Monday, December 23, 2013

விடுதலையான யோனி கலகக்காரிகள் - Pussy Rioters Freed

இணைப்பு : http://www.theguardian.com/world/2013/dec/23/pussy-riot-nadezhda-tolokonnikova-freed-russian-prison

2012 பிப்ரவரியில், நாடியா, மாஷா, காட்யா என்ற மூன்று  இளம்பெண்கள் மாஸ்கோ தேவாலயத்தின் மேடையின் மேலேறி, ஒழுங்கவிழ்ப்பு நடவடிக்கையாக கலக பிரார்த்தனை பாடியது சர்வதேச செய்தியானது.

கைது செய்த மூன்று பெண்களில், நடனத்தில் பங்கு பெறாமல், கூட வந்ததால், தண்டனை குறைக்கப்பட்டு வெளியே வந்த காட்யா, மற்ற இரு பெண்களின் விடுதலைக்காக பிரசாரங்களை மேற்கொண்டார். ஆகஸ்ட் 2012 ல் வழக்கு நடந்துக்கொண்டிருக்கும்பொதே 
"ப்யூடின் தன தலையில் கொள்ளி வைத்துக்கொள்கிறார்" என்ற ஆல்பத்தை வெளியிட்ட கலகக்காரிகளின் பாடல் வரிகளுள் ஒன்று " எங்களுக்கு ஏழு வருடம் போதாது, பதினெட்டு வருடமாக சிறைவாசத்தை நீட்டிக் கொள்".இன்று (23 டிசம்பர் 2013) முதலில்  விடுதலையான  மாஷா தங்கள் விடுதலையை ரஷ்ய அரசாங்கத்தின் வெறும் விளம்பர ஸ்டண்ட் என்று வர்ணித்திருக்கிறார். அடுத்த சில மணி நேரங்களில் விடுவிக்கப்பட்ட நாடியா, "ப்யுட்டின் நீங்கிய ரஷ்யா" என்று உரத்தக் கோஷமிட்டுக்கொண்டே வெற்றிக்கான இரண்டு விரல் குறியீட்டை உயர்த்திக் காட்டியிருக்கிறார். யோனிக் கலகக்காரிகளின் விடுதலைக்காக சர்வதேச அளவில் போராடிய மனித உரிமை மற்றும் கருத்து சுதந்திரப் போராளிகள், "ரஷ்யாவில் வரும் பிப்ரவரியில் நிகழவிருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பாக சர்வதேச அரங்கில் தலைகுனிவை தவிர்ப்பதற்கான கிரம்ளினின்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை" என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஆகஸ்ட் 2012 ல் வழக்கு நடந்துக்கொண்டிருக்கும்பொதே "ப்யூடின் தன தலையில் கொள்ளி வைத்துக்கொள்கிறார்" என்ற ஆல்பத்தை வெளியிட்ட கலகக்காரிகளின் பாடல் வரிகளுள் ஒன்று " எங்களுக்கு ஏழு வருடம் போதாது, பதினெட்டு வருடமாக சிறைவாசத்தை நீட்டிக் கொள்".
 
இனி, சென்ற வருடம் வெளிவந்த என் கவிதை தொகுப்பான "அந்தரக்கன்னியில்" இடம்பெற்றிருந்த குறிப்பும், சுதந்திரக்  கவிதை மொழிபெயர்ப்பும் 

