Friday, September 27, 2013

மக்களுக்கு எஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே - குங்குமம் நேர்காணல்


நன்றி நா.கதிர்வேலன் 

30.09.2013







இப்பொழுது தமிழ் ஈழம் எப்படியிருக்கிறது?

குண்டுகள் வீசப்படவில்லை. ஷெல்லடி இல்லை. கிபிர் பறப்பதில்லை. சாவுகள் இல்லை. ஆனால் மக்கள் இன்னும் பீதியிலேயே வாழ்கிறார்கள். ஒவ்வொரு அரைமைல்  தூரத்திற்கும் ராணுவ சென்ற்றி பாயிண்டுகளை நிர்மாணித்து மக்களை சதா இலங்கை அரசாங்கம் கண்காணித்து வருகிறது. எதிர்ப்பு என்ற உணர்வே மக்களின் மனதிலிருந்தும், உடலிலிருந்தும் கிளம்பிவிடாமல் ஒருவித கிலியையும்  மிக கவனமாக தக்க வைத்திருக்கிறது . தன்  பிரச்சன்னத்தை புத்த வழிபாடே இல்லாத வடக்கெங்கும் அகல நீளமுமாக  விகாரங்களாக கட்டியெழுப்பி வெற்றிக்கொடிகளாக பறக்க விட்டிருக்கிறார் ராஜபக்சே. புலிகளின் நினைவுச் சின்னங்களையெல்லாம் ராணுவ வீரர்களின் நினைவுச் சின்னங்களாக மாற்றி அங்கு இரண்டு ராணுவ வீரர்களையும் பாதுகாப்புக்கு நிறுத்தி வைத்திருக்கிறது அரசாங்கம். மன்னாரிலிருந்து, வவுனியா, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, மாத்தளன், வட்டுவாகல், பொக்கணை, முள்ளிவாய்க்கால், முல்லைத்தீவு வரை, பொதுமக்களை விட ராணுவத்தின் நடமாட்டமே அதிகமிருக்கின்றது. வழி நெடுகிலும் இருக்கும் செக்போஸ்டுகள் ஐக்கிய இலங்கை என்னும் மாயையை ஒருபோதும் யதார்த்தமாக்கப போவதில்லை  என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றன, 

விடுதலைப் புலிகள்  கோலோச்ச்சிய ஏ 9 ஹைவே இன்று சைனா காசால் பளபளவென மின்னுகிறது. இந்தியா  ஏ 9 இணைக்கோட்டில்   கொழுப்பு- யாழ்ப்பாண  இரயில்வே தடத்தை நேரடியாகவே களத்தில் இறங்கி நிர்மாணித்து வருகிறது. மொட்டைப் பனைகளும், பச்சை பொய்த்த பெருவெளி நிலங்களும், ஆங்காங்கு கண்ணிவெடி கவனம் என்ற அறிவிப்பு பலகைகள் தொங்கும் பாதுகாப்பு வளையங்களும், மிலிட்டரி நடத்தும் ரோட்டோர காண்டீன்களும், , "வடக்கில் வசந்தம், கிழக்கில் உதயம்" என்ற அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய ராஜபக்சேயின் உருவம் பொதிந்த ஆளுயர விளம்பரத் தட்டிகளும், "ஆஸ்திரேலியாவுக்கு படகில் சென்று சாகாதீர்கள்" அபாய எச்சரிக்கை விளம்பரங்களும், வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான வழிப்பயண காட்சிகள். ஓமந்தை செக்போஸ்ட் மெக்சிகோ - அமெரிக்கா எல்லையை நினைவுபடுத்துகிறது. 

விஸ்வமடு - புதுக்குடியிருப்பு - பொக்கணை ஆகிய இடங்களில் பிரபாகரன் வாழ்ந்த பங்கர்களை, கடற்படை - சூசை புழங்கிய இடங்களை, இயக்கத்திடமிருந்து கைப்பற்றிய ஆயுதங்களை - வாகனங்களை - கப்பல்களை - பீரங்கிகளை - சிறைக்கூண்டுகளை , 
"பயங்கரவாதிகள் இருந்த இடங்கள்- பயன்படுத்திய விடயங்கள் " என்று சிங்களத்தில்/ தமிழில்/ஆங்கிலத்தில் விபரப்பலகைகள் நிறுத்தி மியூசியம் வைத்திருக்கிறார்கள். அவற்றைப்  பார்க்க டூரிஸ்டுகள் வந்துப்போய்க்கொண்டிருக்கிறார்கள். 

