Saturday, October 5, 2013

லீனா மணிமேகலையின் எட்டாவது அகத்திணைக் கவிதைகள்


விமர்சனம்:  கவிஞர் மனோ. மோகன்

நன்றி : புதுவிசை  

 
முன்கதைச் சுருக்கம்

அதுவொரு காலம். ஆதித்தாயின் அரவணைப்பிலிருந்தது உலகம். அவள் உலகத்தை ஆள்பவளாக இருந்தாள். அவளே உலகமாகவும் இருந்தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.

தன் கண்ணுக்கு முன்னே பிரம்மாண்டமாய்த் தெரிந்த ஒவ்வொன்றின்மீதும் பிரமிப்பு கொண்டிருந்தான் மனிதன். மனிதன் என்பது ஆண் தன்னிலை மட்டும்தான். இங்கே பெண் இல்லை. ஏனென்றால் பெண் அவனுக்கு வெளியே தனியே நின்றாள். அவளின்மீதும் பிரமிப்பு கொண்டிருந்தான் அவன்.

மனிதன் மண்ணையும் நீரையும் கையகப்படுத்த நினைத்தபோதுதான் பெண்ணையும் கையகப்ப்படுத்த நினைத்தான். (இதனை வரிசை மாற்றியும் வாசித்துக் கொள்ளலாம்). ஒரு பெண்ணைத் தனது உடல் பலத்தால் அடக்கியாள்வது எக்காலத்திலும் இயலாத ஒன்று என்பதை அறிந்த கணத்தில் உளவியல் போர்களை நிகழ்த்தினான். அதில் வேடிக்கை என்னவென்றால் அவனெதிரே போர்க்களத்தில் நின்றவளுக்கு அது போர் என்றே தெரிந்திருக்கவில்லை என்பதுதான்.

அவன் பெண்ணைப் போலவே தனக்குப் பிரமிப்புண்டாக்கிய ஒவ்வொன்றுக்கும் பெண்ணின் பெயரை வைத்தான்; பெண்ணுக்குத் தன் இடப் பக்கத்தில் இடம் தந்ததாக அறிவித்தான். (தனது தலையில் இன்னொரு பெண்ணுக்கு இடம் தந்ததாகப் புரளியைப் பரப்பி, பெண்ணின் இருப்புக்குத் தான் கொடுத்த அங்கீகாரத்தையே பகடி செய்து அவன் ரகசியமாய்ச் சிரித்தது வேறு கதை.)

இத்தகைய புனைவுகளின்மூலம் ஒரு நெருப்புப் பிழம்பைக் குளிர்வித்து தன் குளிர்ச்சாதனப் பெட்டிக்குள் வைத்து அதன் வெப்பநிலை மாறாமல் பார்த்துக் கொண்டான் அவன். அதன்பிறகு அவனே உலகத்தை ஆள்பவனாக இருந்தான். அவனே உலகமாகவும் மாறிப்போனான்.

பின்னணி : 1

தமிழில் பெண் தன்னிலையின் உடல் வேட்கை குறித்த பதிவில் முதலில் குறிப்பிடப்பட வேண்டியவள் ஆதி அவ்வை. கவிதைத் தலைவி பொதுவெளியில் பேசுவது மறுக்கப்பட்ட சூழலில் தனது காமத்தையே கவிதைத் தலைவியின் காமமென மொழிந்து பெருவெடிப்பை ஏற்படுத்தியவள் அவள். அதன்பிறகு இத்தைகைய பெருவெடிப்பைக் காண நீண்ட காலம் பயணித்து ஆண்டாளை வந்தடைய வேண்டியிருக்கிறது. இவர்கள் இருவரிடமும் இருக்கும் ஒரு பிரச்சினை தலைவனின் காதல் என்னும் பெயரால் மீண்டும் கலாச்சார ஆதிக்கவாதிகளின் பொதுச் சட்டகத்திற்குள் நின்று ஆண் மையத்திற்குள் அடைபட நேர்ந்ததுதான். என்றபோதும் கால வெளி சூழல்களைப் பொருத்திப் பார்க்கையில் அதுவே இன்றைக்கிருக்கிற எந்தக் கலகத்திற்கும் குறையாத ஒரு கலகமாக அக்காலத்தில் இருந்திருக்கும் என்பது என் உறுதி.

அவ்வைக்கும் ஆண்டாளுக்கும் இடையில் ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகள் இருக்குமா? அப்படி இருக்குமானால் ஆண்டாளுக்கும் நவீன பெண் கவிகளுக்கும் இடையில் இன்னொரு பத்து நூற்றாண்டு இருக்கும்.

