Wednesday, April 21, 2010

துயரத்தின் அரசியல்

மொழிபெயர்ப்பு லீனா மணிமேகலை
உன்னதம் ஏப்ரல் 2010

பாலினக் கோட்பாட்டாளராகத் திகழ்ந்து இன்று அகிம்சாவழி சிந்தனையாளராக அறியப்படும் ஜூடித் பட்லர் அழிக்கப்படக்கூடியவர்களாக ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையை மாற்றிவிடும் நம் தேர்வுகளைப் பற்றியும், வன்முறையற்ற செயல்பாடுகளின் அடிப்படையில் இருக்கும் வன்முறையையும், புதிய திசைவெளிகளில் நம்மை இட்டுசெல்லும் சாத்தியங்கள் கூடிய துயரத்தின் அரசியலையும் குர்னிகா(Guernica) என்ற அமெரிக்காவின் தீவிரமான கலை, அரசியல் பத்திரிகைக்குத் தந்த நேர்காணலில் விவாதிக்கிறார்.

ஜூடித் பட்லரின் எழுத்துக்கள் பொதுப்புத்தியை தாக்கி சமநிலையைக் குலைப்பதும், நாம் சிந்திக்கும் முறையையே மாற்றுவதுமாய் சாகசம் செய்பவை. அவருடைய புத்தகங்களான 1. Gender Trouble: Feminism and Subversion of Identity (1990) 2.Bodies that matter On the Discursive Limits of Sex (1993) ஆகியவை இவரை இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த பாலினக் கோட்பாட்டாளராக நிலை நிறுத்தியுள்ளது.

அவருடைய சமீபத்திய நூல் Frames Of War: When is Life Grievable(2009). இந்தப் புத்தகம், கடந்த பத்தாண்டுகளில் நடந்த அநாவசியமான் யுத்தங்கள், Fetish என்று சொல்லப்படும் காட்டுமிராண்டித்தனமான சித்ரவதை, மற்றும் அதன் காட்சிப் படிமங்கள், அன்றாடமாகிப் போன பயங்கரங்கள், கோரங்கள் போன்றவற்றை தத்துவார்த்தமாக ஆராய்கிறது.அவருடைய பிரதிகள் வெறும் செய்திகளையோ, விளக்கங்களையோ தருபவை அல்ல, வாசிப்பவரை மாற்ற வல்லவை.

உரையாடல் Guernica பத்திரிகைக்காக நாதன் ஸ்னீடர்



குர்னிகா

உங்கள் புத்தகத்தை புஷ் நிர்வாகத்தின் செயல்முறை கொள்கைகளுக்கான மதிப்பீடாக எழுதியிருக்கிறீர்கள். ஓபாமாவின் நிர்வாகத்தோடு ஒப்பிடும்போது உங்கள் மதிப்பீடுகள் மாறுமா?

ஜூடித் பட்லர்

உண்மையில், தற்போது தான் ஆப்கானிஸ்தானில் போர் உச்சத்தை அடைந்திருக்கிறது. சித்ரவதைக்கு எதிரான உறுதியான கொள்கைகளையும், கண்டிப்பையும் கொண்டிருப்பதாக ஓபாமாவின் நிர்வாகம் காட்டிக்கொண்டிருந்தாலும், நடந்துக் கொண்டிருக்கும் போரினால் விளையும் எண்ணற்ற கொடூர சாவுகளுக்கான பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. காஸாவில் சமீபத்தில் நடந்தப் படுகொலையை ஒருவித குரூர மெளனத்தோடு ஓபாமாவின் நிர்வாகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கப் படைகளின் சித்ரவதை பற்றிய வீடியோ காட்சிப் பதிவுகளை ஓபாமா ஏன் வெளியிட மறுக்கிறார்? ஓபாமா என்ற ஆளுமையில் தனி மனித பிம்பத்தையும், ஓபாமாவின் கீழ் இயங்கும் நிர்வாகத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப் பயில வேண்டும்.அப்போதுதான் அவரின் அரசியல் செயல்பாடுகள் குறித்த பாரபட்சமில்லாத பார்வையை நாம் வைக்க முடியும். அமெரிக்க மக்களும், ஐரோப்பிய கூட்டு சக்திகளும் இந்த அடிப்படைப் பாடத்தை கற்க என்ன விலை கொடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை.

