Saturday, January 1, 2011

ஒரு தொடக்கம் அல்லது சில திறந்த முடிவுகள்


திரைப்படக்கலையை ஒரு சமூகப் பண்பாட்டு அரசியல் நடவடிக்கையாக மேற்கொள்ள முடியுமா என்ற கேள்விக்கு, "முடியும்" என்று தீர்மானமாக சொல்கிற நம்பிக்கையைத் தந்திருக்கிறது டிஜிட்டல் தொழில் நுட்பம்.

மிக மலிவாக கிடைக்கும் ஒலி,  ஒளிப் பதிவுக் கருவிகள், கை கணினிகளுக்கு வந்துவிட்ட படத்தொகுப்பு மென்பொருட்கள், டி.வி.டி விநியோக முறை என்று வணிக முதலாளி களிடமிருந்து  சினிமாவை சாமானியனின் கைகளுக்கு மெல்ல கடத்துகிறது அதிவேக தொழில்நுட்ப மாற்றங்கள். ஒரு காகிதத்தைப் போல , எழுதுகோலைப் போல சினிமா தொழில் நுட்பத்தை எளிதாக்கிவிட்டதால் , ஒவ்வொருவரும் படமெடுக்கும் சமூக நீதியை டிஜிட்டல் புரட்சி சாத்தியமாக்கியிருக்கிறது.

தற்போதெல்லாம் நிறைவான திரைப்படம் தொழில்நுட்ப ரீதியிலும், கலை நேர்த்தியிலும் சிறப்பாக விளங்கும் திரைப்படம் பிற்போக்கானது என்று க்யூப இயக்குனர் கார்சியா எஸ்பினோசா குறிப்பிடுவார். தொழில்நுட்ப அழகியல் நேர்த்தி  உருவாக்கும் முதலாளித்துவ செவ்வியல் மயக்கங்களிலிருந்து பார்வையாளர்களை விடுவிக்க புதிய சினிமா நமக்கு தேவைப்படுகிறது. இந்த புதிய சினிமா பார்வையாளர்களை நுகர்வோர் என்ற சட்டத்திலிருந்து மாற்றி பங்கேற்பாளர் என்ற இடத்திற்கு அழைத்து செல்கிறது. திறந்த சிந்தனை என்ற வெளிக்கு மடைமாற்றம் செய்கிறது. தொழிற்சாலைகளின் உற்பத்தி பொருளாக இருக்கும் திரைப்படங்களை மக்கள் கலையாக மாற்றுவதற்கு வழிவகுக்கின்றது.

புதிய சினிமா என்ற சொல்லாடலில், இந்த பத்து வருடங்களில் தமிழக கலைப் பண்பாட்டுச் சூழலில் ஒரு புதிய அலை உருவாகியிருக்கின்றது என்று நிச்சயமாக சொல்லலாம்.  ஆவணப்பட குறும்பட முயற்சிகளின் வீச்சு பட்டி தொட்டியெங்கும் பரவியிருக்கின்றது. குக்கிராமங்களில் கூட இயங்கும் திரைப்பட இயக்கங்கள் இதற்கொரு சாட்சி. பொதி நிகழ்ச்சிகளிலும், பள்ளி கல்லூரி விழாக்களிலும், இலக்கிய கூட்டங்களிலும் இன்று திரையிடல்கள் தவிர்க்க முடியாத நிகழ்வுகள் ஆகி விட்டன. அரசியல் இயக்கங்களும், தன்னார்வ அமைப்புகளும் தங்களுக்கான படங்களை தாங்களே உருவாக்கி கொள்ளும் குழுக்களை பயிற்றுவித்துக் கொள்கிறார்கள். உபதலைப்புகளுடன் வரும் வேற்று நாட்டு , வேற்று மொழிப் படங்களைக் கூட ஆர்வமாக மக்கள் பார்த்து, பொறுமையாக விவாதிக்கும் காட்சியை நாம் பரவலாக பார்க்க முடிகிறது. காட்சிக் கலைப் பண்பாட்டின் புதிய அசைவாக, தொடக்கமாக இதை அவதானிக்கலாம். இதை தொடர்ச்சியான இயக்கமாக, கூட்டு மன அமைப்பாக மாற்றினால் ஒரு நிஜமான மக்கள் கலையாக சினிமாவைப் பரிணமிக்க வைக்க முடியும்.

