Saturday, December 15, 2012

நேர்காணல் - தேவதை ஆவணப்படத்தை முன்வைத்து ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலையுடன்


ஜெயச்சந்திரன் ஹஸ்மி
தேவதைகள் நமது கனவுலகத்திலும் கற்பனைகளிலும் சினிமாக்களிலும் வெள்ளை உடை உடுத்திக் கொண்டு, அழகாக, கவலைகள் இல்லாமல், பாடிச் சுற்றிக்கொண்டிருக்கும் தேவதைகளை பார்த்திருப்போம். ஆனால், நிஜ வாழ்வின் தேவதைகளை அடையாளப்படுத்துகிறது ஒரு ஆவணப்படம். ஆம், இந்த தேவதைகள் உழைத்து உண்பவர்கள். வியர்வை சிந்தி சம்பாதிப்பவர்கள். ஆண் பெண் பேதங்களை உடைத்தவர்கள். உழைப்புக்கு பால்ஒரு வரையறை இல்லை என்று உணர்த்தியவர்கள். எல்லாவற்றிற்கும் மேல் இவர்கள் பெண்ணைப் பற்றி சமூகம் கொண்டிருக்கும் உள்ளீடுகளை உடைத்தெறிந்தவர்கள். நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். கனவு காணும் கண்களை கசக்கி, நம் சமூகத்தை ஆழ்ந்து கவனித்தால், தெருவுக்குத் தெரு இதுபோன்ற தேவதைகளை காணலாம். இவர்கள் நிஜ தேவதைகள். லீனா மணிமேகலை இயக்கத்தில் வந்துள்ள தேவதைகள்ஆவணப்படம் உலகத்தோடு நிமிடத்துக்கு நிமிடம் போராடும் மூன்று பெண்களைப் பற்றி பேசுகிறது. இயக்குனர் லீனா மணிமேகலையோடு கலந்துரையாடியதிலிருந்து....

1. முதலில் இந்த தேவதைகள் ஆவணப்படத்திற்கான அடிப்படைக் கரு எங்கிருந்து வந்தது?

தோழர் பவா செல்லதுரையின் வழி ஒப்பாரி கலைஞர் லஷ்மி அம்மாவின் தொடர்பு கிடைத்தது. வசியம் வைக்கப்பட்ட ஒரு ஆடு போல அவர் பின்னாடி சுற்றிக்கொண்டிருந்தேன். மணிமேகலை என்று அறிமுகம் செய்துக்கொண்ட அடுத்த நொடி, மணிமேகலைக்கு ஒரு பாடல் என்று இட்டுக்கட்டி பாடத்தொடங்கிவிட்டார். ஒரு முழுமையான மனுஷி அவர். அவரைப்பற்றி மேலும் பலர் தெரிந்துக்கொள்வதற்கு ஏதுவாக கேமிராவில் ஆவணப்படுத்தலாமா என்று கேட்டேன். உனக்கு எது மகிழ்ச்சியோ அதை செய்துக்கொள் என்றார். தேவதைகளின் விதை அந்த உரையாடல் தான்.
இவரைப்போன்றே அசாதாரணமான வாழ்க்கையை எந்த புகாருமில்லாமல் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஆன்மாக்கள் யாரும் இருக்கிறார்களா என்ற தேடலில், விகடன் சரண் மூலம் சேதுராக்கம்மாவையும், பாண்டிச்சேரி சுகுமாரன் மூலம் கிருஷ்ணவேணியம்மாவையும் தொடர்பு கொண்டேன். தேவதைகள் சாத்தியமானது.

2. நான் பார்த்து, ஆவணப்பட திரை முறையில் இது ஒரு வித்தியாச முயற்சியாக பட்டது. மூன்று பெண்களின் கதையை இணைத்து இப்படம் எடுக்க நினைத்தது ஏன்? இப்படத்தின் தன்மைக்கு அது எந்த அளவிற்கு உதவியது ?

