நன்றி மணல்வீடு - இதழ் 22
கைவிடப்பட்ட ஆன்மாக்களையெல்லாம்
அள்ளிப்போட்டுக் கொண்டு
கொளுத்திப் போட்ட கடலில்
துடுப்பை இழுக்கிறாள்
கால்களைத் துறந்த தேவதை
அவளின் பிரகாசமான இறக்கைகளால்
நீலத்தின் உப்பு, சாம்பல் தீவுகளாய் திரண்டது
அத்தீவுகள் பெயர் தெரியாத மிருகங்களின் உருவங்களாய்
வாய் பிளந்து தெரிந்தன
தீர்ப்பு நாட்களை ஒத்திப்போடும்படி
கடவுளர்களின் பெயர்களை
உச்சரிக்கப் பணித்தாள் தேவதை
பதிலுக்கு அவரவர் காதலர்களின் பெயரை முணுமுணுத்த
ஆன்மாக்களை மன்னிக்க மறுத்தாள்
நடப்பதையும் நம்பியதையும் விரும்பியதையும் இழந்ததையும்
அறிந்துக் கொண்ட
அலைகளின் சன்னதம்
படகை கவிழ்த்தது
கிழிந்த நங்கூரங்கள் சடசடக்க
நாளையற்ற
உலகை குறித்தப் பாடலொன்றை
தேவதை பெருங்குரலெடுத்துப் பாடினாள்
நித்தியத்தை நோக்கிய இந்தப் பயணத்திற்கு
அனுமதி மறுக்கப்பட்ட
’அன்பால் செத்த உடல்கள்’
கரைகளை காவல் காத்தன
2.
Illustration by Chaira Bautista |
சாலையின் நடுவில் நிற்கிறோம்நாமிருவரும் இனி
சேர்ந்துப் படுத்துறங்க முடியாதபடி
வியர்வை மூழ்கடித்த
இடத்திற்கு
குறுக்கு சால் ஓடும்
சாலை அது
கறுத்த பூதங்களையும்
பாம்புகளையும்
நம்மீது நாமே
விரும்பி ஏவிக்கொண்ட
காட்சியின் ஆகச்சிறந்த
நடிகர்கள் நாம்
சற்று அசந்த நேரங்களில்
ஊர் பூசிய சேறையும்
தின்று பசியாறினோம்
நிழல் தந்த மரம்
நாம் கண்ணீர் சிந்த மறுத்ததால்
பட்டுப்போன இந்த
நாளில்
விடைபெறுவோம்
நாம் எழுதியதை நிறுத்திக்கொண்ட
ஏடுகளில் ஒரு பக்கத்தை நீ எடுத்துக்கொள்
மறுபக்கத்தை நான் பத்திரப்படுத்துகிறேன்
பார்
நாம் ஒருவரையொருவர்
விடுவித்துக் கொண்டதும்
இருபக்கமும் கோள் காட்டுகிறான்
சூரியன்
3.
Illustration by Chiara Bautista |
இறுதி அத்தியாயத்தை எரித்துவிடலாம் என்றால்
இன்னும் பச்சையத்தில் கவிதைகள்
அழித்ததாய் நினைத்திருந்த விதைகள்
முளைவிட்டு ஆற்றில் இறங்கி
கடவுளையும் தேர்ந்தெடுத்து
தம் பாடல்களை தாமே பாடி
முப்போகம் விளைகின்றன
வேட்கை ஊறிய தோல்
உரித்தாலும் உப்பிட்டாலும்
உடலினும் பெரிதாய் வளர்ந்து
தங்கள் மதகுகள் திறந்து
கிரகணங்களை கிளர்த்துகின்றன
ஒரு கொலை நிகழ்ந்தாலொழிய
ரத்தம் உறையாது
வாக்குறுதியையோ, கனவையோ,
வெறும் வார்த்தைகளென
உதிர்க்க நினைக்கும் உடல்களை
பலி கேட்கிறது பிரிவு
லீனா மணிமேகலை