Saturday, April 17, 2010

தோலுரிந்த கவிதை

மேல் தோலுரிந்த கவிதையொன்றை

எழுதிக் கொண்டிருக்கிறேன்

வழுவழுப்பான நிறமற்ற திரவத்தால்

மூடியிருக்கிறது அதன் உடல்

நண்பர்களும் அல்லாதோரும் அந்தரங்கத்தில்

பயம் கொள்கிறார்கள்

ஒதுங்கிக் கொள்ள ரகசியமாய் முடிவு செய்கிறார்கள்

மேல் தோலுரிந்த அபாயம்

எவ்வாறு நிகழ்ந்ததென்று நன்றாக அவர்களுக்குத்

தெரிகிறது. ஆனால் அப்படியில்லையென மறுத்துக்

கொள்கிறார்கள். அப்படி மறுத்துக் கொள்வதன் மூலம்

தற்காலிகமாக அபாயத்தை ஒத்திவைத்துவிட்டோம்

என்று நம்பிக்கை தோன்றுகிறது



மேல் தொலுரிந்த கவிதையொன்றை

எழுதிக் கொண்டிருக்கிறேன்

சக கவிகள் எழுதும் கவிதைகளிலோ

ஆடை அலங்காரங்கள்

அழகிய கைப்பின்னல் பூவேலைப்பாடுகள்

அலங்கரிக்கப்பட்ட கவிதையை எழுதுவது

எவ்வளவு பாதுகாப்பானது?

மூடிய கர்ப்பத்தின் நீர்ப்பையில்

வளரும் சிசு அது

எனது சிசுவோ பாதுகாப்பின்மையின்

உதிரம் கொட்டியபடி வளர்கிறது



மேல் தோலுரிந்தக் கவிதையொன்றை

எழுதிக் கொண்டிருக்கிறேன்



பெரியவர்கள் முகம் சுழிக்க

பிசாசுகள் மோப்பமிட

அதிகாரிகள் அருவருப்படைய

அக்கறை கொண்டவர்கள் எச்சரிக்கை செய்ய

தொலைபேசி இணைப்புகள் கசப்படைய

சாப்பாட்டு மேஜைகள் மெளனம் சுமக்க

பயணங்கள் தனிமை கொள்ள



மேல் தோலுரித்த கவிதையொன்றை

எழுதிக் கொண்டிருக்கிறேன்

சட்டம் ஒழுங்கால் சிறைபிடிக்கிறது அரசு

எரியும் கண்களால் சுடுகிறது நிறுவனம்

துரத்துகிறது குடும்பம்

உரிக்கப்பட்ட தோலை எடுத்து ஆராய்ச்சி செய்கிறது

மனநலக் காப்பகம்



பழைய சன்னியாசிகள்

காலத்தில் மரித்த உயிரைச் சுமந்தபடி

பயணிக்கிறது எங்கள் உடல்

இப்போது அந்நியர்கள்

அதனால் தோலுரிந்திருக்கிறது

கவிதை



லக்ஷ்மி மணிவண்ணன்

(வீரலெட்சுமி தொகுப்பு பக்கம் 64,65)

1 comment:

  1. பகிர்வுக்கு நன்றி, நன்றாக இருக்கிறது.

    ReplyDelete