Painting by Vijaysekar |
1
அவள்
அந்தரக்கன்னி
வேரிலும் பழுப்பாள்
இலையிலும் பழுப்பாள்
காயிலும் பழுப்பாள்
கொம்பிலும் பழுப்பாள்
வேடராக வரும்போதெல்லாம்
தேனாக விளைய மாட்டாள்
அவள்
கண்ணைக் குத்தி மீன் பிடிப்பது கடினம்
அவள்
குலவையிடும்போது மட்டும் தான் மழையறுக்க முடியும்
கையேந்தி நிற்கும் நட்சத்திரங்களுக்காக
மலையேற மறுக்கும்
அவள்
துத்திப்பூ சூடி வந்தால்
கொங்கைகளை பெருக்குவாள்
தாயார் விளக்கில் மிளகு திரி போட்டு வைத்தால்
முப்போகம் ப்யிரளப்பாள்
லிங்கம்
அவளின்
பதினோராவது விரல்
நாவற்ற அதன் வாய்க்கும்
வெற்றிலை பூசுவாள்
வேண்டும் போது
கோணக் குச்சியாக்கி
உறுமி கொட்டிக் கொள்வாள்
2.
அவள் குத்தியிருக்கும் பச்சையில்
கிளிகள் உறங்குகின்றன
வரகு அவிக்கும்போதெல்லாம்
அவற்றை எழுப்பி
ஊன் தருவாள்
அவை பறக்கும் திசைகள் தோறும்
முளை பாவ நார் கிளம்பும்
அம்மனுக்கு கால் முளைக்கும்.
அவள்
தலையில்
பூ மணக்க மணக்க
ஊரேகும் காவடி
3.
தாச்சியும் அவள் தான்
காவலாளியும் அவள் தான்
வெள்ளிமலையில் தீயெரிய
முட்ட முட்ட கடலை தின்பாள்
காலாட்டுமணி கையாட்டுமணி
அத்தலு புத்தலு
மக்கா சுக்கான்
பாலு பரங்கி
நட்டம் சுட்டம்
சீ ......சல்..... லே...... டு
லீனா மணிமேகலை
நன்றி தோழர் மனோன்மணி