Monday, December 23, 2013

விடுதலையான யோனி கலகக்காரிகள் - Pussy Rioters Freed

இணைப்பு : http://www.theguardian.com/world/2013/dec/23/pussy-riot-nadezhda-tolokonnikova-freed-russian-prison

2012 பிப்ரவரியில், நாடியா, மாஷா, காட்யா என்ற மூன்று  இளம்பெண்கள் மாஸ்கோ தேவாலயத்தின் மேடையின் மேலேறி, ஒழுங்கவிழ்ப்பு நடவடிக்கையாக கலக பிரார்த்தனை பாடியது சர்வதேச செய்தியானது.

கைது செய்த மூன்று பெண்களில், நடனத்தில் பங்கு பெறாமல், கூட வந்ததால், தண்டனை குறைக்கப்பட்டு வெளியே வந்த காட்யா, மற்ற இரு பெண்களின் விடுதலைக்காக பிரசாரங்களை மேற்கொண்டார். ஆகஸ்ட் 2012 ல் வழக்கு நடந்துக்கொண்டிருக்கும்பொதே 
"ப்யூடின் தன தலையில் கொள்ளி வைத்துக்கொள்கிறார்" என்ற ஆல்பத்தை வெளியிட்ட கலகக்காரிகளின் பாடல் வரிகளுள் ஒன்று " எங்களுக்கு ஏழு வருடம் போதாது, பதினெட்டு வருடமாக சிறைவாசத்தை நீட்டிக் கொள்".இன்று (23 டிசம்பர் 2013) முதலில்  விடுதலையான  மாஷா தங்கள் விடுதலையை ரஷ்ய அரசாங்கத்தின் வெறும் விளம்பர ஸ்டண்ட் என்று வர்ணித்திருக்கிறார். அடுத்த சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்ட நாடியா, "ப்யுட்டின் நீங்கிய ரஷ்யா" என்று உரத்தக் கோஷமிட்டுக்கொண்டே வெற்றிக்கான இரண்டு விரல் குறியீட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறார். யோனிக் கலகக்காரிகளின் விடுதலைக்காக சர்வதேச அளவில் போராடிய மனித உரிமை மற்றும் கருத்து சுதந்திரப் போராளிகள், "ரஷ்யாவில் வரும் பிப்ரவரியில் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக சர்வதேச அரங்கில் தலைகுனிவை தவிர்ப்பதற்கான கிரம்ளினின்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 2012 ல் வழக்கு நடந்துக்கொண்டிருக்கும்பொதே "ப்யூடின் தன தலையில் கொள்ளி வைத்துக்கொள்கிறார்" என்ற ஆல்பத்தை வெளியிட்ட கலகக்காரிகளின் பாடல் வரிகளுள் ஒன்று " எங்களுக்கு ஏழு வருடம் போதாது, பதினெட்டு வருடமாக சிறைவாசத்தை நீட்டிக் கொள்".
 
இனி, சென்ற வருடம் வெளிவந்த என் கவிதை தொகுப்பான "அந்தரக்கன்னியில்" இடம்பெற்றிருந்த குறிப்பும், சுதந்திரக்  கவிதை மொழிபெயர்ப்பும் 

எதிர்ப்பெனப்படுவது சுதந்திரத்திற்கான வேட்கை - யோனி கலகக்காரிகளின் சாகசப் பயணம் 


 ”மேரி மாதாவே! ருஷ்ய உழைக்கும் வர்க்கத்தை சுரண்டி பிழைக்கும் சர்வாதிகாரி விளாதிமிர் ப்யூடினை வெளியேற்று" மேரி மாதவே , நீ பெண்ணியவாதியாகி எங்கள் போராட்டத்திற்கு வலு கொடு”, “மேரி மாதாவே, வெறும் பிள்ளைகள் பெறும் காதல் அடிமைகள் அல்ல நாங்கள்” என்ற வரிகள் கொண்ட பாடலால் யோனி கலகக்காரிகளுக்கு மூன்று வருட தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் ஒரு நிமிடம் நீடித்த அந்த கொரில்லா நடனம் , மதவெறுப்பின் அடிப்படையில் நடந்த பொறுக்கித்தனம் என்று அரசாங்கத்தால் குற்றம்சாட்டப்பட்டது. ட்ராட்ஸ்கியவாதிகளாக, அராஜகவாதிகளாக, பெண்ணியவாதிகளாக, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக தங்களை அறிவித்துக்கொண்ட “யோனி கலகம் (pussy riots)” என பெயரிடப்பட்ட அந்த பெண்கள் குழு ஏற்படுத்திய அதிர்வு சர்வதேச கவனத்தைப் பெற்றது. பொது சொத்திற்கு எந்த இடையூறோ, பங்கமோ விளைவிக்காத இந்தப்பெண்களை ரஷ்ய அரசாங்கம் சமூக விரோதிகளாகவும், கடுங்குற்றவாளிகளாகவும் நடத்தியதும், கைது செய்ததும், தண்டித்ததும் உலகம் தழுவிய கண்டனத்துக்குள்ளானது. யோனி கலகக்காரிகளை விடுதலை செய்யக்கோரி ரஷ்யாவிலும், நாடு கடந்தும் போராட்டக்குரல்கள் எழுந்து வருகின்றன. மடோனா, ஸ்டிங், யோகோ ஓனொ போன்ற புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் யோனி கலகக்காரிகளை விடுதலை செய்யக்கோரி நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆம்னெஸ்டி இண்டெர்னேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு "மனசாட்சி கைதிகள்” என அவர்களை சுவீகரித்து, பிரசாரம் செய்து வருகிறது
 
இரண்டாவது முறையாக அதிபராக ப்யூட்டின் தேர்ந்தடுக்கப்பட்டது ரஷ்யாவில், சுதந்திரவியலாளர்களை பெரிதும் விரக்திக்குள்ளாக்கியது. .யோனி கலகக்காரிகள் தேர்தலுக்கு முன்னரே “உங்கள் வோட்டு சீட்டுகள் அரச நிர்வாகத்திற்கு கழிப்பறை தாள்கள்” என்ற அதிரடி இசைநடன நிகழ்ச்சியை பொது இடங்களில் அரங்கேற்றினார்கள், தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரச எதிர்ப்பாளர்களை கைது செய்ததையொட்டி, சிறைச்சாலைக்கு முன் ஒரு பட்டறையின் கூரையில் ஏறி நின்று  “சிறைகளுக்கு மரணம், எதிர்ப்புக்கு சுதந்திரம்” என்று கலகக்காரிகள் பாடிய பாடல் கம்பிகளுக்குப் பின் இருந்த எல்லா சிறைக்கைதிகளையும் ஈர்த்ததாக சொல்லப்படுகிறது. சிவப்பு சதுக்கத்தில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்களை திரட்டுவதற்காக “ப்யூட்டின் தன்னை ஒன்னுக்கடித்துக்கொண்டார், ப்யூட்டின் தொடை நடுங்கினார், ப்யூட்டின் கழிந்துவிட்டார்” என்ற அரசியல்  பங்க்(punk) பாடல்களை இசையமைத்து கவனம் ஈர்த்தனர். 2011 டிசம்பரில் சிவப்பு சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களின் மேல் பறந்த ரோந்து விமானங்களையும், மாஸ்கோ காற்றில் கலந்த அதிகாரத்தின் நாற்றத்தையும், ஆட்சியின் அராஜகத்தையும் "யோனி கலகம்"" இசை நடன பாடல்களாக பல இடங்களில் நிகழ்த்தியது. “கன்னி மேரி, ப்யூட்டினை வெளியேற்று” என்ற மாஸ்கோ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கலகம், ப்யூட்டினின் மறுதேர்வுக்கு ஆதரவளித்து பிரசாரம் செய்த மதகுருமார்கள் மீதும் குலபதிகள் மீதும் எரிச்சல் கொண்டு நிகழ்த்தப்பட்டது தான். பளீர் வண்ண உடைகளும், முகமூடிகளும் அணிந்து பொது இடங்களில் திடீர் திடீர் என எதிர்பாராத வகையில் தோன்றி ஒரு கொரில்லா தாக்குதல் போலவே நிகழ்த்தப்படும் இந்த இசை  நடன கலகங்களை எதிர் அரசியல் நடவடிக்கையாக செய்யும் யோனி கலகப் பெண்கள் பிரதானமாக  கருத்து சுதந்திரப் போராளிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள் 
 

 
யோனி கலகக் காரியின் பாடல்கள் 
 
(சுதந்திர மொழிபெயர்ப்பு)
 
Source : Pussy Riot - A punk Prayer for Freedom / Published by Feminist Press

பிரார்த்தனை கலகம்


ன்னி மேரி,ப்யுட்டினை வெளியேற்று
கருப்பு அங்கி, தங்க பட்டை
மிலிட்டரி கால்நக்கும்
சமயகுருமார் 
விடுதலையின் பிசாசு்
சொர்க்கம் செல்லும்
சைபீரியாவிற்கு இடம்பெயரும்
ஒருபால் பெருமை நடை
இறுதியில் சிறை நிரப்பும்
கன்னி மேரி
உன் புனிதம் காக்க
நாங்கள் காதலிக்க முடியாது
நாங்கள் பிள்ளை பெறமுடியாது
புனிதம் என்பது கழிசடை
புனிதம் என்பது கழிசடை
கன்னி மேரி
நீ ஏன் பெண்ணியவாதியாக கூடாது
நீ ஏன் பெண்ணியவாதியாக கூடாது
சர்வாதிகாரிக்கு ஏன் ஆலயம் கூஜா தூக்குகிறது
கருப்பு சொகுசு கார்களுக்கு யார் பணம் தருவது
குலபதிகளே 
ப்யூட்டினை தொழுவதற்கு
கடவுள் எதற்கு? ஆலயம் எதற்கு?
மாதா மண்டலம் மக்களுக்கானது
மன்னர்களுக்கானதல்ல
கன்னி மேரி இனி பெண்ணியவாதி
கன்னி மேரி இனி எங்கள் அணி.
 