எதிர்ப்பெனப்படுவது சுதந்திரத்திற்கான வேட்கை - யோனி கலகக்காரிகளின் சாகசப் பயணம் 


 ”மேரி மாதாவே! ருஷ்ய உழைக்கும் வர்க்கத்தை சுரண்டி பிழைக்கும் சர்வாதிகாரி விளாதிமிர் ப்யூடினை வெளியேற்று" மேரி மாதவே , நீ பெண்ணியவாதியாகி எங்கள் போராட்டத்திற்கு வலு கொடு”, “மேரி மாதாவே, வெறும் பிள்ளைகள் பெறும் காதல் அடிமைகள் அல்ல நாங்கள்” என்ற வரிகள் கொண்ட பாடலால் யோனி கலகக்காரிகளுக்கு மூன்று வருட தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் ஒரு நிமிடம் நீடித்த அந்த கொரில்லா நடனம் , மதவெறுப்பின் அடிப்படையில் நடந்த பொறுக்கித்தனம் என்று அரசாங்கத்தால் குற்றம்சாட்டப்பட்டது. ட்ராட்ஸ்கியவாதிகளாக, அராஜகவாதிகளாக, பெண்ணியவாதிகளாக, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாக தங்களை அறிவித்துக்கொண்ட “யோனி கலகம் (pussy riots)” என பெயரிடப்பட்ட அந்த பெண்கள் குழு ஏற்படுத்திய அதிர்வு சர்வதேச கவனத்தைப் பெற்றது. பொது சொத்திற்கு எந்த இடையூறோ, பங்கமோ விளைவிக்காத இந்தப்பெண்களை ரஷ்ய அரசாங்கம் சமூக விரோதிகளாகவும், கடுங்குற்றவாளிகளாகவும் நடத்தியதும், கைது செய்ததும், தண்டித்ததும் உலகம் தழுவிய கண்டனத்துக்குள்ளானது. யோனி கலகக்காரிகளை விடுதலை செய்யக்கோரி ரஷ்யாவிலும், நாடு கடந்தும் போராட்டக்குரல்கள் எழுந்து வருகின்றன. மடோனா, ஸ்டிங், யோகோ ஓனொ போன்ற புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் யோனி கலகக்காரிகளை விடுதலை செய்யக்கோரி நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆம்னெஸ்டி இண்டெர்னேஷனல் என்ற மனித உரிமை அமைப்பு "மனசாட்சி கைதிகள்” என அவர்களை சுவீகரித்து, பிரசாரம் செய்து வருகிறது
 
இரண்டாவது முறையாக அதிபராக ப்யூட்டின் தேர்ந்தடுக்கப்பட்டது ரஷ்யாவில், சுதந்திரவியலாளர்களை பெரிதும் விரக்திக்குள்ளாக்கியது. .யோனி கலகக்காரிகள் தேர்தலுக்கு முன்னரே “உங்கள் வோட்டு சீட்டுகள் அரச நிர்வாகத்திற்கு கழிப்பறை தாள்கள்” என்ற அதிரடி இசைநடன நிகழ்ச்சியை பொது இடங்களில் அரங்கேற்றினார்கள், தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அரச எதிர்ப்பாளர்களை கைது செய்ததையொட்டி, சிறைச்சாலைக்கு முன் ஒரு பட்டறையின் கூரையில் ஏறி நின்று  “சிறைகளுக்கு மரணம், எதிர்ப்புக்கு சுதந்திரம்” என்று கலகக்காரிகள் பாடிய பாடல் கம்பிகளுக்குப் பின் இருந்த எல்லா சிறைக்கைதிகளையும் ஈர்த்ததாக சொல்லப்படுகிறது. சிவப்பு சதுக்கத்தில் சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்களை திரட்டுவதற்காக “ப்யூட்டின் தன்னை ஒன்னுக்கடித்துக்கொண்டார், ப்யூட்டின் தொடை நடுங்கினார், ப்யூட்டின் கழிந்துவிட்டார்” என்ற அரசியல்  பங்க்(punk) பாடல்களை இசையமைத்து கவனம் ஈர்த்தனர். 2011 டிசம்பரில் சிவப்பு சதுக்கத்தில் கூடிய ஆயிரக்கணக்கான மக்களின் மேல் பறந்த ரோந்து விமானங்களையும், மாஸ்கோ காற்றில் கலந்த அதிகாரத்தின் நாற்றத்தையும், ஆட்சியின் அராஜகத்தையும் "யோனி கலகம்"" இசை நடன பாடல்களாக பல இடங்களில் நிகழ்த்தியது. “கன்னி மேரி, ப்யூட்டினை வெளியேற்று” என்ற மாஸ்கோ தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை கலகம், ப்யூட்டினின் மறுதேர்வுக்கு ஆதரவளித்து பிரசாரம் செய்த மதகுருமார்கள் மீதும் குலபதிகள் மீதும் எரிச்சல் கொண்டு நிகழ்த்தப்பட்டது தான். பளீர் வண்ண உடைகளும், முகமூடிகளும் அணிந்து பொது இடங்களில் திடீர் திடீர் என எதிர்பாராத வகையில் தோன்றி ஒரு கொரில்லா தாக்குதல் போலவே நிகழ்த்தப்படும் இந்த இசை  நடன கலகங்களை எதிர் அரசியல் நடவடிக்கையாக செய்யும் யோனி கலகப் பெண்கள் பிரதானமாக  கருத்து சுதந்திரப் போராளிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்கிறார்கள் 
 

