Saturday, October 22, 2011

மொழியறியாதவனுக்கான கவிதைகள்

நன்றி - தினகரன் தீபாவளி மலர், வள்ளிதாசன்


1.

உன்னோடான  முற்றுப் பெறாத உரையாடல்களால் ஆனது 
என் தெரு 
சொற்களை உடைத்தும், பெருக்கியும், 
பள்ளங்களை நிரப்பிக் கொண்டு 
நடக்கிறேன்

நிராசைகளை பேய்களுக்குத் தின்னத் தருகிறேன்.
பதிலுக்கு அவை எனக்கு கள் வடியும் பூக்களைப் பரிசளிக்கின்றன 
அதிலொன்றை உனக்கு சூட்டுகிறேன்.
அதில் என் அக்குளின் வாசம் இருப்பதாக சொல்கிறாய்

கைவிடப்பட்ட தேனடையாய் தொங்கும் பொழுதுகளை பருகுகிறோம்
நீரலை யாய் மோகம் 
தாழ்ந்த இசையைப் புனைகின்றது 
கலவியில் நீளும் நம் மெல்லிய உடல்களின் பித்தால்
திசை துலங்குகிறது 
மேலும் நடக்கிறேன்

ஒரு நெடுங்கனவு போல 
நாட்களின் நிறங்கள் கூடுகின்றன



2.

உன்னைத் தெரிந்துக் கொண்ட இரவுகள்
வௌவால்களை போல அறைகின்றன 

அவற்றுக்கு 
மீன்களைப் பிடித்து தருகிறேன்
கடல் வேண்டும் என்கின்றன 

பழங்களைப் பறித்துத் தருகிறேன்
காடு தா என்கின்றன 

குகைகளை பெயர்த்து தருகிறேன்
மூதாயை  அழைத்து வா என்கின்றன 

ராஜப் பூச்சிகளின் சிரசை தருகிறேன் 
சூனியத்தைப் பிடித்து தா என்கின்றன 

அதன் சுரப்பிகளில் பாலுண்ட என் கனவுகளுக்கு
கண்களை காவு தருகிறேன் 

அரக்கு நிற புகை கக்கி எரிகிறது தலை

லீனா மணிமேகலை