என்னிடம் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட் எதுவும் இல்லை. குறிப்புகள் மட்டுமே இருந்தன. லஷ்மி அம்மா, கிருஷண்வேணியம்மா, சேதுராக்கம்மா என்ற மூன்று பெண்களோடு எனக்கிருந்த உறவும், அன்பும், நாங்கள் ஒருவரையொருவர் அணைத்துக்கொண்டதும் அதன் தாக்கமும் பிம்பங்களாக மாற்றம் பெற்றன. எதையும் திட்டமிடவில்லை. என் ஒளிப்பதிவாளர் சன்னி ஜோசப், ஒலிப்பதிவாளர் நம்பி இருவரும் ஆண்களாக இருந்தாலும், அவர்கள் ஆன்மரீதியாக என் தோழிகள். முடிவுகள் எதையும் எடுத்துவிட தேவையற்ற ஒரு அன்பு எங்களிடையே இருந்தது. அதை மடைமாற்றம் மட்டுமே செய்ய வேண்டியிருந்தது.

3. இந்த மூன்று பெண்களுக்கும் சில பொதுத்தன்மைகள் உள்ளது. பெண்ணியம் சார்ந்த சமூகத்தின் பொதுக்கோட்பாடுகளை உடைத்து, சுயமாக வாழ்பவர்கள் இவர்கள். இவர்கள் மூவரும் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்தித்தவர்களா இல்லை இப்படத்திற்காக தேடியவர்களா?

பெண்ணியம் என்பதை, பால், பாலின ஏற்றத்தாழ்வுகளை அழித்து சமத்துவத்தைக்கோரும் ஒரு கருத்தியலாகவே நான் நம்புகிறேன்.தேவதைகளின் மூன்று பெண்களும் ஆணுக்கென்றே பணிக்கப்பட்ட உலகங்களை தங்கள் ஆளுமையால் கைப்பற்றியவர்கள். தங்களை ஒடுக்கும் ஆண்களையும் பேரன்பு கொண்டு அணைத்துக்கொள்பவர்கள். யாரளிக்கும் தீர்ப்புகளையும் பொருட்படுத்தாது வாழ்க்கையை ஒரு தீராத வேட்கையோடு வாழ்ந்து தீர்ப்பவர்கள். வெட்டிவிட்ட பாதையல்லாது, தங்களுக்கென்று புதிய பாதைகளை வகுத்துக்கொண்டவர்கள். உண்மையான கதாநாயகர்கள்.

எனக்கு நான் தேடிக்கொண்ட ஆசிரியர்கள். கலையின் போதாமைகளை இவர்களைப்போன்ற ஆளுமைகள் எனக்கு அவ்வப்போது அறிவுறுத்திக்கொண்டே இருப்பார்கள்.

4. இந்த படத்தை பார்த்த என் நண்பன் என்னிடம் கேட்ட கேள்வி இது. இந்த மாதிரி லாம் பொம்பளைங்க இருக்காங்களா டா????’. இது போன்று தான் வாழும் சமூகத்தில் தான் பார்க்கும் பெண்களை வைத்தே பெண்ணினத்தை மதிப்பிடும் சமூகத்தில் இவற்றிலிலுந்து முற்றிலும் மாறுபட்ட பெண்களை படமெடுக்க நினைத்தது ஏன்?

உங்கள் நண்பரை அவரின் தாயாரை, அவர் வீட்டுப் பெண்களை, அன்றாடம் சந்திக்கும் பெண்களை சற்று உற்று கவனிக்க சொல்லுங்கள். நம் பெண்களை பெறுமதியாகப் பார்க்க சொல்லித்தர தவறிய சமூகம் நம் சமூகம். எனக்கு என் தாய் ரமா, பாட்டிகள் ராஜேஸ்வரி, வீரலஷ்மி, பூட்டி நாகம்மா என என் வீடு நிறைய ஹீரோக்கள். பெண்களால் ஆனது என் உலகம். இன்னும் என் தொப்புள் கொடியை அறுத்துக் கொள்ளும் துணிவு வரவில்லை. என் எல்லா புரிதல்களும் அங்கிருந்தே தொடங்குகின்றன. தேவதைகள் கதாபாத்திரங்களின் தன்மைகள் நாமறிந்த பெண்களிலும் நிச்சயம் படிந்திருக்கும். கவனிப்பதும், அதை ஆராதிப்பதும் தான் நமது பாடு.