இந்தச் சூழலில் தொடர்ந்து எழுப்பப்படும் கேள்விகளைப் பற்றி சற்று சிந்திக்கலாம். நமது எதிர்கால விவாதங்களுக்கான குறிப்புகளாக அச்சிந்தனை பயன்படக் கூடும்.

ஆவணப்படம் என்றால் என்ன? குறும்படம் என்றால் என்ன? மூன்று மணி நேரம் - தொடக்கம் -திருப்பம் -ஐந்துப் பாடல்கள், நான்கு சண்டைக் காட்சிகள், காமெடி டிராக், கிளைமாக்ஸ், என்று எடுக்கப்படுவது தானே திரைப்படம்? மற்றதெல்லாம் எப்படி திரைப்படமாக முடியும்?

சலனப்படக் கலையில், ஆவணப்படம் ஒரு வகை, கதைப்படம் ஒரு வகை. குறும்படம், நீளப்படம்(Feature) என்பெதெல்லாம்  நேர அளவுகளைக் குறிப்பவையே. ஒரு நிமிடம் ஓடும் படமும் சலனமே, மூன்று மணி நேரம் ஓடும் படமும் சலனமே, பதினெட்டு மணி நேரம் ஓடும் ஆவணப்படம் கூட உண்டு. நமது சிக்கல் , இங்கு நாடகக் கலையின் நீட்சியாக, திரைப்பதிப்பாக சினிமா புரிந்துக் கொள்ளப்பட்டிருப்பதும், சந்தை நிர்ணயிக்கும் கால அளவுக்குள், வடிவ நேர்த்திக்குள், பொழுதுபோக்கு அம்சங்களுக்குள் சினிமா ரசனை வளர்தெடுக்கப்பட்டிருப்பதும் தான். உலக அரங்கில் தொலைகாட்சி , இணையம், மொபைல் தொலைபேசி போன்ற புதிய ஊடகங்கள் திரைப்படக்கலையின் வடிவத்தை, உள்ளடக்கத்தை வெகுவாக மாற்றி பரிசோதனை முயற்சிகளை திறந்து விட்டிருக்கின்றன. ஒரு கதைப்படம் போலவே ஆவணப்படங்களும், மற்ற எல்லா பரிசோதனை சலனப் படங்களும் கலை சார்ந்த மதிப்பீடுகளை கொண்டவை தான். கலை மூலப் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் தொடங்குகிறது. அந்த மூலப் பொருளே தனக்கான வெளிப்பாட்டு வடிவத்தை, அதாவது கதையாக சொல்லப்படுவதையோ, ஆவணப்படுத்தப் படுவதையோ முடிவு செய்கிறது.

திரைப்படப் படைப்பாற்றலைப் பொறுத்தவரை, கதைப்படங்களை விட ஆவணப்படங்கள் அதிக சுதந்திரமானவை. வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு இடங்களில் நிகழும் வாழ்க்கை நிகழ்ச்சிகளை இணைக்க புதிய வடிவங்கள் பயன்படுத்த முடியும். ஆவணப்படத்தில் பதியப் பெறும் ஒரு நடப்பு நிகழ்ச்சி எதிர்காலத்தில் வரலாற்று ஆவணமாகிவிட முடியும். சில கருக்கள் ஆவணப்படங்களை விட கதைப்படங்களுக்கு நன்றாகப் பொருந்தும்.ஒரு இயக்குனரின் வெற்றி என்பது, ஒரு படத்தின் கருவைத் தீர்மானித்தவுடன், அதை வெளிப்படுத்துவதற்கான மிகச் சரியான வழியை கண்டறிவதில் தொடங்குகிறது. 