 
யோனி கலகக் காரியின் பாடல்கள் 
 
(சுதந்திர மொழிபெயர்ப்பு)
 
Source : Pussy Riot - A punk Prayer for Freedom / Published by Feminist Press

பிரார்த்தனை கலகம்


ன்னி மேரி,ப்யுட்டினை வெளியேற்று
கருப்பு அங்கி, தங்க பட்டை
மிலிட்டரி கால்நக்கும்
சமயகுருமார் 
விடுதலையின் பிசாசு்
சொர்க்கம் செல்லும்
சைபீரியாவிற்கு இடம்பெயரும்
ஒருபால் பெருமை நடை
இறுதியில் சிறை நிரப்பும்
கன்னி மேரி
உன் புனிதம் காக்க
நாங்கள் காதலிக்க முடியாது
நாங்கள் பிள்ளை பெறமுடியாது
புனிதம் என்பது கழிசடை
புனிதம் என்பது கழிசடை
கன்னி மேரி
நீ ஏன் பெண்ணியவாதியாக கூடாது
நீ ஏன் பெண்ணியவாதியாக கூடாது
சர்வாதிகாரிக்கு ஏன் ஆலயம் கூஜா தூக்குகிறது
கருப்பு சொகுசு கார்களுக்கு யார் பணம் தருவது
குலபதிகளே 
ப்யூட்டினை தொழுவதற்கு
கடவுள் எதற்கு? ஆலயம் எதற்கு?
மாதா மண்டலம் மக்களுக்கானது
மன்னர்களுக்கானதல்ல
கன்னி மேரி இனி பெண்ணியவாதி
கன்னி மேரி இனி எங்கள் அணி.
 
 
மாஷாவின் கவிதைகள் 
Source : Huffington Post 
 
சொற்களின் ஒளி

நமக்கு பெயரென்ன பயமா?
நிழலென பின்தொடரும் பயம் நம்மை விட பாரமானது
முடிவில்லாமல் முளைக்கும் சுவர்களில் மோதி மோதி
துகளான பின் யார் நம்மை கண்டெடுப்பார்கள்
யாரடா அவன் கடவுள்
சொற்கள் ஒரு கவளம் வீசி
அவனைக் காட்டி கொடுப்போம்
துறைமுகத்திற்கு வழி சொல்வோம்
ஏதோ ஒரு கப்பலில் ஏறி தப்பித்துக்கொள்ளட்டும்
.
குற்றம் பற்றிய குறிப்புகள்

1.பெண்ணென்பதால்
நானே குற்றமாக முடியாது
என் சிதைவுக்கு அடியில்
காலம் தேங்கி நிற்கிறது
பின் அது நீர்நிலையாகி, அலையாகி, கடலாகி
உங்கள் எல்லாரையும் அமிழ்த்தும்
எல்லோரும் குற்றமாக்கப்படுவீர்கள்
அறம் என்ற புதையல் நமக்கிடையே
ஒரு ஆளற்ற மிதவையில்
பால்பேதம் இருக்கும்வரை
எடுப்பாரின்றி
அல்லாடிக் கொண்டிருக்கும்