குர்னிகா

நீங்கள் குறிப்பிடும் ஓபாமாவுக்கும் ஓபாமாவின் நிர்வாகத்திற்கும் இடையே இருக்கும் முரணை முற்போக்காளர்கள் மிகவும் வருத்தத்தோடு பரவலாக சுட்டிக்காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனாலும் இன்று நிலவும் அரசியல் மந்த நிலையை ஓபாமாவால் சரிசெய்துவிட முடியும் என்று உள்ளூர நம்புகிறார்கள்.

ஜூடித் பட்லர்

ஒபாமா உடனடியாகவும் அவசரமாகவும் கவனிக்க வேண்டிய பிரச்சினைகளை பேசவும் சந்திக்கவும் மறுப்பது ஒருபோதும் அரசியல் மந்தநிலையை சரி செய்யாது. காஸாவில் நடந்த படுகொலைகளை அவர் கண்டிக்காமல் போனதற்கு எந்தவித புறக்காரணிகளும் இருந்ததாக தெரியவில்லை.உலகம் தழுவிய ஆராக்கிய கவனத்திட்டங்களை கைவிட்டதும் அவரின் சொந்த முடிவே.அவரின் தனிப்பட்ட மாண்புகளை சிலாகிப்பதை விட்டுவிட்டு, நடைமுறையில் என்ன செயலாற்றுகிறார் என்பதை கவனிப்பது நல்லது. ஓபாமா நிறைய பேசுகிறார், ஆனால் செயல்பட மறுக்கிறார். அவருடைய அரசியல் உறவுகளே அவருக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்றன. ஓபாமாவின் நிர்வாகம் வினையாற்ற தவறும் போதும் அவரைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியாது.

குர்னிகா

ஓபாமா ஒரு ஆழந்த சிந்தனையாளராக, சிந்தனைகளை செயல்களில் பிரதிபலிப்பவராக குடியரசு தலைமையில் தன் கடமைகளை ஆற்றுவதாக கருதப்படுகிறார். ஆப்கானிஸ்தானுக்கு ஆயிரக்கணக்கான யுத்த தளவாடங்களை அனுப்பும்போதும் அவர் ஆழ்ந்த சிந்தனையில் இருந்திருப்பாரோ?

ஜுடித் பட்லர்

ஓபாமாவிடம் சிந்தனை இருக்கிறது. ஆனால் தந்திரமாகவும் எந்திரமயமாகவும் இருக்கிறது.அவரின் பொருளாதார நிபுணக்குழுவிலிருக்கும் உறுப்பினர்கள் எந்திரவியலாளர்கள்.மூலக் கோட்பாடுகளுக்கும் நடைமுறை கொள்கைகளுக்கும் இருக்கும் தொடர்பற்ற தன்மையை நாம் அந்தப் புள்ளிலிருந்து புரிந்துக் கொள்ள வேண்டும்.அதனடிப்படையில் இருக்கும் அறம் சார்ந்த கேள்விகளையும் எழுப்ப வேண்டும்.

குர்னிகா

நீங்கள் எழுப்பும் கேள்வியை உங்களிடமே திருப்பி வைக்கிறேன், தனித்திறன் முக்கியத்துவம் பெற்றுவிட்ட உலகச் சூழலில் அறவழிப்பட்ட அரசியல் சாத்தியமா? அரசு என்பது வெறும் நிர்வாக எந்திரமாக மாறும்போது மக்கள் நலம் இரண்டாம் பட்சமாகி விடுகிறதல்லவா?

ஜூடித் பட்லர்

குடியரசுத் தலைவர் என்பவர் ஒரு குழுத்தலைமை. அவருக்கு ஒத்திசைவானவர்கள் மட்டுமே அந்தக் குழுவில் பங்கேற்க முடியும். ஓபாமாவின் குழுவினரான சம்மர்ஸ், கெயித்னர் போன்ற எந்திரவியலாளர்கள் கட்டற்ற சந்தைப் பொருளாதாரத்திற்காக சமூக நீதியை விலை பேசுகிறவர்கள்.திட்டங்களை நிறைவேற்றுவதில் திறமையானவர்கள். ஆனால் எந்தக் கொள்கைகளின் அடிப்படையிலான திட்டங்கள் என்பது தான் சிக்கல்.