போரின் வலியை எவ்வளவு தூரம் உணர்ந்து, மறந்து வாழ்கிறார்கள் ?

கவிஞர் நிலாந்தன் எழுதியது போல, 

'மாமிசத்தாலானதும்/சுவாசிப்பதுமாகிய/அனைத்தையும் சுட்டெரித்த பின்/மாமிசத்தாலாகாததும்/துருப்பிடிக்கக் கூடியதுமாகிய இரும்பையெல்லாம்/சேகரித்து
உப்புக்களியில் குவித்து வைத்திருக்கிறார்கள்/ மக்களுக்கு எஞ்சியிருப்பது இரும்பும் சாம்பலுமே/

இழவு விழாத குடும்பம் இல்லை. மிஞ்சியிருக்கும் மக்களின் உடல்களில் இன்னும் ஷெல் துண்டுகள், அங்கவீனங்கள், படுகாயங்கள்.  வேலையில்லை,  தொழில் இல்லை, அடிப்படை விசயங்களுக்கு கூட பொருளாதாரம் இல்லை, பிள்ளைகளின் படிப்பை தொடர வசதியில்லை, கடுமையான விலைவாசி, கால்நடையெல்லாம் அழிந்துப்போய் பாலுக்கும் முட்டைக்கும் கூட தட்டுப்பாடு, பொத்தல் வீடுகளில் அரசாங்கம் தந்திருக்கும் தகர ஷீட் களை வைத்து கூரைவேய்ந்து மக்கள் வாழ்கிறார்கள். இந்தியா ஒரு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டித்தருவதாக அறிவித்து ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் தெரிகிறது. மிலிட்டரிக்கு அடுத்து என்.ஜி.ஓ  போர்டுகள் தான் அதிகம் தெரிகின்றன. கைவிடப்பட்ட வீடுகளில், கட்டடங்களில் எல்லாம் வரவிருக்கும் மாகாணத் தேர்தலுக்கான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. போரின் அவலங்களைச் சொல்லி கட்சிகள் வாக்குகள் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள்


புலம்பெயர் வாழ்க்கை அநேகமாக முடிந்துவிட்டது. வரப்போக முடியும் சூழ்நிலையை அவர்கள் எப்படி கருதுகிறார்கள்?

சாலைகளில் செவ்விளநிகளை அருந்திக்கொண்டு, தீவின் வெக்கைக்கு பொருந்தாத உடைகளோடு ஐரோப்பா, கனடா, அமெரிக்காவிலிருந்து வந்து போகும் புலம்பெயர் ஈழத்து மக்களை நிறைய காண முடிகிறது. அவரவர் காணிகளைப பாதுகாத்து வரையறுத்து வேலி போட்டு வைத்துவிட்டு செல்பவர்களாகத்தான் பெருபாலானவர்கள் இருக்கிறார்கள். வரப்போக கிடைத்திருக்கும் சூழலை, இலங்கை ரூபாயைக் காட்டிலும் பல மடங்கு மதிப்பு மேலிருக்கும் தங்கள் டாலர்- ஈரோ கரன்ஸி கையிருப்பை யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்காக பயன்படுத்தும் முடிவை அவர்கள் எடுத்தால் இரும்பை சுரண்டி விற்று வாழ்ந்துக்கொண்டிருக்கும் வன்னிப் பகுதி மக்கள்  மீள்வதற்கு உதவியாக இருக்கும். 

குறிப்பாக பள்ளிகூடங்கள். குண்டு வீச்சுகளால் பொத்தலாயிருக்கும் சுவர்களைப் பார்க்க நேர்கையில் இதயம் விண்டு போகிறது. கட்டிடங்கள மறு நிர்மாணம் செய்யப்பட வேண்டும். தமிழ்ப் பிள்ளைகள் பள்ளிப்படிப்பு முடித்து கேம்பஸ் அதாவது பல்கலைக்கழகம் போவது அரிதாகிவருகின்றது. இந்நிலை நீடித்தால், வரும் சந்ததியினர்களின் எதிர்காலம் கடும் பாதிப்புக்குள்ளாகும். குழந்தைகளின் மனநலம் கடுமையான சிக்கலுக்குள்ளாகியிருக்கிறது. தொடந்த இடப்பெயர்வுகள், கண்ணுக்கு முன் நடந்த கோர மரணங்கள்  என அவர்களின் கண்களில் இருள்  அப்பிக்கிடக்கின்றது. 