வாசகக் குறிப்பு : 1

தமிழ் நவீன பிரதிகளில் Bisexual என்றழைக்கப்படுகிற இருபால் காதல் குறித்தும் கே (Gay), லெஸ்பியன் (Lesbian) என்று அழைக்கப்படுகிற ஒருபால் காதல்கள் குறித்தும் நான் முதலில் வாசிக்க நேர்ந்தது ரமேஷ் : பிரேமின் கிரணம் எழுத்துக்களில்தான். அதன் பிறகு அவர்களின் ‘அங்குமிங்கும் கதைகள் இங்குமங்கும் உடல்கள்’, ‘மனவெளி நாடகம்’, 'இருவர்', 'கூத்தாண்டவர்' முதலான புனைவுகளிலும் 'சொல் என்றொரு சொல்'லிலும் இதனை வாசிக்க நேர்ந்தது. மாலதி மைத்ரியின் ‘மழை போகும் பாதை’ முதலான கவிதைகளை லெஸ்பியன் கவிதைகளாகவே வாசிக்க இயலுமென்றாலும் அவை வாசகரின் தேர்வைப் பொறுத்தது. இத்தகைய பதிவுகளுக்குப் பிறகு முதன்முதலாகத் தமிழில் ஒரு லெஸ்பியன் கவிதைத் தொகுப்பு என்னும் தன்னடையாளத்துடன் வெளிவந்திருக்கிறது அந்தரக் கன்னி.

அந்தரக் கன்னியின் குரல் : 1

ஈர சொப்பனங்கள்
என் விரல்களிலிருந்து
அவளுடையது
வேறொன்றாகத்தான் இருக்கின்றன

அவை வருடும்போதெல்லாம்
மூச்சுக் குழல்கள்
மர்மமாய் இரைகின்றன
எண்கள் குழறுகின்றன
நடுங்கி இறுகும் தசைகளில்
தேங்கிவிடும் குருதி
சிவப்பை இழக்கிறது
இசை பெறும் உடல்
கசிந்து பெருகுகிறது

ஆதிக் கிணறாய் என்னை மாற்றிவிடும்
உயிர்க்குமிழி கோல்களுக்கு
வெறும் விரல்கள் என
யாரடி பெயர் வைத்தது
பக்கம் : 35

பின்னணி : 2

நிறுவனமயப்படும் ஒவ்வொன்றும் அதிகாரம் பொருந்தியதாகத் தன்னை வடிவமைத்துக் கொள்வதன்மூலம் தன்னிலை (Self) மற்றமை (Other) என்னும் இருமை எதிர்வை ஏற்படுத்தி அதைக் காலத்திற்கும் பாதுகாக்கும் விருப்பத்தைக் கொண்டதாக இயங்குகிறது. (அதிகாரம் கையகப் படுகிற ஒவ்வொன்றும் நிறுவனமாகிறது என வரிசை மாற்றியும் இதனை வாசிக்கலாம்). இதன்மூலம் அதுவொரு படிநிலை அமைப்பைக் கட்டமைக்கிறது. படிநிலை அமைப்பென்பது இரண்டுக்கு மேற்பட்ட மற்றமைகளைக் கொண்டதாகக் கூட அமையுமென்றாலும் ஒவ்வொரு மற்றமையுடனான தனது உறவையும் இருமை எதிர்வாகப் பாதுகாக்கவே அதிகாரத் தன்னிலை விரும்புகிறது. அதன்மூலம் தன்னிலைகள் பேசுகின்றவையாகவும் மற்றமைகள் கேட்கின்றவையாகவும் இயங்கும் நிலையை அடைகின்றன. இன்னும் உன்னிப்பாகக் கவனித்தால் தன்னிலைக்கும் மற்றமைக்குமான உறவில் மற்றமை கேட்பதற்கான உரிமையே கூட மறுக்கப்பட்டிருக்கிற பாங்கினையும் உணர முடியும். ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் இத்தகைய படிநிலை அமைப்பைக் குலைத்து மற்றமையாக இருக்கும் ஒன்று தன்னிலையாக மாற எத்தனிக்கும் வேட்கையின் வெளிப்பாடாகவே இருந்துவருகிறது.

வாசகக் குறிப்பு : 2

அந்தரக்கன்னி மற்ற கவிகளின் கவிதைகளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வது போலவே லீனா மணிமேகலையின் மற்ற தொகுப்புகளிலிருந்தே கூடத் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இதற்கு முன்வந்த பரத்தையருள் ராணி தொகுப்பு ஆண் தன்னிலையின் வன்முறைகளுக்கெதிரான உக்கிரமான குரலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவொரு போராளி களத்தில் நின்று உரக்கச் சத்தமிட்டுக் கொண்டு வாள் சுழற்றுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தொகுப்பு. ஆனால் அந்தரக் கன்னி உக்கிரம் கூடிய அதே போராளி வீட்டுக்கு வந்து தன் காதல் இணையோடு கலந்திருக்கும் தருணத்தைப் பதிவு செய்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது காதல் இணையில் எதுவும் களிறில்லை; இரண்டும் பிணைகள்தான்.