2.அதனதனை அதனதன் இடத்தில் விடாமல்
அவற்றுக்கெல்லாம் எண்ணிட்டோம்
வீடுகளை உருவாக்கினோம்
மரங்களை தொட்டிகளில் நட்டு நீரிட்டோம்
அதில் குழந்தைகளையும் தூளியிட்டோம்
பால் அடையாளமிட்டு
அவற்றுக்கும் எண் குறித்தோம்
அந்த எண்ணின் வாரிசுத்தன்மையிலிருந்து
தொடங்குகிறது குற்றத்தின் பத்திரிகைகள்

3. குற்றத்தின் கூரிய முனையை
பார்த்துக்கொண்டே இருப்பவர்களுக்கு   
மலரின் வாசமோ
அது பூத்ததின் அவசமோ
ஒரு்போதும் தெரியாது
அவர்களே நட்ட செடியெனினும்

எதிர்ப்பு எங்கள் முகம்

நிரப்புவோம்
இந்த தெருக்களை. இந்த இரவுகளை. இந்த நகரங்களை. இந்த வீடுகளை. இந்த நாடுகளை
சுதந்திர மூச்சால் நிரப்புவோம்
செயல் அல்லது சாவு
எம் யோனி அடுக்குகளின் எண்ணிக்கையை
யார் எண்ணுவதென்பதை யாம் தீர்மானிப்போம்
எம் முலைகள் என்ன
தாய்மைக்கும், பாலியலுக்கும் சோதனை சாவடியா?
அறிவிக்கப்படாத போரின்முன்
நிராயுதபாணிகளாக நிற்க முடியாது
எதிர்ப்பு எமது ஆயுதம்
தண்டனையையும் எதிர்ப்போம்
ஆதிக்கத்தையும் எதிர்ப்போம் 
சிறைகளுக்கு உலை வைப்போம்
சீருடைகளிலிருந்து அதன் மேலிருக்கும் பதக்கங்களிலிருந்து
லத்திகளிலிருந்து பதவிகளிலிருந்து அதிகாரத்திலிருந்து
கலாசாரத்திலிருந்து மதங்களிலிருந்து ஆண்மையிலிருந்து
பால் ஒவ்வாமையிலிருந்து வெறுப்பிலிருந்து
யாவரையும் விடுவிப்போம்
விடுதலையின் சுவை ஒப்பற்றது
ஆனால் எல்லோருக்குமானது
எங்களுக்குமானது


 
  லீனா மணிமேகலை  

Friday, December 20, 2013

புதிய கவிதைகள்

மலைகள்.காம் இணைப்பு : http://malaigal.com/?p=3670





ஒரு மாலைப்பொழுது 


அன்பு என்னோடு கஞ்சா அடித்தது
பரிவாக
மிகப் பரிவாக 

நெஞ்சு நிறைய 
புகையை நிரப்ப சொன்னது 
கரிக்கிறதா எனக் கேட்டது 
ஆமாம் என்றேன் 
இல்லை என்று 
பொய் செல்வதில் உனக்கென்ன 
பிரச்சினை என்றது 

எரியும் மணத்தில் யார் மணக்கிறார்கள்
அடுத்த கேள்வி 

அவனா 
மௌனம் 
இவனா 
மௌனம் 
அவளா 
மௌனம் 
நான் 
என்றேன் 

அமர்ந்த கனலை ஊதி ஊதி பெருக்கிய
கணத்தில் கண் சிமிட்டி 
விசுவாசத்தை கைவிடு என்றது 
என் கையை வெட்டிவிட்டது போல இருந்தது.
காயும் நிலவின் குளிர்மையில் நடுங்கி கொண்டிருந்த 
விரல்களில் இன்னும் நெருப்பு பொறிந்ததைப் 
பார்த்து கண்ணீர்  வந்தது 

தொடுதலில் தாக்குறுகிறேன், சத்தத்தை மின்னலா என்கிறேன், அசந்தர்ப்பத்தத்தை துயரம் என உழல்கிறேன், புன்முறுவலில் பெருமகிழ்ச்சியடைகிறேன், நண்பனை காதலிக்கிறேன், காதலனை கடவுளாக்குகிறேன், தோல்வியில் சாவைத் தழுவுகிறேன் 
இதென்ன 
துகளா, புகையா, நெருப்பா, ஆகாயமா, கண்ணீரா 

தான் கஞ்சா என்றது அன்பு.