புலம்பெயர் மக்கள் என்றில்லாமல், நாமெல்லோருக்கும் சேர்த்தே சொல்கிறேன்.விடுமுறைக்கு வந்துவிட்டு ஐரோப்பா, அமெரிக்கா. இந்தியா திரும்பியவுடன்,  ஐந்தாம் கட்ட  ஈழப்போர் என்றெல்லாம் கூச்சல் போட்டுக்கொண்டிருக்காமல் ஆக்கப்பூர்வமாக எதாவது செய்யும் வழிகளைப் பார்க்கவேண்டும். 


காணாமல் போன பிள்ளைகள், திரும்பி வர முடியாத கணவர்கள், போரில் ஊனமுற்ற மக்கள், இவர்கள் எவ்வாறு சுமத்தப்பட்ட அமைதியை எதிர்கொள்கிறார்கள் ?

போரே நடக்கவில்லை என்று கூட கூடிய விரைவில் இலங்கை அரசு சொல்லக்கூடும். அந்த வேகத்தில் அடையாளங்கள் அழிக்கப்படுகின்றன. எல்லாவற்றையும் பூசி மெழுகி வெள்ளை அடிக்கப்படுகின்றன. கோகோ கோலாவும், ஏர் டெல்லும், சாட்டிலைட் டிவி டவர்களும், கார்பட் ரோடுகளும் துரிதகதியில் "அபிவிருத்தி" சாயத்தை பூசிக்கொண்டிருக்கின்றன.

ஆனால் வலிந்து சுமத்தப்பட்ட அமைதி, நிறுத்திவிடமுடியாத, மௌனமான, நெஞ்சைப் பிளக்கும் ஒப்பாரியாக இலங்கைத் தீவை கிழித்துக்கொண்டு தான் இருக்கிறது, நடக்கும் சாலைகளிலும், ஓடும் நதிகளிலும் குவிந்திருந்த பிணங்களை சனங்களின் நினைவுகளிலிருந்து அப்புறப்படுத்த முடியவில்லை. மொத்த வடக்கும் ஒரு மூடப்படாத பங்கர் போல பிளந்துக் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் ஷெல் துண்டுகளை உடலில் சுமந்துக்கொண்டிருக்கும் மக்கள் காண்பிக்கும் லேசர் ஸ்கான் பிரதிகளைவிட, சரண் அடைந்த  கடத்தப்பட்ட மகன்களை, மகள்களை  உயிருடன் திருப்பித் தர தாய்மார்கள் கதறும்  கதற்லைவிட, மனம்- உடல்  பாதிக்கப்பட்டு வருத்தக்காரர்களாக நிற்கும் ஆயிரக்கணக்கான சனக்கூட்டத்தைவிட வேறென்ன  போர்குற்றச்சாட்சியங்களை கேட்கிறது இந்த கருணையற்ற உலகம்? 


வெளியெ சொல்ல முடியாத  போதிலும் பிரபாகரனின் பெயர்  இன்னும் எவ்வளவு தூரம் மறக்க முடியாமல் இருக்கிறது?

பிரபாகரனின் சிறு உருவப்படம் கூட இல்லாத, முன்னாள் போராளிகள் தங்கள் அடையாளங்களாக ஒரு நிழற்படம், பேப்பர் கட்டிங் கூட வைத்திருக்க இயலாத சூழல் தான் நிலவுகிறது. சண்டையில் இறந்த முன்னாள் புலிகள் "துயிலும் இல்லங்களை" புல்டோசர் வைத்து சமன்படுத்தி, அதன் மேல் ராணுவ தளங்கள் அமைத்திருக்கிறது அரசாங்கம். பிணங்களைக்  கூட அவமதித்து  அதன் மூலம் தமிழ்ச்சமூகத்தை தொடர்ந்து அவமானப்படுத்த, காயப்படுத்த முனையும் சிங்களப் பெருந்தேசியம் இருக்கும் வரை தமிழ்த் தேசியம் கொளுந்துவிட்டு எரியத் தான் செய்யும். அதன் எரிபொருளாக பிரபாகரன் இருக்கத்தான் செய்வார். தனிதேசத்தின் தேவைகளை பூகோள ரீதியாக இல்லாமல் ஆக்குவதற்கு எல்லா வேலைகளும் நடந்தேறுகின்றன. வடகிழக்கு மாகாணங்களில் கிழக்கு மொத்தமாகப் பிரிந்துவிட்டது.கிழக்கில் சிங்கள கலப்பும் நடந்து பல் இனங்கள் வாழும் பகுதியாக மாறிவிட்டது. வடக்கிலும்  சிங்களக் குடியேற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த எதேச்சதிகாரத்திற்கு மத்தியில் பகைமறப்புக்கு வழியில்லை என்று தான் தோன்றுகிறது. பகைமறப்பு சாத்தியமில்லையெனில் ஐக்கிய இலங்கையும் கேள்விக்குறியே. 

