Friday, August 5, 2016

அமைதியின் நறுமணம் - இரோம் ஷர்மிளா

புதிய தலைமுறை இதழுக்காக எழுதிய பத்தி 





மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் இந்திய இறையாண்மை என்ற பேரில் ராணுவத்திற்கு அளவிலா அதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA (Armed Forces Special Power Act) என்ற கொடிய சட்டத்தை நீக்கக் கோரி  16 வருடங்களாக தான் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வரும்  ஆகஸ்ட் ஒன்பதாம் தேதியோடு நிறுத்திவிடப்போவதாக அறிவித்திருக்கும்  மணிப்பூரின் இரும்பு மங்கை இரோம் ஷர்மிளா அடிப்படையில் ஒரு கவிஞர். 2014-ல்  "ரேப் நேஷன்" என்ற என் ஆவணப்படத்திற்கான நேர்காணலுக்காக அவரை சந்தித்த போது மைதி மொழியில் எழுதப்பட்டிருந்த "அமைதியின்  நறுமணம்"என்ற அவருடைய கவிதை தொகுப்பிலிருந்து, 

"சிறையின் கதவுகள் அகல திறக்கட்டும் 
ஒருபோதும் வேறு பாதையை 
நான் தேர்ந்தெடுக்கப் போவதில்லை  
என்னுடைய பாதங்களை 
முள் வளையல்களாய் 
சுற்றியிருக்கும் விலங்கிலிருந்து விடுவியுங்கள் 
பறவையாய் அவதாரமெடுத்ததற்காக 
என்னை குற்றம் சுமத்தாதீர்கள்"

என்ற வரிகளை, வெளுத்த நாக்கும் - வெடித்த உதடுகளுமாய் வாசித்துக்காட்டியபோதே வாழ்வின் மீதான தீராத வேட்கை அவரின் கண்களில் ஒளிர்ந்தது. இவரைத்தான், இந்திய அரசாங்கம் ஒவ்வொரு வருடமும் அடையாள விடுதலை செய்வதும்  பின் சில மணி நேரங்களில் "தற்கொலைக்கு முயற்சித்தார்" என்ற குற்றச்சாட்டில்  மீண்டும்  சிறை பிடிப்பதுமான  அபத்த நாடகத்தை விடாமல் நடத்தி வருகிறது. தன் உடலையே  ஆயுதமாக்கி வாய்வழி நீரையோ உணவையோ உண்ணாமல், ஆம்னெஸ்டி விவரிப்பது போல மனசாட்சியின் கைதியாய்  இவ்வளவு நெடிய காலம் அஹிம்ஸா வழி போராட்டத்தை தனி மனுசியாய் தொடர்ந்து வரும் இரோம் கேட்பதெல்லாம் தன் மண்ணிற்கான  அமைதியும் விடுதலையும் தான். வெளுத்த முகமும், ஒடிசலான தேகமும், சுருள் முடியும், தீர்க்கமான கண்களும், வலுக்கட்டாயமாக மூக்கின் வழி திரவ உணவை ஏற்றும் அரசாங்கத்தின் ஸிரிஞ்சும், நம்பிக்கையை கைவிடாத புன்னகையுமாய்  இரோம் ஷர்மிளா  சர்வதேச அளவில் எதிர்ப்பின் குறியீடாய் கொண்டாடப்படுகிறார். 