குர்னிகா

உங்கள் புத்தகத்தின் முன்னுரையில் வாழ்க்கையை வரையறை செய்வதைப் பற்றிய தீர்க்கமான பார்வையை முன் வைக்கிறீர்கள்.

ஜூடித் பட்லர்

வாழ்க்கை எல்லா வரையறைகளுக்கும் அப்பாற்பட்டது. விளக்கங்களின் வழி வாழ்க்கையை அணுக முடியாதென்றே நம்புகிறேன்.ஒரு உயிர் அழிக்கப்படும் போது நாம் துயருரும் அளவே அந்த உயிருக்கான மதிப்பையும் வழங்குகிறது.சமூகத்தால் ஏற்கெனவே பயனளவில் இறந்துபோன, மதிப்பிழந்த உயிர்கள் அழிக்கப்படும்போது நாம் துயருருவதில்லை. அதனளவிலொரு குறிப்பிட்ட, பொருட்படுத்த தேவையில்லாத மக்கள்தொகையையே யுத்த அதிகாரம் அழித்தொழிக்கிறது.அந்த அர்த்தத்தில் அந்த அழிப்பையோ, அழிப்பின் கோரத்தையோ நம்மை உணரவிடாமல் செய்கிறார்கள். அழிப்பில் துயரப்படத்தக்கதான உயிர்கள், துயரப்படத்தகாததான உயிர்கள் என்று வேறுபடுத்தும் மோசடியை எப்படி புரிந்துக் கொள்வது?

குர்னிகா

வாழ்க்கையைப் பற்றிய உங்கள் புரிதல் உயிர் சாதக அமைப்பின் புரிதலிலிருந்து எப்படி வேறுபடுகிறது?

( வாழ்வு சாதக இயக்கம் - அமெரிக்காவின் வலதுசாரிகளால் பெண்களுக்கான கருக்கலைப்பு உரிமைக்கு எதிராக நடத்தப்படும் பிரசாரம்)

ஜூடித் பட்லர்

வாழ்வைப் பற்றி வாதாடும் இந்த இயக்கம் வாழ்வுக்கான ஆதாரங்களைப் பற்றி அக்கறைப்படுவதில்லை. கருவிலிருக்கும் உயிரின் வாழ்வைப் பற்றி கவலைப்படும் இவர்கள், அந்தக் கருவை சுமப்பதினால் ஏற்பட நேரும் வாழ்வாதாரப் பிரச்சினையை சந்திக்கும் அந்தப் பெண்ணின் வாழ்வைப் பற்றி ஏன் கவலைப்பட மறுக்கிறார்கள்? போர், கருக்கலைப்பு, உயிரின் மதிப்பு இவற்றை அதனதன் அடிப்படை கண்ணிகளிலிருந்து தான் விளங்கிக் கொள்ள முடியும்.இடதுசாரிகளும், இன்றிருக்கும் உயிர்-அரசியல் பிரச்சினைகளை கணக்கிலெடுத்து வாழ்வுரிமைகளை கோர வேண்டும்.

குர்னிகா

கருக்கலைப்பினால் ஏற்படும் சாவையும், போரினால் ஏற்படும் சாவையும் இருவேறு தளங்களில் ஆராய வேண்டும் என்று சொல்கிறீர்கள்.கத்தோலிக்க சமூக போதனைகளிலிருந்து அது எப்படி வித்தியாசப்படுகிறது?

