நன்றி - அந்திமழை மாத இதழ்
சென்ற வாரம் டெல்லியில், இருபத்து மூன்று வயது பெண் மாணவி மீது, ஓடும் பேருந்தில் நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைப் பெயரிட தமிழில் ஒரு சொல்லைத் தேடிக்கொண்டிருக்கிறேன். தமிழில் எழுதும் சிந்திக்கும் பெண்ணுயிரான எனக்கு இது ஒரு அவமானகரமான தருணம். என் முன்னே குவிந்திருக்கும் தினசரி செய்திகளிலும், கட்டுரைகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் “கற்பழிப்பு” என்ற வார்த்தை என் முகத்தில் அமிலத்தை எறிகிறது. கற்பழிப்பு என்பதை பகுபதப்படுத்தினால் ஒரு ஆணுக்கு அல்லது குடும்பத்திற்கு அல்லது சமூகத்திற்கு அடிமையாக இருக்கும் தகுதியை இழப்பது என்ற அர்த்தம் வருகிறதென்கிறார் தந்தை பெரியார். தமிழில் வள்ளுவம் தொடங்கி தினத்தந்தி வரை ”கற்பழிப்பு” என்ற சொல் வழக்கில் இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்த்தாலே தமிழ்ச்சமூகம் இன்னும் எப்படி ஆணாதிக்க, நிலபிரபுத்துவ சாக்கடையில் சிக்கியிருக்கிறது என்பதை புரிந்துக்கொள்ளலாம். ”வன்புணர்ச்சி”, ”வல்லுறவு”, ”வல்லாங்கு” என்ற தமிழ்ப்பதங்களும் பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்சக் கொடுமையை அர்த்தப்படுத்தத் திணறுகின்றன. ”பாலியல் சித்ரவதை” என்ற சொல் மொழியை சற்று தன் அதிகாரத்திலிருந்து கீழிறங்கி பெண்ணுக்கு சற்று அருகே நிற்க வைக்கின்றது.
இன்னும் உயிருக்குப்போராடிக் கொண்டிருக்கும் பலாத்காரத்தால் சிதைக்கப்பட்ட அந்த மாணவிக்காக டில்லியை ஸ்தம்பிக்க வைத்த ஆயிரக்கணக்கான மாணவர்களோடும் மாணவிகளோடும் நானும் கை கோர்க்கிறேன். பாலியல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களையும், எம்.பிக்களையும் கொண்ட அரசாங்கமும் அதன் போலீஸ் குண்டர்களும் ஏவும் கண்ணீர் மற்றும் புகை குண்டுகளையும், லத்தி அடிகளையும் மீறி சமூக நீதி கேட்டு இந்த மாணவர்களோடு அணி சேர்கிறேன். ஆனால் கூடவே சாதியின் பெயரால் தலித் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக, குடும்ப உறவுகளில் -திருமணங்களில் நடக்கும் வல்லுறவுகளுக்கு எதிராக, மதவெறிக் கும்பல் ஒவ்வொரு கலவரத்திலும் பெண்களைக் குறிவைக்கும் ஈனத்தனத்திற்கெதிராக, ஆதிவாசிப் பெண்களை மானபங்கப்படுத்தும் “வளர்ச்சி”த் திட்டங்களுக்கெதிராக, தேசப்பாதுகாப்பு என்ற போர்வையில் ஈழத்திலும், காஷ்மீரத்திலும், வட கிழக்கிலும், நடந்துக்கொண்டிருக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கெதிராக, சீருடை காமுகர்களுக்கெதிராக அணிசேரவும் இதே மாணவர்களை வலியுறுத்துவேன். அரசாங்கத்தை கிஞ்சித்தும் அசைத்துவிட முடியாத 9 டூ 6 உண்ணாநிலைப் போராட்டங்கள், வெறும் சடங்காக மாறிப்போன கடையடைப்புகள், அடையாள அட்டை பகிஷ்கரிப்புகள் போன்ற காலாவதி எதிர்ப்பு முறைகளைத் தவிர்த்து, அதிகாரத்தை அம்மணமாக்கும் போராட்டங்களை சிந்தித்து சாத்தியப்படுத்துமாறு கேட்டுக் கொள்வேன். இந்திய தேசம் ஏ.டி.எம் மெசின்கள் இயக்கும் வெறும் மத்தியதர வர்க்கத்தினரால் ஆனதல்ல என்று அவர்களின் மனசாட்சியை உறுத்துவேன்.
ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களும், இ மெயில்களும் ஆன்லைன் பெட்டிஷன்களால் நிறைந்திருக்கின்றன. குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையையும், ஆணுறுப்பு அறுப்பையும் வலியுறுத்தி கையெழுத்துக் கேட்கின்றன. கையெழுத்துப் போடாதவர்களை குற்றவாளிகளாக்கி விடும் வேகத்தில் குவியும் இந்தப் பெட்டிஷன்கள் சமூக உணர்வையும் சந்தைப்படுத்தி விட்ட இந்தக் காலகட்டத்தின் அவமானச் சான்றுகள். மனித சமூகம் ”அதிகாரம்” என்ற போதையைக் கண்டுபிடித்த போது தூக்கு தண்டனையையும் கூடவே கண்டுபிடிக்கிறது. குற்றவாளியைத் தூக்கிலிடும்போது ஒரு போதும் குற்றம் சாவதில்லை என்ற உண்மையை அதிகாரம் என்ற போதையைக் கலைத்தால் மட்டுமே உணரமுடியும். ”ஆணுறுப்பு அறுத்தல்” என்ற தண்டனைமுறை கோருபவர்கள் பெண்ணுறுப்பில் நுழையும் போத்தல்களையும், இரும்புக் கம்பிகளையும், துப்பாக்கிகளையும், என்ன செய்யப்போகிறார்கள். மேலும் ”பாலியல் சித்ரவதை”யை வெறும் பெண்ணுறுப்பில் நுழையும் ஆணுறுப்பு என்பதாக மட்டும் புரிந்துக்கொள்வது எத்தனை ஆபத்தானது. திருநங்கைகளையும், திருநம்பிகளையும், ஒரு பாலீர்ப்பு கொண்டவர்களையும் “திருத்துவதற்கு” பலாத்காரத்தைப் பயன்படுத்தும் குற்றங்களை எவ்வகைப்படுத்துவது? தன் உடையை, துணையை, வேலையை, கொள்கையை, நம்பிக்கைகளை, பாலினத்தை தேர்வு செய்யும் பெண்ணுக்கு ”பாடம் புகட்டுதல்”, ”அகெளரவப்படுத்துதல்”, ”தண்டித்தல்”, “துன்புறுத்துதல்” என்ற பெயரில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை பண்பாட்டு ரீதியாக அனுமதிக்கும் மோசமான மனோபாவத்தின் வெளிப்பாடாக “ஆணுறுப்பு” சுற்றி எழுப்பபடும் தண்டனை கோஷங்களைப் பார்க்கிறேன்.
நடைமுறையில் இருக்கும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனைகளைச் சரியாகவும், விரைவாகவும், அறத்துடனும் பயன்படுத்துவதற்கு காவல் துறையும், நீதி துறையும் தயாராக இருக்கிறதா என்பது தான் நம்முன் நிற்கும் தீர்க்கமான கேள்வி. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது, நான் வாசிக்க நேர்ந்த செய்தி, நாகை மாவட்டம் தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி பாலியல் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டது தொடர்பாகக் காவல்துறையினர் இந்திய குற்றவியல் சட்டத்தின் 450 (குற்ற நோக்கத்துடன் வீட்டுக்குள் அத்துதுமீறிப் புகுதல்). 376 (வன்புணர்ச்சி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருக்கின்றனர். இந்திய குற்றவியல் சட்டத்தில் குழந்தைகளைக் கையாள்வதற்கேற்ற விதிகள் இல்லை என்பதாலேயே, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான சட்டம் நவம்பர் மாதத்திலிருந்து நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இந்த சிறப்புச் சட்டத்தின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் தாங்கள் குற்றம் செய்யவில்லை என்பதை நிரூபித்தாக வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தையின் மருத்துவச் செலவு, வழக்குச் செலவு அனைத்தையும் அரசாங்கமே ஏற்க வேண்டும். அது மட்டுமல்ல. இந்த சட்டத்தின் கீழ் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தை நல அலுவலர் இருக்க வேண்டும். ஆனால் இது எதுவுமே தலைஞாயிறில் நடக்கவில்லை என்பது தான் அவலம். காவலர், வழக்கை சிறப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் வழக்கமான சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறார். சட்டம் தெரியாத காவல் அதிகாரிகளுக்கும், புகார் கொடுக்க வரும் பெண்களிடம் அத்துமீறும், பெண் சிறைக்கைதிகளைச் சூறையாடும் காவல் துறைக்கும் தான் நம் வரிப்பணம் சம்பளமாகத் தரப்படுகின்றது என்ற நிலையில் நீதிக்கான உரிமைக்குரலை எங்கு தொடங்குவது? எதில் முடிப்பது?
பாதிக்கப்பட்ட பெண்களை மேலும் அச்சுறுத்தும் குடும்ப, சமூக, அமைப்புகள், சுதந்திரத்திற்கான விலையாக மானத்தையே கேட்கின்றன. போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட குடும்ப வன்முறையில் இறந்த பெண்களின் எண்ணிக்கை அதிகமென ஒரு புள்ளிவிவரத்தை எளிதாக யாரும் கடந்துவிடமுடியாது. நாம் ஒவ்வொருவரும் ஒரு பெண்ணை இரண்டு முலைகள் - ஒரு யோனி கொண்ட பண்டமாகப் பார்ப்பதை கைவிடும்போதும், கருவுற்றிருக்கும் பெண்ணை ஸ்கேன் செண்டருக்கு அழைத்து செல்லாமல் இருக்கும்போதும், பிறக்கும் பெண்ணுக்கும், ஆணுக்கும் சரிவிகித வாய்ப்புகளையும் உரிமைகளையும் பெற்றோர் வழங்கும்போதும், வரதட்சிணை மாதிரியான இழிவுகள் முற்றிலுமாக ஒழியும்போதும், எப்பாலினராக இருந்தாலும் உழைப்புக்கேற்ற ஊதியம் சமமாக வழங்கப்படும்போதும், பாலியல் சுதந்திரம் பெண்ணுக்கான சுதந்திரமாகவும் கருதப்படும்போதும், ”மறுப்பு” சொல்லும் பெண்ணிடம் இருந்து மரியாதையாக விலகிச்செல்லும் மனப்பான்மையைப் பயிற்சி செய்யும் உறுதியை எடுக்கும்போதும், பால்-பாலின இழிவை வியாபாரமாக்கும் ஊடகங்களை கண்டித்து தனிமைப்படுத்தும் போதும், பெண்ணிற்கெதிரான அநீதிகள் ஒவ்வொன்றுக்கும் பெண்ணையே பொறுப்பாக்கும் அயோக்கியத்தனத்திலிருந்து விழித்தெழும்போதும் மட்டுமே காலகாலத்திற்கும் நடந்துவரும் பெண்ணுக்கெதிரான இந்த அதிகாரத்தின் போரை தடுத்து நிறுத்த முடியும்.
லீனா மணிமேகலை