Wednesday, June 27, 2012

தீர்ப்பு நாட்கள்


இறுதியில்
தீர்ப்புகளால் திருகியிருந்த
என் உடலின்
பாகங்களை
சரிசெய்ய
ஒரு கனவு தேவைப்பட்டிருக்கிறது

நரைத்த அந்த தாடியைக்கோதி
முத்தமிட்டுக்கொண்டிருந்த வேளையில்
ஜான் ஆப்ரகாமிடம் கேட்டேன்
உங்கள் ஒடஸ்ஸா உண்டியலை எனக்குத் தரமுடியுமா?
உடல் நொறுங்கத் தழுவிய அவர்
இழிசாவை அது தடுக்காது, வேண்டாம் என்றார்
இல்லை, நான் ஏற்கெனவே கொல்லப்பட்டவள் என்றேன்
ஒடஸ்ஸா உண்டியல்
நாணயங்களுக்குப் பதில் உயிர்களையே கேட்கிறதென்றார்.

அப்புவை அழைத்துக் கொண்டு ரேயைத் தேடிப்பிடித்தேன்.
அவர் அப்போதும், கன்னத்தில் கைவைத்து சிந்தித்தபடியிருந்தார்
வெகுநேரம் கடந்தே அவர் புருவம் சற்று நெறித்தார்
அவர் பார்வை திருப்பிய நொடியில் கேட்டேன்
ஏன் நீங்கள்
விளம்பரப்படங்களுக்கு கோட்டோவியங்கள்
வரைந்தீர்கள்
என் தலையைக் கோதிய அவர்
அவை இந்த சமூகத்தின் மேல் நான்
வைத்த விமர்சனங்கள் என்றார்

ஒரு கிராமத்தின் மாட்டுக்கொட்டகையில்
மேக தாக தாராவை திரையிட்டுக்கொண்டிருந்த
ரித்விக் கட்டக்கோடு படம் பார்த்துக் கொண்டிருந்தேன்
உங்களைப்போல படமெடுக்க தூய முதலீடு
சாத்தியமா என்றேன்
ஒவ்வொரு நாணயமும் உன்னுடையதே
ஆனால் உன்னிடம் இல்லை என்றார்
அவர் மேலெறியப்பட்ட கற்களைக் கேட்டு பெற்றேன்
அதில் பெயர்கள் அழிந்திருந்தன
அதனாலேயே படப்பெட்டிகள் கண்ணாடி கூடுகளில்
செய்யப்படுவதில்லை எனவும் சொல்லி சிரித்தார்
குலுக்கிய அவர் கைகளிலிருந்து ரேகைகளைத் திருடிக்கொண்டேன்

அதற்குள்
காப்பகத்திலிருந்து திருடிய கேமிரா
தனக்கு இனி தேவையில்லை
என்று ஹெர்சாக் திருப்பியனுப்பியிருந்த தபாலோடு
திரைப்பட மாணவனொருவன்
என்னை எழுப்பியிருந்தான்

அந்த கேமிராவை எந்த தராசில் வைத்தாலும்
எடைமுள் ஒடிந்தது


லீனா மணிமேகலை


*ஒடெஸா திரைப்பட இயக்கம், இயக்குனர் ஜான் ஆப்ரஹாமால் தொடங்கப்பட்டது. மக்களிடம் உண்டியல் குலுக்கி, அக்ரஹாரத்தில் கழுதை போன்ற திரைப்படங்களைத் தயாரித்து இயக்கினார் ஜான் ஆபரகாம். 
*இன்றைய நவீன உலக சினிமாவைக் கோலோச்சும் வெர்னர் ஹெர்சாக், படமெடுக்க நிதியில்லாமல், திரைப்படக் கல்லூரி காப்பகத்திலிருந்து 35 எம். எம் கேமிராவை திருடிக் கொண்டு போனது வரலாறு.
*ரே என்ற சத்யஜித ரே இந்தியக் கலைசினிமாவின் தந்தை
*ரித்விக கட்டக் இந்திய மாற்று சினிமாவின் ஆன்மா.