Friday, July 1, 2011

தீராநதி கவிதைகள், ஜூலை 2011


அதற்குப் பிறகு,



1.

இந்த செம்போந்து  பறவை ஏன் என் கூண்டில் வந்து முட்டை வைத்தது
பால் சுரப்பியான எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை
அக்குளிலும், தொப்புளிலும் மாற்றி மாற்றி வைத்து அடை காத்தேன்.
குஞ்சு பொரிந்து வௌவால் பிறந்தது
அதற்குப் பிறகு 
தலைகீழாக நடக்கத் தொடங்கினேன்
இரவில் மட்டுமே கண்கள் ஒளிர்ந்தன
தின்று துப்பிய அத்திப்பழ கொட்டைகளையும், நாவற்பழ விதைகளையும்
என் காதலர்கள் பொறுக்கத் தொடங்கினார்கள் 
காடு நிறைத்தது
தவளைகளின் இசை


2.
தனிமை நிர்வாணித்திருந்த என் கையின்  பங்குனி மலரைத் 
திருடிச் சென்றது நெல்சிட்டு
அது பறந்த வயல்களில் பயிர்கள் மஞ்சள் நிறத்தில் விளைந்தன
மகரந்த சோறுண்டு பிறந்த உயிர்களுக்கு எல்லாம்  மூன்று கைகள் 
எதிர்வுகளுக்குப் பழகிய குறுக்கு கோடுகள் உறைந்துப் போயின
கணக்குகள் பொய்த்தன
துரோகிகள் என பார்த்த இடத்தில் நெல் சிட்டுகளைச் சுட
உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன
அதற்குப் பிறகு செடிகள் பூக்கவே இல்லை 


3.
நான் இடலை மரம்
என் பசிய இலைகள் காற்றசைவிற்கே பற்றிக் கொள்ளும்.

எரியும்போதெல்லாம் 
வாகையின் செந்நிறப் பூக்களெனப் பறிக்கப் போய் சுட்டுக் கொள்கிறாய் 

உன் தீப் புண்களை அறுவாடென நினைத்து கூடடையும் தேனீக்கள்

இலையுதிர் காலத்தில் தேன் பிழிந்துப் பருகத் தருவாய்
புணர்வாய்
அதற்குப் பிறகு
அகல மறுக்கும் குறியை அணிலாக மந்திரித்து 
என்னிடமே விட்டுச்செல்வாய் 

வரிகளோடி அணில் துளைகளிட்ட என் குருத்தை
இடைச்சி ஒருத்தி தினந்தோறும்
குழலூதி இசைத்துச் செல்கிறாள்
உனக்கு எப்படிச் சொல்வது
அவள் தான் என் புதிய காதலியென்று  

லீனா மணிமேகலை