Friday, April 23, 2010

வரிகளுக்கிடையே....

http://innapira.blogspot.com/2010/04/x.html

http://innapira.blogspot.com/2010/04/blog-post_20.html

http://jamalantamil.blogspot.com/2010/04/blog-post_20.html

http://jamalantamil.blogspot.com/2010/04/x.html

மேற்குறிப்பிட்ட லிங்குகளில் மதிப்பிற்குரிய பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவ்ர்களின் என் கவிதைகள் குறித்தான கட்டுரையும், உரையாடலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகிழ்ச்சி.

கட்டுரை வெளிவந்தவுடன் என் எதிர்வினையை இருவருக்கும் மெயிலாக அனுப்பியிருந்தேன். அதை பின்னூட்டமாக வெளியிட்டார்கள். அதன்பிறகு தோழர் ஜமாலன் ஒரு மெயில் அனுப்பியிருந்தார். அதன்பிறகு கட்டுரையை திரும்ப படித்துவிட்டு என் பின்னூட்டத்தை அனுப்பியிருந்தேன். அதை ஒரு வாரமாகியும் வெளியிடவில்லை.அந்த இடைவெளியில், வேறு பலரின் பின்னூட்டங்கள் வெளியாகிக் கொண்டு தான் இருந்தது. பெருந்தேவி வாஷிங்டன் போய்விட்டார் என்று மெயில் எழுதினார் ஜமாலன். அந்த ஒரு வாரத்தில் ஃபேஸ்புக்கில் தமிழ்நாட்டு தஸ்லிமா ஆகவேண்டுமென்றால் என்ன மாதிரி கவிதை எழுத வேண்டும் என்ற நக்கல் உரையாடல்களில் இருவருமே பிஸியாக இருந்தார்கள். பின், என் பின்னூட்டத்திற்கான பதில் தயாரித்துவிட்டு,கட்டுரையாகவே வெளியிட்டார்கள். மிக்க மகிழ்ச்சி. அதற்கும் என் பின்னூட்டங்களை போஸ்ட் செய்தேன். இரண்டு நாட்களாகியும் இந்த நிமிடம் வரை வெளியிடவில்லை. இடையில்,தோழர் யமுனா ராஜேந்திரன் போன்றோரின் எதிர்வினைக்கும் பதிலிட்டிருந்தேன். அவற்றையும் பதிப்பிக்கவில்லை.

கருத்தை உருவாக்குவதில் மதிப்பிற்குரிய ஜமாலன் மற்றும் பெருந்தேவி இருவரிடமும் இன்டெலக்சுவல் அதிகாரம் இருக்கிறது என்றே முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது..என் பின்னூட்டங்களை என் பிளாக்கிலேயே பிரசுரிக்கிறேன். அப்புறம் இன்னொன்றை தெளிவுபடுத்துகிறேன். பெருந்தேவி "உடனே" வெளியிட்ட மதி என்பவரின் பின்னூட்டத்தில் எனக்கு பதட்டம் என்றும், என் பெண்நிலைவாதம் சரியில்லையென்றும் சொல்லியிருந்தார். அதை அவசரமாக வெளியிட்டதால் பெருந்தேவிக்கும் அதில் உடன்பாடு என்று எடுத்துக் கொள்கிறேன். எனக்கு ஒரு பதட்டமும் இல்லங்க..... நாலு மாதங்களாக, என் கவிதைகளை விமர்சிக்கிறேன் பேர்வழியென்று வெளிளிவந்துக் கொண்டிருக்கும் அவதூறுகளுக்கும், வதந்திகளுக்கும், வக்கிரமான தனிநபர் தாக்குதல்களுக்கும், என் படைப்புரிமைக்கு வெவ்வேறு சக்திகள் ஏற்படுத்தும் அச்சுறுத்தலுக்கும் நான் பதட்டம் அடைந்திருந்தால், இப்போது இந்த பதிவை எழுதிக் கொண்டிருக்க மாட்டேன்.

பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவர்களுக்கு,

இனி கவிதையைப் பற்றி பேச எங்களிடம் ஒன்றுமேயில்லை என்ற உங்கள் அறிவிப்பால், உங்களுக்குத் தான் விமர்சனத்திற்கான சகிப்புத்தன்மை இல்லையோ என்ற சந்தேகம் வருகிறது.

உணர்ச்சி வேறு, உணர்வு வேறு. உணர்வை அறிவு என்று ஒப்புக்கொள்ளாத நிலைப்பாடு பொதுவாக கோட்பாட்டாளர்களுக்கு உண்டு. படைப்பாளிக்கு குறிப்பாக கவிஞருக்கு உணர்வு தான் அடிப்படைக் கூறாகவும், படைப்புக்கான உந்துதலாகவும் இருக்கிறது என்ற அர்த்தத்தில் தான் குறிப்பிட்டிருந்தேன்.

எங்கள் ஊரில் மட்டும் இல்லைங்க, பல ஊர்களில் பெண்களிடம் பழிப்புக்கான இந்த வடிவம் இருக்கிறது. உதாரணத்திற்காகவும், ஆதென்டிசிட்டிக்காகவும் சொன்னேன். நான் எழுதியவுடன், எல்லாரும் எங்கள் ஊருக்கு கிளம்பி சென்று விடுவார்களோ என்ற உங்கள் சமூக அக்கறை எனக்கு வியப்பாக இருக்கிறது. என் கவிதைக்கான நியாயமாக நான் அதை சொல்லவில்லை. என்னை நீரூபிக்கும் முயற்சியாகவும் இந்த உரையாடலை உங்களிடம் நடத்திக் கொண்டிருக்கவில்லை. ஒரு உருவகமாக சொன்னேன். அவ்வளவு தான்.சப்வெர்சனை கவிதையில் பார்க்கத் தவறுவதின் நோக்கமும் எனக்கு புரியவில்லை.

ஆண், பெண் எதிர்வுகளில், பிறரை பேசத் தவறுகிறேன் என்பது உங்கள் விமர்சனம். நான் முதன்மை முரண்பாட்டை அங்கீகரிக்கிறேன்.பேச விரும்புகிறேன். அப்புறம் மூன்றாம் பாலினர் என்பதெல்லாம் அரசாங்கம் உருவாக்குவது. மூன்றாம் பாலினர் தங்களைப் பெண்கள் என்றே அடையாளப்படுத்துகிறார்கள்.

41 சங்கப் பெண்பால் புலவர்களையோ,ஒரு ஆண்டாளையோ, காரைக்கால் அம்மையாரையோ வைத்துக் கொண்டு பெண்ணுக்கு மொழி இல்லையா? வரலாறு இல்லையா என்று நீங்கள் கேட்பது நகைச்சுவை.தமிழ் இல்லை, எந்த மொழியும் பெண்ணுடையது அல்ல, ஆண் உருவாக்கிவத்திருக்கும் மொழியில், தன்னுடையதை தனி யாக அல்லது வேறாக உருவாக்கவே முயல்கிறாள் என்ற புள்ளியிலிருந்து நான் பேச முயல்கிறேன்.

அப்புறம் என்னங்க, யோனி என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கும், ஈஷிக் கொண்டு என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்குமான அரசியல் வேறுபாட்டை கூடவா நீங்கள் காணத் தவறுகிறீர்கள். அடையாள அரசியலை நீங்கள் கடக்க விரும்புவது உங்கள் இலக்காக இருக்கலாம். ஆனால் தமிழ்ச்சூழலில் "ஒரு வாக்கியத்தை முழுமையாக எழுதிவிட முடியாத சூழலில்" தானே நாமிருக்கிறோம்.

இறுதியாக நான் ஒரு சில நிகழ்வுகளை உங்களோடு பகிர்ந்துக் கொண்டதும், ஒரு நெகிழ்வுக்காக மட்டுமே. என் கவிதையின் கொடியை நாட்டுவதற்காக அல்ல.