ஜூடித் பட்லர்

மறு உற்பத்தி, கருக்கலைப்பு பற்றிய முடிவுகளை வாழ்க்கை எங்கே தொடங்குகிறது, எங்கே முடிகிறது என்ற முன் முடிவுகளிலிருந்து எடுத்துவிட முடியாது.மனித வாழ்க்கையின் இந்த ஆதார முடிவுகளில்,ஏற்கெனவே தொழில்நுட்பத்தின் தலையீடு இருக்கின்றது.வாழ்க்கையை குறித்த நமது தேர்வுகளின் சாத்தியப்பாடுகள் சமூகரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் கட்டமைக்கப் படுகின்றன."ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கு தகுதியாக எது மாற்றுகிறது" என்ற கேள்வி "எது வாழ்க்கையை கட்டமைக்கிறது" என்பதிலிருந்து மாறுபடுகிறது.வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில்"உரிமை" என்ற கருத்தை எப்போது பேச ஆரம்பிக்கிறோம் என்பதில் தான் வித்தியாசப்படுகிறோம்.

குர்னிகா

வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கருத்துக்கள் "மற்ற" வாழ்க்கையோடு சார்ந்தும் பிணைந்தும் இருக்கிறது. நாம் அறிந்தேயிராத, நம்மிலிருந்து தொலைவிலிருக்கும் சதா அச்சுறுத்தப்படும் வாழ்வுகளைப் பற்றிய அக்கறை அதில் பொருந்துமா?

ஜூடித் பட்லர்

ஒரே மொழி பேசுபவர்களாகவோ, ஒரே பண்பாட்டைச் சேர்ந்தவர்களாகவோ இருப்பவர்களின் வாழ்வுகளைப் பற்றி மட்டுமே அக்கறையோ, மதிப்போ, துயரமோ பட வேண்டும் என்ற கருத்தை நாம் எதிர்க்க வேண்டும். இது ஏதோ நாம் மேலும் கருணையுள்ளவர்களாக மாற வேண்டும் என்பதல்ல.நம் அறம் சார்ந்த விழைவுகள் பூகோள கலாசார எல்லைகளைத் தாண்ட வேண்டும்.யுத்தம், வர்த்தகம், சுற்றுப்புறச்சூழல், உணவு பரிவர்த்தனை என்று எல்லாவற்றிலும் ஒருவருக்கொருவர் உலகளாவிய உள்கூட்டையும் சார்பையும் ஏற்றுக்கொள்ளும் போது,அதன் மூலம் நாம் அறியாதவர்களோடும், தேர்வுக்குட்படாதவர்களோடும் ஏற்பட்டுவிட்டிருக்கும் ஒப்பந்தத்தையும் உணர்ந்துக் கொள்ள வேண்டும்.இனக்குழு சமூகம், தேசியம் போன்றவற்றையெல்லாமும் கடந்து யோசிக்க கடமைப்பட்டிருக்கிறோம்.

குர்னிகா

நம் குடும்பத்தோடும், நண்பர்களோடும், நாம் சார்ந்த சமூகத்தோடும் கொண்டிருக்கும் பிணைப்பை விட ஒரு ஈராக்கியரோடு கொண்டிருக்கும் பிணைப்பு உடனடியானதல்ல. அப்படியிருக்கும்போது ஒரு ஈராக்கியருக்காக துயரப்படுவதை அதே அளவில் எதிர்பார்ப்பது நியாயமாகுமா?

ஜுடித் பட்லர்

உணர்ச்சி அளவுகளை தராசில் நிறுத்திப் பார்த்துக் கொள்ளும் விஷயமல்ல. அழிக்கப்படும் ஒரு உயிர் துயரப்படத் தக்கதா, இரங்கலுக்கு உரியதா, இல்லையா எனப்து தான் கேள்வி. அப்பாவி மக்கள் கொல்லப்படக்கூடாது என்று சொல்லும் போது, அதில் எல்லா தரப்பு மக்களையும் உள்ளடக்க வேண்டும், அதுவே நம்மை இனவாதத்திலிருந்து விடுவித்து சம்த்துவத்திற்கு இட்டுச் செல்லும்.

குர்னிகா

நீங்கள் குறிப்பிடும் "துயரம்" எத்தகையது? அது நம்மேல் எப்படி விளைகிறது?