___________________________________________________________

பாவனைகள் 

மதுக்கோப்பைக்கும் உதடுகளுக்கும் 
இடையே விழுந்த கண்ணீர்த் துளியில் 
அன்பை யாசித்து நிற்கும் 
என் பிரதிமையை கண்டதாக 
அவன் சத்தியம் செய்தான்.
அது என் கண்ணீரை மேலும் பெருக்கியது 
 நான் எதுவும்  சொல்லாமலேயே 
எல்லாம் விளங்குகிறது 
என்ற அவனை அப்போதைக்கு பிடித்திருந்தது
அவன் கொண்டு வந்த கோப்பையால் 
மதுவும்  தனக்கொரு துணையை தேடிக்கொண்டது 
வாழ்க்கையின் போக்கில் போய்விடுவது நல்லது என்றான்
தலை நிமிர்ந்துப் பார்த்தால் தெரியும் காட்சிகளை 
மட்டுமே நம்புவது சிறந்தது என்றும் சொன்னான்
என் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்ததற்காகவே 
அவன் சொன்னவற்றை ஆமோதித்தேன் 
உள்ளங்கை ரேகைகளின் சிக்கல்களை விடுவிப்பவன் போல 
கைவிரல்கள் வருடியதும் 
தொடுதலுக்கு பசித்த உடல் 
தாய்ப்பறவையை தொலைத்த குஞ்சு போல கேவியது 
கோப்பைகள் நிறைந்தன 
அன்னியத்திற்கும் பரிச்சயத்திற்கும் 
இடையே எத்தனை வண்ண விளக்குகள் 
இரவின் சாலைகளில் அன்பு அம்மணமாக ஒடுகிறது 
தட்டப்படுவது உங்கள் வீட்டுக்கதவாகவும் இருக்கலாம் 

____________________________________________________________



Blind Date 



Blind Date என்ற வார்த்தையை 
கூகிள் மொழிபெயர்ப்பில் இட்டுப்பார்த்தேன் 
குருட்டு தேதி என வந்தது 

இக்கவிதைக்கு குருட்டு தேதி எனப் பெயரிடுகிறேன் 

குருட்டு தேதி 


ஒரு அநாதியான நாளில் 
முற்றிலும் புதியவனைத் தேர்ந்தெடுத்தேன்.

நேற்றோ. நாளையோ இல்லாத 
இன்றானவன்.

அறிதல் இல்லாத அவன் தொடுதலில் 
கேள்விகளும் இல்லை 

பெயர், ஊர், வயது, முகவரி, படிப்பு, வேலை, சாதி,தந்தை பெயர் 
பரிமாறிக்கொண்ட முத்தங்களில் 
தகவல்கள் பொதிந்திருக்கவில்லை 

கொள்தலின் கைவிடுதலின் 
பதற்றங்கள் இல்லாத கலவி 
அவனை வெறும்  ஆணாக்கி 
என்னை வெறும்  பெண்ணாக்கி 
இருவரையும் நனைக்கும் 
மழையாய் பொழிந்தது 
இறுதி மேகத்தை கலைக்க 
வார்த்தைகள் அங்கிருக்கவில்லை 

________________________________________________________________

லீனா மணிமேகலை 

Tuesday, December 17, 2013

11.12.13 ஒரு கருப்பு நாள் - தமிழ் இந்துவில் வந்த எனது கட்டுரை

இணைப்பு  
http://tamil.thehindu.com/opinion/columns/111213-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/article5458638.ece