காதலின் இதம் கூடிய கவிதைகளாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் அதே சமயம் இந்தக் கவிதைகள் போர் நிறுத்தத்திற்கான கவிதைகளாக இல்லை. இது வேறு மாதிரியான தாக்குதல். எதிராளிக்குப் பதிலடி கொடுப்பதை விடவும் பொருட்படுத்தாமல் போவது அதைவிடவும் உக்கிரமானது. ஒரு நபர் தன்னைத் தன்னிலையாக உணரும் கணத்தில் எதிரிலுள்ளவரை மற்றமையாக உணர்வது இயல்பு. அந்தரக்கன்னி தன்னிலையாகவும் மற்றமையாகவும் தன்னையே உணர்வதன்மூலம் (அதாவது கவிதைக்குள் பெண்ணையே தன்னிலையாகவும் மற்றமையாகவும் உணர்வதன்மூலம்) தனது மொழி வெளிக்குள் ஆண் இருப்பை அழித்துவிட்டு உரையாடலைத் தொடர்கிறது. ஆண் தன்னிலையாக இருக்கும்போது பெண் மற்றமையாக இருப்பாள். பெண் தன்னிலையாக இருக்கும்போது ஆண் மற்றமையாக இருப்பான். அந்தரக்கன்னியின் முழுச் சுற்றும் முடியும் கணத்தில் ஆண் தன்னிலையாகவும் இல்லை மற்றமையாகவும் இல்லை.

அந்தரக் கன்னியின் குரல் : 2

மின்னும் நாக்கு
உப்பும் பனியும் மின்னும் நாக்கால்
ஸாப்போவின்* கவிதையொன்றை
உயிருந்தப் பாதையில் பாய்ச்சி
என்னிலிருந்து
சூறையாற்றைப் பிரித்தெடுக்கும் உனக்கு
முப்பத்து மூன்று சிவந்த இதயங்களைப் பரிசாகத் தருகிறேன்
என் ஆலிவ் இலை விரல் அழுத்தங்களில்
தோல் வெள்ளியாய் காய்கிறது
உதிரும் மயிரையெல்லாம் வேட்கையில்
மிச்சமில்லாமல் தின்கிறேன்
மன்மதனைப் பலியிட்ட நாளில்
பறை முழங்குகிறது
நீயும் ரதி நானும் ரதி

* ஸாப்போ - வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த கிரேக்க  லெஸ்பியன் கவிஞர்
பக்கம் : 38

பின்னணி : 3

யதார்த்தம் என்பதே புனைவுகளால் கட்டமைக்கப்பட்டதாகத்தான் இருக்கிறது. கலாச்சாரம் முதலாக யதார்த்தத்தை இயக்கும் அரூபக் காரணிகள் யாவும் தனக்கு உரிமையான யதார்த்தத்தையே கட்டமைத்துக் கொள்வதன்மூலம் ஒவ்வொரு தனிமனிதனையும் தனது கண்காணிப்புக்குள் கொண்டுவருவதைச் சாத்தியமாக்கிக் கொள்கின்றன. தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் யாவும் இத்தகைய அரசியலின் உப பிரதிகளாகத்தான் இயங்குகின்றன.

வரலாறு என நம்பப்படும் புனைவுகளும்கூட இறந்தகாலம் குறித்ததாக இல்லாமல் அதிகார நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த வேட்கையிலிருந்து கிளைப்பவையாகவே இருக்கின்றன. இதன்மூலம் இயல்பான பன்மைத் தன்மைக்கெதிராக அதிகாரத் தன்னிலைகள் ஒற்றைத் தன்மை கொண்ட இலக்கு சமூகத்தைக் கட்டமைக்கின்றன. இதன்மூலம் ஒருவித ஃபாசிச இயங்குதன்மை கொண்டவையாக அவை உருமாறுகின்றன. சங்கப் பிரதிகள் உயர்குடிக்கான காமம் என நம்பப்பட்டவற்றை மட்டுமே பேசியதற்கான காரணமாகவும் இதுதான் இருக்கிறது.

அக்காலத்திலும்கூட இத்தகைய போக்குக்கெதிரான கலகக்குரல்கள் பேசப்பட்டே வந்துள்ளன என்றபோதும் அவை தொகுக்கப்பட்ட காலத்திலும் இலக்கணம் வகுக்கப்பட்ட காலத்திலும் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இத்தகைய அரசியல் சூழ்ச்சியை வெற்றி கொண்டு காலத்தில் பயணித்த சிற்சில கலகப் பிரதிகளும் மைய நீரோட்டத்தின் நிறத்திலேயே இயங்குவதாகப் பாவனை செய்ததின்மூலமே தமது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. பாரி மகளிரின் ’அற்றைத் திங்கள்’ பாடல் மேல் பூச்சில் கழிவிரக்கப் பாடலாகவும் உள்பொருளில் இனப் படுகொலைக்கெதிரான குரலாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதை இங்கு நினைவில் கொள்ளலாம். பின் நவீன காலத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நாம்  இத்தகைய பிரதிகளின் வாசிக்கப்பட்ட தொனிகளைக் கலைத்துவிட்டு வேறு பல தொனிகளிலும் வாசித்துப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வாசகக் குறிப்பு : 3

