Saturday, July 9, 2011

எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை - விகடன் நேர்காணல்.


எதற்கெடுத்தாலும் இந்திய இறையாண்மை - விகடன் நேர்காணல்


இரு நாடுகளின் துப்பாக்கிகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு தினம்தினம் உயிர் பறிக்கப்படும் ராமேஸ்வரம் மீனவனின் வாழ்க்கையை அவர்களின் மொழியில் பேசுகிறது லீனா மணிமேகலையின் ‘செங்கடல்’ திரைப்படம். அதற்கு தரச் சான்றிதழ் தரமறுத்த சென்சார் போர்டுடன் போராடி டிரிப்புனலுக்கு போய் ஒரு ‘கட்’டும் இல்லாமல் வெற்றியோடு திரும்பி வந்திருக்கிறார் லீனா.

இந்தப்படம் இலங்கை இந்தியா அரசுகளை விமர்சிக்கிறது. அதனால் தணிக்கைச் சான்றிதழ் தரமுடியாது என்றார்கள். அதை எதிர்த்துத்தான் ட்ரிப்புனல் போனேன். இங்கே கவிதை எழுதினால் கட்சிக்காரர்கள் போலீசில் புகார் தருகிறார்கள், கருத்தியல் குண்டர்கள் இணையதளங்களில் அவதூறு செய்கிறார்கள். திரைப்பட விஷயத்தில் அதிகாரிகளிடம் கத்திரிக்கோல் இருந்துகொண்டு ஆட்டிப்படைக்கிறது. ஒரு கலையை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படித்தான் செய்ய முடியும். அரசாங்கத்தின் கீழேயோ, கட்சிக்காரர்களுக்கு கட்டுப்பட்டோ கலை இயங்க முடியாது. இதையே பிரகாஷ்ராஜ் ஜி.ஜியாக போட்டு, சரண்யாவை ரோஸ்மேரியாக போட்டு எடுத்து வியாபார நோக்கோடு படம் எடுக்கலாம். இப்போதெல்லாம் தேசிய விருதுகள் கூட வியாபார சினிமாக்களுக்கு தான் தருகிறார்கள்.

எனக்கு எப்படியும் மக்களிடம் உண்மையை கொண்டுபோய்ச் சேர்க்கணும். ராமேஸ்வரத்தை சுத்தி என்ன நடக்குதுன்னு எல்லோருக்கும் தெளிவாக தெரிஞ்சாகணும். இங்கே வந்து எங்கே பார்த்தாலும் புள்ளி விவரங்கள்தான் கிடைக்கிறது. அவைகள் ஒன்றுக்கும் உதவாது. தனுஷ்கோடியை எடுத்துக்கொண்டால் ஆயிரக்கணக்கான தமிழ் மீனவர்களை இலங்கை ராணுவம் கொன்றிருக்கிறது. பதிவு செய்யப்படாத எண்ணிக்கையையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஏராளமான விதவைகள், தாயை, சகோதரியை, சகோதரனை இழந்தவர்கள் சூழ நிற்கிறது அந்த ஊர். உருட்டுக்கட்டையில் தாக்கி மர்ம உறுப்புக்களை சிதைப்பதிலிருந்து இன்னும் எண்ணற்ற மனித உரிமை மீறல்கள். இப்படிப்பட்ட வாழ்க்கையை புள்ளி விவரங்களில் அடக்க முடியுமா? மீனவர்களாக இருக்கிற காரணத்தினால் மட்டுமே அவங்க ஏன் கொல்லப்படனும்? கருப்பாக இருப்பதையும், தமிழில் பேசுவதையும் தவிர அவர்கள் செய்த குற்றம்தான் என்ன? இப்போதுவரைக்கும் அவர்களுக்கு என்ன நீதிதான் கிடைத்திருக்கிறது? சினிமா வியாபாரிகள் சென்சார் அதிகாரிகள் பாராட்டுப்பெற்ற படம் என விளம்பரம் செய்கிறார்கள் - அவர்கள் என்ன கலையுலகின் பிரதிநிதிகளா!




சென்சார் போர்டின் மீது கடுமையான கோபத்தில் இருக்கிறீர்கள்?