ஜூடித் பட்லர்

நாம் போரும் தொடுத்துவிட்டு அந்த மக்களுக்காக துயரமும் படுவது மிகவும் மோசடியானது.சென்ற வருடம் இஸ்ரேல் காஸாவை தாக்கும்போது அதை துல்லியமாக உணர முடிந்தது.வெளிப்படையாக நடந்த அந்த இனவெறித் தாக்குதலில் ஒவ்வொரு உயிரும் போரின் சாதனமாகவே கருதப்பட்டது. சூழ்ச்சியால் மக்களை சிக்க வைத்து,ஒருமுனைத் தாக்குதலால் குழந்தைகளையும் பெண்களையும் அநியாயமாய் கொன்றுவிட்டு அதை வெறும் தற்காப்புச் செயல் என்று சொன்னதை உலகம் நம்ப மறுத்துவிட்டது.

குர்னிகா

சமீபத்தில் வெஸ்ட் பேங்க் சென்றிருந்தீர்கள்?இஸ்ரேல் மக்கள் இரங்கல் அனுஷ்டிக்கிறார்களா?

ஜூடித் பட்லர்

நெபுலஸிலும், ஜெனினிலும் சுவர்களில் இரங்கல் செய்திகளைப் பார்க்க முடிந்தது. பெரும்பகுதி இஸ்ரேல் பொது மக்களும், வெகுஜன பத்திரிகைகளும் ராணுவம் காஸாவில் படுகொலைகளை நிகழ்த்தியிருப்பதாக ஏற்றுக் கொள்கிறார்களா என்பது கேள்விக்குறி தான். துணிச்சலான சில எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் மட்டுமே உண்மையைப் பேசுகிறார்கள். ஜாக்ராட் என்ற அமைப்பு, 1948 -ல் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களை இன்றளவும் நினைவு கூர்ந்து நிகழ்ச்சிகள் நடத்துகின்றது. நக்பா என்ற அமைப்பு செய்யும் சில தீவிரமான வேலைகளும் ஒரு சிறிய வட்டத்திற்குள் அடங்கிவிடுகிறது. பொதுத் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்த முடிவதில்லை.நக்பா அமைப்பின் சார்பில் நடைபெறும் கல்வி மற்றும் கலை முயற்சிகளை இஸ்ரேல், நிதியுதவிகளை முடக்கி தடுக்கின்றது.

குர்னிகா

இரங்கலின் சில வடிவங்கள் இராணுவ பரிபாலனங்களை நியாயப்படுத்தும் வகையில் இருந்தன, உதாரணமாக பெருங்களப்பலிகள், சமீபத்தில் 9/11 தாக்குதல் , இன்னும் ஒரு படி மேல் சென்று போரை வழிமொழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை அல்லவா?

ஜூடித் பட்லர்

போரின் தன்மையைப் பொறுத்து சில நிகழ்வுகளின் போது இரங்கல் கூட்டங்கள் நடப்பதை தடை செய்வதும், வேறு சமயங்களில் அனுமதிப்பதும், மிகுந்த கவலைக்குரிய விசயம். 9/11 தாக்குதலின் போது கொல்லப்பட்டவர்கள் பழிவாங்கும் எண்ணத்தை தக்கவைத்துக் கொள்வதற்குரிய சின்னங்களாக மாறுவதற்கான வழிகள் உள்ளன. நம் இரங்கல் வடிவங்கள் அழித்தொழிக்கப்படவேண்டிய மக்கள்தொகை, பாதுகாக்கப்பட வேண்டிய மக்கள்தொகை என்ற எதிர்மைகளை உருவாக்காதவாறு கவனம் கொள்ள வேண்டும்.

குர்னிகா

போர்க்கழுகுக் கூட்டத்தில் சிலர் போரை பெண்ணியம் என்ற பெயரிலும் விற்றுக் கொண்டிருக்கிறார்கள், கவனித்தீர்களா?

ஜூடித் பட்லர்

மிக மிக கேவலமான அருவருப்பான உத்தி. பெருவாரியான பெண்ணியவாதிகள் " இஸ்லாமியப் பெண்கள் காப்பாற்றப் பட வேண்டியவர்கள்" என்ற பிரசாரத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர்.அதே வேளையில், சில இஸ்லாமியப் பெண்ணிய இயக்கங்கள் இஸ்லாத்தை பெண்ணியத்துக்கு எதிரான மதமாக வார்ப்பது அந்த இயக்கங்களுக்குப் பின்னடைவை ஏற்படுத்துவதோடு மேற்குலக நாடுகளில் இருக்கும் ஏற்றத் தாழ்வுகளை ஏதோ கற்பனையான வெளிக்கு திசைமாற்றம் செய்கின்றது.