அந்தரக்கன்னி கவிதைகள் யதார்த்தம் என்னும் கலாச்சார ஒழுங்கு அடிப்படையிலான புனைவுகள்  பெண் தன்னிலைக்கெதிராக நிகழ்த்தும் தாக்குதல்கள், வரலாற்றுப் புனைவுகளின் மூலம் பெண் தன்னிலை ஆட்கொள்ளப்படுதல் ஆகியவற்றிலிருந்து தனது கலகத்திற்கான தர்க்கக் காரணிகளைக் கைக்கொள்கின்றன. 'தேவிடியா' என்று தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை. தொகுப்பின் முதல் கவிதை அதுதான். ஒரு பழிச்சொல் தனது அர்த்த மதிப்பிற்கும் பயன் மதிப்பிற்கும் இடையில் இயங்கி பெண்ணின் இயக்கத்தை முடக்குவதைப் பதிவுசெய்கிறது அக்கவிதை. இன்னொரு கவிதை பெண் வழிபாட்டில் பின்னால் இயங்கும் வரலாற்றரசியலின் முரண் நகையைப் பதிவு செய்கிறது. கலாச்சார ஒழுங்குகளும் வரலாற்று ஒழுங்குகளும் மற்றமைகளைக் கழுவேற்றியபின் கழுவில் வழிந்த குருதிக் குழம்பென உறைந்திருக்கின்றன இக்கவிதைகள்.

அந்தரக் கன்னியின் குரல் : 3

மந்திரம்
அவள்
தனக்கு இன்னொரு யோனி வேண்டுமென்றாள்
ஊர்
அவளைக் காரி உமிழ்ந்தது
அவள் ஏற்கனவே நனைந்திருந்தாள்
வசை ஒவ்வொன்றும்
அவள் முலைகளில் தெறித்து நொறுங்குகிறது
கல்லால் அடிபட
கைது செய்யப்பட
சித்திரவதைக்குட்பட
சிதைக்கப்பட
சிலுவையில் அறையப்பட
நாடு கடத்தப்பட
கொல்லப்பட
உத்தரவுகளுக்கு வாய்ப்பு வழங்குபவள் போலவே
நித்தியமாய் சொல்லியபடியிருந்தாள்
தனக்கு இன்னொரு யோனி வேண்டுமென
அவள் நிர்வானமாயிருந்ததால்
காதலை அவளிடமிருந்து
வெளியேற்றிவிட முடியவில்லை


இறுதியில் அவளுக்கு
எட்டாவது கன்னி எனப் பெயரிட்ட
ஊர்
கழுவேற்றி முக்குகளில்
காவல் தெய்வமென வைத்து வழிபட தயாராகிறது
யோனியச்சில் செய்யப்பட்ட விளக்குகளின்
நெய்த்திரிகள்
தினமும் ஏற்றப்பட
அவளின் நாவு எரிக்கப்படுகிறது
பக்கம் : 11

வாசகக் குறிப்பு : 4

ஒரு கிராமத்துப் பெண்ணின் மனப்பதிவில் விளையாட்டுக்களும் பாடல்களுமெனப் பதிந்திருக்கும்  வாய்மொழிப் பிரதிகளிலிருந்து தனது தொனியைக் கண்டடைகிறது அந்தரக்கன்னி. அதனால் இத்தொகுப்பின் வரிகள் சுருங்கி இறுகுவனவாக இல்லாமல் தளர்ந்து இளகிய நிலையில் இயங்குகின்றன. இது லீனா மணிமேகலையின் முந்தைய தொகுப்புகளில் இல்லாதது.

எழுத்துப் பிரதிகள் தொடர்ந்து கண்காணிப்பிற்குட்படுபவை. வாய்மொழிப் பிரதிகளோ கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்காமல் தமது மனவெளியை சுயத்தின் அழகியலை அடையாளத்தின் அரசியலை வெகு இயல்பாக நிகழ்த்திக் காட்டிவிடுகின்றன. வார்த்தைகளின் இடைவெளியில் இத்தகைய வாய்மொழிப் பிரதிகளின் தொனியைக் கைக்கொள்ளும் அந்தரக்கன்னி வார்த்தைகளுக்குள் வன மகள் ஒருத்தியின் நினைவிலிருக்கும் பூக்களையும் மரங்களையும் நினைவுகொள்கிறது. ஒரு பெண் தன்னிலையின் உடல்சார் பால்சார் அரசியல் என்னும் தளத்திலிருந்து தனது அரசியல் தள விரிவை இவ்விடத்தில் சாத்தியமாக்கிக் கொள்கிறது அந்தரக்கன்னி.