இம்ஃபால் நகரத்தின் ஜவஹர்லால் நேரு மருத்துவ கல்லூரியின் மருத்துவ மனையின் ஸ்பெஷல் வார்ட் அறையொன்றையே சிறைக்கூடமாக்கி ஆயுதமேந்திய காவலர்கள் சூழ இரோம் ஷர்மிளாவை அடைத்து  வைத்திருக்கிறது அரசாங்கம். வழக்கமான சடங்காக, சிறை அதிகாரிகள் அவரை மாதத்திற்கு ஒரு முறை கோர்ட்டுக்கு அழைத்து வரும்போதெல்லாம் நீதிபதியும் எப்போதும் போல இரண்டே கேள்விகள் கேட்பதுண்டு. "உங்கள் உண்ணாவிரதத்தை தொடர்கிறீர்களா" என்ற கேள்விக்கு "ஆம்" என்றும்  "வேறேதுவும் சொல்ல விரும்புகிறீர்களா? என்ற  கேள்விக்கு, "நண்பர்களையும் மீடியாவையம் சந்திக்க அனுமதியளியுங்கள்"  என்ற கோரிக்கையையும் தான் பதினாறு வருடங்களாக பதிலாகத் தந்திருக்கிறார். ஆனால் கடந்த ஜூலை 26ம் தேதி, அப்படியான ஒரு நீதிமன்ற விஜயத்தின் போது, " உயிரோடு இருக்கும்போதே தான் மேற்கொண்ட போராட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதத்தை கைவிடப்போவதாகவும், ஜனநாயக வழியில் தேர்தலை சந்தித்து அமைப்பிற்குள்ளிருந்துக்கொண்டே  மாற்றங்களுக்காக குரல்கொடுக்க முயற்சிக்க வேண்டுமென்றும், பல வருடங்களாகப் பிரிந்திருக்கும் காதலனைக் கைப்பிடித்து திருமணம் செய்ய விரும்புவதையும்  ஒரே நேரத்தில் அறிவித்திருக்கிறார். இரோமின் இந்த திடீர் முடிவுகளால் அதிர்ச்சியுற்று சலசலக்கும் சிவில் சமூகம் தான், 2000 மாவது ஆண்டில், மலோம் பேருந்து நிலையத்தில் அசாம் ரைபிள்ஸ் என்ற துணை ராணுவப் படை இரண்டு குழந்தைகள் உட்பட பத்து அப்பாவி பொதுமக்களை சுட்டுத்தள்ள, ராணுவத்திற்கு இப்படி கண்ட இடத்தில் சுடுவதற்கும்,  கைது செய்வதற்கும், வல்லுறவு கொள்வதற்கும் எதேச்சதிகாரத்தை வழங்கியிருக்கும் AFSPA சட்டம் நீக்கப்படும் வரை ஓய்வதில்லை என்று காலவரையற்ற உண்ணாவிரதத்தை அவர் அறிவித்த போதும் விமர்சித்தது. வரலாற்றின் இந்த இரண்டு தருணத்தையும் ஒரு கவிமனதின் வெடிப்பாக  பார்க்கத் தவறுபவர்களுக்கு இரோம் ஷர்மிளா ஒரு புதிராகத் தான் இருப்பார். 

"பார்ப்பதும், கண்காணிப்பதும் பின் அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் திரும்புவதற்கும் நான் என்ன காட்சிப் பொருளா?" என்ற அவரின் கவிதை வரியொன்று உண்டு. தனிமை தோய்ந்த பதினாறு வருடப் போராட்டத்தில் இருந்து இரோம் தன்னை விடுவித்துக்கொள்வதை தோல்வியாகப் பார்ப்பதும், திருமணம் மற்றும் தேர்தல் என்ற அவரின் தேர்வுகளை சந்தேகத்தோடு எதிர்கொள்வதும் மனஉயரமற்ற கையாலாகாத சிவில் சமூகத்தின் கோளாறுகளேயன்றி, அவரின் சரிவல்ல. தளத்தையும் வழிமுறைகளையும் மாற்றிக்கொள்கிறேனே அன்றி போராட்டத்தை கைவிடுவதில்லை என்னும் அவரை அள்ளியணைத்து அன்பை தெரிவிப்பது தான் நமது கடமை. 

பெல்லட் குண்டுகளால் சல்லடையாக்குவதும், சட்ட விரோதக் கைதுகளாலும் - கொலைகளாலும் - காணாமல் அடிக்கப்படுவதாலும் - பாலியல் வல்லுறவுகளாலும் சூறையாடுவதுமாய் காஷ்மீரிலும் மணிப்பூரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் இந்திய தேசிய வல்லரசு தொடுத்திருக்கும் கொடும்போரில் இந்திய குடிமக்களாய் நம் ஒவ்வொருவரின்  பெயர்களும்  ரத்தத்தால் பொறிக்கப்பட்டிருக்கிறது என்பதை உணரும்போது இரோம் என்ற ஆன்மாவின் சொற்களும் , பதினாறு வருடங்களாக அருந்தாமல் இனி அவர் அருந்தப்போகும் நீரின் துளிகளும் , உணவுப் பருக்கைகளும் அர்த்தம் பெறும்.


லீனா மணிமேகலை