 
மாஷாவின் கவிதைகள் 
Source : Huffington Post 
 
சொற்களின் ஒளி

நமக்கு பெயரென்ன பயமா?
நிழலென பின்தொடரும் பயம் நம்மை விட பாரமானது
முடிவில்லாமல் முளைக்கும் சுவர்களில் மோதி மோதி
துகளான பின் யார் நம்மை கண்டெடுப்பார்கள்
யாரடா அவன் கடவுள்
சொற்கள் ஒரு கவளம் வீசி
அவனைக் காட்டி கொடுப்போம்
துறைமுகத்திற்கு வழி சொல்வோம்
ஏதோ ஒரு கப்பலில் ஏறி தப்பித்துக்கொள்ளட்டும்
.
குற்றம் பற்றிய குறிப்புகள்

1.பெண்ணென்பதால்
நானே குற்றமாக முடியாது
என் சிதைவுக்கு அடியில்
காலம் தேங்கி நிற்கிறது
பின் அது நீர்நிலையாகி, அலையாகி, கடலாகி
உங்கள் எல்லாரையும் அமிழ்த்தும்
எல்லோரும் குற்றமாக்கப்படுவீர்கள்
அறம் என்ற புதையல் நமக்கிடையே
ஒரு ஆளற்ற மிதவையில்
பால்பேதம் இருக்கும்வரை
எடுப்பாரின்றி
அல்லாடிக் கொண்டிருக்கும்

2.அதனதனை அதனதன் இடத்தில் விடாமல்
அவற்றுக்கெல்லாம் எண்ணிட்டோம்
வீடுகளை உருவாக்கினோம்
மரங்களை தொட்டிகளில் நட்டு நீரிட்டோம்
அதில் குழந்தைகளையும் தூளியிட்டோம்
பால் அடையாளமிட்டு
அவற்றுக்கும் எண் குறித்தோம்
அந்த எண்ணின் வாரிசுத்தன்மையிலிருந்து
தொடங்குகிறது குற்றத்தின் பத்திரிகைகள்

3. குற்றத்தின் கூரிய முனையை
பார்த்துக்கொண்டே இருப்பவர்களுக்கு   
மலரின் வாசமோ
அது பூத்ததின் அவசமோ
ஒரு்போதும் தெரியாது
அவர்களே நட்ட செடியெனினும்

எதிர்ப்பு எங்கள் முகம்

நிரப்புவோம்
இந்த தெருக்களை. இந்த இரவுகளை. இந்த நகரங்களை. இந்த வீடுகளை. இந்த நாடுகளை
சுதந்திர மூச்சால் நிரப்புவோம்
செயல் அல்லது சாவு
எம் யோனி அடுக்குகளின் எண்ணிக்கையை
யார் எண்ணுவதென்பதை யாம் தீர்மானிப்போம்
எம் முலைகள் என்ன
தாய்மைக்கும், பாலியலுக்கும் சோதனை சாவடியா?
அறிவிக்கப்படாத போரின்முன்
நிராயுதபாணிகளாக நிற்க முடியாது
எதிர்ப்பு எமது ஆயுதம்
தண்டனையையும் எதிர்ப்போம்
ஆதிக்கத்தையும் எதிர்ப்போம் 
சிறைகளுக்கு உலை வைப்போம்
சீருடைகளிலிருந்து அதன் மேலிருக்கும் பதக்கங்களிலிருந்து
லத்திகளிலிருந்து பதவிகளிலிருந்து அதிகாரத்திலிருந்து
கலாசாரத்திலிருந்து மதங்களிலிருந்து ஆண்மையிலிருந்து
பால் ஒவ்வாமையிலிருந்து வெறுப்பிலிருந்து
யாவரையும் விடுவிப்போம்
விடுதலையின் சுவை ஒப்பற்றது
ஆனால் எல்லோருக்குமானது
எங்களுக்குமானது


 
  லீனா மணிமேகலை  

Friday, December 20, 2013

புதிய கவிதைகள்

மலைகள்.காம் இணைப்பு : http://malaigal.com/?p=3670





ஒரு மாலைப்பொழுது 


அன்பு என்னோடு கஞ்சா அடித்தது
பரிவாக
மிகப் பரிவாக 

நெஞ்சு நிறைய 
புகையை நிரப்ப சொன்னது 
கரிக்கிறதா எனக் கேட்டது 
ஆமாம் என்றேன் 
இல்லை என்று 
பொய் செல்வதில் உனக்கென்ன 
பிரச்சினை என்றது 

எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள்
அடுத்த கேள்வி 

அவனா 
மௌனம் 
இவனா 
மௌனம் 
அவளா 
மௌனம் 
நான் 
என்றேன் 

அமர்ந்த கனலை ஊதி ஊதி பெருக்கிய
கணத்தில் கண் சிமிட்டி 
விசுவாசத்தை கைவிடு என்றது 
என் கையை வெட்டிவிட்டது போல இருந்தது.
காயும் நிலவின் குளிர்மையில் நடுங்கி கொண்டிருந்த 
விரல்களில் இன்னும் நெருப்பு பொறிந்ததைப் 
பார்த்து கண்ணீர்  வந்தது 

தொடுதலில் தாக்குறுகிறேன், சத்தத்தை மின்னலா என்கிறேன், அசந்தர்ப்பத்தத்தை துயரம் என உழல்கிறேன், புன்முறுவலில் பெருமகிழ்ச்சியடைகிறேன், நண்பனை காதலிக்கிறேன், காதலனை கடவுளாக்குகிறேன், தோல்வியில் சாவைத் தழுவுகிறேன் 
இதென்ன 
துகளா, புகையா, நெருப்பா, ஆகாயமா, கண்ணீரா 

தான் கஞ்சா என்றது அன்பு.


___________________________________________________________

பாவனைகள் 

மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும் 
இடையே விழுந்த கண்ணீர்த் துளியில் 
அன்பை யாசித்து நிற்கும் 
என் பிரதிமையை கண்டதாக 
அவன் சத்தியம் செய்தான்.
அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது 
 நான் எதுவும்  சொல்லாமலேயே 
எல்லாம் விளங்குகிறது 
என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது
அவன் கொண்டு வந்த கோப்பையால் 
மதுவும்  தனக்கொரு துணையை தேடிக்கொண்டது 
வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது நல்லது என்றான்
தலை நிமிர்ந்துப் பார்த்தால் தெரியும் காட்சிகளை 
மட்டுமே நம்புவது சிறந்தது என்றும் சொன்னான்
என் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்ததற்காகவே 
அவன் சொன்னவற்றை ஆமோதித்தேன் 
உள்ளங்கை ரேகைகளின் சிக்கல்களை விடுவிப்பவன் போல 
கைவிரல்கள் வருடியதும் 
தொடுதலுக்கு பசித்த உடல் 
தாய்ப்பறவையை தொலைத்த குஞ்சு போல கேவியது 
கோப்பைகள் நிறைந்தன 
அன்னியத்திற்கும் பரிச்சயத்திற்கும் 
இடையே எத்தனை வண்ண விளக்குகள் 
இரவின் சாலைகளில் அன்பு அம்மணமாக ஒடுகிறது 
தட்டப்படுவது உங்கள் வீட்டுக்கதவாகவும் இருக்கலாம் 

____________________________________________________________



Blind Date 



Blind Date என்ற வார்த்தையை 
கூகிள் மொழிபெயர்ப்பில் இட்டுப்பார்த்தேன் 
குருட்டு தேதி என வந்தது 

இக்கவிதைக்கு குருட்டு தேதி எனப் பெயரிடுகிறேன் 

குருட்டு தேதி 


ஒரு அநாதியான நாளில் 
முற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன்.

நேற்றோ. நாளையோ இல்லாத 
இன்றானவன்.

அறிதல் இல்லாத அவன் தொடுதலில் 
கேள்விகளும் இல்லை 

பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி,தந்தை பெயர் 
பரிமாறிக்கொண்ட முத்தங்களில் 
தகவல்கள் பொதிந்திருக்கவில்லை 

கொள்தலின் கைவிடுதலின் 
பதற்றங்கள் இல்லாத கலவி 
அவனை வெறும்  ஆணாக்கி 
என்னை வெறும்  பெண்ணாக்கி 
இருவரையும் நனைக்கும் 
மழையாய் பொழிந்தது 
இறுதி மேகத்தை கலைக்க 
வார்த்தைகள் அங்கிருக்கவில்லை 

________________________________________________________________

லீனா மணிமேகலை 

Tuesday, December 17, 2013

11.12.13 ஒரு கருப்பு நாள் - தமிழ் இந்துவில் வந்த எனது கட்டுரை

இணைப்பு  
http://tamil.thehindu.com/opinion/columns/111213-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/article5458638.ece



சுரேஷ் குமார் கௌஷல்-எதிர்-நாஸ் பவுண்டேஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, காலனிய காலத்து இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-க்கு மீண்டும் உயிர்கொடுத்து டிசம்பர் பதினொன்றை ஒரு கருப்பு நாளாக மாற்றியிருக்கிறது. பாலின சிறுபான்மையினரைக் குற்றவாளிகளாகக் கருதும் இந்தச் சட்டம் சமத்துவத்தை எல்லாவற்றுக்கும் முன்நிபந்தனையாக வைக்கும் இந்திய அரசியலமைப்புக் கோட்பாட்டையே நகைப்புக்குரியதாக்குகிறது.

ஒருபால் உறவை இயற்கைக்கு விரோதமானது என்று ஜனநாயக சோஷலிசக் குடியரசான இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் எந்த அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறது? சாதி, மதம், கலாச்சாரம் என்பவற்றைக் கருதுகோள்களாக வைத்து ஒரு நாட்டின் நீதிமன்றம் குடிமக்களின் காமத்தை, அவர்கள் எப்படி உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வரையறுப்பதும் அதன் அடிப்படையில் சட்டங்களை நிறைவேற்றுவதும் தண்டனைகளை பரிந்துரைப்பதுமான செயல், சிவில் உரிமைகள் என்ற கருத்தாக்கத்தைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதையில் ஏற்றி கற்காலத் தெருக்களில் வலம்வர அனுப்பியிருக்கிறது.