உப குறிப்புகள் :

Ø  சங்கப் பிரதிகளில் இருவேறு பெண் தன்னிலைகள் தங்களை ஒரே உடலாக உணர்கிற கணங்களைத் தலைவி தோழி உறவிலும் தலைவி பரத்தை உறவிலும் காண முடியும். கல்யாணம் மறுக்கப்பட்ட தோழி தலைவியின் இடத்திருந்து தலைவனை எம் தலைவன் என உரிமை கொள்ளும் கணங்களிலும், குழந்தை பெற்றுக் கொள்ள உரிமையில்லாத பரத்தை தலைவியின் இடத்திருந்து அவளது புதல்வனை எம் புதல்வன் என உரிமை கொள்ளும் கணங்களிலும் இவற்றை உணரலாம். ஆனாலும் அவை தலைவனுக்கான பணிவிடை கருதியவை என்ற நிலையிலும் இரண்டு பெண்களுக்கிடையிலான உறவில் தலைவனைத் தவிர்த்த சுயத் தன்னிலைகளாகத் தங்களை உணரும் தருணங்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன என்னும் நிலையிலும் இருவேறு பெண் தன்னிலைகள் ஒரே உடலாகத் தம்மை உணரும் நிலை இந்தத் தொகுப்பு குறித்த உரையாடலில் ஏதேனும் உதவி செய்யுமா?.

Ø  யோனிக் கலகக்காரிகளின் கவிதைகளையும் ஜூன் ஜோர்டனின் கவிதைகளையும் இத்தொகுப்புக்குள் கொண்டுவந்ததை பல்வேறு பெண் தன்னிலைகளோடும் ஒரே உடலாகத் தன்னை உணரும் நிலையின் உச்சமெனக் கொள்ளலாமா?

Ø  ஸாப்போவோடும் யோனிக் கலகக் காரிகளோடும் தன்னை ஒத்துணரும் இத்தொகுப்பின் தன்னிலை QUEER கோட்பாட்டுச் சிந்தனையாளர்களோடும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் திறப்புகளை உடையவளதானோ!

Ø  தனது தெய்வம், தாய், விளையாடும் மரப்பாச்சி, சந்திக்கும் ஆட்டிடைச்சி என ஒவ்வொரு பெண்ணின் மீதும் காமம் கொள்ளும் அடங்காத வேட்கை கொண்ட கவிதைத் தலைவி முன்பு அவள்களோடும் இருந்தாள்; அதே சமயம் அவனோடும் இருந்தாள். வாசிக்கும் கணத்தில் அவன் பழைய ஞாபகமாக மட்டுமே எஞ்சுகிறான் அல்லது கவனத்திலேயே அவன் இல்லை. ஆனாலும் முன்பு இருந்தான் என்ற நிலையில் இது லெஸ்பியன் தன்னிலையின் தொகுப்பா அல்லது பைசெக்ஷுவல் தன்னிலையின் தொகுப்பா?

Ø  கவிதைக்குள் பட்டியல் அடுக்குவதை லீனா மணிமேகலையின் கவிதைகளில் அதிகமாகவே வாசித்து வந்திருக்கிறேன். அவற்றுள் சில இயங்கு தன்மை கொண்டு என்னைத் தொந்தரவு செய்ததுண்டு. சில தட்டையாகவே என்னைக் கடந்துபோனதுமுண்டு. இத்தொகுப்பில் முத்தத்தின் தருணங்களை அடுக்கும் 'மச்சக்கன்னி' கவிதை என்னைத் தொந்தரவு செய்கிறது. கவிதைக்குள் தொந்தரவு என்பதே கொண்டாட்டத்திற்கானதாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் 'அநிச்சம்' கவிதை பொருட்கள் தருணங்கள் நிறங்கள் என மாறி மாறிப் பயணிக்கும்போதுகூட எனது வாசிப்பைத் தட்டையாகவே கடந்துபோகிறது.

Ø  அந்தரக்கன்னியின் திரவ மொழியைக் கொண்டாடுவதானால் அது லீனா மணிமேகலையின் மற்ற தொகுப்புகளின் கவிதைகளை நான் உவப்பில்லாதவையாகக் கருதுவதாகுமா? ஒருவேளை முந்தைய கவிமொழியின் உறைபனி நிலை எனக்கு உவப்பில்லை என்பதிலிருந்தும்கூட இந்தத் திரவத் தன்மையை நான் கொண்டாடலாம்.

Ø  முன்பொரு கணத்தில் லிங்கத்தைக் கோணக் குச்சியாக்கி உறுமி கொட்டிக் கொள்ளும் கவித் தன்னிலை பின்பு தன் தோழியொருத்தியின் விரலை உயிர்க்குமிழி கோலாக உணர்வது லெஸ்பியன் புணர்ச்சியின் வெளிப்பாடுதானா? அல்லது அந்தத் தோழியின் விரல் லிங்கத்தின் பதிலீட்டு உறுப்பாகத்தான் செயல்படுகிறதா?

Ø  இறந்துபோன தன் லெஸ்பியன் தோழியுடன் காதலின் பைத்தியத் தன்மையோடு உடலுறவு கொள்ளும் பெண் தன்னிலையின் கவிதையான ‘அதுவொரு காதல் காலம்’ கவிதையும் இடிபஸ், எலெக்ட்ரா செயல்நிலைகளுக்கு வெளியே பெண்ணொருத்தியின் தாயின் மீதான காமத்தை வெளிப்படுத்தும் ‘அம்மா’ கவிதையும் தொகுப்பின் உரையாடலை வேறு பரிமாணங்களுக்குக் கொண்டு செல்லும் கவிதைகள் என்பது என் துணிபு.