குர்னிகா

லட்சக்கண்க்கான மக்கள் உலகமெங்கும் குரல் கொடுத்தும், ஈராக்கில் நடக்கும் போரை நிறுத்த முடியவில்லை. இனி வேறெந்த வகைகளில் எதிர்ப்பைக் கட்டுவது? ஒத்துழையாமை? அல்லது குறைந்தப் பட்சம் சிந்திப்பது?

ஜூடித் பட்லர்

மார்க்ஸ் சிந்தனையை ஒருவித பயற்சி என்றார். சிந்தனை செயலுக்குள்ளும் செயலாகவும் வடிவம் பெறும் என்றார். சிந்தனை வெற்று மெளனமோ, ஆற்றலற்ற செயலோ அல்ல. ஒத்துழையாமை என்ற எதிர்ப்பு வடிவத்தை அதிகாரத்தை விடாமல் எதிர்க்கும் சிந்தனை என்று எடுத்துக் கொண்டோமென்றால் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் போன்றவற்றை நம்பிக்கை இழக்காமல் தொடரலாம். ஆனால் இறுதிவரை தொடரவேண்டும் என்பது தான் முக்கியம். ஈரானில் அது பலனளித்திருக்கிறது. இடதுசாரிகள் புஷ்ஷை மூர்க்கமாக எதிர்த்ததைப் போல் ஏன் ஒபாமாவை எதிர்க்கவில்லை? அதனால் தான் தனிநபரை விடுத்து நிர்வாகத்தை குறிவைக்க வேண்டும். யுத்தத்தை தொடர்ந்து நடத்துவது நிர்வாகமும், நிர்வாகிகளும் தான்.

குர்னிகா

புஷ்ஷின் நிர்வாகத்தின் போது யுத்தத்தை எதிர்த்து தெருவிற்குப் போராட வந்தவர்களுக்கு, புஷ்ஷின் மீது தனிப்பட்ட கோபமும் வன்முறையும் இருந்தது. மக்களுக்கு எப்போதும் தனிநபர் தேவைப்படுகின்றது. உங்கள் புத்தகம் அந்த வகையில் தனிநபரிலிருந்து விலக்கி, தூரப்படுத்தி பிரச்சினையை பாதிக்கப்பட்ட மக்களை கவனப்படுத்தும் வகையில் கையாள்கிறது.

ஜூடித் பட்லர்

ஒவ்வொருவரையும், நாம் அறியாதவர்களுக்கான கடப்பாடுகளை சிந்திக்க வைக்க வேண்டும் என்பதே என் இலக்கு. யாரோடு ஒப்பந்தத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அறிந்திராவிட்டாலும், அந்த ஒப்பந்தத்திற்கான பொறுப்பை ஏற்க வேண்டும்.

குர்னிகா

நீங்கள் விளக்கும் அகிம்சை, சமுதாயச் சார்பு மற்றும் பிணைப்பு ஆகியவற்றை பிரதானப்படுத்தி பேசுகிறது. அதில் காந்தி சொன்ன அந்தராத்மா எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது?

ஜூடித் பட்லர்

காந்தி சொன்னது போல் நம் செயல் உள்வயமானதா என்று சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் நாம் ஒவ்வொருவரும் நமக்குள்ளிருக்கும் வன்முறையை ஆக்கப்பூர்வான செயலுக்கான ஆற்றலாக தொழில்படுத்த வேண்டும். ஒரு சில கடுமையான பயிற்சிகள் மூலம் சுயத்தை தகவமைத்துக் கொள்ள முடியும்.அது மற்றவர்களோடு இணைந்து செய்ய வேண்டிய சமூகப் பயிற்சியாகும். ஆதரவும், தோழமையும் இல்லாமல் ஒருவரால் அந்தப் பயிற்சியை செய்ய முடியாது. கொஞ்சம் தவறினாலும் நம்மை தனிநாயகர்களாக மாற்றி தோழமை நடவடிக்கைகளிலிருந்து விலக்கி விடும்.