5. இதில் காட்டப்படும் மூன்று பெண்களின் வாழ்க்கையும் எங்கே இணைகிறது என்று நினைக்கிறீர்கள்?

வாழ்க்கைக்கான வேட்கையில் இணைகிறது. இறப்புக்கு முன்னும் பின்னும் எதிருமான அந்த விநாடியில் இணைகிறது.

6. தனியாக வாழும் போதும், இப்பெண்கள் சில ஆணாதிக்கக் கருத்துக்களுக்கு பழக்கப்பட்டு இருப்பதாகத் தோன்றுகிறதே. ஆண்கள் தான் கடலுக்கு செல்ல வேண்டும், ஆண்கள் தான் வேலைக்கு போக வேண்டும் போன்ற கருத்துக்களை சொல்கிறார்கள். இத்தகைய போக்குகள் இப்பெண்களிடத்தே கூட இன்னும் மாறவில்லையா?

யாவும் அவள் தொழிலாம் என்ற கருத்து அவர்களின் மூலம் நிரூபணமாகிறது.

நமது கலாசாரம், தூமையின் பொருட்டு பெண்களை தூய்மையற்றவர்களாய் கருதும் கலாசாரம். மீனவப்பெண்கள் மீன் தொழிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. சேதுராக்கு தான் நம்பும் கடவுள், அப்படி தனக்கு சொல்லவில்லை என்கிறார்.

வெட்டியான் என்பதற்கு பெண்பதம் நம் மொழியில் இல்லை. கிருஷ்ணவேணி அனாதைப் பிணங்களை புதைப்பதும் எரிப்பதுமான பணியை சமூக, குடும்ப பகிஷ்கரிப்பைத் தாண்டி செய்து காட்டுகிறார். வெட்டியாள் என்ற சொல்லை தமிழுக்கு தருகிறார்.

சாவு நடக்கும் வீட்டில், தாரை தப்பட்டையோடு ஆடும் பெண்களை நாம் யாரும் பார்த்திருக்க மாட்டோம். லக்ஷ்மி அதையும் போற்றுதலுக்குரிய தொழிலாக மாற்றி கம்பீரமாக செய்து வருகிறார். 5000 வார்த்தைகளைப்பேசி 550 ரூபாய் சம்பளம் பெறுவதாக தன்னம்பிக்கையோடு கூறுகிறார்.
இவர்கள் தங்கள் அளவில் ரோச லக்சம்பர்க்குகள் தாம்.

7.
இதில் ஒப்பாரி பாடல் பார்க்கும் பெண் பேசும் ஒரு ஷாட்டில்(04.11) கேமரா தூரத்தில் இருந்து அவர் தனியே பேசிக்கொண்டிருப்பது போல காட்டுமே. அது ஆவணப்பட மொழிக்குள் அடங்குமா? அங்கே அவர் யாரிடமும் பேசுவது போல் இல்லாமல், கேமராவிடம் பேசுவது போலவும் இல்லாமல் இருக்கிறதே?

அவர் ஒரு கதைசொல்லி. தூரத்தில், கிட்டத்தில், ஓரத்தில் இருப்பதெல்லாம் கேமிராவின் போதாமைகளே!

8. இறந்த அநாதை உடல்களை புதைக்கும் பெண்மணி அதிர்ச்சியளிக்கிறார். அவரது இந்த வாழ்க்கையின் ஆரம்பத்தில், சுடுகாட்டுக்குள் செல்வது குறித்த அவரது குடும்பத்தினரின் எதிர்வினை எப்படி இருந்தது?