இந்திய தண்டனை சட்டப் பிரிவு (இ.த.ச.) 377 ஆண்/ பெண் இடையிலான வழக்கமான உடலுறவு தவிர மற்ற எல்லாவகை உடலுறவுகளையும் குற்றமெனப் பார்ப்பதால், எச்.ஐ.வி./ எய்ட்ஸ் குறித்த மருத்துவத் தகவல் சேகரிப்பு மற்றும் சேவைகளில் சிக்கல் ஏற்படுகிறது என்பதே நாஸ் அறக்கட்டளை இ.த.ச. 377 நீக்கத்துக்கான வழக்கைப் பதிவு செய்ததன் காரணங்களில் மிக முக்கியமானது. ஆண்-பெண்-காமம்-உடலுறவு விஷயங்களை அறிவியல்பூர்வமாக அணுகாமல், இயற்கை-செயற்கை , பாவம்- புண்ணியம் என்ற மதவாத ஒழுங்கியல் பார்வையில் அணுகுவதும், மாற்றுப் பாலியல் தேர்வாளர்களை சமூக விரோதிகளாக்குவதும் மனிதநேயத்துக்கும் மேன்மைக்கும் பாதுகாப்புக்கும் எந்த வகையிலும் உதவாது.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜவடேகரிடம், இ.த.ச. 377 நீக்கம் குறித்து கருத்து கேட்டதற்கு “சிவ சிவா” என்று கன்னத்தில் போட்டிருக்கிறார். இன்னும் பல தலைவர்கள் இதுகுறித்தெல்லாம் எங்களிடம் கருத்து இல்லை என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்கள். நமது குடியரசு என்பது இப்படிப்பட்ட ஆட்சியாளர்களால் நிரம்பியதுதான். இந்த லட்சணத்தில் சட்டப்பிரிவு 377-ஐ நீக்குவதும் மாற்றுவதுமான முடிவை நாடாளுமன்றத்திடம் தள்ளியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. அது வந்த 24 மணி நேரத்தில், மார்க்சிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களும் 377 நீக்கத்துக்கு ஆதரவாகப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது, என்றாலும் தேர்தலை நோக்கி மையம் கொண்டிருக்கும் நாடாளுமன்றம் ஓட்டுவங்கி அரசியலுக்கு உதவாத பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைக் குறித்து என்னவிதமான அக்கறை செலுத்தும் என்பதற்குப் பாரிய மேற்கோள்கள் தேவையில்லை.
“பண்பாட்டை அடியோடு சிதைத்து, கலாச்சாரத்தை வேரோடு பிடுங்கி எறிய இன்றைய காங்கிரஸ் மத்திய அரசும் முற்போக்குப் போர்வையில் இருக்கின்ற வக்கரித்த புத்தி உடையவர்களும் ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும் மனதுக்கு வேதனையையும் தருகிறது” என்ற சனாதன ஓட்டுவங்கி குரல் கொடுத்திருக்கும் வைகோ அதில் உள்ளூர் உதாரணம். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தேர்தல் ஸ்டன்ட்டாக கையாண்டுவரும் கட்சிகள் பெருத்திருக்கும் இந்த நாட்டின் அரசவைகளிடம் நீதியை எப்படி எதிர்பார்ப்பது?

பாலின சிறுபான்மையினரை ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் பெற்றோர்களையும் குடும்பங்களையும் நண்பர்களையும் மிக மோசமாகக் காயப்படுத்தியிருப்பதோடு, அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. தமது மாற்றுத் தேர்வுகளுக்காக அன்றாட வாழ்க்கையில் அவமானத்தையும் புறக்கணிப்பையும் தனிமைப்படுத்தலையும் சந்திக்கும் ஒருபால் ஈர்ப்பாளர்கள் இனி, சட்டமே அனுமதிக்கும் தாக்குதல்களையும் துன்புறுத்தல்களையும் அனுபவிக்கும் கொடுமை நிகழக்கூடும். கொலை செய்தவர்களும் கொள்ளை அடித்தவர்களும் சாதி வெறியர்களும் மதவாதிகளும் பாலியல் வன்புணர்வாளர்களும் வீதிகளில் சுதந்திரமாக உலா வர, அன்புக்குக் கட்டுண்ட ஒருபால் ஈர்ப்பாளர்கள் தலைமறைவாக வாழும் அபத்தங்கள் நடந்தேறும். ஒருபால் உறவாளர்களுக்கு எதிராக நீதித்துறை தூண்டிவிடும் வன்முறை இ.த.ச. 377 என்றால் அது மிகையாகாது.

திருமணத்துக்கு முன்பு கொள்ளும் பாலுறவை 'திருமணம்' எனவும் திருமண உறவுக்குட்பட்ட வன்புணர்ச்சியை 'காமம்' எனவும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முறையிடும் பெண்கள் நம்பகத்தன்மையற்றவர்கள் எனவும் தீர்ப்புகள் வழங்கிய வரலாறு கொண்ட இங்கே, ஒருபால் உறவைக் குற்றமெனப் பார்ப்பது அதிர்ச்சியாக இல்லையென்றாலும், இப்படிப்பட்ட ‘நீதிமான்’களை எதிர்த்துப் போராடுவதும், நீதிமன்றங்களை அவமதித்தால் குற்றம் என்றால் சிறைச்சாலைக்குச் செல்வதும்தான், ஒரு போலி ஜனநாயகத்தின் குடிமக்களான நமக்கிருக்கும் மார்க்கங்கள்.
ஆண்-ஆண், பெண்-பெண் ஒருபால் உறவில் வெட்கப்பட வேண்டியது ஏதுமில்லை. அது ஒரு வகை பாலியல் செயல்பாடும், அன்பின் வெளிப்பாடுமே. அதைக் குற்றமாக்குவது மனிதத்துக்கு எதிரானது. மனிதம் எல்லா நிறுவனங்களுக்கும் மேலானது, ஆதியானது. மனிதத்துக்கு ஆதாரமான அன்பை, காதலை, காமத்தை, அரசன் அன்றோ, அல்லது நீதி நின்றோ கொல்ல நினைத்தால், அரசக் கொடி கிழியும். அரசின் வன்முறை நீதியென்றால், மக்களின் நீதி எதிர்ப்பே!

லீனா மணிமேகலை 

Thursday, November 28, 2013

வெள்ளை வேன் கதைகளும் வேடிக்கை மனிதர்களும் - ஷோபாசக்தி

குறிப்பு

மொட்டைக் கடிதாசியை, வெளியிட்ட 'ஊடறு', ஷோபா சக்தியின் மறுப்பு கட்டுரையையை வெளியிட்டிருக்கிறது. இணைப்பு : http://www.oodaru.com/?p=6747&cpage=1#comment-18073

ஆனால் செய்த அநியாயத்திற்கு, அதனால் படத்திற்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை. 

கீற்று போன்ற மஞ்சள் தளங்களிடம் அந்த சிறிதளவு அறத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.அதை பரப்புரை செய்த பெண்ணியவியாதிகள்? சல்மா,லக்ஷ்மி போன்ற "யாழ்ப்பான இலக்கிய சந்திப்பின்" எதிர் தரப்பினர் மற்றும் அதைப் பெருமையுடன் பகிர்ந்த எண்ணற்ற நண்பர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்? 

தனிப்பட்ட வகையில் வசவு மொழிகளையும், என் குடும்பம் முதற்கொண்டு என் நண்பர்கள் வரை எல்லாரையும் இழிவு படுத்தியும், என்னை வேவு பார்த்தும் என் புகைப்படங்களை என் அனுமதியில்லாமல் விதவிதமாக லே அவுட் செய்து வெளியிட்டும், என்னை தொடர்ந்து அவதூறு செய்து அநீதி இழைத்துவரும் வினவு மற்றும் கீற்று தளங்களின் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க இருக்கிறேன். எனக்கு துணை நிற்க கட்சியோ, பதவியோ, குழுக்களோ, செல்வாக்குள்ள கணவன்-தந்தை படை பலமோ இல்லை. ஆனால், என் பக்கம் நீதி இருக்கிறது. சுதந்திரமாக இயங்கும் பெண்களின் மீது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வன்முறையை ஏவிவரும் தமிழ் இணைய பொறுக்கிகளுக்கு பாடமாகவும் இவ்வழக்கு அமையலாம். அல்லது ஆணாதிக்க சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் நீதித்துறை அதே புத்தியையும் காண்பிக்கலாம். என்னவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாமே? பிறகு எப்படி தான் இந்த சமூகத்தை இடையீடு செய்வது?