சுரேஷ் குமார் கௌஷல்-எதிர்-நாஸ் பவுண்டேஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, காலனிய காலத்து இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-க்கு மீண்டும் உயிர்கொடுத்து டிசம்பர் பதினொன்றை ஒரு கருப்பு நாளாக மாற்றியிருக்கிறது. பாலின சிறுபான்மையினரைக் குற்றவாளிகளாகக் கருதும் இந்தச் சட்டம் சமத்துவத்தை எல்லாவற்றுக்கும் முன்நிபந்தனையாக வைக்கும் இந்திய அரசியலமைப்புக் கோட்பாட்டையே நகைப்புக்குரியதாக்குகிறது.

ஒருபால் உறவை இயற்கைக்கு விரோதமானது என்று ஜனநாயக சோஷலிசக் குடியரசான இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் எந்த அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறது? சாதி, மதம், கலாச்சாரம் என்பவற்றைக் கருதுகோள்களாக வைத்து ஒரு நாட்டின் நீதிமன்றம் குடிமக்களின் காமத்தை, அவர்கள் எப்படி உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வரையறுப்பதும் அதன் அடிப்படையில் சட்டங்களை நிறைவேற்றுவதும் தண்டனைகளை பரிந்துரைப்பதுமான செயல், சிவில் உரிமைகள் என்ற கருத்தாக்கத்தைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதையில் ஏற்றி கற்காலத் தெருக்களில் வலம்வர அனுப்பியிருக்கிறது.

இந்திய தண்டனை சட்டப் பிரிவு (இ.த.ச.) 377 ஆண்/ பெண் இடையிலான வழக்கமான உடலுறவு தவிர மற்ற எல்லாவகை உடலுறவுகளையும் குற்றமெனப் பார்ப்பதால், எச்.ஐ.வி./ எய்ட்ஸ் குறித்த மருத்துவத் தகவல் சேகரிப்பு மற்றும் சேவைகளில் சிக்கல் ஏற்படுகிறது என்பதே நாஸ் அறக்கட்டளை இ.த.ச. 377 நீக்கத்துக்கான வழக்கைப் பதிவு செய்ததன் காரணங்களில் மிக முக்கியமானது. ஆண்-பெண்-காமம்-உடலுறவு விஷயங்களை அறிவியல்பூர்வமாக அணுகாமல், இயற்கை-செயற்கை , பாவம்- புண்ணியம் என்ற மதவாத ஒழுங்கியல் பார்வையில் அணுகுவதும், மாற்றுப் பாலியல் தேர்வாளர்களை சமூக விரோதிகளாக்குவதும் மனிதநேயத்துக்கும் மேன்மைக்கும் பாதுகாப்புக்கும் எந்த வகையிலும் உதவாது.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜவடேகரிடம், இ.த.ச. 377 நீக்கம் குறித்து கருத்து கேட்டதற்கு “சிவ சிவா” என்று கன்னத்தில் போட்டிருக்கிறார். இன்னும் பல தலைவர்கள் இதுகுறித்தெல்லாம் எங்களிடம் கருத்து இல்லை என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்கள். நமது குடியரசு என்பது இப்படிப்பட்ட ஆட்சியாளர்களால் நிரம்பியதுதான். இந்த லட்சணத்தில் சட்டப்பிரிவு 377-ஐ நீக்குவதும் மாற்றுவதுமான முடிவை நாடாளுமன்றத்திடம் தள்ளியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. அது வந்த 24 மணி நேரத்தில், மார்க்சிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களும் 377 நீக்கத்துக்கு ஆதரவாகப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது, என்றாலும் தேர்தலை நோக்கி மையம் கொண்டிருக்கும் நாடாளுமன்றம் ஓட்டுவங்கி அரசியலுக்கு உதவாத பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைக் குறித்து என்னவிதமான அக்கறை செலுத்தும் என்பதற்குப் பாரிய மேற்கோள்கள் தேவையில்லை.
“பண்பாட்டை அடியோடு சிதைத்து, கலாச்சாரத்தை வேரோடு பிடுங்கி எறிய இன்றைய காங்கிரஸ் மத்திய அரசும் முற்போக்குப் போர்வையில் இருக்கின்ற வக்கரித்த புத்தி உடையவர்களும் ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும் மனதுக்கு வேதனையையும் தருகிறது” என்ற சனாதன ஓட்டுவங்கி குரல் கொடுத்திருக்கும் வைகோ அதில் உள்ளூர் உதாரணம். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தேர்தல் ஸ்டன்ட்டாக கையாண்டுவரும் கட்சிகள் பெருத்திருக்கும் இந்த நாட்டின் அரசவைகளிடம் நீதியை எப்படி எதிர்பார்ப்பது?