அவர் குடும்பம் அவரைத் தள்ளி வைத்திருக்கிறது. இல்லை, அவர் தன் குடும்பத்திலிருந்து தள்ளியிருக்கிறார். இல்லை அவர் செய்யும் தொழில் அவரை எல்லாவற்றிலிருந்து தள்ளி வைத்திருக்கிறது. எப்படி வேண்டுமானாலும் புரிந்துக் கொள்ளலாம். ஆனால் தான் நம்புவதை துணிந்து செய்துக்கொண்டு தந்தையில்லாத தன் குழந்தைகளைப் பேணுகிறார். சுடுகாடு அவருக்கு சோறு போடும் தெய்வமென சொல்கிறார். பிணங்களே தன் உற்ற துணை எனக் கருதுகிறார்.
அவர் முகத்திலிருக்கும் கருணைக்கு இந்த சமூகம் என்ன கைமாறு செய்துவிட முடியும்.

9. இப்படம் பார்க்கும்போது, ஒரு சிறிய கேள்வி தோன்றியது. இந்த மூன்று பெண்களையும் அவர்கள் சார்ந்த சமூகம் எப்படி பார்க்கிறது என்பதையும் பதிவு செய்திருக்கலாமே?

அதை அவர்கள் போதுமான அளவுக்கு படத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்றே கருதுகிறேன். மற்றபடி பிரதிக்கு கோனார் உரையெல்லாம் என்னால் எழுத முடியாது.

10. இவர்கள் மேற்கொண்ட தொழிலில் ஒரு பெண்ணாக இருப்பதினால் தொழில் ரீதியாக அல்லாமல் இவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்னென்ன?

பெண் பிறக்கும் போதே இச்சமூகத்தில் ஆயாதொழிலோடு தான் பிறக்கிறாள். அதைத் தவிர பெண்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு தொழிலும் கூடுதல் சேவை தான். இச்சமூகத்தின் மன உயரங்கள் மட்டுமே பெண் சந்திக்கும் அன்றாட சிக்கல்கள்.

11. உண்மையில் இந்த படம் எங்கே தொடங்குகிறது என்று நினைக்கிறீர்கள்?

லஷ்மி அம்மாவின் ஒற்றைக்கண்ணிலிருந்து தொடங்குகிறது,

12. ஒரு சமூகத்தில் ஆவணப்படங்களில் பங்கு, முக்கியத்துவம் என்ன?

சமூகத்தின் மனசாட்சியைத் தொடர்ந்து தொந்தரவு செய்வது தான் கலையின் தலையாயப் பணி என்று நான் நம்புகிறேன். திரைப்படம், கவிதை என கலையின் எல்லா வடிவங்களும் எல்லாம் சரியாகத் தான் போய்க்கொண்டிருக்கிறதுஎன்று நமக்கு சொல்லப்படும் போலியான அமைதியை கெடுக்கிற கலைஞனின் அரசியல் நடவடிக்கைகள் தாம்.

13. இன்றும் நம் சமூகத்தில் ஆவணப்படங்களில் முக்கியத்துவம் உணரப்படாமல் இருப்பது ஏன்?

தேவதூதனுக்கு மயிர் சிரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

14. இப்பெண்கள் மூவரும் மரணத்தையோ, மரணம் சார்ந்த விஷயங்களையோ மிக அருகில் இருந்து பார்க்கிறார்கள். அது அவர்கள் உளவியலையும் சமூகப்பார்வையையும் மாற்றியிருக்கிறதா?

சித்தர் மரபை பற்றி வாசித்திருக்கிறீர்களா? தேவதைகளின் கதாபாத்திரங்கள் சித்தர்கள். மரணத்தோடு தினமும் உரையாடுவது, அவர்களுக்கு வாழ்க்கையை தள்ளி நின்றுக்கொண்டு தாமே பார்த்துக்கொள்ளும் அவதானித்துக்கொள்ளும் கலையை கற்றுத்தந்திருக்கின்றது.

15. இறுதியில் மீனவப் பெண்மணி பேசும் வார்த்தைகள் தான், ஒரு உழைப்பாளி அரசாங்கத்தின் விடும் அறிக்கை என்று எனக்கு தோன்றியது. நம் முன் பேசியவர்கள், தங்களை அரசாங்கம் சுரண்டுகிறது என்று உணர்கிறார்களா? அதை எதிர்க்கிறார்களா? இவரே கூட ஏன் அரசாங்கம் எங்களை காலி செய்கிறது என்று தெரியவில்லை என்று சொல்கிறார். அங்கு நடக்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக இப்பெண்களின் எதிர்வினை என்ன?

