Saturday, July 31, 2010

புதிய கவிதைகள்

 நன்றி தீராநதி (ஆகஸ்ட் 2010)

1


மண் அடுக்குகள்
 

நாளையை பலியிட்டிருந்த
விசித்திரமான வீட்டில் தான்
நான் இறந்திருக்கக்  கூடும்

மறுக்கப்பட்டவை விடுபட்டவை
லட்சியங்கள் அபத்தங்கள்
பைசாசங்களாக மாறியதில்
இருளின் நடமாட்டம்
ஒரு நடனம் போல
முற்றத்தில்
காணக் கிடைக்கிறது

சுவர்களில் கீறியிருந்த சித்திரங்களில்
காளைகள் அம்பு உழவு ஏர்
க ங  ச ஞ   ட ண ர ச ல ழ  ள   
பைபிள் பருத்தி
எந்திரம் துப்பாக்கி
ஆப்பிள் E=mc2 101011
கணினி பங்கர்கள்
என
எல்லா   வடிவங்களையும் 
யோனி அச்சில்
வரைந்து வைத்ததால்
ஓவியனின் கண்கள் பறிக்கப்பட்ட கதை
நாட்டார் பாடல்களில்
பாடப்படுவதாக செவிவழிச் செய்தி

ஆண் பெண் அலி
அரசுகளின் பால் அச்சு பொறித்த
ஆடைகளை அணிய மறுத்த
கலைஞர்கள்   மேல் ஏவப்பட்ட
சாபங்களும் நிந்தனைகளும்
விலக்கப்பட்ட கனிதரும் மரங்களாக
வளர்ந்திருந்தன
அதன் மகரந்தமற்ற  சாம்பல் நிறப் பூக்களை உண்டால்
உலகத்தின் துயர் தீர்க்கும் தத்துவங்களை எழுதிவிடலாம்
என்ற வதந்திகளும் நாடெங்கும் பரவியிருந்தன

நூறாயிரம் ஆண்டுகளாக
அரங்கேறி வரும்
வறுமைச் சடங்குகளில்
கொழுந்துவிட்டெரியும் சாமத்தீயை
முலைப்பால் அணைத்துவிடும்
என்ற வரலாற்றின் சான்றை
நிறுவ முயன்றதாலேயே
படுகொலை செய்யப்பட்டேன்
வட்டெழுத்தில் இருந்த
அந்த ஆவணங்களை 
என் குருதி தோய்த்து
இங்கே தான் புதைத்திருக்கிறார்கள்

அர்த்தங்களை உருவாக்குவதும அழிப்பதுமான
போர்களின் கபாலங்கள்
இந்த வீட்டை ஆட்சி செய்வதை
நான் எதிர்த்தேன்
என்னை "புரட்சி"யாளர்களும் எதிர்த்தார்கள்
குறி வளர்ந்த பெண்களும் காட்டிக் கொடுத்தார்கள்

மகள்களைப் புணர்ந்த நிண வாடை வீசும்
இதன் தாழ்வாரங்களில்
கொடுமணல் தாழியைக் கண்டெடுத்திருக்கிறார்கள்
அதில்
சமணி, பமித்தி, கந்தி, கவுந்தி,
கெளத்தி, நக்கன்
பெயர்கள் கிறுக்கப் பட்டிருந்தனவாம்

அவர்களும் இந்த வீட்டில் தான்
இறந்திருக்கக் கூடும் 


ஐயா  ஐராவதம் மகாதேவனுக்கு

(சமணி(மணிமேகலை), பமித்தி(சீவக சிந்தாமணி ) ,  கவுந்தி(சிலப்பதிகாரம்),கந்தி கெளந்தி(சூடாமணி) , நக்கன்(தேவரடியார்)  போன்ற பெண்பாற் பெயர்களை பனையோடுகளிலும், குகை கல்வட்டுகளிலும் ஆய்ந்தெடுத்திருக்கிறார்)


2
 
திணை, அகம், புறம்


நிலத்தின் மீது சினம் கொண்ட நிலவு
கடலில்
தன்னை மாய்த்துக் கொள்ள
விழுந்தது

அன்னங்கள் தங்கள் அலகுகளில் அள்ளி
நிலவை ஆமையோட்டின் மேல் விட்டது

ஹிட்ச்காக்கின்   கழிவறைகளில் கிடந்த
பாம்புகளுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை

கிரகணங்கள் நிகழாமல் உறைந்துப் போன
காலம்
கிம் கி டுக்கிடம் யாசித்து நிற்கிறது
அவரோ கள்ளக் காதலர்களைப் பிரிப்பது
முடியாத காரியம் என்கிறார்

காலம் திகைத்து நிற்பதைக் கண்ட
சூரியன் 
குந்தியையும் கர்ணனையும் நினைத்துப் பார்த்து
கண்ணீர் விட்டது

காதரீன் பிரேயிலி
ஆமைக்கும் நிலவுக்குமான காமத்தை வைத்து
புதிய படத்திற்கான திரைக்கதையை எழுதுகிறார்

பாம்புகள் மூன்றாம் உலகப் போரினை அறிவிக்கின்றன

அமெரிக்காவுடனான பாம்புகளின் ஆயுத பேரத்தை மைக்கேல் மூர்
ஆவணப் படமெடுத்து அம்பலப் படுத்துகிறார்

காதல் பயங்கரவாதிகள் தடுப்பு சட்டத்தின் கீழ்
அண்டசராசரத்திலும்
ஆமைகளைக்  கண்ட இடத்தில் சுடும்
அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது

கள்ளக் காதல் அடிப்படை மனித உரிமை
என்ற முழக்கத்தை முன்வைத்து
அருந்ததிராயும் நோம் சொம்ஸ்கியும்
போராட்டங்களில் இறங்குகிறார்கள்
ஆனந்த் பட்வர்த்தன் கிராமங்கள் தோறும்
கத்தாரின் எழுச்சிப் பாடல்கள் ஒலிக்க
எதிர்ப்பணியினரின் காட்சிகளை
திரையிடுகிறார்

பாம்புகளின்   படை பலம் என்னவோ
வேதாந்தாவும், கோகோ கோலாவும், மேக்டோனால்டுமாய்
நாளுக்கு நாள் அதிகரித்தே வந்தது
பான்  கீ மூன் தலையிட்டும்
யுத்தத்தை தடுக்க முடியவில்லை

ஆமைகள் அழித்தொழிக்கப் படுகின்றன
அன்னங்கள் துரோகத்தின்  சின்னங்களாக மாறின
நிலவு வானத்திற்கே துரத்தப்படுகிறது
கிரகணங்கள் நடந்தேருகின்றன

காலத்தின் முள்ளும்  நகர்கிறது

நிலவு ஆமையைக் கருவுற்றிருந்தது




லீனா மணிமேகலை