அந்தரக்கன்னியின் குரல் : 4

அதுவொரு காதல் காலம்
அவள் இறந்துதான் போனாள்

இரவு முழுக்க
அணைத்தே இருந்தேன்

ஒரு பொம்மையைப்போல
உயிர்ப்பிழந்த
அவளின்
இமைகளை நாசியை கன்னங்களை
முலைகளை தொடைகளை பாதங்களை
அவளைப்போலவே சுவைத்தேன்

பெருகும் கண்ணீரில் அவள் பிம்பம் தொலைகிறது
கலையும் வண்ணங்கள் அவள் சுண்ணத்தைப் போல
பாலாய் வெளியேறுகின்றன

உள்ளங்கைகளின் ரேகைகள்
துடித்துவிடாதா என வன்மம் கூடி
வெறித்தபடி இருந்தது
நாங்கள் சுகித்திருந்த காலம்
பக்கம் : 37

திணை வரையறுத்தல்

தொல்காப்பியம் ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்’ என்கிறது. ஆனால் சங்க இலக்கியத்தில் நடுவண் ஐந்திணைகள் மட்டுமே பேசப்படுகின்றன. கைக்கிளையும் பெருந்திணையும் சில கலித்தொகைப் பாடல்களின்மூலம் அடையாளம் காணப்பட்டாலும் அவையொன்றும் பெரிய அளவில் மாற்று உரையாடல்களை நிகழ்த்திய பாடல்களாக இல்லை. கைக்கிளையும் பெருந்திணையுமேகூட ஆண் பெண் உறவு என்னும் அங்கீகரிக்கப்பட்ட சட்டகத்திற்குள் இயங்குபவையாகத்தான் இருந்தன. வயது வித்தியாசங்கள், இணையைத் தேர்வு செய்தலில் பொதுவெளியிலிருந்து விலகுதல் என்னும் நிலையில் தான் இவை நடுவண் ஐந்திணைகளிலிருந்து வேறுபட்டியங்கின. மற்றபடி காமத்தின் வேறு பால் நிலை சாத்தியப்பாடுகளெதுவும் தமிழின் செவ்வியல் பிரதிகளில் இல்லை.


தொல்காப்பியம் பெருந்திணைக்குக் குறிப்பிடும் நான்கு பண்புகளில் ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறன்’ என்பதை மட்டும் உரை பிரதிகளை மறுதலித்துவிட்டு வாசித்தால் அவை அங்கீகரிக்கப்பட்ட Heterosexual தன்மையைக் கடந்து வேறு பல காதல் வகை மாதிரிகளைப் பேசுவதற்கான திறப்பு கொண்டிருப்பதை உணர முடியும். அதாவது உயர்குடிகளுக்கான காதலொழிந்த எல்லாக் காதலும் (கே, லெஸ்பியன் உட்பட) இதில் அடங்கும் எனவும் பொருள் கொள்ள முடியும். எது எப்படி இருந்தபோதும் கே, லெஸ்பியன் முதலான காதல்களை அவற்றின் தனித்தன்மையோடும் தீவிரத்தன்மையோடும் புரிந்துகொண்டு அவற்றுடனான உரையாடலை நீட்டித்துக்கொள்ள, பேசப்பட்ட திணை வெளிக்கு அப்பால் அவற்றின் திணையைக் கட்டமைப்பது அவசியமாகிறது. அந்தரக் கன்னியின் கவிதைகள் ஏழு திணைகளுக்கு வெளியே தனது இருப்பை உறுதி செய்யும் கவிதைகள்; அவை எட்டாவது அகத்திணைக் கவிதைகள். அவற்றின் திணையை இனியும் பூக்களின் பெயரால் அழைப்பது சரியல்ல. வேண்டுமானால் யோனியின் பெயரால் அழைக்கலாம்; அதுவும்கூட அந்தத் திணை மாந்தரின்  ஒப்புதல் இருந்தால்தான்.

