Monday, January 10, 2011

எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பு “பரத்தையருள் ராணி”



ஒரு சூனியக்காரியின் தொழில் ரகசியங்கள்

முன்னுரையாடல்
(யவனிகா ஸ்ரீராம், செல்மா ப்ரியதர்ஷன், லீனா மணிமேகலை)

உங்களது பிரதியின் மேல் லீனா மணிமேகலை என்ற பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை குறித்த விவாதங்களும், அவதூறுகளும் சேர்த்தே வாசிக்கப்படுகிறது.
பிரதிக்கு வெளியே வேறெதுவும் தனியாக இல்லையா?

அப்படி வாசிக்கப்படுவது பெண் எழுதும் பிரதியை ஒரு பெண்ணாகவே பார்த்து ஏவும் வன்முறை வடிவம். பிரதியைக் குறித்த பேச்சை, பெண்ணைக் குறித்த பேச்சாக மாற்றி ஒருவித அசூயையை, அச்சத்தை ஏற்படுத்த விழையும் நோய்க்கூறு. ஆணதிகாரம் தன் குறியை நீவி விட்டுக் கொள்ளும் சுய இன்பம்.

பிரதிக்கு வெளியே பிரதியாளரைக் குறித்த பேச்சுக்களை பொருட்படுத்த தேவையில்லை. எழுத்தாளர் மேரி எல்மென் குறிப்பிட்டுள்ளதைப் போல “Phallic Criticism embarks, at its happiest, upon an intellectual measuring of busts and  hips”

அடிப்படையில் மொழி, மொழியினால் விளையும் பிரதி இரண்டுமே உடலியல் கூறுகள் தாம். அதே சமயம் உடலை மன உயரத்தோடு பார்க்கும் சமூகமாக நமது சமூகம் இல்லை. இந்த முரணுக்கு நடுவே தான் தமிழ்ப் படைப்பாளி வாழ வேண்டியிருக்கிறது, இயங்க வேண்டியிருக்கிறது.

வடிவம், உத்தி,அமைதி, இன்னபிற கவிதைகளுக்கான அம்சங்கள் உங்கள் கவிதைகளில் எவ்வாறு உள்ளன?

வடிவம், உத்தி, அமைதி, இலக்கணம், வரையறை, மதிப்பீடுகள் என்றெல்லாம் சொல்லும் மரபு சார்ந்த பார்வையில் நான் தலையிட விரும்பவில்லை. அந்தப் பார்வை ஒரு இறுகிய வடிவத்தை நிலைநிறுத்த முயல்கிறது. இங்கு பெரிதாய் எந்த முரண்பாடும் இல்லை, எல்லாம் ஒழுங்காக இருக்கிறது, இந்நிலை தொடர்வதே அமைதிக்கு வழி என்கிற பிரமையை வலியிறுத்துகிறது. எனக்கோ அமைதிக்கு மீறி கலகம் தேவைப்படுகிறது. மேற்சொன்னவை என் கவிதையில் ஒழுங்கு குலைந்து தென்படுவது கூட எனக்கு நல்லது தான்.


நீங்கள் அதிகமும் பாலியல் வேட்கை குறித்து எழுதுவதால், பாலியலையும் தவிர்த்து இன்று பொருளாதார ரீதியாக பெண்களுக்கிருக்கும் பிற பாடுகளை மெளனமாக்கியிருக்கிறீர்களா?

முதலில் வந்தது வேலைப்பிரிவினையா? பால் அடிப்படையிலான சமூக ஏற்றத்தாழ்வா?
ஆண் பெண்களுக்கிடையிலான பிரிவினையே முதலில் உருவானதும், அடிப்படையினதுமான வர்க்கப்பிரிவினை என்பதில் யாரும் மாறுபட முடியுமா?

இருபாலரிடையேயும் உழைப்பு பிரிவினையை நிர்ணயிப்பதற்குரிய காரணங்கள் வேறு, சமுதாயத்தில் இருபாலரிடையே அந்தஸ்தை நிர்ணயிப்பதற்கு உரிய காரணங்கள் வேறு என்று எங்கல்ஸ் கூறியதை முற்றிலுமாக புரிந்துக் கொள்ள முயற்சி செய்வோம்.

பொருளாதாரப் பாடுகள் ஆண்களுக்கும் இருக்கிறது, பெண்களுக்கும் இருக்கிறது. பொருளாதார தன்னிறவு பெற்ற பெண்கள் எல்லோரும் விடுதலை பெற்று விட்டார்களா? அதுவும் நமது சாதீய பொருளாதார அமைப்பில் அதெல்லாம் சாத்தியமா என்ன?பெண்ணுடல் மொத்த பொருளாதாரத்திற்கும் கீழே இரண்டாம் பட்சமாகத் தான் வைக்கப்பட்டிருக்கிறது. பாலியல் சொல்லாடல்கள் ஆணின் அர்த்தங்களிலிருந்து பெண்ணின் உடலை வெளியேற்ற உதவுகிறது. ஆக பாலியல் சொல்லாடல் என்பது பெண்நிலை வாத tool. பெண்ணின் பாலியல் வேட்கைகள் x பெண்ணின் பொருளாதாரப் பாடுகள் என்ற எதிர்வை உருவாக்குவது ஒட்டுமொத்த பெண் விடுதலைக்கு எதிரானது.