நாம் திணைவாழ் மக்கள். திணையை, அதாவது நிலப்பரப்பை நம்மிடமிருந்து துண்டித்துவிட்டால், நாம் சொந்த மண்ணில் அகதிகள் தாம். கடலை, மலையை, விளைநிலங்களை, காடுகளை நம்மிடமிருந்து பறித்து தான் நாடுகள் உருவாக்கப்படுகின்றன. அதற்கு அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்கும் அடிமைகளாக நம்மை மாற்றிவிட்டார்கள்.

மிச்சமிருக்கும் ஆதிவாசி சமூகங்கள் தாம் மனித நாகரிகங்களின் எச்சங்கள். சேதுராக்கம்மாவின் குரல் ஒரு கடல் ஆதிவாசியின் கூக்குரல். யாரடா அவன் அரசாங்கம்? எங்கள் கடல் எங்களுக்கு சொந்தம் என அவர் கேட்பது கூடங்குளத்தின், பிளாச்சிமாடாவின், நர்மதை அணை மக்களின், ஜார்கண்ட்-ஒரிசா-வடகிழக்கு மாகாணங்களின் கேள்வியும் கூட தான்.

16. பிணங்களை புதைக்கும் பெண், தன் கஷ்டங்கள் பிணங்களிடம் சொல்வது, இச்சமூகத்தின் சாபம் அல்லவா?

சாபத்தை தலை வணங்கி ஏற்றுக் கொள்வோம். தெருவுக்கு தெரு காளி கோயில்கள் இருக்கும் இந்த ஊரில் தானே பெண்சிசுக்கள் கொல்லப்படுகிறார்கள்?

17. ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டிருக்கும் இப்பெண்களுக்கு அரசாங்கம் சார்ந்த உதவிகள் ஏதாவது வருகிறதா? இவர்கள் வாழும் சமூகம் சார்ந்த இளைப்பாறுதல்கள் ஏதும் கிடைக்கிறதா?

இப்பெண்கள் அரசாங்கங்களுக்கு வெளியே வாழ்பவர்கள். அல்லது அரசாங்கத்தின் கெஸட்டுகளில் இவர்களின் பெயர்கள் இல்லை. அதற்கு அவர்கள் பொறுப்பாக மாட்டார்கள்.

18.
முதலில் ஒரு பெண் படைப்பாளியாக உங்களுக்கு இச்சமூகத்தில் வரவேற்பு எப்படி இருக்கிறது. இப்போதை விட, ஆரம்ப கட்டங்களில் எப்படி இருந்தது?

வெகு மக்கள் என்னை எப்போதும் அரவணைத்துக்கொள்கிறார்கள். அது ஒன்று தான் எனக்கு ஊக்க சக்தி. திரைப்பட உருவாக்கத்திலும் சரி, திரையிடல்களிலும் சரி, எம்மக்களின் நேசம் தான் என்னை வழிநடத்துகிறது.

தமிழில் சிவில்சமூகம் என்று ஒன்று சொல்லப்படுகிறதே, அச்சமூகம் எனக்கு அளிப்பதெல்லாம் வெறுப்பொன்று மட்டுமே! அவர்கள் என் தற்கொலையை விரும்புபவர்கள். அதை தள்ளிப்போட்டு அவர்களைப் பதற அடித்துக் கொண்டிருக்கிறேன்.

19. இவர்கள் இருக்கும் ஊர்கள் மத ரீதியாக, சாதி ரீதியாக ஆட்பட்ட ஊர்கள் போல் தெரிகிறது. இது சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் இப்பெண்களுக்கு வருகிறதா?