Friday, October 4, 2013

காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் தேசம்


நன்றி: அந்திமழை 







நிலாந்தனின் கவிதை ஒன்று, 

அப்பாவுக்குப் பிதுர்க்கடன் கழிக்காத மற்றொரு ஆடியமாவாசை. அவர் காணாமற்போய் இருபது ஆண்டுகளாகிவிட்டன. அவருடைய எடுப்பான வளைந்த மூக்கையும் உறுத்தும் விழிகளையும் சலன சித்தத்தையும் எனக்குக் கொடுத்துவிட்டு கொழும்பு மாநகரின் கடற்சாலையில் அவர் காணாமற் போனார். சூதாடியான ஓரு ஓய்வுபெற்ற முஸ்லிம் படையதிகாரியுடன் அவரைக் கடைசியாகக் கண்டிருக்கிறார்கள். அம்மாவின் கண்ணீரைப்பிழிந்தால் கிடைக்கும் அப்பாவின் கறுப்புவெள்ளைக் கோட்டுருவத்தில் அவர் ஒரு விறுத்தாப்பி, அரைச்சன்னியாசி. ஆனால் எமது சுவர்களில் இன்றுவரையிலும் கொழுவப்படாத ஒரு புகைப்படமாகத் தொங்கும் ஆற்றாமையும் குற்றவுணர்ச்சியும் கலந்த நினைவுகளில் அவர் ஒரு அன்பான தோற்றுப்போன அப்பா. கவிஞர் நிலாந்தனைப்போல இலங்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் "காணாமல் போகடிக்கப்பட்ட" தங்கள் உறவுகளுக்காக வருடக்கணக்கில் தேடிக்கொண்டும், காத்திருந்தும் உழல்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களில் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கணக்கின்படி உலக அரங்கில் இலங்கை முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஈராக்கோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஐந்து நாளுக்குமொருவர் இலங்கையில் இன்னும் காணாமல் போகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகள் தலையெடுக்கும் முன்னரே ஆயுதமேந்தி கிளர்ச்சி செய்த ஜே.வி.பி இயக்கத்தினரான சிங்களரை எண்பதுகளில் கூட்டம் கூட்டமாக காணாமல் போகடித்துப் பின் கொன்று புதைத்த கதைகளை ஆங்காங்கே தோண்டி எடுக்கப்பட்ட கொத்து கல்லறைகள் காட்டிக்கொடுத்தன. கடந்த வருடம் தோண்டியெடுக்கப்பட்ட மாத்தளை புதைகுழியில் இருந்த எலும்புக்கூடுகள் தங்கள் பிள்ளைகளுடையவை என்றும், தங்கள் கணவர்களுடையவை என்றும், தங்கள் அப்பாக்களுடையவை என்றும் நீதிமன்றங்களில் வாதாடிக்கொண்டிருக்கிறார்கள் உறவுகள். அவர்களோடு மாத்தளை நீதிமன்றத்தில் ஒரு நாள் கழித்ததில், வாழ்தலுக்கும் சாதலுக்குமிடையே ஊசலாடும் சித்திரவதையை வருடாந்திரமாக இந்த உறவுகள் எப்படித்தான் கடக்கிறார்கள் என்று பதைப்பாய் இருந்தது.

Inline images 2

ஸ்பெயின் உள்நாட்டுப்போரை குறித்த கவிதையில், நெரூடா, "என்னை ஏன் கனவுகளை குறித்து, இலைகளைக் குறித்து,  எனது நாட்டின் பிரம்மாண்ட எரிமலைகள் குறித்து கவிதை எழுதவில்லை என்று கேட்காதீர்கள். வந்து பாருங்கள்,  வீதியில் குழந்தைகளின் ரத்தம் ஒடுகிறது, குழந்தைகளின் ரத்தம் போல" என்று எழுதியிருப்பார்.  ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாண நூலகத்திற்கு அருகே கவன ஈர்ப்பு போராட்டத்திற்காக கூடிய "காணாமல் போகடிக்கப்பட்டவர்களின்" உறவுகளுடைய கதறல் விவரணைகளுக்கோ, ஆற்றுதலுக்கோ கூட அப்பாற்பட்டது. அடையாள அட்டைகளிலும், கடவுச்சீட்டுகளிலும், புகைப்பட சட்டங்களிலும், தங்கள் உறவுகளின் உயிரை நிழற்படமாக சுமந்துக்கொண்டு பார்ப்பவர்களிடமெல்லாம் திருப்பித் தரச்சொல்லி கேட்கிறது யுத்தம் கூறு போட்ட சமூகம். இலங்கைத் தீவென்பது கடலால் சூழப்பட்டதா கண்ணீரால் சூழப்பட்டதா என்று எண்ணவைத்தது அங்கு ஓங்கி எழுந்த ஒப்பாரி குரல்கள். புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்திவிட்டு அழும் ஒவ்வொருவரையும் அணைத்துக்கட்டிக்கொள்ளவே  எனக்கு தோன்றியது. எவ்வளவு சங்கடமான தருணத்தையும் ஒரு கவிஞர் விளக்கிவிட வேண்டிய  கடப்பாடுடையவர் என்று லெனின்கிராட் முற்றுகையிடப்பட்டபோது அன்னா அக்மதோவா சொன்னதாக சொல்வார்கள். எனக்கென்னவோ, இக்கட்டுரைக்கு இறுதிவரிகளை எழுதிவிட முடியாதெனவே தோன்றுகிறது.