லீனா மணிமேகலை 
இயக்குனர் லீனா மணிமேகலையினது பதினோராவது ஆவணப்படம் ‘வெள்ளை வேன் கதைகள்’. தமிழகத்திலிருக்கும் ஈழத்து அகதிகளையும் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களையும் மையமாக வைத்து அவர் இயக்கிய ‘செங்கடல்’ படத்தைத் தொடர்ந்து இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதையும், வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்வதையும் அவரது புதிய ஆவணப்படம் பாதிக்கப்பட்ட ஏழு சாட்சியங்கள் வழியாகப் பேசுகின்றது. 13.11.2013 அன்று,  இந்த இரண்டு மணிநேர ஆவணப்படம் முழுமையாக லண்டனில் பொதுமக்களிற்கு காட்சிப்படுத்தப்பட்டது.  தொடர்ந்து 14.11.2013ல் இந்த ஆவணப்படத்திலிருந்து 12 நிமிடக் காட்சித் தொகுப்பை சனல் 4 ஒளிபரப்பியது. வரும்நாட்களில் அனைத்துலக நாடுகளிலும் படம் திரையிடப்படயிருக்கிறது,
இந்த ஆவணப் படம் குறித்த செய்திகள் வரத் தொடங்கிய கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தப் படம் குறித்து இல்லாததும் பொல்லாததுமான செய்திகளும் இணையங்களில் கசிய ஆரம்பித்தன. புலிகள் ஆதரவு இணையங்கள் எந்த ஆதாரங்களுமில்லாமலேயே  வழமைபோலவே அவதூறுகளைக் கொட்டத் தொடங்கினார்கள். மறுபுறத்தில் ‘திவயின’ போன்ற சிங்கள இனவாத ஊடகங்களும் லீனா மணிமேகலையைத் திட்டித் தீர்க்கத் தொடங்கின. தமிழர்கள் தரப்பிலிருக்கும் ராஜபக்ச ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் லீனா மணிமேகலை மீது தொடர் தாக்குதலை நிகழ்த்தினார்கள். புலிகளின் ஆதரவாளர்கள் இந்தப்படத்துக்கு இலங்கை அரசு உதவி செய்து தயாரிக்கிறது என்றார்கள். மறுதரப்போ தமிழ்த் தேசியத் தரப்புகள் இந்தப் படத்தைத் தயாரிக்க லீனாவுக்கு உதவியிருக்கிறார்கள் எனச் சொன்னார்கள்.
எனக்கு இவை குறித்துப் பேசுவதெற்கெல்லாம் நிறைய நேரமிருந்தது. ஆனாலும் படம் வெளியாகும்வரை எதுவும் பேசவேண்டாம் என மனக் கட்டுப்பாட்டுடனிருந்தேன். இப்போது படம் பொதுமக்களின் பார்வைக்கு வந்துவிட்டது. இனிப் பேசலாம்.
இந்தப் படம் இலங்கை அரசின் உதவியோடு தயாரிக்கப்பட்டது  அல்லது இலங்கை அரசுக்கு எதிராகத் தன்னார்வக் குழுக்களினதோ அல்லது புலிகளினதோ உதவியுடன் தயாரிக்கப்பட்டது போன்ற உதிர்ப்புகள் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் எனில் அவை குறித்து நாம் பரிசீலித்தே ஆகவேண்டும். ஆனால் இவை எந்த ஆதாரங்களையும் முன்வைக்காத வெறும் காழ்ப்பினால் எழுந்த அவதூறுகளே என்பதால் அவற்றைப் புறந்தள்ளிவிட்டால் எஞ்சியிருப்பது ‘ஊடறு’ வலைத்தளம் பிரசுரித்த சந்தியா இஸ்மாயில் ( பெண்கள் செயற்பாட்டு வலைமன்றம்) என்பவருடைய  அறிக்கையும் அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து ‘இனியொரு’,  ‘கீற்று’ இணையத்தளங்கள் வெளியிட்ட கட்டுரைகளும்தான். எனவே நாம் இப்போது சந்தியா இஸ்மாயிலின் அறிக்கையைப் பரிசீலிக்கலாம். கீழேயிருப்பது அவரால் அனுப்பப்பட்டதாக ‘ஊடறு’  வெளியிட்ட அறிக்கையின் முழுமையான வடிவம்:
‘‘வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர். உளவுத்துறைக்கு தமது கருத்துக்கள் போய்விட்டது என்றும் தமது போட்டோக்களை தாங்கள் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டும் அப்படத்தை எடுத்த லீனா மணிமேகலை என்பவர் அதை கணக்கு எடுக்காமல் பிரசுரித்திருப்பதாகவும் உளவுத்துறையாலும் இராணுவத்தினராலும் தமது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்றும் அஞ்சுகின்றனர். தமது பேட்டியை நீக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். அவை நீக்கப்பட்டதா இல்லையா என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லையாம். இன்றும் கருத்தடை பாலியல் வன்முறைகள் என வேண்டுமென்றே முன்னாள் போராளிகள் மேல் இலங்கை இராணுவம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு கொண்டு இருக்கும் வேளையில் லீனா மணிமேகலையின் இந்த செயற்பாடு எம்மை அதிர்ச்சியும் அச்சமும் அடைய வைத்துள்ளது. பெண் போராளிகளின் உயிரை பாதுகாக்க வேண்டியது எமது கடமை,  எந்த ஒரு நாட்டு அரசுக்கும் எதிரான கருத்துக்களை கூறும் நபரின் முகங்கள் மீடியாக்களில் மறைக்கப்பட்டே காட்டப்படுகின்றன. ஆனால் முன்னாள் போராளிகளின் படங்களை வெளியிட்டு அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் நடவடிக்கையே இதுவாகும் என்ற என்னுடைய கண்டனத்தையும் நான் இங்கு பதிவு செய்கின்றேன்.’’
இந்த அறிக்கை முற்று முழுவதுமாகவே பொய்யான அறிக்கை என்பதை ‘வெள்ளை வேன் கதைகள்’ ஆவணப்படத்தைப் பார்த்தவன் என்ற வகையிலும் இந்த அறிக்கை குறித்து இயக்குனர் லீனா மணிமேகலையுடன் விவாதித்து அறிந்தவன் என்ற வகையிலும் என்னால் உறுதிபடக் கூறமுடியும்.
இந்த அறிக்கை கூறுவதுபோல ‘பெண்போராளிகள்’ என ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் படத்துக்காகப் பேட்டி கொடுக்கவில்லை. வெற்றிச்செல்வி என்ற ஒரேயொரு முன்னாள் போராளியிடம் மட்டுமே இந்தப் படத்திற்காக சாட்சியம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. வெற்றிச் செல்வியைக் குறித்துத் தெரியாதவர்களிற்காக அவரைக் குறித்து ஒரு குறிப்பை இங்கு தரலாம்.
போரில் மிக மோசமான முறையில் அவயங்களை இழந்திருக்கும் வெற்றிச் செல்வி புலிகளின் அமைப்பின் போராளி மட்டுமல்லாமல் ஓர் எழுத்தாளரும் கூட. இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் ஒரு கவிதைத் தொகுப்பையும் எழுதியிருப்பவர். இந்த ஆவணப்படத்தில் தனது சாட்சியத்தைப் பகிர்ந்திருக்கும் அவர் படத்தில் தனது சாட்சியத்தை இவ்வாறு கூறுகிறார்: ‘‘உங்களுடன் பேசியதற்காக நான் கடத்தப்படலாம். இவ்வளவு அழிவை நான் பார்த்துவிட்டேன்.. இனியென்ன பார்க்க வேண்டியிருக்கிறது! இந்த வாக்குமுலத்தை உங்களுக்கு அளிப்பது எனது வரலாற்றுக் கடமை..’’
ஆவணப்படத்தில் தனது சாட்சியத்தைப் பதிவு செய்த வெற்றிச் செல்வி மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவுக் கருவியால் படம் பிடிக்கப்படவில்லை என்பதும் அவரது ஒப்புதல் இன்றி அவரது சாட்சியம் படத்தில் இடம்பெறவில்லை என்பதும் தெளிவு. வெற்றிச்செல்வி இப்போதும் இயக்குனர் லீனா மணிமேலையுடன் தொடர்பிலேயே இருக்கிறார். அவர் ஒருபோதுமே தனது சாட்சியத்தை நீக்கிவிடுமாறோ தனது அடையாளத்தை மறைத்துவைக்குமாறோ  கேட்டிருக்கவில்லை.  சந்தேகமுள்ளவர்கள்  இதை வெற்றிச்செல்வியைச் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.  இந்தியாவிலிருந்து சென்ற,  முன்பின் அறிமுகமற்ற லீனா மணிமேகலையாலேயே  வெற்றிச்செல்வியை தொடர்பு எடுக்க முடிந்ததெனில்  ஊடறுவாலோ அல்லது சந்தியா இஸ்மாயிலின் அறிக்கையை பகிர்ந்துகொண்டவர்களாலோ இது முடியாத காரியமில்லை.
எனவே ஊடறு வெளியிட்ட அறிக்கையில் போராளிகள் தமது படத்தை வெளியிட வேண்டாமென லீனாவிடம் கேட்டார்கள் அவர் அதைக் கணக்கெடுக்கவில்லை என்பதெல்லாம் வெறும் கற்பனைகள் மட்டுமே.
இந்தப் பொய் அறிக்கையை எழுதிய சந்தியா இஸ்மாயில் ‘பெண்கள் செயற்பாட்டு வலைமன்றம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஊடறுவின் அறிவுப்புத்தான் என்னைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ஏனெனில் ‘பெண்கள் செயற்பாட்டு வலைமன்றம்’ இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றிவரும் ஒரு பெறுமதிமிக்க அமைப்பு என அறிந்திருக்கிறேன். அந்த அமைப்பைச்  சேர்ந்தவராகத் தன்னை அடையாளப்படுத்தி எழுதும் ஒருவரால் எப்படி இவ்வாறு ஒரு பொய் அறிக்கையை வெளியிட முடியும்? ஏன் வெளியிட வேண்டும்?
இந்த அறிக்கையை எழுதியதாகச் சொல்லப்படும் சந்தியா இஸ்மாயில் என்பவர் குறித்து அனைத்து இணையத் தேடுபொறிகளிலும் தேடிப்பார்த்தேன். இந்த அறிக்கையைத் தவிர வேறு எந்த இடத்திலும் அவரது பெயரைக் காணமுடியவில்லை. ஒரு செயற்பாட்டாளராகத் தன்னை அறிவித்துக்கொள்ளும் அவர் இதற்கு முன்னதாகவோ பின்னதாகவோ  இப்படியான காரியங்கள் ஏதும் செய்ததாகப் பதிவுகள் ஏதும் எனது தேடலில் கிடைக்கவில்லை. அப்படியானால் யாரிந்த சந்தியா இஸ்மாயில்?
இந்தச் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள பெண்கள் செயற்பாட்டு வலைமன்றத்தினரிடம் நெருங்கிய தொடர்புடைய ஒரு தோழர் வழியாக இச் சந்தேகத்தை அவர்கள்முன் வைத்தேன்.  சந்தியா இஸ்மாயில் என்ற ஒருவரை மட்டுமல்லாமல் ‘வெள்ளை வேன் கதைகள்’ படச் சர்ச்சைகள் குறித்துக்கூட அவர்களிற்கு ஏதும் தெரியாது என்ற பதிலே கிடைத்தது. இது குறித்து வேறு கருத்துள்ளவர்கள் பெண்கள் செயற்பாட்டு வலைமன்றத்தினரைத் தொடர்புகொண்டு இது குறித்துத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
