிய பின்வாங்கல்கள்தாம்அபூர்வமாகவே சூரிய தரிசனம்இளம் வயதுப் பெண்ணாகதாயாகநான் ஒருபோதும் முதுமைக்குப் பின்வாங்கியதில்லைசில சமயங்களில் முதியவளாகபார்வை மங்கியவளாககாது சரியாகக் கேளாதவளாக நடித்துக்காட்டி என் மகனைச் சிரிக்க வைத்ததுண்டுகண் கட்டி ஆடும் விளையாட்டெனகாற்றில் கைகளைத் துழாவி நினைவுகளைப் பரிகசித்திருக்கிறேன்கண நேரத்திற்குள்அதிமுக்கியமான விஷயங்களை மறந்திருக்கிறேன்அன்றைய வேடிக்கைகளிலிருந்து இன்றைக்கு இங்கு நகர்ந்துவந்திருக்கிறேன்வாழ்க்கை ஒரு மீள் செயல்நான் என்னை மீட்டுக்கொள்கிறேன்நடந்தவைகளில் இருந்துநடந்திருக்கக் கூடியவையிலிருந்துநடக்காததிலிருந்து என்னை மீட்டெடுத்துக்கொள்கிறேன்.

இது நினைவுகள் என்னைப் பரிகசிக்கும் காலம் 

பல எழுத்தாளர்கள்என் கதைமாந்தர்கள்நான் நேசித்துகூடியிருந்துஇழந்த மனிதர்கள் எல்லோரும் ஆவிகளாக எனக்குள் தங்கி வாழ்கிறார்கள்குடியிருப்பவர்களின் அந்தரங்க உரையாடல்களைச் சதா கேட்டுக்கொண்டிருக்கும் ஒரு பழைய வீட்டைப்போல சில சமயங்களில் என்னை உணர்கிறேன்அது ஒன்றும் பெரிய பாக்கியமல்ல

ஆனால் ஒருவர்வலிமையின் இறுதியில் தான் நிற்பதாய் உணரும்போது என்ன நடக்கும்வலிமையின் இறுதியென்பதோ என்றும் முற்றுப்புள்ளியல்லரயிலில் இருந்து இறங்க வேண்டிய கடைசி நிறுத்தமுமல்லசற்று வேகம் தாழ்த்துதல் என்று வேண்டுமானால் சொல்லலாம்உயிர் ததும்பிநிற்கும் தருணம் அது; “நீ தனிமையில் இருக்கிறாய்” என்ற அசரீரி.

நான் பிறந்து வளர்ந்த சூழலில்இன்றைய என் பரிணாம வளர்ச்சியை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்நான் வீட்டிலேயே மூத்தவள்அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த மற்றவர்களுக்கு எப்படி என்று தெரியவில்லைஎன் முதல் பாலியல் அனுபவத்தை என் குடும்பத்திற்குள்தான் பெற்றேன்இளம்பிராயத்தில் இருந்தே நான் பாலியல் வசீகரத்தோடு இருந்தேன்மற்றவர்கள் சொல்வது ஒருபுறம் இருக்கநானும் அப்படித்தான் என்னை உணர்ந்தேன்தாகூரால் மிகவும் ஈர்க்கப்பட்ட காலங்கள்சாந்திநிகேதனில் படிக்கும்போது காதலில் விழுவதும் எழுவதுமான ஆர்வத்துடிப்பு நிறைந்தவளாய் இருந்தேன்பதின்மூன்று வயதில் இருந்து பதினெட்டு வயதுவரை என் தூரத்து உறவுப் பையன் ஒருவனைத் தீவிரமாகக் காதலித்தேன்தற்கொலை மனோபாவம் கூடிய குடும்பப் பின்னணியில் வந்ததால் அவனும் தற்கொலை செய்து இறந்துபோனான்ஆனால் எல்லோரும் என்னைத்தான் குற்றம் சாட்டினார்கள்நான் அவன் அன்பை மறுதலித்ததால் தன்னுயிரை மாய்த்துக்கொண்டான் என்று சொல்லிக் காட்டினார்கள்ஆனால் அது உண்மையல்லஅப்போது நான் கம்யூனிஸ்ட் கட்சியோடு நெருக்கமாக இணைந்து வேலை செய்துகொண்டிருந்தேன்நேசித்தவன் வீணாகத் தன் உயிரைப் போக்கிக்கொண்டது என்னுள் மரணஅடியாக இறங்கியதுமொத்தக் குடும்பத்தின் சுட்டுவிரலும் என்னை நோக்கி நீண்டிருந்ததுபதின்வயதுகளில் தன் உடலின் கவர்ச்சியைக் குறித்த எந்தக் கவனமும் இல்லாத இந்தப் பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று என் பெற்றோர்களும் உறவினர்களும் மனம் கசந்தனர்