பாலின சிறுபான்மையினரை ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் பெற்றோர்களையும் குடும்பங்களையும் நண்பர்களையும் மிக மோசமாகக் காயப்படுத்தியிருப்பதோடு, அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. தமது மாற்றுத் தேர்வுகளுக்காக அன்றாட வாழ்க்கையில் அவமானத்தையும் புறக்கணிப்பையும் தனிமைப்படுத்தலையும் சந்திக்கும் ஒருபால் ஈர்ப்பாளர்கள் இனி, சட்டமே அனுமதிக்கும் தாக்குதல்களையும் துன்புறுத்தல்களையும் அனுபவிக்கும் கொடுமை நிகழக்கூடும். கொலை செய்தவர்களும் கொள்ளை அடித்தவர்களும் சாதி வெறியர்களும் மதவாதிகளும் பாலியல் வன்புணர்வாளர்களும் வீதிகளில் சுதந்திரமாக உலா வர, அன்புக்குக் கட்டுண்ட ஒருபால் ஈர்ப்பாளர்கள் தலைமறைவாக வாழும் அபத்தங்கள் நடந்தேறும். ஒருபால் உறவாளர்களுக்கு எதிராக நீதித்துறை தூண்டிவிடும் வன்முறை இ.த.ச. 377 என்றால் அது மிகையாகாது.

திருமணத்துக்கு முன்பு கொள்ளும் பாலுறவை 'திருமணம்' எனவும் திருமண உறவுக்குட்பட்ட வன்புணர்ச்சியை 'காமம்' எனவும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முறையிடும் பெண்கள் நம்பகத்தன்மையற்றவர்கள் எனவும் தீர்ப்புகள் வழங்கிய வரலாறு கொண்ட இங்கே, ஒருபால் உறவைக் குற்றமெனப் பார்ப்பது அதிர்ச்சியாக இல்லையென்றாலும், இப்படிப்பட்ட ‘நீதிமான்’களை எதிர்த்துப் போராடுவதும், நீதிமன்றங்களை அவமதித்தால் குற்றம் என்றால் சிறைச்சாலைக்குச் செல்வதும்தான், ஒரு போலி ஜனநாயகத்தின் குடிமக்களான நமக்கிருக்கும் மார்க்கங்கள்.
ஆண்-ஆண், பெண்-பெண் ஒருபால் உறவில் வெட்கப்பட வேண்டியது ஏதுமில்லை. அது ஒரு வகை பாலியல் செயல்பாடும், அன்பின் வெளிப்பாடுமே. அதைக் குற்றமாக்குவது மனிதத்துக்கு எதிரானது. மனிதம் எல்லா நிறுவனங்களுக்கும் மேலானது, ஆதியானது. மனிதத்துக்கு ஆதாரமான அன்பை, காதலை, காமத்தை, அரசன் அன்றோ, அல்லது நீதி நின்றோ கொல்ல நினைத்தால், அரசக் கொடி கிழியும். அரசின் வன்முறை நீதியென்றால், மக்களின் நீதி எதிர்ப்பே!

லீனா மணிமேகலை