சென்சார் போர்டு என்ற ஒன்று இருப்பதே ஒரு கலைஞனுக்கு அவமானம். ஊடக சுதந்திரத்தை பலி கொடுத்ததனால் தான் ஆயிரக்கணக்கான மக்களைப் போருக்குப் பலிகொடுத்து விட்டு , இப்போது சேனல் நான்கு தொலைக்காட்சியில் ஆவணப்படம் பார்த்து உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கிறோம்.தணிக்கையே உண்மையை மறைக்கத்தான் பயன்படுகிறது. தணிக்கையாளர்கள் மக்கள் ஆட்சியின் முதுகெலும்பில் அடிக்கிறார்கள். குஜராத்தில் நடந்த அக்கிரமங்களின் ஒரு சிறிய பங்கு கூட இன்னும் நம்முன் வைக்கப்படவில்லை. மணிப்பூரில் ராணுவத்திற்கு எதிராக தாய்மார்கள் தன் ஆடைகளைத் துறந்து போராட்டம் நடத்தினார்கள். ஐரம் சர்மிளாவின் பத்தாண்டுகளுக்கு மேலான அஹிம்சைப் போராட்டத்தை எந்த மீடியா கவனப்படுத்துகிறது? காஷ்மீரில் ராணுவத்தை மக்களே கல்லெறிந்து விரட்டுகிறார்கள். சேனல் 4 வெளியிட்ட போர்க்காட்சிகளில், இந்தியாவின் பங்கு வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றது. இந்திய இறையாண்மை இன்னும் எதை எதை பலி கேட்குமோ தெரியவில்லை.

செங்கடல் எப்படியான படமாக இருக்கும்? இவ்வளவு போராட்டத்திற்குப் பிறகு வரும் படத்தில் உள்ள செய்தி என்ன?

எனக்காக ஆனந்த்பட்வர்தன் பேசினார். வழக்கறிஞர் இந்திரா உன்னிநாயர் எனக்காக ஒரு பைசாகூட வாங்காமல் வாதாடினார். திரிச்சூர் சர்வதேச திரைப்பட விழாவில் திறப்பு விழா படமாகத் திரையிட்டு தணிக்கைக்கு எதிராக தீர்மானம் இயற்றினார்கள். தணிக்கைக்கு எதிரான மனுவில் நாடு முழுவதுமிலிருந்து கருத்துக் சுதந்திரத்தில் அக்கறையுள்ளவர்கள் கையழுத்திட்டனர் .

கலையா, தொழில்நுட்பமா, உண்மையா என்று வரும்போது நான் உண்மையைத்தான் தேர்ந்தெடுத்தேன். உண்மைக்காக தொழ்ற்நுட்பத்தை, கலையை சிறிது விட்டுக் கொடுப்பது தவறில்லை என்பது எனது கருத்து. அதனால் என்னை இனத்துரோகி என்று கூட என்னைச் சொல்லக்கூடும். எனக்கு மொழி தேச, இன அபிமானங்கள் கிடையாது. இதில் கொலைகார அரசாங்கங்களின் அசல் முகத்தைக் காட்டியிருக்கிறேன். விடுதலை இயக்கங்களும் விமர்சனத்திற்கு தப்பவில்லை. ஈழப்பிரச்சினையை மேடைகளில் பேசி பிழைப்பு நடத்துகிறவர்களையும் சாடியிருக்கிறேன். நான் முழுதாக மக்கள் பக்கம் மட்டுமே நின்றிருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாம் தெரியும். எது நல்லது, எது கெட்டது என தீர்மானித்துத் தேர்ந்தெடுக்கும் புத்தி மக்களுக்கு உண்டு. அரசாங்கம், மக்கள் எதைப் பார்க்க வேண்டும், என்ன சிந்திக்க வேண்டும் என்று தீர்மானிப்பதற்கு இங்கென்ன காலனியாதிக்கமா நடக்கிறது.

கருத்துக்களை சாமர்த்தியமாகச் சொல்லலாமே என்கிறார்கள். நான் வியாபாரம் செய்யவில்லை. செங்கடல் இந்திய இலங்கை அரசுகளையும், பதவிக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை பலிகொடுத்த வோட்டுக்கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் காட்டிக் கொடுக்கும். அடுத்த மாதம் திரைக்கு வருகிற இந்த படம் போரின் அசலான முகத்தை முன் வைக்கும்.

அடுத்து என்ன?
அடுத்து, கடவு சீட்டு என்பது படத்தின் பெயர். ஷோபா சக்திதான் திரைக்கதை. இலங்கை, பிரான்ஸ், தாய்லாந்து, இன்னும் மூன்று நாடுகளிலும் படப்பிடிப்பு நடக்கும். சர்வதேச தொழில்நுட்ப குழு உடன் உதவுகிறது. வரலாறு நம்மை தூர நின்று கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு நிற்கிறது. அதற்கு உண்மையாக பதிவு செய்ய வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.

நன்றி : நா.கதிர்வேலன்