சந்தியா இஸ்மாயில் குறித்த தேடுதலில் எனக்கு வேறொரு தடயம் கிடைத்தது. நவம்பர் 6ம் தேதி ஊடறுவில் வெளியிடப்பட்டிருக்கும் சந்தியா இஸ்மாயிலின் அறிக்கையிலிருக்கும் அதே சொற்களையும் கருத்துகளையும் வைத்து இரண்டு மாதங்களிற்கு முன்பே ஓவியா என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை செப்டம்பர் 7ம் தேதி, ‘நாம் தமிழர்’ (கனடா) இணையத்திலும் செப்டம்பர் 8ம் தேதி, யாழ் இணையத்திலும் ஒக்ரோபர் 30ம் தேதி,  ஈழம் வியூ இணையத்திலும் வெளியாகியிருக்கின்றது. அந்தக் கட்டுரை சகட்டுமேனிக்கு புலிகள் ஆதரவு இணையங்களில் திரும்பத் திரும்ப மறுபிசுரமுமாகியிருக்கிறது. அந்த இணைப்புகள் எல்லாம் இப்போதும் அப்படியேதானுள்ளன. நண்பர்கள் பார்வையிட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
ஓவியாவின் கட்டுரை, லீனா மணிமேகலை புலிகள் எதிர்ப்பாளரென்றும் இலங்கை அரசின் உளவாளியென்றும் முழுவதுமாக வசைகளால் நிரப்பப்பட்ட கட்டுரை. அந்தக் கட்டுரையின் இறுதி மூன்று பத்திகளையே சற்று மாற்றி ‘ஊடறு’ வெளியிட்ட அறிக்கை எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓவியா செப்டம்பர் 7ல் எழுதி புலிச்சார்பு ஊடகங்களில் வெளியாகிய // வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர். உளவுத்துறைக்கு தமது கருத்துக்கள் போய்விட்டது // என்ற சொற்றொடர் அப்படியே எழுத்து, புள்ளி பிசகாமல் வெட்டி ஒட்டப்பட்டிருக்கின்றது. அதை மையமாக வைத்ததே ஊடறு பிரசுரித்த அறிக்கை.
ஓர் அறிக்கையை வெளியிட முன்பு அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்துகொள்வதும்,  பிரசுரித்த அறிக்கை ஒருவர்மீது வைக்கும் பொய்க் குற்றச்சாட்டுகளிற்குப் பொறுப்புக் கூறுவதும் பகிரங்க வருத்தம் தெரிவிப்பதும் ஊடக அறம். அத்தகைய அறத்தை இந்த அறிக்கையைப் பிரசுரித்த இனியொரு,  கீற்று  இணையங்களில் எதிர்பார்க்கவே முடியாது. ஆனால் ஊடறு டொட் கொம்மிற்கு அந்த அறம் இன்னும் இருக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கிறேன்,
ஊடறு அறிக்கையின் அடிப்படையில் ‘ஈழ- தமிழகப் படைபாளிகள் கலைஞர்கள் இயக்கம்’ என்ற பெயரால் ஓர் அறிக்கையும் இப்போது இணையங்களில் தென்படுகிறது. சரி, இந்த ஈழ- தமிழகப் படைபாளிகள் கலைஞர்கள் இயக்கமாவது உண்மையான ஓர் அமைப்பா எனத் தேடினால் அப்படியொரு அமைப்பு வரலாற்றிலேயே கிடையாது. சரி வெள்ளை வேன் கதைகளை எதிர்ப்பதற்காகவே புதிதாகத் தொடங்கப்பட்ட ஓர் இயக்கமென வைத்துக்கொண்டாலும் இது யாருடைய அமைப்பு? யார் இதில் பங்கெடுத்தவர்கள்? இந்த இயக்கத்தின் அறிக்கையை பொய்யான தகல்களைக்கொண்டு கட்டப்பட்ட அறிக்கையென நான் ஆதாரங்களுடன் இங்கே சொல்கிறேனே.. இதற்குப் பதிலளிக்கப் போவது யார்?  ஊடறு வெளியிட்ட  போலி அறிக்கையையும் இந்தப் போலிப் படைப்பாளி இயக்கத்தின்  அறிக்கையையும் பேஸ்புக் போன்ற  சமூக வலைத்தளஙகளில்  பகிர்ந்துகொண்ட  வேடிக்கை மனிதர்கள் வெட்கப்படட்டும்.
இந்த ஆவணப்படத்தை அரசு சார்பு அல்லது புலி சார்பு என நிறுவ முயற்சித்துத் தோற்றுப்போகும்போது சில மூளைகாரர்கள் இன்னொரு அவதூறு ஆயுதத்தைத் தூக்கிக்கொள்கிறார்கள். செங்கடல் திரைப்படத்தின் மீதும் இதே ஆயுதத்தை இவர்கள் வீசினார்கள். அதாவது ‘‘படம் எல்லாம் சரிதான் ஆனால்  லீனா மணிமேகலை ஈழத் தமிழர்களின் துயர்களை, பணத்தை குறிவைத்தே படமாக்குறார்’’ என்பதுதான் அந்த மொண்ணை ஆயுதம்.
நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டவாறு லீனா ஏற்கனவே பத்து ஆவணப்படங்களை சுயாதீனமாகத் தயாரித்துவிட்டுத்தான் செங்கடலையும் வெள்ளை வேன் கதைகளையும் தயாரித்துள்ளார். முன்னைய பத்து ஆவணப் படங்களும் இந்திய சமூகத்தின் அரசியல் - சாதிய -பண்பாட்டுப் பிரச்சினைகளைப் பேசிய படங்கள்.
சரி, செங்கடலால் லீனா சம்பாதித்தது எவ்வளவு? கிட்டத்தட்ட அறுபது இலட்சம் இந்திய ரூபாய்களைக் கடனாக அவர் சம்பாதித்து வைத்துள்ளார். இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ படத்தைத் அரங்குகளில் வணிகரீதியாக இதுவரை வெளியிட முடியவில்லை. படத்திலிட்ட  மூலதனத்தில் செப்புச் சல்லி திரும்பக் கிடைக்கவில்லை. வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிகளாக காண்பித்துக் கிடைத்த பணம்,  அவரது பயணச் செலவிற்கே போதாமலிருந்தது.
இம்முறை, லீனா தன்னுடன் ஒரேயொரு ஒளிப்பதிவாளரை மட்டும் அழைத்துக்கொண்டு இத்தனை இராணுவக் கெடுபிடிகளிற்கு நடுவிலும் தைரியமாக, வெள்ளை வேனில் காணாமற்போனவர்களைத் தேடி இலங்கையின் கொலைநிலத்திற்குப் போனார். கிடைத்த சொற்ப வளங்களைப் பயன்படுத்தி நண்பர்களது வீடுகளிலும் பேருந்துகளிலும் பஸ்நிலையங்களிலும் கோயில்களிலும் உறங்கி நமக்கு ஒரு ஆவணப் படத்தை இரத்தமும் சதையுமாக எடுத்துவந்துள்ளார். அதை அவரது அயராத முயற்சியால் சர்வதேசப் பார்வையாளர்களின் பார்வைக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார். இதனால் அவருக்கு ஏதாவது வருமானம் கிடைக்குமாயின் அது அவரது உழைப்புக் கிடைக்கும் நியாயமான, நேர்வழியிலான ஊதியம். அவரென்ன பட்டினி கிடந்தா படம் எடுக்க முடியும்? அவரது குழுவுக்கு அவர் ஊதியமும் படப்பிடிப்புக் கருவிகளிற்கு வாடகையும் ஸ்ரூடியோவிற்கு கூலியும் கொடுக்க வேண்டாமா? ஒரு முழுநீளப் படத்தை தயாரித்து வெளியிடுவதென்பது ஒரு மொட்டை அறிக்கையை வெளியிடுவதுபோல நோகாத காரியமில்லை.
புலி ஆதரவாளர்களும் அரச ஆதரவாளர்களும் கரம்கோர்த்து வெள்ளை வேன் கதைகள் மீது அவதூறுகளைச் சொரியும் கண்கொள்ளாக் காட்சியைக் கடந்துசென்றால் நமது மதிப்பிற்குரிய எழுத்தாளர் மருத்துவர் நொயல் நடேசன் போன்றவர்கள் சமூக வலைத்தளங்களில் வைக்கும் கருத்துக் கீற்றுகள் என்னை அயர்ச்சியடையச் செய்கின்றன. நொயல் நடேசன் வாய்க்கு வாய் சனநாயகம் எனப் பேசுபவர். அறச் சீற்றத்துடன் கொலைகளைக் கண்டிப்பவர். வெள்ளை வேனில் கடத்தப் பட்டவர்கள் குறித்து எடுக்கப்பட்ட  ஓர் ஆவணப்படத்தை அவர் காய்வதற்கான காரணங்களை எவ்வளவு யோசித்தும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
வெள்ளை வேன் சம்பவங்கள் பொய் என்கிறாரா நடேசன்? அந்தப் படத்தில் சந்தியா ப்ரகீத் எக்னலியகொட முதல் வெற்றிச்செல்வி வரை சொல்லும் கண்ணீர் சாட்சியங்கள் பொய் என்கிறாரா நடேசன்? நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைத் தேடியும் ஆயிரக்கணக்கான மனைவிகள் தங்களது கணவர்களைத் தேடியும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோர்களைத் தேடியும் புகைப்படங்களுடனும் கோரிக்கை மனுக்களுடனும் திரண்டதெல்லாம் பொய்யா? அல்லது யாழ்ப்பாணம் சென்ற பிரித்தானியப் பிரதமர் முன்னால் அவர்கள் கண்ணீருடன் நின்றதுதான் பொய்யா?
நொயல் நடேசன் இந்த ஆவணப்படம் சேர்ச்சுகளின் உதவியோடும் புலிகளின் ஆதரவாளர்களின் உதவியோடும் எடுக்கப்பட்டதான தகவல்கள் தன்னிடமிருக்கின்றன என்கிறார். லீனா மணிமேகலை தனது ஆனந்தவிகடன் நேர்காணலிலேயே, ஜெஸ்யூட் பாதிரிமார்களும் மனித உரிமைப் போராளிகளும் எழுத்தாளர்களும் தனக்கு உணவும் பாதுகாப்புமளித்ததாகச் சொல்லியிருந்தார். ஆகவே பாதிரிமார்களிடமும் அவர் உதவி பெற்றது ஒன்றும் இரகசியமல்ல. இதில் மருத்துவருக்கு என்ன பிரச்சினை என்பதுதான் விளங்கவில்லை. மருத்துவர் ஆர். எஸ். எஸ்ஸில் சேர்ந்துவிட்டாரா என்ன!
புலிகளின் ஆதாரவாளர்கள் இந்த ஆவணப்படத்தின் பின்னணியிலிருக்கிறார்கள் என்று மருத்துவர் சொல்வதைத்தான் அக்மார்க் அழிச்சாட்டியம் என்பது. இதற்கு மருத்துவர் என்ன ஆதாரங்களை வைத்திருக்கிறார்? மாறாகப் புலிகளின் ஆதாரவாளர்கள் லீனாவைத் தும்பு தும்பாகக் கிழித்து இணையங்களில் தோரணங்களாகவல்லவா கட்டிக்கொண்டிருக்கிறார்கள். செங்கடல் படத்தில் புலிகளின் அராஜகங்களையும் பதிவு செய்தது, யாழ் இலக்கியச் சந்திப்பில் அவர் கலந்துகொண்டது என அவர்கள் ஏக கடுப்பிலல்லவா இருக்கிறார்கள். செங்கடலைத் திரையிடவிடாமல் அவர்கள் எத்தனை நாடுகளில் தடுத்தார்கள் என்பதை பாவம் மருத்துவர் அறியமாட்டார். மருத்துவர் சமூக வலைத்தளஙகளில் துப்பி வைக்கும் இணையப் பொறுக்கியல்ல. சமூகப் பொறுப்புள்ள பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுபவர். தனது ஆதாரங்களற்ற தூற்றல்களுக்குப் பொறுப்புச் சொல்ல அவர் கடமைப்பட்டவர்.
கடந்த முப்பது வருடகாலப் போரில் இலங்கை அரசு, இந்திய அரசு, புலிகள், மற்றைய தமிழ் இயக்கங்கள் என அனைத்து அதிகாரத் தரப்புகளும் இழைத்த மனிதவுரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் நாம் பேசவேண்டியவர்களாக இருக்கிறோம்.  குறிப்பான இன்றைய சூழ்நிலையில் ,  இலங்கையின் உச்ச அதிகாரத்தரப்பான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களையும் அடக்குமுறைகளையும் அநீதிகளை அனைத்துலக மட்டங்களிற்கும் கொண்டுசென்று  இலங்கையில் சனநாயகத்தையும் அடிப்படை மனித உரிமைகளையும் பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் நாமிருக்கிறோம். அவ்வகையில் ‘வெள்ளை வேன் கதைகள்’ நமக்குக் கிடைத்திருக்கும் சிறிய ஆனால் கூர்மையான கருவி.  இந்தப் படத்திற்கு கிடைக்கும் எதிர்ப்பு என்பது நம்மிடையே இன்னும் எவ்வளவு  பேரினவாதத்தின் ஆதரவாளர்களும் பாஸிசத்தின் ஆதரவாளர்களும்  நேர்மையற்ற ஊடகவியலாளர்களும் எஞ்சியிருக்கிறார்கள் என்பதற்கான வருந்தத்தக்க குறிகாட்டி.
*
தொடுப்புகள்:
ஓவியாவின் செப்ரெம்பர் மாதக் கட்டுரை
ஓவியாவின் கட்டுரையை பிரதிபண்ணிய,  ஊடறு வெளியிட்ட அறிக்கை
வெள்ளை வேன் கதைகள்