பேஸிவ் டோன் என்று ஒரேயடியாக நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்ள முடியாது. ஒரே நேரத்தில் பறந்தபடியும், நிலத்தில் வீழந்தபடியுமான உணர்வுநிலையிலேயே தான் எழுதியிருப்பேன். யோனியிலும் சாவில்லை, யோனிக்கும் சாவில்லை என்று முடித்திருப்பது அதனால் தான்.

ஒரு படைப்பாளியின் படைப்பு வெளியை கண்க்கிலெடுக்க வேண்டும் என்பதை அவரின் எல்லா கவிதைகளும் ஒன்றா? அப்படியென்றால் சரக்கா? என்றெல்லாம் தட்டையாக நீங்கள் புரிந்துக் கொண்டு உணர்ச்சிவசப்படுவது நியாயமே இல்லை.

ஒரு பிரதியில் சாதி,மதம்,நிறுவனம் மற்றும் எந்தவகையான அதிகாரமும் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பது ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் எழுத வரும் ஒரு எழுத்தாளருக்கு இருக்க வேண்டிய அடிப்படை அறம். ஈஷிக் கொண்டு என்று எழுதும் பார்ப்பனியத்திற்கு என்னால் வக்காலத்து வாங்க முடியாது.

ரோம் சாம்ராஜியம் எரிகிறதா என்ன? வரலாறு முக்கியம் அமைச்சரே என்று வடிவேல் காமெடி போன்ற எகத்தாளங்களையும் தாண்டித்தான் நான் செல்ல வேண்டியிருக்கிறது

யமுனா தோழருக்கு,

மார்க்ஸியப் பிதாமகர்களைப் பற்றி எந்தக் கவிதையும் எழுதியதாக நினைவில்லை. லெனின், மார்க்ஸ் போன்ற பெயர்களை கவிதைககளில் பயன்படுத்துவதை Blasphemic notionsodu பார்க்க மாட்டீர்கள் என்று நம்பவே விரும்புகிறேன்.

அவதூறுகளுக்கென்றே இயங்கும் ஒரு இணையதளத்தில் நான் ஏதோ அரசியல் அணியில் இணைந்துவிட்டதாக நீங்கள் எழுதியிருந்தீர்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். நான் இடதும் இல்லை, வலதும் இல்லை, நடுவிலும் இல்லை, விளிம்பில், ஒரு இடமற்ற அடையாளமாகவே இருப்பதாக சமீப காலங்களில் உணர்கிறேன். தோழர் அ.மார்க்ஸ், எனக்கென்று இல்லை, எந்தப் படைப்பாளிக்கு அச்சுறுத்தல் நடந்தாலும் அவர்களுக்காக சமரசமின்றி முன் நிற்பார்.அவர் மையமாக உருவாக ஒருபோதும் முயற்சிக்க மாட்டார். அவரிடம் இருக்கும் அபூர்வமான சனநாயகத்தன்மை அணிகளை, குழுக்களை உருவாக்கும் தந்திரங்களுக்கு எதிரானது.

யமுனா தோழர், இதே இரண்டு கவிதைகளை ஆங்கிலத்தில் வேறு யாரோ, வேறு நாட்டு முகவரியில் வெளியிட்டிருந்தால்,மொழிபெயர்த்து "எனக்குள் பெய்யும் மழை" இரண்டாம் பகுதியை தொகுக்க ஆரம்பித்திருப்பீர்கள். நான் உங்கள் அடுத்த வீட்டுப் பெண்ணாக இருப்பது தான் உங்கள் பிரச்ச்னை.

இறுதியாக பெருந்தேவி மற்றும் ஜமாலன் அவர்களின் இந்த விவாதங்களுக்கெல்லாம் பின்னால் பல முன்முடிவுகளும், வேறு நோக்கங்களும் இருப்பதாக எனக்குப் படுகிறது.

No comments:

Post a Comment