முற்று முழுவதுமாக திரைப்பட ஊடகம் வணிகமயமாக்கப்பட்டிருக்கும் சூழலில் வணிகம் சாராத மாற்றுச் சினிமாக்களும் வணிக நிறுவனங்கள் சாராத சுயாதீனமான (Independant) திரைப்படக் கலைஞர்களுக்கும் களம் அமைத்துத் தரும் வெளியாகவும் இத்தகைய மாற்றுச் சினிமாக்களை சினிமா பார்வையாளர்களிடம் எடுத்துச் செல்லும் பாலமாகவும் திரைப்பட விழாக்களே இருக்கின்றன. திரையரங்குகளும் வெளியீட்டாளர்களும் கிட்டாத திரைக்கலைஞர்கள் உலகம் முழுவதும் இவ்வாறான திரைப்பட விழாக்களை நம்பியே இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
குறிப்பான நமது தமிழ்ச் சூழலில் மாற்றுச் சினிமாவுக்கான அத்தனை பாதைகளும் மூடப்பட்டே கிடக்கின்றன. அரசோ அல்லது வேறு நிறுவனங்களோ மாற்றுச் சினிமாக்களையும் அரசியல் சினிமாக்களையும் விலக்கியே வைத்திருக்கிறார்கள். முடிந்த போதெல்லாம் இவ்வாறான மாற்றுத் திரைப்பட முயற்சிகளை அவர்கள் பல்வேறு வழிகளிலும் முடக்கவே முயல்கிறார்கள். இந்த அவலமான சூழலுக்குள் இருந்துதான் செங்கடல் திரைப்படம் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டு உருவாக்கப்பட்டது. செங்கடல் மிக நேரடியாகவே இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களைக் குறித்தும் தமிழகத்திலிருக்கும் ஈழத்து அகதிகள் குறித்தும் பேசுகிறது. இப்படத்தில் மீனவர்களும் அகதிகளுமே நடித்திருக்கிறார்கள். படத்தின் தயாரிப்பு வேலைகளிலும் அவர்கள் உணர்வுபூர்வமாக பங்கெடுத்துக் கொண்டார்கள். அந்த வகையில் செங்கடல் மக்கள் பங்கேற்புச் சினிமா.
செங்கடல் திரைப்படம் இந்திய இலங்கை அரசுகளை நேரடியாக விமர்சிப்பதாக காரணம் சொல்லப்பட்டு மாநிலத் தணிக்கைக் குழுவால் முடக்கப்பட்டது. ஒரு வருடம் முழுவதும் நீண்ட சட்டப் போராட்த்திற்கு பின்பாக செங்கடலுக்கு தணிக்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்டது. டர்பன், மொன்றியல், டோக்கியோ, மும்பை, இந்தியன் பனோரமா (கோவா), திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு திரைப்பட விழாக்களில் செங்கடல் திரையிடப்பட்டிருக்கிறது. அது NAWFF விருது, GFI Grant ஆகிய விருதுகளைப் பெற்றிருக்கிறது.
இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட படங்கள் சென்னைத் திரைப்பட விழாவில் பனோரமா பிரிவில் திரையிடப்படும் போது, இந்தியன் பனோரமாவிற்கு இவ்வருடம் தேர்வான ஒரே தமிழ்ப் படமான செங்கடல் ஏன் இந்தத் திரைப்பட விழாவில் நிராகரிக்கப்படுகிறது. இதன் பின்னாலுள்ள அரசியல் (சினிமா) என்ன?
சென்னைத் திரைப்பட விழா ஏற்பாட்டாளர்கள் திரைப்பட விழாவில் தணிக்கையைப் புகுத்துவதையும் அவர்களுக்கு உவப்பான அரசியலைப் பேசாத காரணத்தால் இவ்வாறு திரைப்பட தேர்வுகளில் குளறுபடிகளைச் செய்து, திரைப்பட விழாக்களின் சுதந்திரச் சிந்தனை மரபை அழிக்கும் சீரழிவுச் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டுமென நாங்கள் அறத்தின் பெயராலும் சுதந்திரக் கலையின் பெயராலும் கேட்டுக் கொள்கிறோம்.
இயக்குநர் B..லெனின்
இயக்குநர் அருண்மொழி
இயக்குநர் அம்ஷன்குமார்
வெளி ரங்கராஜன்
இயக்குநர் மாமல்லன் கார்த்திக்
இயக்குநர் லீனா மணிமேகலை
தொடர்புக்கு :
பேச : 8939057678
மின்னஞ்சல் : leenamanimekalai@gmail.com