அடிப்படை புரிதல்களுக்காக இவற்றை விவாதித்துப் பார்க்கிறோமே தவிர இன்று, திரைப்பட மொழி, கதை, ஆவணம் என்ற சொல்லல்முறை மயங்கிய ஒரு புதிய வெளிப்பாட்டு வகைமையை அடைந்துள்ளது. திரைப்பிரதி வழி இயக்குனர், கதாபாத்திரங்கள், பார்வையாளர்கள் ஒருவரையொருவர் தோள் தட்டி சண்டையிட்டு, தழுவிக் கொண்டு உரையாடும் பங்கேற்பு (Partcipatory) சினிமா இதனால் சாத்தியப்பட்டிருக்கிறது. இது வழக்கிலிருக்கும் வரம்புகளை உடைத்து முப்பரிமாணப்பரிவர்த்தனைக்கு வழிகோலுகிறது.

 மிக இளைய கலையான சினிமா, தன் மூத்த கலைகளான நாடகம், இசை, கூத்து, நடனம், கவிதை, கதை, ஓவியம் போன்றவற்றின் பாதிப்பால் அவற்றின் மொழியையே நகல் செய்யாமல், தனக்கென்றொரு மொழியைக் கண்டடையும் முயற்சியில் உள்ளது எனலாம். எதை நோக்கி கேமிராவை குவிமையப்படுத்துவது, எப்படி காட்சிப்படுத்துவது (Mis - en -Scene),காட்சிகளை (Montages) தொகுப்பதில் உள்ள அரசியல் , கலை, தொழில் நுட்ப கண்ணோட்டங்கள் என்று எல்லாவற்றிலும் இந்த பங்கேற்பு பாணி பின்பற்றப்படும் பட்சத்தில் ஒரு புதிய அனுபவத்தை, தரிசனத்தை திரைப்படக் கலை தரக்கூடிய வாய்ப்புகள் அதிகம் .

எல்லாவற்றிற்கும் மேலாக எல்லா சாதனங்களையும் போல சினிமாவின் முக்கிய இலக்கு பரிமாற்றமே. புனைகதையோ, மிகை உணர்ச்சி மிக்க கதாபாத்திரங்களோ இல்லாமல், மக்களை முக்கிய பாத்திரங்களாக படைப்பில் பங்கேற்கச் செய்து ஊர் ஊராக மக்களின் பார்வைக்கு எடுத்து செல்லக்கூடிய திரைப்படங்களை எப்படி உருவாக்குவது என்பதிலிருந்து புதிய சினிமாவுக்கான நிரல் தொடங்குகிறது. அந்த அனுபவத்தின் அடிப்படையிலும் வரலாற்றின் துணையோடும் இதுவரையிலான படங்களையும், இனி எடுக்கப் போகும் படங்களை யும் விரிவான அலசலுக்கு உட்படுத்தலாம். சொந்த சமூகத்தின் வாழ்க்கையையும் யதார்த்தத்தையும் குறித்த கண்ணோட்டத்தைக் கொண்ட ஒரு தனித்துவமான சினிமா பாணியை படைப்பதற்கான முயற்சிகளுக்கான அடிப்படையாக அச்செயல் அமையும். திணிக்கப்பட்ட கலாசாரத்தின் முரண்பாடுகளைக் களைந்து, நமது உண்மையான அடையாளத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு திரைப்படக்கலையை அவ்வைகையில் மட்டுமே வசப்படுத்த முடியும். 

உயிர்த்துடிப்புடன், ஆற்றலுடன் இருக்கிற மக்களின் கலாசாரத்தை ஆராய்வதிலும், அதனுடன் இணைவதிலும் மட்டுமே, விடுதலை பெறச் செய்யும் புதிய மொழி பிறக்க முடியும் என்று நம்புவதில் அர்த்தமிருக்கிறது. கலைஞர்கள் மக்களுக்கு வழங்குவது, மக்களிடமிருந்துப் பெறுவதற்கு சற்றும் குறைவாக இருக்க கூடாது.ஏனெனில் மக்கள் சினிமாவுக்கான, புதிய சினிமாவுக்கான தேடல் என்பது சமூகப் 
பிரக்ஞைக்கான தேடலும் தான்.

லீனா மணிமேகலை 

(உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய கருத்தரங்கத்தில் "மாற்று சினிமா" அமர்விற்காக எழுதப்பட்டது. டிசம்பர் 20,21,22 - 2010 , சென்னை )