Saturday, October 5, 2013

லீனா மணிமேகலையின் எட்டாவது அகத்திணைக் கவிதைகள்


விமர்சனம்:  கவிஞர் மனோ. மோகன்

நன்றி : புதுவிசை  

 
முன்கதைச் சுருக்கம்

அதுவொரு காலம். ஆதித்தாயின் அரவணைப்பிலிருந்தது உலகம். அவள் உலகத்தை ஆள்பவளாக இருந்தாள். அவளே உலகமாகவும் இருந்தாள். அப்போதுதான் அது நிகழ்ந்தது.

தன் கண்ணுக்கு முன்னே பிரம்மாண்டமாய்த் தெரிந்த ஒவ்வொன்றின்மீதும் பிரமிப்பு கொண்டிருந்தான் மனிதன். மனிதன் என்பது ஆண் தன்னிலை மட்டும்தான். இங்கே பெண் இல்லை. ஏனென்றால் பெண் அவனுக்கு வெளியே தனியே நின்றாள். அவளின்மீதும் பிரமிப்பு கொண்டிருந்தான் அவன்.

மனிதன் மண்ணையும் நீரையும் கையகப்படுத்த நினைத்தபோதுதான் பெண்ணையும் கையகப்ப்படுத்த நினைத்தான். (இதனை வரிசை மாற்றியும் வாசித்துக் கொள்ளலாம்). ஒரு பெண்ணைத் தனது உடல் பலத்தால் அடக்கியாள்வது எக்காலத்திலும் இயலாத ஒன்று என்பதை அறிந்த கணத்தில் உளவியல் போர்களை நிகழ்த்தினான். அதில் வேடிக்கை என்னவென்றால் அவனெதிரே போர்க்களத்தில் நின்றவளுக்கு அது போர் என்றே தெரிந்திருக்கவில்லை என்பதுதான்.

அவன் பெண்ணைப் போலவே தனக்குப் பிரமிப்புண்டாக்கிய ஒவ்வொன்றுக்கும் பெண்ணின் பெயரை வைத்தான்; பெண்ணுக்குத் தன் இடப் பக்கத்தில் இடம் தந்ததாக அறிவித்தான். (தனது தலையில் இன்னொரு பெண்ணுக்கு இடம் தந்ததாகப் புரளியைப் பரப்பி, பெண்ணின் இருப்புக்குத் தான் கொடுத்த அங்கீகாரத்தையே பகடி செய்து அவன் ரகசியமாய்ச் சிரித்தது வேறு கதை.)

இத்தகைய புனைவுகளின்மூலம் ஒரு நெருப்புப் பிழம்பைக் குளிர்வித்து தன் குளிர்ச்சாதனப் பெட்டிக்குள் வைத்து அதன் வெப்பநிலை மாறாமல் பார்த்துக் கொண்டான் அவன். அதன்பிறகு அவனே உலகத்தை ஆள்பவனாக இருந்தான். அவனே உலகமாகவும் மாறிப்போனான்.

பின்னணி : 1

தமிழில் பெண் தன்னிலையின் உடல் வேட்கை குறித்த பதிவில் முதலில் குறிப்பிடப்பட வேண்டியவள் ஆதி அவ்வை. கவிதைத் தலைவி பொதுவெளியில் பேசுவது மறுக்கப்பட்ட சூழலில் தனது காமத்தையே கவிதைத் தலைவியின் காமமென மொழிந்து பெருவெடிப்பை ஏற்படுத்தியவள் அவள். அதன்பிறகு இத்தைகைய பெருவெடிப்பைக் காண நீண்ட காலம் பயணித்து ஆண்டாளை வந்தடைய வேண்டியிருக்கிறது. இவர்கள் இருவரிடமும் இருக்கும் ஒரு பிரச்சினை தலைவனின் காதல் என்னும் பெயரால் மீண்டும் கலாச்சார ஆதிக்கவாதிகளின் பொதுச் சட்டகத்திற்குள் நின்று ஆண் மையத்திற்குள் அடைபட நேர்ந்ததுதான். என்றபோதும் கால வெளி சூழல்களைப் பொருத்திப் பார்க்கையில் அதுவே இன்றைக்கிருக்கிற எந்தக் கலகத்திற்கும் குறையாத ஒரு கலகமாக அக்காலத்தில் இருந்திருக்கும் என்பது என் உறுதி.

அவ்வைக்கும் ஆண்டாளுக்கும் இடையில் ஏறத்தாழ பத்து நூற்றாண்டுகள் இருக்குமா? அப்படி இருக்குமானால் ஆண்டாளுக்கும் நவீன பெண் கவிகளுக்கும் இடையில் இன்னொரு பத்து நூற்றாண்டு இருக்கும்.

வாசகக் குறிப்பு : 1

தமிழ் நவீன பிரதிகளில் Bisexual என்றழைக்கப்படுகிற இருபால் காதல் குறித்தும் கே (Gay), லெஸ்பியன் (Lesbian) என்று அழைக்கப்படுகிற ஒருபால் காதல்கள் குறித்தும் நான் முதலில் வாசிக்க நேர்ந்தது ரமேஷ் : பிரேமின் கிரணம் எழுத்துக்களில்தான். அதன் பிறகு அவர்களின் ‘அங்குமிங்கும் கதைகள் இங்குமங்கும் உடல்கள்’, ‘மனவெளி நாடகம்’, 'இருவர்', 'கூத்தாண்டவர்' முதலான புனைவுகளிலும் 'சொல் என்றொரு சொல்'லிலும் இதனை வாசிக்க நேர்ந்தது. மாலதி மைத்ரியின் ‘மழை போகும் பாதை’ முதலான கவிதைகளை லெஸ்பியன் கவிதைகளாகவே வாசிக்க இயலுமென்றாலும் அவை வாசகரின் தேர்வைப் பொறுத்தது. இத்தகைய பதிவுகளுக்குப் பிறகு முதன்முதலாகத் தமிழில் ஒரு லெஸ்பியன் கவிதைத் தொகுப்பு என்னும் தன்னடையாளத்துடன் வெளிவந்திருக்கிறது அந்தரக் கன்னி.

அந்தரக் கன்னியின் குரல் : 1

ஈர சொப்பனங்கள்
என் விரல்களிலிருந்து
அவளுடையது
வேறொன்றாகத்தான் இருக்கின்றன

அவை வருடும்போதெல்லாம்
மூச்சுக் குழல்கள்
மர்மமாய் இரைகின்றன
எண்கள் குழறுகின்றன
நடுங்கி இறுகும் தசைகளில்
தேங்கிவிடும் குருதி
சிவப்பை இழக்கிறது
இசை பெறும் உடல்
கசிந்து பெருகுகிறது

ஆதிக் கிணறாய் என்னை மாற்றிவிடும்
உயிர்க்குமிழி கோல்களுக்கு
வெறும் விரல்கள் என
யாரடி பெயர் வைத்தது
பக்கம் : 35

பின்னணி : 2

நிறுவனமயப்படும் ஒவ்வொன்றும் அதிகாரம் பொருந்தியதாகத் தன்னை வடிவமைத்துக் கொள்வதன்மூலம் தன்னிலை (Self) மற்றமை (Other) என்னும் இருமை எதிர்வை ஏற்படுத்தி அதைக் காலத்திற்கும் பாதுகாக்கும் விருப்பத்தைக் கொண்டதாக இயங்குகிறது. (அதிகாரம் கையகப் படுகிற ஒவ்வொன்றும் நிறுவனமாகிறது என வரிசை மாற்றியும் இதனை வாசிக்கலாம்). இதன்மூலம் அதுவொரு படிநிலை அமைப்பைக் கட்டமைக்கிறது. படிநிலை அமைப்பென்பது இரண்டுக்கு மேற்பட்ட மற்றமைகளைக் கொண்டதாகக் கூட அமையுமென்றாலும் ஒவ்வொரு மற்றமையுடனான தனது உறவையும் இருமை எதிர்வாகப் பாதுகாக்கவே அதிகாரத் தன்னிலை விரும்புகிறது. அதன்மூலம் தன்னிலைகள் பேசுகின்றவையாகவும் மற்றமைகள் கேட்கின்றவையாகவும் இயங்கும் நிலையை அடைகின்றன. இன்னும் உன்னிப்பாகக் கவனித்தால் தன்னிலைக்கும் மற்றமைக்குமான உறவில் மற்றமை கேட்பதற்கான உரிமையே கூட மறுக்கப்பட்டிருக்கிற பாங்கினையும் உணர முடியும். ஒவ்வொரு விடுதலைப் போராட்டமும் இத்தகைய படிநிலை அமைப்பைக் குலைத்து மற்றமையாக இருக்கும் ஒன்று தன்னிலையாக மாற எத்தனிக்கும் வேட்கையின் வெளிப்பாடாகவே இருந்துவருகிறது.

