குறிப்பு
மொட்டைக் கடிதாசியை, வெளியிட்ட 'ஊடறு', ஷோபா சக்தியின் மறுப்பு கட்டுரையையை வெளியிட்டிருக்கிறது. இணைப்பு : http://www.oodaru.com/?p=6747&cpage=1#comment-18073
ஆனால் செய்த அநியாயத்திற்கு, அதனால் படத்திற்கும், படக்குழுவினருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்பிற்கு மன்னிப்போ வருத்தமோ தெரிவிக்கவில்லை.
கீற்று போன்ற மஞ்சள் தளங்களிடம் அந்த சிறிதளவு அறத்தைக் கூட எதிர்பார்க்க முடியாது.அதை பரப்புரை செய்த பெண்ணியவியாதிகள்? சல்மா,லக்ஷ்மி போன்ற "யாழ்ப்பான இலக்கிய சந்திப்பின்" எதிர் தரப்பினர் மற்றும் அதைப் பெருமையுடன் பகிர்ந்த எண்ணற்ற நண்பர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?தனிப்பட்ட வகையில் வசவு மொழிகளையும், என் குடும்பம் முதற்கொண்டு என் நண்பர்கள் வரை எல்லாரையும் இழிவு படுத்தியும், என்னை வேவு பார்த்தும் என் புகைப்படங்களை என் அனுமதியில்லாமல் விதவிதமாக லே அவுட் செய்து வெளியிட்டும், என்னை தொடர்ந்து அவதூறு செய்து அநீதி இழைத்துவரும் வினவு மற்றும் கீற்று தளங்களின் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க இருக்கிறேன். எனக்கு துணை நிற்க கட்சியோ, பதவியோ, குழுக்களோ, செல்வாக்குள்ள கணவன்-தந்தை படை பலமோ இல்லை. ஆனால், என் பக்கம் நீதி இருக்கிறது. சுதந்திரமாக இயங்கும் பெண்களின் மீது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வன்முறையை ஏவிவரும் தமிழ் இணைய பொறுக்கிகளுக்கு பாடமாகவும் இவ்வழக்கு அமையலாம். அல்லது ஆணாதிக்க சமூகத்தின் ஒரு அங்கமாக இருக்கும் நீதித்துறை அதே புத்தியையும் காண்பிக்கலாம். என்னவாக இருந்தாலும் ஒரு கை பார்க்கலாமே? பிறகு எப்படி தான் இந்த சமூகத்தை இடையீடு செய்வது?
லீனா மணிமேகலை
இயக்குனர் லீனா மணிமேகலையினது பதினோராவது ஆவணப்படம் ‘வெள்ளை வேன் கதைகள்’. தமிழகத்திலிருக்கும் ஈழத்து அகதிகளையும் இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களையும் மையமாக வைத்து அவர் இயக்கிய ‘செங்கடல்’ படத்தைத் தொடர்ந்து இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதையும், வெள்ளை வேன் கடத்தல்கள் தொடர்வதையும் அவரது புதிய ஆவணப்படம் பாதிக்கப்பட்ட ஏழு சாட்சியங்கள் வழியாகப் பேசுகின்றது. 13.11.2013 அன்று, இந்த இரண்டு மணிநேர ஆவணப்படம் முழுமையாக லண்டனில் பொதுமக்களிற்கு காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து 14.11.2013ல் இந்த ஆவணப்படத்திலிருந்து 12 நிமிடக் காட்சித் தொகுப்பை சனல் 4 ஒளிபரப்பியது. வரும்நாட்களில் அனைத்துலக நாடுகளிலும் படம் திரையிடப்படயிருக்கிறது,
இந்த ஆவணப் படம் குறித்த செய்திகள் வரத் தொடங்கிய கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து இந்தப் படம் குறித்து இல்லாததும் பொல்லாததுமான செய்திகளும் இணையங்களில் கசிய ஆரம்பித்தன. புலிகள் ஆதரவு இணையங்கள் எந்த ஆதாரங்களுமில்லாமலேயே வழமைபோலவே அவதூறுகளைக் கொட்டத் தொடங்கினார்கள். மறுபுறத்தில் ‘திவயின’ போன்ற சிங்கள இனவாத ஊடகங்களும் லீனா மணிமேகலையைத் திட்டித் தீர்க்கத் தொடங்கின. தமிழர்கள் தரப்பிலிருக்கும் ராஜபக்ச ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்களில் லீனா மணிமேகலை மீது தொடர் தாக்குதலை நிகழ்த்தினார்கள். புலிகளின் ஆதரவாளர்கள் இந்தப்படத்துக்கு இலங்கை அரசு உதவி செய்து தயாரிக்கிறது என்றார்கள். மறுதரப்போ தமிழ்த் தேசியத் தரப்புகள் இந்தப் படத்தைத் தயாரிக்க லீனாவுக்கு உதவியிருக்கிறார்கள் எனச் சொன்னார்கள்.
எனக்கு இவை குறித்துப் பேசுவதெற்கெல்லாம் நிறைய நேரமிருந்தது. ஆனாலும் படம் வெளியாகும்வரை எதுவும் பேசவேண்டாம் என மனக் கட்டுப்பாட்டுடனிருந்தேன். இப்போது படம் பொதுமக்களின் பார்வைக்கு வந்துவிட்டது. இனிப் பேசலாம்.
இந்தப் படம் இலங்கை அரசின் உதவியோடு தயாரிக்கப்பட்டது அல்லது இலங்கை அரசுக்கு எதிராகத் தன்னார்வக் குழுக்களினதோ அல்லது புலிகளினதோ உதவியுடன் தயாரிக்கப்பட்டது போன்ற உதிர்ப்புகள் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையிலான குற்றச்சாட்டுகள் எனில் அவை குறித்து நாம் பரிசீலித்தே ஆகவேண்டும். ஆனால் இவை எந்த ஆதாரங்களையும் முன்வைக்காத வெறும் காழ்ப்பினால் எழுந்த அவதூறுகளே என்பதால் அவற்றைப் புறந்தள்ளிவிட்டால் எஞ்சியிருப்பது ‘ஊடறு’ வலைத்தளம் பிரசுரித்த சந்தியா இஸ்மாயில் ( பெண்கள் செயற்பாட்டு வலைமன்றம்) என்பவருடைய அறிக்கையும் அந்த அறிக்கையை அடிப்படையாக வைத்து ‘இனியொரு’, ‘கீற்று’ இணையத்தளங்கள் வெளியிட்ட கட்டுரைகளும்தான். எனவே நாம் இப்போது சந்தியா இஸ்மாயிலின் அறிக்கையைப் பரிசீலிக்கலாம். கீழேயிருப்பது அவரால் அனுப்பப்பட்டதாக ‘ஊடறு’ வெளியிட்ட அறிக்கையின் முழுமையான வடிவம்:
‘‘வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர். உளவுத்துறைக்கு தமது கருத்துக்கள் போய்விட்டது என்றும் தமது போட்டோக்களை தாங்கள் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டும் அப்படத்தை எடுத்த லீனா மணிமேகலை என்பவர் அதை கணக்கு எடுக்காமல் பிரசுரித்திருப்பதாகவும் உளவுத்துறையாலும் இராணுவத்தினராலும் தமது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்றும் அஞ்சுகின்றனர். தமது பேட்டியை நீக்க சொல்லி கேட்டிருக்கிறார்கள். அவை நீக்கப்பட்டதா இல்லையா என்பது அவர்களுக்கு இன்னும் தெரியவில்லையாம். இன்றும் கருத்தடை பாலியல் வன்முறைகள் என வேண்டுமென்றே முன்னாள் போராளிகள் மேல் இலங்கை இராணுவம் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டு கொண்டு இருக்கும் வேளையில் லீனா மணிமேகலையின் இந்த செயற்பாடு எம்மை அதிர்ச்சியும் அச்சமும் அடைய வைத்துள்ளது. பெண் போராளிகளின் உயிரை பாதுகாக்க வேண்டியது எமது கடமை, எந்த ஒரு நாட்டு அரசுக்கும் எதிரான கருத்துக்களை கூறும் நபரின் முகங்கள் மீடியாக்களில் மறைக்கப்பட்டே காட்டப்படுகின்றன. ஆனால் முன்னாள் போராளிகளின் படங்களை வெளியிட்டு அவர்களின் உயிருக்கு உலை வைக்கும் நடவடிக்கையே இதுவாகும் என்ற என்னுடைய கண்டனத்தையும் நான் இங்கு பதிவு செய்கின்றேன்.’’
இந்த அறிக்கை முற்று முழுவதுமாகவே பொய்யான அறிக்கை என்பதை ‘வெள்ளை வேன் கதைகள்’ ஆவணப்படத்தைப் பார்த்தவன் என்ற வகையிலும் இந்த அறிக்கை குறித்து இயக்குனர் லீனா மணிமேகலையுடன் விவாதித்து அறிந்தவன் என்ற வகையிலும் என்னால் உறுதிபடக் கூறமுடியும்.
இந்த அறிக்கை கூறுவதுபோல ‘பெண்போராளிகள்’ என ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்தப் படத்துக்காகப் பேட்டி கொடுக்கவில்லை. வெற்றிச்செல்வி என்ற ஒரேயொரு முன்னாள் போராளியிடம் மட்டுமே இந்தப் படத்திற்காக சாட்சியம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. வெற்றிச் செல்வியைக் குறித்துத் தெரியாதவர்களிற்காக அவரைக் குறித்து ஒரு குறிப்பை இங்கு தரலாம்.
போரில் மிக மோசமான முறையில் அவயங்களை இழந்திருக்கும் வெற்றிச் செல்வி புலிகளின் அமைப்பின் போராளி மட்டுமல்லாமல் ஓர் எழுத்தாளரும் கூட. இரண்டு நாவல்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பையும் ஒரு கவிதைத் தொகுப்பையும் எழுதியிருப்பவர். இந்த ஆவணப்படத்தில் தனது சாட்சியத்தைப் பகிர்ந்திருக்கும் அவர் படத்தில் தனது சாட்சியத்தை இவ்வாறு கூறுகிறார்: ‘‘உங்களுடன் பேசியதற்காக நான் கடத்தப்படலாம். இவ்வளவு அழிவை நான் பார்த்துவிட்டேன்.. இனியென்ன பார்க்க வேண்டியிருக்கிறது! இந்த வாக்குமுலத்தை உங்களுக்கு அளிப்பது எனது வரலாற்றுக் கடமை..’’
ஆவணப்படத்தில் தனது சாட்சியத்தைப் பதிவு செய்த வெற்றிச் செல்வி மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒளிப்பதிவுக் கருவியால் படம் பிடிக்கப்படவில்லை என்பதும் அவரது ஒப்புதல் இன்றி அவரது சாட்சியம் படத்தில் இடம்பெறவில்லை என்பதும் தெளிவு. வெற்றிச்செல்வி இப்போதும் இயக்குனர் லீனா மணிமேலையுடன் தொடர்பிலேயே இருக்கிறார். அவர் ஒருபோதுமே தனது சாட்சியத்தை நீக்கிவிடுமாறோ தனது அடையாளத்தை மறைத்துவைக்குமாறோ கேட்டிருக்கவில்லை. சந்தேகமுள்ளவர்கள் இதை வெற்றிச்செல்வியைச் தொடர்புகொண்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம். இந்தியாவிலிருந்து சென்ற, முன்பின் அறிமுகமற்ற லீனா மணிமேகலையாலேயே வெற்றிச்செல்வியை தொடர்பு எடுக்க முடிந்ததெனில் ஊடறுவாலோ அல்லது சந்தியா இஸ்மாயிலின் அறிக்கையை பகிர்ந்துகொண்டவர்களாலோ இது முடியாத காரியமில்லை.
எனவே ஊடறு வெளியிட்ட அறிக்கையில் போராளிகள் தமது படத்தை வெளியிட வேண்டாமென லீனாவிடம் கேட்டார்கள் அவர் அதைக் கணக்கெடுக்கவில்லை என்பதெல்லாம் வெறும் கற்பனைகள் மட்டுமே.
இந்தப் பொய் அறிக்கையை எழுதிய சந்தியா இஸ்மாயில் ‘பெண்கள் செயற்பாட்டு வலைமன்றம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர் என்ற ஊடறுவின் அறிவுப்புத்தான் என்னைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. ஏனெனில் ‘பெண்கள் செயற்பாட்டு வலைமன்றம்’ இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றிவரும் ஒரு பெறுமதிமிக்க அமைப்பு என அறிந்திருக்கிறேன். அந்த அமைப்பைச் சேர்ந்தவராகத் தன்னை அடையாளப்படுத்தி எழுதும் ஒருவரால் எப்படி இவ்வாறு ஒரு பொய் அறிக்கையை வெளியிட முடியும்? ஏன் வெளியிட வேண்டும்?
இந்த அறிக்கையை எழுதியதாகச் சொல்லப்படும் சந்தியா இஸ்மாயில் என்பவர் குறித்து அனைத்து இணையத் தேடுபொறிகளிலும் தேடிப்பார்த்தேன். இந்த அறிக்கையைத் தவிர வேறு எந்த இடத்திலும் அவரது பெயரைக் காணமுடியவில்லை. ஒரு செயற்பாட்டாளராகத் தன்னை அறிவித்துக்கொள்ளும் அவர் இதற்கு முன்னதாகவோ பின்னதாகவோ இப்படியான காரியங்கள் ஏதும் செய்ததாகப் பதிவுகள் ஏதும் எனது தேடலில் கிடைக்கவில்லை. அப்படியானால் யாரிந்த சந்தியா இஸ்மாயில்?
இந்தச் சந்தேகத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ள பெண்கள் செயற்பாட்டு வலைமன்றத்தினரிடம் நெருங்கிய தொடர்புடைய ஒரு தோழர் வழியாக இச் சந்தேகத்தை அவர்கள்முன் வைத்தேன். சந்தியா இஸ்மாயில் என்ற ஒருவரை மட்டுமல்லாமல் ‘வெள்ளை வேன் கதைகள்’ படச் சர்ச்சைகள் குறித்துக்கூட அவர்களிற்கு ஏதும் தெரியாது என்ற பதிலே கிடைத்தது. இது குறித்து வேறு கருத்துள்ளவர்கள் பெண்கள் செயற்பாட்டு வலைமன்றத்தினரைத் தொடர்புகொண்டு இது குறித்துத் தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
சந்தியா இஸ்மாயில் குறித்த தேடுதலில் எனக்கு வேறொரு தடயம் கிடைத்தது. நவம்பர் 6ம் தேதி ஊடறுவில் வெளியிடப்பட்டிருக்கும் சந்தியா இஸ்மாயிலின் அறிக்கையிலிருக்கும் அதே சொற்களையும் கருத்துகளையும் வைத்து இரண்டு மாதங்களிற்கு முன்பே ஓவியா என்பவரால் எழுதப்பட்ட கட்டுரை செப்டம்பர் 7ம் தேதி, ‘நாம் தமிழர்’ (கனடா) இணையத்திலும் செப்டம்பர் 8ம் தேதி, யாழ் இணையத்திலும் ஒக்ரோபர் 30ம் தேதி, ஈழம் வியூ இணையத்திலும் வெளியாகியிருக்கின்றது. அந்தக் கட்டுரை சகட்டுமேனிக்கு புலிகள் ஆதரவு இணையங்களில் திரும்பத் திரும்ப மறுபிசுரமுமாகியிருக்கிறது. அந்த இணைப்புகள் எல்லாம் இப்போதும் அப்படியேதானுள்ளன. நண்பர்கள் பார்வையிட்டு உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
ஓவியாவின் கட்டுரை, லீனா மணிமேகலை புலிகள் எதிர்ப்பாளரென்றும் இலங்கை அரசின் உளவாளியென்றும் முழுவதுமாக வசைகளால் நிரப்பப்பட்ட கட்டுரை. அந்தக் கட்டுரையின் இறுதி மூன்று பத்திகளையே சற்று மாற்றி ‘ஊடறு’ வெளியிட்ட அறிக்கை எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, ஓவியா செப்டம்பர் 7ல் எழுதி புலிச்சார்பு ஊடகங்களில் வெளியாகிய // வெள்ளை வான் என்ற படம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த பெண்போராளிகள் பெரும் அச்சத்திலும் பதட்டத்திலும் அத்தோடு பெரும் கோபத்திலும் இருக்கின்றனர். உளவுத்துறைக்கு தமது கருத்துக்கள் போய்விட்டது // என்ற சொற்றொடர் அப்படியே எழுத்து, புள்ளி பிசகாமல் வெட்டி ஒட்டப்பட்டிருக்கின்றது. அதை மையமாக வைத்ததே ஊடறு பிரசுரித்த அறிக்கை.
ஓர் அறிக்கையை வெளியிட முன்பு அதன் நம்பகத்தன்மையை உறுதிசெய்துகொள்வதும், பிரசுரித்த அறிக்கை ஒருவர்மீது வைக்கும் பொய்க் குற்றச்சாட்டுகளிற்குப் பொறுப்புக் கூறுவதும் பகிரங்க வருத்தம் தெரிவிப்பதும் ஊடக அறம். அத்தகைய அறத்தை இந்த அறிக்கையைப் பிரசுரித்த இனியொரு, கீற்று இணையங்களில் எதிர்பார்க்கவே முடியாது. ஆனால் ஊடறு டொட் கொம்மிற்கு அந்த அறம் இன்னும் இருக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கிறேன்,
ஊடறு அறிக்கையின் அடிப்படையில் ‘ஈழ- தமிழகப் படைபாளிகள் கலைஞர்கள் இயக்கம்’ என்ற பெயரால் ஓர் அறிக்கையும் இப்போது இணையங்களில் தென்படுகிறது. சரி, இந்த ஈழ- தமிழகப் படைபாளிகள் கலைஞர்கள் இயக்கமாவது உண்மையான ஓர் அமைப்பா எனத் தேடினால் அப்படியொரு அமைப்பு வரலாற்றிலேயே கிடையாது. சரி வெள்ளை வேன் கதைகளை எதிர்ப்பதற்காகவே புதிதாகத் தொடங்கப்பட்ட ஓர் இயக்கமென வைத்துக்கொண்டாலும் இது யாருடைய அமைப்பு? யார் இதில் பங்கெடுத்தவர்கள்? இந்த இயக்கத்தின் அறிக்கையை பொய்யான தகல்களைக்கொண்டு கட்டப்பட்ட அறிக்கையென நான் ஆதாரங்களுடன் இங்கே சொல்கிறேனே.. இதற்குப் பதிலளிக்கப் போவது யார்? ஊடறு வெளியிட்ட போலி அறிக்கையையும் இந்தப் போலிப் படைப்பாளி இயக்கத்தின் அறிக்கையையும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளஙகளில் பகிர்ந்துகொண்ட வேடிக்கை மனிதர்கள் வெட்கப்படட்டும்.
இந்த ஆவணப்படத்தை அரசு சார்பு அல்லது புலி சார்பு என நிறுவ முயற்சித்துத் தோற்றுப்போகும்போது சில மூளைகாரர்கள் இன்னொரு அவதூறு ஆயுதத்தைத் தூக்கிக்கொள்கிறார்கள். செங்கடல் திரைப்படத்தின் மீதும் இதே ஆயுதத்தை இவர்கள் வீசினார்கள். அதாவது ‘‘படம் எல்லாம் சரிதான் ஆனால் லீனா மணிமேகலை ஈழத் தமிழர்களின் துயர்களை, பணத்தை குறிவைத்தே படமாக்குறார்’’ என்பதுதான் அந்த மொண்ணை ஆயுதம்.
நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டவாறு லீனா ஏற்கனவே பத்து ஆவணப்படங்களை சுயாதீனமாகத் தயாரித்துவிட்டுத்தான் செங்கடலையும் வெள்ளை வேன் கதைகளையும் தயாரித்துள்ளார். முன்னைய பத்து ஆவணப் படங்களும் இந்திய சமூகத்தின் அரசியல் - சாதிய -பண்பாட்டுப் பிரச்சினைகளைப் பேசிய படங்கள்.
சரி, செங்கடலால் லீனா சம்பாதித்தது எவ்வளவு? கிட்டத்தட்ட அறுபது இலட்சம் இந்திய ரூபாய்களைக் கடனாக அவர் சம்பாதித்து வைத்துள்ளார். இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ படத்தைத் அரங்குகளில் வணிகரீதியாக இதுவரை வெளியிட முடியவில்லை. படத்திலிட்ட மூலதனத்தில் செப்புச் சல்லி திரும்பக் கிடைக்கவில்லை. வெளிநாடுகளில் சிறப்புக் காட்சிகளாக காண்பித்துக் கிடைத்த பணம், அவரது பயணச் செலவிற்கே போதாமலிருந்தது.
இம்முறை, லீனா தன்னுடன் ஒரேயொரு ஒளிப்பதிவாளரை மட்டும் அழைத்துக்கொண்டு இத்தனை இராணுவக் கெடுபிடிகளிற்கு நடுவிலும் தைரியமாக, வெள்ளை வேனில் காணாமற்போனவர்களைத் தேடி இலங்கையின் கொலைநிலத்திற்குப் போனார். கிடைத்த சொற்ப வளங்களைப் பயன்படுத்தி நண்பர்களது வீடுகளிலும் பேருந்துகளிலும் பஸ்நிலையங்களிலும் கோயில்களிலும் உறங்கி நமக்கு ஒரு ஆவணப் படத்தை இரத்தமும் சதையுமாக எடுத்துவந்துள்ளார். அதை அவரது அயராத முயற்சியால் சர்வதேசப் பார்வையாளர்களின் பார்வைக்கும் எடுத்துச் சென்றிருக்கிறார். இதனால் அவருக்கு ஏதாவது வருமானம் கிடைக்குமாயின் அது அவரது உழைப்புக் கிடைக்கும் நியாயமான, நேர்வழியிலான ஊதியம். அவரென்ன பட்டினி கிடந்தா படம் எடுக்க முடியும்? அவரது குழுவுக்கு அவர் ஊதியமும் படப்பிடிப்புக் கருவிகளிற்கு வாடகையும் ஸ்ரூடியோவிற்கு கூலியும் கொடுக்க வேண்டாமா? ஒரு முழுநீளப் படத்தை தயாரித்து வெளியிடுவதென்பது ஒரு மொட்டை அறிக்கையை வெளியிடுவதுபோல நோகாத காரியமில்லை.
புலி ஆதரவாளர்களும் அரச ஆதரவாளர்களும் கரம்கோர்த்து வெள்ளை வேன் கதைகள் மீது அவதூறுகளைச் சொரியும் கண்கொள்ளாக் காட்சியைக் கடந்துசென்றால் நமது மதிப்பிற்குரிய எழுத்தாளர் மருத்துவர் நொயல் நடேசன் போன்றவர்கள் சமூக வலைத்தளங்களில் வைக்கும் கருத்துக் கீற்றுகள் என்னை அயர்ச்சியடையச் செய்கின்றன. நொயல் நடேசன் வாய்க்கு வாய் சனநாயகம் எனப் பேசுபவர். அறச் சீற்றத்துடன் கொலைகளைக் கண்டிப்பவர். வெள்ளை வேனில் கடத்தப் பட்டவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படத்தை அவர் காய்வதற்கான காரணங்களை எவ்வளவு யோசித்தும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.
வெள்ளை வேன் சம்பவங்கள் பொய் என்கிறாரா நடேசன்? அந்தப் படத்தில் சந்தியா ப்ரகீத் எக்னலியகொட முதல் வெற்றிச்செல்வி வரை சொல்லும் கண்ணீர் சாட்சியங்கள் பொய் என்கிறாரா நடேசன்? நவநீதம் பிள்ளை இலங்கைக்கு வந்தபோது ஆயிரக்கணக்கான தாய்மார்கள் தங்களது பிள்ளைகளைத் தேடியும் ஆயிரக்கணக்கான மனைவிகள் தங்களது கணவர்களைத் தேடியும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தங்களது பெற்றோர்களைத் தேடியும் புகைப்படங்களுடனும் கோரிக்கை மனுக்களுடனும் திரண்டதெல்லாம் பொய்யா? அல்லது யாழ்ப்பாணம் சென்ற பிரித்தானியப் பிரதமர் முன்னால் அவர்கள் கண்ணீருடன் நின்றதுதான் பொய்யா?
நொயல் நடேசன் இந்த ஆவணப்படம் சேர்ச்சுகளின் உதவியோடும் புலிகளின் ஆதரவாளர்களின் உதவியோடும் எடுக்கப்பட்டதான தகவல்கள் தன்னிடமிருக்கின்றன என்கிறார். லீனா மணிமேகலை தனது ஆனந்தவிகடன் நேர்காணலிலேயே, ஜெஸ்யூட் பாதிரிமார்களும் மனித உரிமைப் போராளிகளும் எழுத்தாளர்களும் தனக்கு உணவும் பாதுகாப்புமளித்ததாகச் சொல்லியிருந்தார். ஆகவே பாதிரிமார்களிடமும் அவர் உதவி பெற்றது ஒன்றும் இரகசியமல்ல. இதில் மருத்துவருக்கு என்ன பிரச்சினை என்பதுதான் விளங்கவில்லை. மருத்துவர் ஆர். எஸ். எஸ்ஸில் சேர்ந்துவிட்டாரா என்ன!
புலிகளின் ஆதாரவாளர்கள் இந்த ஆவணப்படத்தின் பின்னணியிலிருக்கிறார்கள் என்று மருத்துவர் சொல்வதைத்தான் அக்மார்க் அழிச்சாட்டியம் என்பது. இதற்கு மருத்துவர் என்ன ஆதாரங்களை வைத்திருக்கிறார்? மாறாகப் புலிகளின் ஆதாரவாளர்கள் லீனாவைத் தும்பு தும்பாகக் கிழித்து இணையங்களில் தோரணங்களாகவல்லவா கட்டிக்கொண்டிருக்கிறார்கள். செங்கடல் படத்தில் புலிகளின் அராஜகங்களையும் பதிவு செய்தது, யாழ் இலக்கியச் சந்திப்பில் அவர் கலந்துகொண்டது என அவர்கள் ஏக கடுப்பிலல்லவா இருக்கிறார்கள். செங்கடலைத் திரையிடவிடாமல் அவர்கள் எத்தனை நாடுகளில் தடுத்தார்கள் என்பதை பாவம் மருத்துவர் அறியமாட்டார். மருத்துவர் சமூக வலைத்தளஙகளில் துப்பி வைக்கும் இணையப் பொறுக்கியல்ல. சமூகப் பொறுப்புள்ள பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் அறியப்படுபவர். தனது ஆதாரங்களற்ற தூற்றல்களுக்குப் பொறுப்புச் சொல்ல அவர் கடமைப்பட்டவர்.
கடந்த முப்பது வருடகாலப் போரில் இலங்கை அரசு, இந்திய அரசு, புலிகள், மற்றைய தமிழ் இயக்கங்கள் என அனைத்து அதிகாரத் தரப்புகளும் இழைத்த மனிதவுரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் நாம் பேசவேண்டியவர்களாக இருக்கிறோம். குறிப்பான இன்றைய சூழ்நிலையில் , இலங்கையின் உச்ச அதிகாரத்தரப்பான மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களையும் அடக்குமுறைகளையும் அநீதிகளை அனைத்துலக மட்டங்களிற்கும் கொண்டுசென்று இலங்கையில் சனநாயகத்தையும் அடிப்படை மனித உரிமைகளையும் பெற்றுக்கொள்ளவேண்டிய நிலையில் நாமிருக்கிறோம். அவ்வகையில் ‘வெள்ளை வேன் கதைகள்’ நமக்குக் கிடைத்திருக்கும் சிறிய ஆனால் கூர்மையான கருவி. இந்தப் படத்திற்கு கிடைக்கும் எதிர்ப்பு என்பது நம்மிடையே இன்னும் எவ்வளவு பேரினவாதத்தின் ஆதரவாளர்களும் பாஸிசத்தின் ஆதரவாளர்களும் நேர்மையற்ற ஊடகவியலாளர்களும் எஞ்சியிருக்கிறார்கள் என்பதற்கான வருந்தத்தக்க குறிகாட்டி.
*
தொடுப்புகள்:
ஓவியாவின் செப்ரெம்பர் மாதக் கட்டுரை
ஓவியாவின் கட்டுரையை பிரதிபண்ணிய, ஊடறு வெளியிட்ட அறிக்கை
வெள்ளை வேன் கதைகள்