எல்லாமும் ஏதோ ஒரு வகையில் அழுந்தப்பட்டிருக்கும் நடுத்தர வர்க்கத்தின் ஒழுக்க நெறிகள் பெரும் மோசடியானவை

எழுத்துதான் என் நிஜமான உலகம்நான் முன்னும்பின்னுமாக வாழ்வதும்மீள்வதும் அங்குதான்நான் எழுதும்முறை விசித்திரமானதுஎழுதுவதற்கு முன் எக்கச்சக்கமாகச் சிந்திப்பேன்குழம்பித் தவிப்பேன்மூளையில் படிகம் போல தெளிவாக எழுத்து உருவாகும்வரை அதனுடன் மல்லுக்கட்டுவேன்ஓயாது ஆய்வுகள் செய்வேன்மக்களைச் சந்திப்பேன்பேசுவேன்குறிப்புகள் எடுத்துக்கொள்வேன்முடிச்சுகள் ஒவ்வொன்றாய் அவிழ சேகரித்தவற்றையெல்லாம் விரித்து எழுதுவேன்அதற்குப்பின் பெரும்பாலும் நான் நிறுத்துவதில்லைநான் வாசித்ததும்நேரடி அனுபவங்களும்ஞாபகங்களும்தேடிப்பெற்ற தகவல்களும் எழுதும்போது கைக்கொடுக்கும்எங்கு சென்றாலும்என் மனம் எழுத்தையே திட்டமிட்டுக் கொண்டிருக்கும்கூடவே மறதியும் உண்டுஉண்மையில் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்யாருக்கும் நான் கடமைப்பட்டவளில்லைசமூகத்தின் எந்த சட்டதிட்டங்களும் என்னைக் கட்டுப்படுத்த முடியாதுநான் விரும்பியதைச் செய்தும்வேண்டியதை எழுதியும்நினைத்த இடங்களுக்குச் சுற்றியும் வந்திருக்கிறேன்

நான் சுவாசிக்கும் காற்று வார்த்தைகளால் நிறைந்தது.

எடுத்துக்காட்டாக, ‘பர்னானர்’ என்ற வார்த்தை பலாசு மரத்தால் ஆனதுஇது ஒரு வினோதமான சடங்குமுறையைக் குறிக்கும் சொல்ஒரு மனிதன் ரயில் விபத்தில் இறந்துவிட்டால்சடலத்தை வீட்டுக்குக் கொண்டுவர முடியாத சூழலில்அவனது உடலைப் பலாசு மரத்தின் இலைகளால் செய்து ஈமச்சடங்குகளை முடிக்கிறார்கள்