வாசகக் குறிப்பு : 2

அந்தரக்கன்னி மற்ற கவிகளின் கவிதைகளிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்வது போலவே லீனா மணிமேகலையின் மற்ற தொகுப்புகளிலிருந்தே கூடத் தன்னை வேறுபடுத்திக் கொள்கிறது. இதற்கு முன்வந்த பரத்தையருள் ராணி தொகுப்பு ஆண் தன்னிலையின் வன்முறைகளுக்கெதிரான உக்கிரமான குரலாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதுவொரு போராளி களத்தில் நின்று உரக்கச் சத்தமிட்டுக் கொண்டு வாள் சுழற்றுவது போன்ற உணர்வை ஏற்படுத்தும் தொகுப்பு. ஆனால் அந்தரக் கன்னி உக்கிரம் கூடிய அதே போராளி வீட்டுக்கு வந்து தன் காதல் இணையோடு கலந்திருக்கும் தருணத்தைப் பதிவு செய்கிறது. இதில் குறிப்பிட வேண்டியது காதல் இணையில் எதுவும் களிறில்லை; இரண்டும் பிணைகள்தான்.

காதலின் இதம் கூடிய கவிதைகளாகத் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளும் அதே சமயம் இந்தக் கவிதைகள் போர் நிறுத்தத்திற்கான கவிதைகளாக இல்லை. இது வேறு மாதிரியான தாக்குதல். எதிராளிக்குப் பதிலடி கொடுப்பதை விடவும் பொருட்படுத்தாமல் போவது அதைவிடவும் உக்கிரமானது. ஒரு நபர் தன்னைத் தன்னிலையாக உணரும் கணத்தில் எதிரிலுள்ளவரை மற்றமையாக உணர்வது இயல்பு. அந்தரக்கன்னி தன்னிலையாகவும் மற்றமையாகவும் தன்னையே உணர்வதன்மூலம் (அதாவது கவிதைக்குள் பெண்ணையே தன்னிலையாகவும் மற்றமையாகவும் உணர்வதன்மூலம்) தனது மொழி வெளிக்குள் ஆண் இருப்பை அழித்துவிட்டு உரையாடலைத் தொடர்கிறது. ஆண் தன்னிலையாக இருக்கும்போது பெண் மற்றமையாக இருப்பாள். பெண் தன்னிலையாக இருக்கும்போது ஆண் மற்றமையாக இருப்பான். அந்தரக்கன்னியின் முழுச் சுற்றும் முடியும் கணத்தில் ஆண் தன்னிலையாகவும் இல்லை மற்றமையாகவும் இல்லை.

அந்தரக் கன்னியின் குரல் : 2

மின்னும் நாக்கு
உப்பும் பனியும் மின்னும் நாக்கால்
ஸாப்போவின்* கவிதையொன்றை
உயிருந்தப் பாதையில் பாய்ச்சி
என்னிலிருந்து
சூறையாற்றைப் பிரித்தெடுக்கும் உனக்கு
முப்பத்து மூன்று சிவந்த இதயங்களைப் பரிசாகத் தருகிறேன்
என் ஆலிவ் இலை விரல் அழுத்தங்களில்
தோல் வெள்ளியாய் காய்கிறது
உதிரும் மயிரையெல்லாம் வேட்கையில்
மிச்சமில்லாமல் தின்கிறேன்
மன்மதனைப் பலியிட்ட நாளில்
பறை முழங்குகிறது
நீயும் ரதி நானும் ரதி

* ஸாப்போ - வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த கிரேக்க  லெஸ்பியன் கவிஞர்
பக்கம் : 38

பின்னணி : 3

யதார்த்தம் என்பதே புனைவுகளால் கட்டமைக்கப்பட்டதாகத்தான் இருக்கிறது. கலாச்சாரம் முதலாக யதார்த்தத்தை இயக்கும் அரூபக் காரணிகள் யாவும் தனக்கு உரிமையான யதார்த்தத்தையே கட்டமைத்துக் கொள்வதன்மூலம் ஒவ்வொரு தனிமனிதனையும் தனது கண்காணிப்புக்குள் கொண்டுவருவதைச் சாத்தியமாக்கிக் கொள்கின்றன. தமிழ்ச் செவ்வியல் இலக்கியங்கள் யாவும் இத்தகைய அரசியலின் உப பிரதிகளாகத்தான் இயங்குகின்றன.

வரலாறு என நம்பப்படும் புனைவுகளும்கூட இறந்தகாலம் குறித்ததாக இல்லாமல் அதிகார நிறுவனத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்த வேட்கையிலிருந்து கிளைப்பவையாகவே இருக்கின்றன. இதன்மூலம் இயல்பான பன்மைத் தன்மைக்கெதிராக அதிகாரத் தன்னிலைகள் ஒற்றைத் தன்மை கொண்ட இலக்கு சமூகத்தைக் கட்டமைக்கின்றன. இதன்மூலம் ஒருவித ஃபாசிச இயங்குதன்மை கொண்டவையாக அவை உருமாறுகின்றன. சங்கப் பிரதிகள் உயர்குடிக்கான காமம் என நம்பப்பட்டவற்றை மட்டுமே பேசியதற்கான காரணமாகவும் இதுதான் இருக்கிறது.

அக்காலத்திலும்கூட இத்தகைய போக்குக்கெதிரான கலகக்குரல்கள் பேசப்பட்டே வந்துள்ளன என்றபோதும் அவை தொகுக்கப்பட்ட காலத்திலும் இலக்கணம் வகுக்கப்பட்ட காலத்திலும் வெளியேற்றப்பட்டிருக்கின்றன. இத்தகைய அரசியல் சூழ்ச்சியை வெற்றி கொண்டு காலத்தில் பயணித்த சிற்சில கலகப் பிரதிகளும் மைய நீரோட்டத்தின் நிறத்திலேயே இயங்குவதாகப் பாவனை செய்ததின்மூலமே தமது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. பாரி மகளிரின் ’அற்றைத் திங்கள்’ பாடல் மேல் பூச்சில் கழிவிரக்கப் பாடலாகவும் உள்பொருளில் இனப் படுகொலைக்கெதிரான குரலாகவும் பதிவு செய்யப்பட்டிருப்பதை இங்கு நினைவில் கொள்ளலாம். பின் நவீன காலத்திற்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட நாம்  இத்தகைய பிரதிகளின் வாசிக்கப்பட்ட தொனிகளைக் கலைத்துவிட்டு வேறு பல தொனிகளிலும் வாசித்துப் பார்க்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

வாசகக் குறிப்பு : 3

அந்தரக்கன்னி கவிதைகள் யதார்த்தம் என்னும் கலாச்சார ஒழுங்கு அடிப்படையிலான புனைவுகள்  பெண் தன்னிலைக்கெதிராக நிகழ்த்தும் தாக்குதல்கள், வரலாற்றுப் புனைவுகளின் மூலம் பெண் தன்னிலை ஆட்கொள்ளப்படுதல் ஆகியவற்றிலிருந்து தனது கலகத்திற்கான தர்க்கக் காரணிகளைக் கைக்கொள்கின்றன. 'தேவிடியா' என்று தலைப்பிடப்பட்ட ஒரு கவிதை. தொகுப்பின் முதல் கவிதை அதுதான். ஒரு பழிச்சொல் தனது அர்த்த மதிப்பிற்கும் பயன் மதிப்பிற்கும் இடையில் இயங்கி பெண்ணின் இயக்கத்தை முடக்குவதைப் பதிவுசெய்கிறது அக்கவிதை. இன்னொரு கவிதை பெண் வழிபாட்டில் பின்னால் இயங்கும் வரலாற்றரசியலின் முரண் நகையைப் பதிவு செய்கிறது. கலாச்சார ஒழுங்குகளும் வரலாற்று ஒழுங்குகளும் மற்றமைகளைக் கழுவேற்றியபின் கழுவில் வழிந்த குருதிக் குழம்பென உறைந்திருக்கின்றன இக்கவிதைகள்.

அந்தரக் கன்னியின் குரல் : 3

மந்திரம்
அவள்
தனக்கு இன்னொரு யோனி வேண்டுமென்றாள்
ஊர்
அவளைக் காரி உமிழ்ந்தது
அவள் ஏற்கனவே நனைந்திருந்தாள்
வசை ஒவ்வொன்றும்
அவள் முலைகளில் தெறித்து நொறுங்குகிறது
கல்லால் அடிபட
கைது செய்யப்பட
சித்திரவதைக்குட்பட
சிதைக்கப்பட
சிலுவையில் அறையப்பட
நாடு கடத்தப்பட
கொல்லப்பட
உத்தரவுகளுக்கு வாய்ப்பு வழங்குபவள் போலவே
நித்தியமாய் சொல்லியபடியிருந்தாள்
தனக்கு இன்னொரு யோனி வேண்டுமென
அவள் நிர்வானமாயிருந்ததால்
காதலை அவளிடமிருந்து
வெளியேற்றிவிட முடியவில்லை


இறுதியில் அவளுக்கு
எட்டாவது கன்னி எனப் பெயரிட்ட
ஊர்
கழுவேற்றி முக்குகளில்
காவல் தெய்வமென வைத்து வழிபட தயாராகிறது
யோனியச்சில் செய்யப்பட்ட விளக்குகளின்
நெய்த்திரிகள்
தினமும் ஏற்றப்பட
அவளின் நாவு எரிக்கப்படுகிறது
பக்கம் : 11

வாசகக் குறிப்பு : 4

ஒரு கிராமத்துப் பெண்ணின் மனப்பதிவில் விளையாட்டுக்களும் பாடல்களுமெனப் பதிந்திருக்கும்  வாய்மொழிப் பிரதிகளிலிருந்து தனது தொனியைக் கண்டடைகிறது அந்தரக்கன்னி. அதனால் இத்தொகுப்பின் வரிகள் சுருங்கி இறுகுவனவாக இல்லாமல் தளர்ந்து இளகிய நிலையில் இயங்குகின்றன. இது லீனா மணிமேகலையின் முந்தைய தொகுப்புகளில் இல்லாதது.