நீங்கள் கேட்கும் கேள்விகள் ஏதோ இப்பெண்கள் யாருமற்ற தீவுகளில் இருப்பது போல கருதி கேட்கப்படுவது போலிருக்கின்றன. தேவதைகளின் கதாபாத்திரங்கள் வாழ்வென்பது சாதி-மதம்-வர்க்கம-பால்-பாலின ஏற்றத்தாழ்வுகள் பீடித்திருக்கும் இக்கேடு கெட்ட சமூகத்தின் விளைவே! அனைத்து வகையிலும் விளிம்பின் விளிம்பில் வாழும் பெண்கள் அவர்கள்.

20. மதமும், சாதியும் தலைதூக்கி இருக்கும் ஊர்களில் இயல்பாக பெண்ணடிமைத்தனங்கள் இருக்கும் அப்போது, இவர்கள் இதுபோன்ற வேலைகளுக்கு செல்கையில், இவர்களில் பால் sex சார்ந்த எதிர்ப்புகள் என்னென்ன வருகிறது?

அடிமைத்தனத்தில் ஆதியானது பெண்ணடிமைத்தனம். சாதியும் ,மதமும், வர்க்கமும், “வளர்ச்சியும்”, தேச உருவாக்கங்களும், போர்களும் அவ்வடிமைத்தனத்தை பன் தன்மை மிக்கதாக மாற்றியிருக்கின்றனவே தவிர ஒழிக்கவில்லை. இதுவரை உருவான தத்துவங்களும், கருத்தியல்களும் கூட அதை கிஞ்சித்தும் மாற்றவில்லை என்பதே உண்மை. தேவதைகளின் பெண்களுக்கு வரும் அனைத்துவகை எதிர்ப்புகளின் அடிப்படையும் இதுதான்.

21.
ஆவணப்படங்களை ஒரு பெரும் மெயின்ஸ்ட்ரீம் ஊடகமாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆவணப்படம் வெகுசன ரசனைக்கானதாகத் தான் என்றும் இருக்கிறது. கிராமங்களில் என் திரையிடல்களுக்கு கூடும் கூட்டம் அளப்பரியது. ஆவணப்படங்களை எடுத்துச் செல்ல வெகுசன ஊடகம் இல்லை என்று சொல்ல வேண்டும். நுகர்வு கலாசாரத்தில் புரையோடிப்போயிருக்கும் வெகுசன ஊடகங்களுக்கும் ஆவணப்படங்கள் பயன்படாது.
Paradox என்னவென்றால் 2009 ல், NDTV தேவதைகளை கோகோ கோலாவின் விளம்பரத்தோடு தான் திரையிட்டது. ஜார்கண்ட் ஆதிவாசிகளின் நிலமீட்பு போராட்டங்களைப் பற்றிய என் சமீபத்திய ஆவணப்படமான Ballad of Resistance என்ற படத்தை ரியல் எஸ்டேட் விளம்பரங்களின் ஊடாகத் தான் NDTV ஒளிபரப்பியது.

22. எந்த ஒரு கலைப்படைப்புக்கும் டார்கெட் ஆடியன்ஸ் என்று ஒன்று உண்டு. ஆனால் ஆவணப்படங்களுக்கு டார்கெட் ஆடியன்ஸ் இல்லாதும், அதன் வளர்ச்சியின்மைக்கு ஒரு காரணமா?

ஆவணப்படங்கள் என்ன ஃபேர் அண்ட் லவ்லியா? டார்கெட் ஆடியன்ஸை பிக்ஸ் செய்துவிட்டு எடுப்பதற்கு?

23. ஆவணப்படங்களில் மொழி வேறு. திரைப்படங்களின் மொழி வேறு. இந்த வேறுபாடுகளை நீங்கள் திரைப்படம் எடுக்கும் போது எப்படி சமாளித்தீர்கள்?