தோல்விக்குப்பிறகான, போருக்குப்பிறகான காலகட்டத்தில் சலுகை அரசியல் பேசாமல் உரிமை அரசியல் பேசக்கூடிய குறைந்தபட்ச சனநாயகத்தை தக்கவைத்துக்கொள்ள ஈழத்தமிழ் சமூகம் திண்டாடிக்கொண்டிருக்கிறது. கூடவே , சகோதரக்கொலைகள், துரோகி/ உளவாளி அரசியல் கலாசாரம் இவற்றால் பிளவுண்டிருந்த தமிழ் தேசிய இயக்கங்கள் எல்லாம் இணைந்து ஓரணியில்  தேர்தலில் களம் காணும் நிலையை வரலாற்றில் முதன்முதலாக எதிர்கொள்கிறது. ஆனால்  "பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்" என்று பொய்க்கதைகள் பேசிக்கொண்டு ஈழப்பிரச்சினையை தங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக பயன்படுத்திக்கொண்டிருக்கும் தமிழக அரசியல்வாதிகளையும், ஒபாமாவையும், ஏகாதிபத்தியங்களையும்  தங்களைக் காப்பாற்றச் சொல்லிக் கேட்கும் புலம்பெயர் தமிழர்களின் அரசியல்கோதாக்களையும் ஒரு பொருட்டாக கூட,வன்னி சனம் மதிப்பதில்லை. 

புலிகளின் இவ்வளவு போராட்டமும், பட்ட பாடும், வீணாகிவிட்டது பற்றி அங்கே நிலவும் கருத்து என்ன ?

புலிகளின் போராட்டக்குணத்தையும் , தியாகத்தையும்  கட்டுக்கோப்பான ராணுவ அமைப்பையும் , நிர்வாகத்தையும், தங்களுக்கு அவர்களுக்கு கீழ் இருந்த பாதுகாப்பையும் நினைவு கூறும் மக்கள், கட்டாய ஆள் சேர்ப்பையும், சகோதரக்கொலைகளையும், மாற்றுக் கருத்துக்களை  ஏற்றுக்கொள்ளா எதேச்சதிகாரத்தையும், வரலாறு தந்த பல சந்தர்ப்பங்களையும் ஏற்றுக்கொள்ளாமல்  ராணுவமார்க்கத்தை மட்டுமே நம்பி மோசம்  போனதையும் விமர்சிக்காமல் இல்லை. இன்று இயக்கத்தில் இரண்டாம் கட்ட தலைமையில் இருந்தவர்கள் எல்லாம் அரசாங்கத்தோடு நிற்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், "படுதோல்வி" இன்னும் எதையெல்லாம் அனுபவிக்கச் சொல்லுமென  மனம் குமைந்துக்கிடக்கிறார்கள் மக்கள் 


முள்ளிவாய்க்காலின் கடைசி நேர அவலங்களின் சாட்சியங்களை கண்டு உணர்ந்தீர்களா?

முள்ளிவாய்க்காலின் இறுதிநேர அவலங்கள் வாய் மொழி சாட்சியங்களாகவே இன்று இருக்கின்றன. வட்டுவாகல் பாலத்தில் நின்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு நாள் முழுதும்  கடந்துப்போன மக்களை, நந்திக்கடலில் நடந்தது என்ன என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் கண்ணீரும் விம்மலுமாக பகிர்ந்துக்கொண்ட ஒவ்வொரு சொல்லிலிருந்தும்  பிணங்கள் உருண்டு விழுந்தன. எல்லாப்பக்கத்தாலும் கைவிடப்பட்ட அனாதைத்தனம் அவர்களை ஆட்கொண்டிருக்கிறது. ஒரு கவிதையிலோ, புகைப்படத்திலோ, வீடியோவிலோ, பதிந்துவிட முடியாத பயங்கரமது. குண்டு பொழிந்ததில் பொத்தலாய் கிடக்கும்  சில கட்டிடங்களும் மரங்களும் துருவேறிய வாகனங்களும் தவிர மற்ற சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. கவிஞர்  விஜயலட்சுமி எழுதியது போல, வீடுகளில் சாமி படங்களை விட இறந்தவர்களின் படங்கள்  பெருகி கிடக்கின்றன. 