பாப் புருஷ்’ கேள்விப்பட்டிருக்கிறீர்களாஇது ஒரு நாட்டுப்புற நம்பிக்கையைக் குறிக்கும் சொல்நித்திய ஜீவனாக சபிக்கப்பட்ட அவன்மறைவான்தோன்றுவான்மற்றவர்களின் பாவங்களைக் கண்காணிப்பான்சின்னச் சின்ன மீறல்களையும் கணக்கு வைத்துத் தண்டிப்பான்ஒரு ஆட்டுக்குட்டியைக்கூட கொளுத்தும் வெயிலில் கம்பு ஒன்றில் கட்டிப்போட்டு தண்ணீரோ தீவனமோ காட்டாது தண்டிப்பான்உண்மையில் பாப் புருஷ் என்பவர் ஒரு நபராக இருக்க முடியாதுஅச்சொல் ஒரு குறியீடுதான். '

வங்காள மொழியில்தான் எவ்வளவு அழகழகான சொற்கள். ‘சோரத்’ என்றால் பலகை என்று பொருள்தக் சங்கராந்திதக் என்றால் சதா விழிப்புநிலையில் இருப்பதுமனம் விழித்திருப்பவர்களுக்கு மட்டும்தான் ஒரு குரல் கேட்குமாம். ‘இன்று புதியதொரு நாள்என்ன செய்ய காத்திருக்கிறாய்செய்ய வேண்டியவற்றை எல்லாம் செய்து முடித்தாயா’ என்றெல்லாம் அந்தக் குரல் கேள்வி கேட்குமாம்

கர்பா தான்’ என்ற சொல் மிக சுவார்ஸமானதுகர்ப்பமாக இருக்கும் பெண்ணின் கருவிடம், ‘நீ பெண் குழந்தையாகப் பிறந்தால் இந்தந்தப் பரிசுகளைத் தருவேன்’ ‘நீ ஆண் குழந்தையாகப் பிறந்தால் அந்தந்த பரிசுகளைப் பெறுவாய்” என்று உறுதி கூறுவதைத்தான் ‘கர்பா தான்’ என்று குறிப்பிடுகிறார்கள்கருவில் இருக்கும் குழந்தை இதைக் கேட்டுக்கொண்டு இருப்பதாகவும்பிறந்ததும் பரிசளிப்பதாகச் சொன்னவர்களைத் தேடி அதற்குரியவற்றை கேட்டு வாங்கிக்கொள்ளும் என்றும் மக்கள் மத்தியில் நம்பிக்கை இருக்கிறது .

நமது நாட்டில் சுவையான கதைகளுக்கும் சொற்களுக்கும் பஞ்சமே இல்லைமகாராஷ்டிராவின் பார்தி பழங்குடிகளை எடுத்துக்கொள்ளுங்கள்பார்தி சமூகத்தில் பெண்குழந்தைக்கு ஆக வரவேற்புகருவுற்றிருக்கும் பெண்ணின் கணவன்பிறக்கப்போகும் குழந்தை பெண் என்றால் இவ்வளவு விலை என்று ஏலம் விடுவது நடைமுறையில் இருக்கிறதுபேட் கி பாஜி என்பார்கள்கருவின் கனியை ஏலம் விடுவதைநிலம் கோரே டிச்சே என்று அழைக்கிறார்கள்.

நரகத்திற்கு நிறையப் பெயர்கள் இருக்கின்றன. ‘ஓஷி பத்ரா பென்’ என்ற பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்ஓஷி என்றால் வாள்பத்ரா என்றால் வாள்போன்ற இலைகள்இறந்துபோன ஆன்மாதான் செய்த பாவங்களுக்காகவாள் இலைகள் நிறைந்த காட்டுக்குள் கிழியக் கிழிய நடந்துபோகவேண்டும் என்ற மொத்த அர்த்தத்தையும் ‘ஓஷி பத்ரா பென்’ தனக்குள் தேக்கி வைத்திருக்கிறது.

என்னைப் பாதிக்கும் சொற்களைக் கடக்கும்போதெல்லாம்அவற்றைக் குறித்துவைத்துக்கொள்வேன்எத்தனை எத்தனை நோட்டுப் புத்தகங்கள்கோட்டோ கதாஎண்ணிலடங்கா வார்த்தைகள்எண்ணிலடங்கா ஒலிகள்நான் வார்த்தைகளைக் கர்மசிரத்தையாகச் சேகரிப்பவள்.