எழுத்துப் பிரதிகள் தொடர்ந்து கண்காணிப்பிற்குட்படுபவை. வாய்மொழிப் பிரதிகளோ கண்காணிப்பு வளையத்திற்குள் சிக்காமல் தமது மனவெளியை சுயத்தின் அழகியலை அடையாளத்தின் அரசியலை வெகு இயல்பாக நிகழ்த்திக் காட்டிவிடுகின்றன. வார்த்தைகளின் இடைவெளியில் இத்தகைய வாய்மொழிப் பிரதிகளின் தொனியைக் கைக்கொள்ளும் அந்தரக்கன்னி வார்த்தைகளுக்குள் வன மகள் ஒருத்தியின் நினைவிலிருக்கும் பூக்களையும் மரங்களையும் நினைவுகொள்கிறது. ஒரு பெண் தன்னிலையின் உடல்சார் பால்சார் அரசியல் என்னும் தளத்திலிருந்து தனது அரசியல் தள விரிவை இவ்விடத்தில் சாத்தியமாக்கிக் கொள்கிறது அந்தரக்கன்னி.

உப குறிப்புகள் :

Ø  சங்கப் பிரதிகளில் இருவேறு பெண் தன்னிலைகள் தங்களை ஒரே உடலாக உணர்கிற கணங்களைத் தலைவி தோழி உறவிலும் தலைவி பரத்தை உறவிலும் காண முடியும். கல்யாணம் மறுக்கப்பட்ட தோழி தலைவியின் இடத்திருந்து தலைவனை எம் தலைவன் என உரிமை கொள்ளும் கணங்களிலும், குழந்தை பெற்றுக் கொள்ள உரிமையில்லாத பரத்தை தலைவியின் இடத்திருந்து அவளது புதல்வனை எம் புதல்வன் என உரிமை கொள்ளும் கணங்களிலும் இவற்றை உணரலாம். ஆனாலும் அவை தலைவனுக்கான பணிவிடை கருதியவை என்ற நிலையிலும் இரண்டு பெண்களுக்கிடையிலான உறவில் தலைவனைத் தவிர்த்த சுயத் தன்னிலைகளாகத் தங்களை உணரும் தருணங்கள் அவர்களுக்கு மறுக்கப்பட்டிருந்தன என்னும் நிலையிலும் இருவேறு பெண் தன்னிலைகள் ஒரே உடலாகத் தம்மை உணரும் நிலை இந்தத் தொகுப்பு குறித்த உரையாடலில் ஏதேனும் உதவி செய்யுமா?.

Ø  யோனிக் கலகக்காரிகளின் கவிதைகளையும் ஜூன் ஜோர்டனின் கவிதைகளையும் இத்தொகுப்புக்குள் கொண்டுவந்ததை பல்வேறு பெண் தன்னிலைகளோடும் ஒரே உடலாகத் தன்னை உணரும் நிலையின் உச்சமெனக் கொள்ளலாமா?

Ø  ஸாப்போவோடும் யோனிக் கலகக் காரிகளோடும் தன்னை ஒத்துணரும் இத்தொகுப்பின் தன்னிலை QUEER கோட்பாட்டுச் சிந்தனையாளர்களோடும் தன்னைப் பொருத்திக் கொள்ளும் திறப்புகளை உடையவளதானோ!

Ø  தனது தெய்வம், தாய், விளையாடும் மரப்பாச்சி, சந்திக்கும் ஆட்டிடைச்சி என ஒவ்வொரு பெண்ணின் மீதும் காமம் கொள்ளும் அடங்காத வேட்கை கொண்ட கவிதைத் தலைவி முன்பு அவள்களோடும் இருந்தாள்; அதே சமயம் அவனோடும் இருந்தாள். வாசிக்கும் கணத்தில் அவன் பழைய ஞாபகமாக மட்டுமே எஞ்சுகிறான் அல்லது கவனத்திலேயே அவன் இல்லை. ஆனாலும் முன்பு இருந்தான் என்ற நிலையில் இது லெஸ்பியன் தன்னிலையின் தொகுப்பா அல்லது பைசெக்ஷுவல் தன்னிலையின் தொகுப்பா?

Ø  கவிதைக்குள் பட்டியல் அடுக்குவதை லீனா மணிமேகலையின் கவிதைகளில் அதிகமாகவே வாசித்து வந்திருக்கிறேன். அவற்றுள் சில இயங்கு தன்மை கொண்டு என்னைத் தொந்தரவு செய்ததுண்டு. சில தட்டையாகவே என்னைக் கடந்துபோனதுமுண்டு. இத்தொகுப்பில் முத்தத்தின் தருணங்களை அடுக்கும் 'மச்சக்கன்னி' கவிதை என்னைத் தொந்தரவு செய்கிறது. கவிதைக்குள் தொந்தரவு என்பதே கொண்டாட்டத்திற்கானதாகவும் இருக்கிறது. இன்னொரு பக்கம் 'அநிச்சம்' கவிதை பொருட்கள் தருணங்கள் நிறங்கள் என மாறி மாறிப் பயணிக்கும்போதுகூட எனது வாசிப்பைத் தட்டையாகவே கடந்துபோகிறது.

Ø  அந்தரக்கன்னியின் திரவ மொழியைக் கொண்டாடுவதானால் அது லீனா மணிமேகலையின் மற்ற தொகுப்புகளின் கவிதைகளை நான் உவப்பில்லாதவையாகக் கருதுவதாகுமா? ஒருவேளை முந்தைய கவிமொழியின் உறைபனி நிலை எனக்கு உவப்பில்லை என்பதிலிருந்தும்கூட இந்தத் திரவத் தன்மையை நான் கொண்டாடலாம்.

Ø  முன்பொரு கணத்தில் லிங்கத்தைக் கோணக் குச்சியாக்கி உறுமி கொட்டிக் கொள்ளும் கவித் தன்னிலை பின்பு தன் தோழியொருத்தியின் விரலை உயிர்க்குமிழி கோலாக உணர்வது லெஸ்பியன் புணர்ச்சியின் வெளிப்பாடுதானா? அல்லது அந்தத் தோழியின் விரல் லிங்கத்தின் பதிலீட்டு உறுப்பாகத்தான் செயல்படுகிறதா?

Ø  இறந்துபோன தன் லெஸ்பியன் தோழியுடன் காதலின் பைத்தியத் தன்மையோடு உடலுறவு கொள்ளும் பெண் தன்னிலையின் கவிதையான ‘அதுவொரு காதல் காலம்’ கவிதையும் இடிபஸ், எலெக்ட்ரா செயல்நிலைகளுக்கு வெளியே பெண்ணொருத்தியின் தாயின் மீதான காமத்தை வெளிப்படுத்தும் ‘அம்மா’ கவிதையும் தொகுப்பின் உரையாடலை வேறு பரிமாணங்களுக்குக் கொண்டு செல்லும் கவிதைகள் என்பது என் துணிபு.

அந்தரக்கன்னியின் குரல் : 4

அதுவொரு காதல் காலம்
அவள் இறந்துதான் போனாள்

இரவு முழுக்க
அணைத்தே இருந்தேன்

ஒரு பொம்மையைப்போல
உயிர்ப்பிழந்த
அவளின்
இமைகளை நாசியை கன்னங்களை
முலைகளை தொடைகளை பாதங்களை
அவளைப்போலவே சுவைத்தேன்

பெருகும் கண்ணீரில் அவள் பிம்பம் தொலைகிறது
கலையும் வண்ணங்கள் அவள் சுண்ணத்தைப் போல
பாலாய் வெளியேறுகின்றன

உள்ளங்கைகளின் ரேகைகள்
துடித்துவிடாதா என வன்மம் கூடி
வெறித்தபடி இருந்தது
நாங்கள் சுகித்திருந்த காலம்
பக்கம் : 37

திணை வரையறுத்தல்

தொல்காப்பியம் ‘கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்’ என்கிறது. ஆனால் சங்க இலக்கியத்தில் நடுவண் ஐந்திணைகள் மட்டுமே பேசப்படுகின்றன. கைக்கிளையும் பெருந்திணையும் சில கலித்தொகைப் பாடல்களின்மூலம் அடையாளம் காணப்பட்டாலும் அவையொன்றும் பெரிய அளவில் மாற்று உரையாடல்களை நிகழ்த்திய பாடல்களாக இல்லை. கைக்கிளையும் பெருந்திணையுமேகூட ஆண் பெண் உறவு என்னும் அங்கீகரிக்கப்பட்ட சட்டகத்திற்குள் இயங்குபவையாகத்தான் இருந்தன. வயது வித்தியாசங்கள், இணையைத் தேர்வு செய்தலில் பொதுவெளியிலிருந்து விலகுதல் என்னும் நிலையில் தான் இவை நடுவண் ஐந்திணைகளிலிருந்து வேறுபட்டியங்கின. மற்றபடி காமத்தின் வேறு பால் நிலை சாத்தியப்பாடுகளெதுவும் தமிழின் செவ்வியல் பிரதிகளில் இல்லை.


தொல்காப்பியம் பெருந்திணைக்குக் குறிப்பிடும் நான்கு பண்புகளில் ‘தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறன்’ என்பதை மட்டும் உரை பிரதிகளை மறுதலித்துவிட்டு வாசித்தால் அவை அங்கீகரிக்கப்பட்ட Heterosexual தன்மையைக் கடந்து வேறு பல காதல் வகை மாதிரிகளைப் பேசுவதற்கான திறப்பு கொண்டிருப்பதை உணர முடியும். அதாவது உயர்குடிகளுக்கான காதலொழிந்த எல்லாக் காதலும் (கே, லெஸ்பியன் உட்பட) இதில் அடங்கும் எனவும் பொருள் கொள்ள முடியும். எது எப்படி இருந்தபோதும் கே, லெஸ்பியன் முதலான காதல்களை அவற்றின் தனித்தன்மையோடும் தீவிரத்தன்மையோடும் புரிந்துகொண்டு அவற்றுடனான உரையாடலை நீட்டித்துக்கொள்ள, பேசப்பட்ட திணை வெளிக்கு அப்பால் அவற்றின் திணையைக் கட்டமைப்பது அவசியமாகிறது. அந்தரக் கன்னியின் கவிதைகள் ஏழு திணைகளுக்கு வெளியே தனது இருப்பை உறுதி செய்யும் கவிதைகள்; அவை எட்டாவது அகத்திணைக் கவிதைகள். அவற்றின் திணையை இனியும் பூக்களின் பெயரால் அழைப்பது சரியல்ல. வேண்டுமானால் யோனியின் பெயரால் அழைக்கலாம்; அதுவும்கூட அந்தத் திணை மாந்தரின்  ஒப்புதல் இருந்தால்தான்.