குர்னிகா

தத்துவம் எப்போதும் ஒருவித ஒற்றை நாயகத்தன்மையாய் தோற்றமளிக்கும். சதா நம்மை போரை நோக்கி விரட்டும். கெள பாய் பிம்ப உருவாக்கங்களையும், யுத்த எந்திரங்களையும் எதிர்க்க தத்துவம் எந்த வகையில் நமக்கு உதவுகிறது?

ஜூடித் பட்லர்

யுத்த எந்திரத்திற்கும் தத்துவம் இருக்கிறது. அதைப் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இல்லாமல் இருக்கலாம்,. சமகால கெளபாய் நாயகர்களுக்கு கூட அதிகாரம் குறித்த தத்துவப்பார்வை இருக்கிறது. ஆண்மை, நெக்குறுதி, ஆதிக்கம் எனப்பல.
கோட்பாடுகளாலும், இலக்குகளாலும் தூண்டப்பட்ட எந்த செயலிலும் தத்துவம் பொதிந்திருக்கிறது. தத்துவம் கூட்டிணைக்கப்பட்ட பயிற்சியாக மாற வேண்டும்.பிணைப்பையும், சமத்துவத்தையும் கற்றுத்தர வேண்டும். போருக்கானத் தூண்டுதலைக் கட்டுப்படுத்த வேண்டும்.

குர்னிகா

மெல்லான் அமைப்பு உங்களுக்கு 1.5 மில்லியன் டாலரை விருதாக வழங்கியது,அதை வைத்து நீங்கள் போருக்கு எதிரான ஆராய்ச்சிகளுக்கான மையத்தை நிறுவப் போவதாக அறிகிறோம். உங்கள் திட்டங்கள் என்ன?

ஜூடித் பட்லர்

போரின் புதிய வகை மாதிரிகள், வடிவங்கள், போரில் ஊடகங்களின் புதிய பங்கு, வன்முறைக்கான நவீன காரணிகள் மற்றும் அதனால் ஏற்படும் முரண் என்று பல கோணங்களில் ஆராய்ச்சிகளை முடுக்கிவிடும் திட்டங்கள் உள்ளன. மரபு ரீதியாக அரசியல் விஞ்ஞானம், சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் போரை ஆராய்வதோடு முரண்களின் நவீன வடிவங்கள், வன்முறையின் கோட்பாடுகள், மனநலம் என்று வெவ்வேறு விதமான பாடங்களை அறிமுகப்படுத்துகிறோம். மண்ணின் நச்சுத்தன்மை, அழிவின் விளிம்பில் இருக்கும் உயிர்கள், சுற்றுப்புறச்சூழலியலோடு விலங்குகள் மற்றும் பறைவையினங்களை கவனப்படுத்துதல் ஆகியவற்றோடும் இணைத்துப் பார்ககும் முயற்சிகளில் ஆர்வத்தோடு இருக்கிறோம்.

குர்னிகா

போர் என்பதின் சரியான கருத்தாக்கத்தை வில்லியம் ஜேம்ஸின் "போரின் அறப்பொருள்" என்ற விசாரனையின் வழி மீட்டெடுக்க முடியுமா?

கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் சாத்தியமா?

ஜூடித் பட்லர்

நம் ஆவேசங்களை குறைத்துக் கொண்டு, ஆர்வக் கோளாறுகளையும் மட்டுப்படுத்தி, சிந்தனைகளை நிதானமாக செயல்களில் பிரதிபலிக்க வேண்டும்.

அகிம்சை என்பது வெறும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. உணர்வுகளை ஆக்கப் பூர்வமாக நுண்ணறிவாக மடைமாற்றுவது.

நன்றி இந்த மொழிபெயர்ப்பு ராஜன் குறையின் ஆலோசனைகளும், யவனிகாவின் உதவியும் இல்லாமல் சாத்தியமாயிருக்காது.

4 comments: