Monday, October 20, 2014

பின்பனிக்கால கவிதைகள்


உன்னைக் கொன்ற கத்தியை 
நேற்று தான் கண்டெடுத்தேன் 

அதில் என் கைரேகைகள் இல்லை 
ஆனால் அத்தனை சிறிய கைரேகை 
கனவுக்கும் இல்லை 

வேறு யாருடையதாக இருக்கும் 

உயிருடன் நீ அகப்பட்டப் பிறகும் 
இந்தக் கேள்விக்கு என்ன அர்த்தம் 

*
உன் சட்டை நுனியை 
இறுக்கிப் பிடித்துக்கொண்டிருக்கிறேன் 

கடந்துவிடப் போகும் இறுதி மேகத்தையும்
இழுத்துக் கொண்டிருப்பதைப் போல
பெருமழையை நிறுத்தி விடுபவள் போல 
கிளைகளிலிருந்து பறவைகளை 
ஒருபோதும் தப்ப விடாதவள் போல 
கனன்றுக் கொண்டிருக்கும் தீயின் நீலத்தைப் போல

*
நினைவு ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படம் 

அதில் வண்ணமடித்துப் பார்க்கிறேன் 
மாசாகப் படிகின்றது 
சட்டத்திற்குள் அடித்தால் 
திரவமாக கசிந்து வெளியேறுகிறது 
பரிசாக கைமாற்றினால் காணாமல் போகிறது 
பிரதி செய்தால் உருவம் கலைகிறது 
பாரம் தாங்காமல் ஒரு பறவையிடம் தந்தேன் 
அது 
காலமற்ற நிலத்தில் 
அதை தவறவிட்டுவிட்டதாக அறிகிறேன் 

*
எனது வார்த்தைகளை 
உனக்கு இளைப்பாறத் தருகிறேன் 
அதில் டால்ஸ்டாய் எங்கே எனக் கேட்காதே 
சற்றுப் பொறுமையாகப் பார் 
மாங்கன்றுகளை நட்டிருக்கிறேன் 
கூடு வைக்க தூக்கணாங்குருவிகளை
அழைத்திருக்கிறேன் 
சிறிதுகாலம் கு. அழகிரிசாமி 
இளைப்பாறியிருந்தார் தெரியுமா 
அப்போதெல்லாம் அவர் கனவில் 
கமலாதாஸ் வந்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தார் 
பிரமிள் தன்னுடைய வார்த்தைகளாக மாற்றிக்கொள்ள 
முடியாததால் கோபித்துக்கொண்டு வெளியேறிவிட்டார் 
உனக்குப் பிடித்த  ஊஞ்சலைக் கட்டிவிடுகிறேன் 
நித்திரை வை 
சிறுவயதில் நீ கடலில் பிடித்து விட்ட நண்டுகள் 
திரும்பி வரலாம் 
ஃப்ரீடா போல நீ ஆசை ஆசையை வரைந்துப் பார்த்த 
முதல் காதலி  புன்னகைக்கலாம் 
அணைத்துக்கொள் 
வார்த்தைகள் உனதாகலாம் 

*
காதல் வேண்டும்
காதலின் முதல் பருவத்துக் 
காதல் வேண்டும் குடித்து முடித்தும் தளும்பிக் கொண்டிருக்கும் 
திராட்சை ரசம் போல

*
நாம் பயணம் செய்த படகை 
உனக்கு நினைவிருக்கிறதா 
அதன் ஓட்டையை திறந்து விடுவதும் 
நீரை இறைத்து வெளியே 
ஊற்றுவதுமாய் மாறி மாறி 
நாம் விளையாடிக் கொண்டது நினைவிருக்கிறதா கடல்
நேற்று கடல் சொல்லிக்காட்டியது

*
காபூலின் மாதுளம்பழ காடுகளில் 
நடந்துக் கொண்டிருக்கும்போது 
உனக்கு முத்தமிட்டதாக கனவு கண்டேன்.
அப்போதும் மேற்கு தொடர்ச்சி மலைகளில்
மேய்ந்துக் கொண்டிருந்த வரையாட்டின் கண்கள்
நம்மைப் பார்த்துக் கொண்டிருந்தன

சுள்ளென அடிக்கும் வெயில் நமது காதல்
அதில் கறுத்து மின்னும் தென்னங்கீற்று நம் உடல்

என் ஆன்மாவின் அடிவாரத்தில்
திரவமாக ஓடிக்கொண்டிருக்கிறாய்
உரையாடும் கணம் தோறும் 
அதில் சுழியும் வட்டங்களில்
கெண்டை மீ ன்களாக
உன் கண்கள் துள்ளுகின்றன

*
நான் எழுதுவதையெல்லாம்
வாசித்துக்கொண்டிருக்கிறாய்
எனத் தெரியும்
இதோ நான் உண்ணும் வெண்பூசணியின் துண்டொன்று உனக்கு
அதன் கடித்த வடிவம் உன் நினைவு

என் இதயத்தின் கிணறுகளில் சிலவற்றை
நல்மழை கொண்டு நிரப்பினாய்
மற்றவை அதனினும் ஆழமானவை
ஆனாலும் உன்வானம் பார்த்தே கிடக்கிறது என்னுடல்

*
குறிப்பாக 
உன்னைப் போதுமான அளவு
முத்தமிடவில்லையென்ற
புகாரில்லாமல்
இறக்க விரும்புகிறேன்

*
நான் தொலைவு
நான் மறதி
நான் பிளந்த மௌனம்
நான் கைவிடல்
குகையின் குறுக்குவெட்டைப் போன்ற
என் மோனம் கண்ணீர் அற்றது
எதிரொலி தொலைத்தது

*
அந்த ஆற்றுப் படுகையில்
என் காதல்களைப் புதைத்து வைத்திருக்கிறேன்
உன் கைகளில் அகப்படும் மண்
உன்னுடையது
நம்முடையது

*
என் பொறாமையைக் கண்டு விசனம் வேண்டாம்
அது பசி தாளாமல் அழும் குழந்தை போன்றது


லீனா மணிமேகலை 

(நன்றி ஆனந்த விகடன், இன்மை டாட் காம்)