ஆவணப்படம், கதைப்படம், கவிதைப்படம் என எல்லா வகைப்படங்களும் திரைப்படங்கள் தாம். கதை, ஹீரோ, ஹீரோயின், சண்டை, பாடல், குத்து நடனம் எல்லாம் இருந்தால் தான் அது திரைப்படம் என்பது புரிதலின் குறைபாடே! நீங்க திரைப்பட இயக்குநர் இல்லையே? ஆவணப்பட இயக்குநர் தானே என்று கேட்கும்போது சிரித்துக்கொள்வேன். செங்கடலை தொழில் முறை நடிகர்கள் அல்லாது கதைமாந்தர்களையே கொண்டு திரைப்படுத்தியிருந்ததால், கதைப்படமாக அது இருந்தாலும், ஆவணப்படமெனவே இங்கு அடையாளப்படுத்தபடுகிறது. எனக்கு அதில் மகிழ்ச்சியே. ஆவணப்படத்தின் சத்தியம் கதைப்படத்திலும் உணரப்படுவது நிறைவைத் தரக்கூடிய விசயம் தான். சினிமாவிற்கென்று மொழி இருகின்றது. அதன் அலகு ஷாட்ஸ். ஒரு ஷாட்டை ஒரு வார்த்தை எனக்கொண்டால் கவிதைக்கும், சினிமாவுக்குமான தொடர்பு விளங்கும்.

24. ஆவணப்பட உலகமும், இச்சமூகமும், ஆவணப்பட படைப்பாளிகளுக்கு போதுமான பொருளாதாரத்தை வழங்க வல்லதா?

நான் ஒரு பிச்சைக்காரி, கொள்ளைக்காரி, திருடி, வேசி, 420. இது எல்லாமுமாக இருந்தால் தான் இச்சமூகத்தில் நான் நினைக்கும் திரைப்படங்களை நானே செய்துக்கொள்ள முடியும்.

25. இது போன்ற ஆவணப்படங்களுக்கான தயாரிப்பாளர்கள் கிடைக்கிறார்களா? அதற்கு என்ன செய்கிறீர்கள்?

ஏமாற்றுவேன். பல சாகசங்களை செய்து பணம் வைத்திருப்பவர்களை ஏமாற்றி அவர்களை தயாரிப்பாளர்களாக மாற்றுவேன்.

26. ஆவணப்படங்களை பொருந்த வரையில் சந்தைப் படுத்துதல் என்பது இருக்கிறதா? அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஆவணப்படங்கள், கவிதை தொகுப்புகள், இவற்றை இலவசமாக மட்டுமே பெற்றுக்கொள்ள இச்சமூகம் விரும்புகிறது. இதை மீறி விற்றால் எம்மை கலை வியாபாரி, அறிவு விபசாரி என இச்சமூகம் சுட்டும். கலைஞன் காற்றை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக்கொள்ள வேண்டியது தான். தெருவில் அனாமத்தாக விழுந்துக் கிடக்கும் நாணயங்களைக்கூட பொறுக்க தகுதியற்றவன் கலைஞன்.

27. இப்படம் ஏற்படுத்திய எதிர்வினைகளை சொல்லுங்களேன்?

விருதுகளைப்பற்றி சொன்னால் அது தற்பெருமை. திரையிடல்களைப்பற்றி சொன்னால், அது சுய சொரிதல்.
தனிப்பட்ட முறையில் இது எனக்கு 500 திரைகளைத் தாண்டிய ஒரு பெருவெளிப்பயணம்.

28. உங்களின் அடுத்த திரை முயற்சிகள்...

முயற்சிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

தெருவுக்குத்தெரு இத்தேவதைகள் வியாபித்திருக்கிறார்கள். இனியாவது, நம் கனா உலகத்தில் ஆடும் தேவதைகளுக்கு செலவிடும் நேரத்தில் ஒரு பகுதியையாவது, இது போன்ற உயிர்ப்பான ஆன்மாக்கள் நிரம்பிய தேவதைகளோடு செலவிடுவோம். 
தேவதைகள் ஸ்கிரிப்ட் மற்றும் டிவிடியை கனவுப்பட்டறை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. பிரதிகளுக்கு:

கருப்பு பிரதிகள், B74, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை சென்னை - 600 005
பேச:00 91 94442 72500 மின்னஞ்சல்:karppu2004@rediffmail.com
இணையத்திலும் விற்பனைக்கு டிவிடி கிடைக்கிறது,
முகவரி-http://www.magiclanternfoundation.org/uc_filmdetails.php?FilmID=206