கனவு காணும் உரிமை
நீண்ட காலமாக ஒன்றைக் குறித்து எழுத வேண்டும் என்று சிந்தித்து வருகிறேன்உலகமயமாக்கலின் கோரங்களை எப்படிச் சமாளிப்பதுஒரு மையமான இடத்தில் துண்டு நிலத்தைக் கைப்பற்றிபுற்களால் அதை மூடி அங்கு ஒரு ஒற்றை மரத்தை நடலாம்அதில் உங்கள் மகனின் சைக்கிள் ஒன்றைக் கிடத்தலாம்ஒரு ஏழைக் குழந்தை அங்கு வந்து சுதந்திரமாக விளையாடட்டும்அந்த மரத்தின் கிளைகளில் பறவைகள் வந்தமரட்டும்சின்ன ஆசைகள்சின்ன கனவுகள்நம் எல்லோருக்கும் உண்டு தானே

எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வைபண்பாடுகளை எழுதிவருவதாக பேசுகிறேன்அதில் எவ்வளவு உண்மைஅல்லது பொய் அல்லது அதிகப்படி என்று எனக்குத் தெரியவில்லைமேலும் மேலும் சிந்தித்து எதையும் விளக்குவதற்கு முற்படுகையில் திண்டாடிப்போகிறேன்தயக்கமும் தடுமாற்றமும் என்னை ஆட்கொள்கின்றனநம்மைப் போன்ற தொன்மையான மூத்தப் பண்பாடுகள் நிறைந்த சமூகத்தில்எனது நம்பிக்கை என்பது ஒன்றே ஒன்றுதான்அது மனிதநேயம் மட்டும்தான்பரஸ்பர உரிமைகளை ஒருவருக்கொருவர் கண்ணியத்தோடு ஏற்றுக்கொள்ளும் மாண்பு

மனிதர்களுக்குக் காண வேண்டியவற்றைக் காண்பதற்குக் கண்கள் இல்லைஆனால் வாழ்நாள் முழுவதும் எளிய மனிதர்களின் மிக எளிய கனவுகளை நான் கண்டுவருகிறேன்அவர்கள் தங்கள் கனவுகளை எல்லாம் பத்திரமாகப் பூட்டி வைத்திருக்கிறார்களோ எனத் தோன்றும்ஆனால்அவற்றில் சில தப்பித்திருக்க வேண்டும்சிறைக் கம்பிகளை உடைத்து வெளியேறியிருக்க வேண்டும்பதேர் பாஞ்சாலி நாவலில்ஓடும் ரயிலை கண்கள் விரிக்கப் பார்த்துக்கொண்டிருக்கும் துர்காதூக்கத்திற்காக ஏங்கும் ஒரு முதிய பெண்நீண்ட காத்திருப்புக்குப் பின் தனக்குரிய பென்ஷன் பணத்தைப் பெற்றுவிடும் ஓய்வுபெற்றவர்காட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் எங்கு செல்வார்கள்அவர்களின் போக்கிடம் என்னநக்சலைட்டுகள் செய்த குற்றம் என்னஅவர்கள் கனவு காணத் துணிந்தவர்கள்அவர்களின் கனவுகளிலிருந்து அவர்களை விலக்குவதற்கும் அனுமதிப்பதற்கும் நாம் யார்இப்படிப்பட்ட சாதாரணர்களின் சாதாரண அபிலாஷைகள்தான் எனக்கு முக்கியம்

கனவு காணும் உரிமையே அடிப்படையானதென பல வருடங்களாகதொடர்ச்சியாகஅழுத்தம் திருத்தமாக நான் சொல்லிவருகிறேன்

கனவு காண்பதற்கான உரிமைவாழ்விலும் இலக்கியத்திலும்இதுவே என் முழுமுதல் போராட்டம்.