பதினைந்து பதினாறு வயது பள்ளிக்கூட சீருடையோடு காணப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு தந்தை யானப்பட்டவரோ, தாயானப்பட்டவரோ பேரழுகை அழுதுக்கொண்டிருந்தார்கள் . தம் கணவர்கள் காணாமல் போன தேதி, நேரம், நாள் விவரக்  கணக்குகள் சொல்லி சொல்லி மாய்ந்து தேம்பிகொண்டிருந்தார்கள்  அரை விதவைமார்கள். சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளைவேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக சாட்சியங்களோடு சரண்டைந்தவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளலாவிகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி  கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கதைகளும் காரணங்களும் கொலைகார அரசுக்கு யாரும் தப்பவில்லை என்பதற்கு சாட்சி சொல்கின்றன. கொழும்பு நியூமகசின்வெலிக்கடைகொழும்பு தடுத்து வைத்தல் சிறைநீர்கொழும்புமகரஅநுராதபுரதிருகோணமலைமட்டக்களப்புபதுளைகண்டியாழ்ப்பாணம்பூசா என எல்லாச் சிறைச்சாலைகளின் கதவுகளையும் தட்டிப்பார்த்தும் . தடுப்பு முகாம்களுக்கும் அலைந்தும் , மனித உரிமை அமைப்புகளுக்கெல்லாம் மனுக்கள் கொடுத்தும் , எந்த துப்பும் கிடைக்காத விரக்தியிலும், யார் அழைத்தாலும்  நியாயம் கேட்டுப் போக தயாராகவே இருக்கின்றார்கள் உறவுகளைத்  தொலைத்தவர்கள். ராணுவம், போலீஸ் , சி.ஐ.டி என அச்சுறுத்தல்கள் வரும்போதெல்லாம், "நாங்கள் என்ன நாடா கேட்கிறோம். எங்கள் உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா எனத் தானே கேட்கிறோம்" என்று சுடச்சொல்லி நெஞ்சை காட்டுகிறார்கள். மரணச்சான்றிதழ்களைத் தந்து ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் கொடுத்து  ஏற்கச் சொல்லும் அரசாங்கத்திடம் இறுதிச் சடங்குகள் செய்ய பிணங்களையாவது தரச் சொல்லிக் கோரிக்கை வைக்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால், எல்லாரையும் சந்திக்க முடியாமல், பதினைந்து பேர் கொண்ட பிரதிநிதித்துவக்குழுவை  சந்தித்து மனுக்களைப் பெற்ற நவிப்பிள்ளை அவர்களிடம், "உங்கள் உயிருக்கு அவ்வளவு விலை   மதிப்பிருக்கும்போது , எங்கள் உறவுகளின் உயிருக்கு எந்த பதிலும் இல்லாமல் போய்விட்டதா" என்ற கேள்வியை வைக்கிறார்கள். "உயிருடன் இருப்பதற்கான தடயம் அல்லது பிணம்" என்று கேட்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஹேபியஸ் கார்பஸ்(Habeas Corpus) வழக்கு தொடுத்து நீதிமன்றங்களின் படிகளையும் வருடக்கணக்காக ஏறி வருகிறார்கள். 

சண்டை தீர்ந்தாலும், வழியும் வேதனையும் தீரவில்லை என்று தன்  இலங்கைப்  பயணம் பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் நவிப்பிள்ளை அவர்கள், இலங்கை அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்துள்ளார். காணாமல் போனவர்களுக்கான நீதியை துரிதப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். சாப்பிடும்போது காணாமல் போன தன கணவனுக்கும் தட்டில் வைத்துவிட்டு சாப்பிடும் பெண்ணுக்கு அரசாங்கம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ நாவின் காணாமல் போனவர்களைக் கண்டறியும் குழுவை இலங்கைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

நீதி காணாமல் போன , தம் குடிமக்களை அரசாங்கமே கொலை செய்யும் அராஜக நடைமுறைகள் மலிந்திருக்கும் நாட்டில் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைத்துவிடாதென விரக்தியிலிருக்கும் இலங்கைத் தீவின் மக்கள் ஐ.நாவையும் சர்வதேச அழுத்தங்களையுமே  மூச்சுக்கு முன்னூறு தடவை இறைஞ்சுகின்றனர். "எங்கள் உறவுகள் கிடைக்கும்வரை எங்களுக்கு போர் முடியவில்லை" என்று முறைப்பாடு செய்யும் இந்த மக்களுக்கு அவர்களின் தீராத வலி மட்டுமே மிஞ்சியிருக்கும் ஆயுதம்.  குற்றங்களில் எல்லாம் கொடிய குற்றமான உயிர்களைக் காணாமல் அடிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வரும் இலங்கை அரசாங்கத்தை கூண்டிலேற்ற பாதிக்கப்பட்ட மக்களின் வலியை  அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும் கடத்துவோம்.

Inline images 1

பேசாலையில், தன்  கண் முன்னே தன்  தந்தையை விசாரணைக்கு வெள்ளை வேனில் அழைத்துச் சென்ற ராணுவம் அவரைத் திருப்பி கொண்டு வந்து விடாததால், அப்பா எங்கேயோ இருப்பார் என்ற நம்பிக்கையோடு அவருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் பெளன்சிகாவிற்கு பதில் சொல்ல மனிதாபிமானம் உள்ள நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம். 

லீனா மணிமேகலை