உண்மையில் நீங்கள் இடதுசாரிகளுக்கு எதிரானவரா?

நிச்சயமாக இடதுசாரித் தன்மைக்கும், அரசியல் பாதைக்கும் எதிரானவள் அல்ல.மூன்றாம் உலக நாடுகளில் அதன் தேவையை உணராதவளும் அல்ல.


மக்கள் கலை இலக்கியக் கழகமும், இந்து மக்கள் கட்சியும் ஒரே நேரத்தில் தடை கோருகிற அளவுக்கு உங்கள் கவிதைகள் என்ன பதட்டத்தை ஏற்படுத்தின?

இந்து மக்கள் கட்சிக்கு, இந்திய தேசத்தின் பெண் வடிவத்தை கலைக்கிறேன் என்ற பதட்டம் ஏற்பட்டிருக்கலாம். இந்துப் பெண் என்ற இடத்திலிருந்து வெளியேறுகிறவளாக நான் இருப்பது உவப்பில்லாததாக இருக்கலாம்.

ம.க.இ.க விற்கு, பெண்களுக்கு நாங்கள் தான் வழிகாட்ட முடியும் என்ற எண்ணத்திலிருந்து அவர்களை அவர்கள் அகற்றிக் கொள்ள முடியவில்லை. புரட்சிக்குப்பின் தங்களை விடுதலை செய்வார்கள் என்று ஆண் தலைமைகள் மீது நம்பிக்கை வைத்திருக்கும் எளிய பெண்களை ஒருங்கிணைத்து அவர்களின் நியாயத்தை குவிப்பதின் மூலம் தீவிர பெண்ணியத்தை தவிர்த்துவிட முடியாது. ஷீலா ரெளபாத்தம் டாக்டர் மார்க்ஸிடம் கேட்ட கேள்விகளுக்கும் இன்னும் பதிலில்லை. லெனினிடம் கிளாரா ஜெட்கின் கேட்ட கேள்விகளுக்கும் இன்னும் பதிலில்லை. சங்கராச்சாரியார் வேலைக்குப் போகும் பெண்கள் எல்லாம் வேசிகள் என்று சொன்னதற்கு இந்த நாட்டில் புரட்சியெதுவும் நடந்து விடவும் வில்லை.

இடதுசாரிகளின் பொருளாதார சமத்துவத்திற்கு உங்கள் கவிதைகள் எதிரானவையா?


என்னுடைய கவிதைகள் மட்டுமல்ல, உலகத்தில் எந்த மொழியிலும் அதற்கெதிரான ஒரு சொல் கூட இன்னும் பிறக்கவில்லை.

தமிழில் எழுதப்பட்டு வரும் கவிதைகளிலிருந்து எந்த அளவுக்கு உங்கள் கவிதைகள் மாறுப்பட்டிருக்கின்றன?

தமிழ்க் கவிதைகள் பொதுவாகவே தொட மறுக்கும் புள்ளிகளை எனது மொழி அதீதப்படுத்துகிறது. அதன் வழியே பதற்றத்தை உருவாக்குகிறது. நீடித்த அர்த்தங்களை குலைக்கிறது. ஒருவித எதிர் மோதலை உருவாக்குகிறது. பிறகெனக்கு சமூகத்தின் மெளனத்தைக் கலைக்க வேறு வழியில்லை, கவிதையைத் தவிர.

உங்கள் கவிதைகளில் குவிமையம் என்று ஏதேனும் உள்ளதா?

கவிதைகளில் குவிமையப் போக்கு என்பது பல்வேறு மையத்தை உயர்த்தி தூக்கிப் பிடித்துக் கட்டுவது என்று புரிந்துக் கொள்கிறேன். உடலாக இருந்தாலும் சரி, கலாசாரத் தளத்தில் விடுதலையாக இருந்தாலும் சரி, ஒடுக்கப்பட்டவர்கள், மூன்றாம் பாலினராக இருந்தாலும் சரி, மொசைக்கான அரசியல் தளத்திலிருந்து தூக்கி கட்டுவது என்னைப் பொருத்தவ்ரை குவிமையங்கள்.

நான் விளிம்பில் நிற்கிறேன். விளிம்பின் மையத்திலிருந்தும் என் கவிதைகள் வெடித்துச் சிதறுகின்றன.