நவிப்பிள்ளை வந்துப்போன பிறகு கிடைத்த பலன் என்ன?

இன்று கடவுளுக்கு அடுத்ததாக ஈழ மக்கள் நம்பும் ஒரு பெயர் நவிப்பிள்ளை. இலங்கைக்கு விஜயம் செய்த அவரை விரட்டி விரட்டி மக்கள் தங்களைக் காப்பாற்ற சொல்லி கதறியதும், நவிப்பிள்ளை ஜெனிவா சென்றதும், அம்மக்களை விரட்டி விரட்டி இலங்கை சி.ஐ.டியும் ராணுவமும், போலீசும் அச்சுறுத்தியதும் நடந்தேறியது. 

நீதி செத்த நாட்டில் நம்பிக்கை இழந்த மக்கள், ஐ.நா இப்போதாவது தலையிட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.பிறப்பால் அவர் ஒரு தமிழர் என்பதால் அவர் மீதான தமிழர்களின் எதிர்பார்ப்புக்கள் பெருகி ததும்புகின்றன. அவரும் ஈழ மக்களின் குறைகளை கேட்டுச் சென்றிருக்கிறார்.  

ஆனால்  நாமெல்லோரும் புரிந்துக்கொள்ள வேண்டிய யதார்த்தம், மனித உரிமை ஆணையாளராக அவர் சிலவற்றை வழிமொழிவார் . அழுத்தமும் தருவார். ஆனால் ஐ.நா.வின் பாதுகாப்பு சபையின் நடவடிக்கைகளில் நேரடியான வகிபாகம் செய்யும் அதிகாரம் ஆணையத்திற்கும்  இல்லை, அவருக்கும் இல்லை.  


பெரும் திகில் அத்தியாயமாக இருக்கும் காணாமல் போனவர்களின் கதி என்ன? அவர்கள் திரும்ப கிடைக்கும் உத்தரவாதம் உண்டா? 

அவர்கள் காணாமல் போகவில்லை. காணாமல் அடிக்கப்பட்டவர்கள். போரில் இறந்தவர்களுக்கு அவர்களின் குடும்பம் அஞ்சலி செய்யலாம். அதிலாவது மனசாந்திக்கு வழியுண்டு. ஆனால் கண்முன்னே விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களும், ராணுவத்திடம் சரணடைந்தவர்களும் வருடக்கணக்காக வீடு திரும்பவில்லை என்றால், அந்தக்கொடுமையை மக்கள் எப்படி எதிர்கொள்வது. கணவனின் சாரத்தைக் கட்டிக்கொண்டு அழுதுக்கொண்டிருக்கும் அரை விதவைகளுக்கும் , தங்கள் தந்தையோ, தாயோ திரும்பி விடுவார்கள் என்று தினம் வாசற்படி  பார்த்துக்கொண்டும், ஒவ்வொரு கேம்பாக கடிதம் எழுதிக்கொண்டுமிருக்கும் குழநதைகளுக்கும், பிள்ளைகளின் புகைப்படங்களைப் பிடித்துக்கொண்டு சிறைச்சாலைகளுக்கும், நீதிமன்றங்களுக்கும் வருடக்கணக்காக அலைந்துக்கொண்டிருக்கும் தாய்மார்களுக்கும் யார் நீதி பெற்றுத் தருவது? 

இதை எழுதும் பத்திரிக்கையாளர்களும் காணாமல் அடிக்கப்பட்டும்,  பாதிக்கப்பட்டவரகள் பக்கம் நிற்கும் நீதிபதிகள் சொல்லாமல் கொள்ளாமல் மாற்றப்பட்டும் தொடரும் சூழலில் கொலைகார அரசாங்கத்தைப் பற்றிய மேல் முறையீடுகளை யாரிடம் வைப்பார்கள் மக்கள்? 

இந்தக்கேள்விகள் என்னைப் பேய் போல விரட்ட கடுமையான நெருக்கடிகளுக்கும்,  உயிராபத்திற்குமிடையே யாழ்ப்பாணம், கொழும்பு, கிளிநொச்சி, வவுனியா,  இரணபாலை, முல்லைத்தீவு, மன்னார், புத்தளம், திரிகோணமலை, கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகிய இடங்களுக்குப் பயணம் செய்து கிட்டத்தட்ட 60 மணி நேரம் படமாக்கித் திரும்பியிருக்கிறேன். அடுத்த ஜெனிவா கூட்டத்தொடர் தொடங்குவதற்குள் ஒரு முழு நீள ஆவணப்படத்தை எடிட் செய்து, படத்தில் சாட்சியம் சொல்லியிருக்கும் கதாபாத்திரங்களையும் அழைத்துசென்று ஜெனிவாவில் திரையிடும் முயற்சியிலிருக்கிறேன். படத்தில் பங்கு கொண்டவர்கள் தங்கள் உறவுகளின் விதியை  தெரிந்துக்கொள்வதற்காகவும், தங்கள் போல எண்ணற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்  என்ற உறுதிப்பாட்டுக்காகவும்,  ராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் அஞ்சாது களத்தில் நிற்பவர்கள். அவர்களுக்கும், இலங்கையின் கடுமையான சூழலுக்குள்ளும் மக்களோடு நின்று போராடும் என்னருமை சிவில் இயக்க நண்பர்களுக்கும்  இந்த படத்தை அர்ப்பணித்திருக்கிறேன். 

சிங்கள பொதுமக்களின் மனநிலை எப்படி யிருக்கிறது?
பாசிச இலங்கை அரசாங்கம் வரலாறு நெடுகிலும் சிங்கள மக்களையும் ஒடுக்கியே வருகிறது.  ஆயுத இயக்கமாக உருவெடுத்த ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களை எழுபதுகளின் ஆரம்பத்திலும், எண்பதுகளின் இறுதியிலும் தன்  கொடுங்கரங்களால் நசுக்கியது. கிட்டத்தட்ட  ஒன்றரை லட்சம் சிங்களர்களை காணாமல் அடித்து, எரித்து, வேட்டையாடி குவியல் குவியலாக புதைத்து கொன்றது. மொத்தம்  மொத்தமாக எலும்புகூடுகள்  தோண்டி எடுக்கப் பட்டுக்கொண்டிருக்கின்றன. அதில் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் இருக்கிறார்களா எனப் பார்த்து தரச்சொல்லி நீதினறங்களுக்கு அலைந்துக்கொண்டிருக்கிறது ஆயிரக்கணக்கான சிங்களக் குடும்பங்கள். கடந்த ஆண்டு தோண்டி எடுக்கப்பட்ட மாத்தளை மாஸ் கல்லறையில் ஒன்றாக புதைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் எலும்புக்கூண்டுகள் கண்டெடுக்கப்பட்டிடுக்கின்றன. வில்பிடா, சூர்யகண்டா, யாக்கலமுல்லா, பெமுல்லா என்று தெற்கில் இப்படியான மாஸ் கல்லறைகளுக்கு தனி வரைபடமே இருக்கிறது.

இருபக்கமும் இனவாத அரசியல் மக்களை துருவங்களாக நிறுத்தி ஆதாயம்  பார்க்கின்றது. ராணுவ இலக்குகளாக மாற்றிக் அநியாயத்திற்கு கொல்கிறது. இலங்கைத்தீவின் சாபமது!


முள்ளிவாய்க்கால் என்பதை புலிகளின் முடிவாக மக்கள் நினைக்கிறார்களா? 

முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல, "விளைவு" என மக்கள் நினைக்கிறார்கள். காரணங்கள் இல்லாமல் தோல்விகள் நடப்பதில்லை. சுய விமர்சனங்களோடு தோல்விகளை அணுகி பாடங்களை  படிக்கச் சொல்லி வலியுறுத்துகிறது வரலாறு. திரும்ப ஆயுதம் தூக்கவோ, உயிர்ப்பலிகள் தரவோ, ஈழத்து சனம் தயாராக இல்லை. நீண்ட காலமாக இழப்பையும் துயரையும் மட்டுமே அனுபவித்த மக்கள் இன்னும் பற்றுறுதியோடு  "ஒரு நாள் நீதி வெல்லும்" என்ற நம்பிக்கையை தாங்கள் உண்ணும் பாணின் மீதும் சம்பலின் மீதும் எழுதி உண்கிறார்கள்.  

லீனா மணிமேகலை