வெளி ரங்கராஜன்
தீராநதி
பிப்ரவரி 2011
மாத்தம்மா, பறை, பலிபீடம், தேவதைகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் சமூகத்தின் சில பாரம்பரியமான கண்மூடிப் பார்வைகளால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்படும் சிற்றினக்குழுக்களின் வாழ்நிலையை கவனப்படுத்திய லீனா மணிமேகலையின் இந்த 'செங்கடல்' திரைப்படம் கடலின் நடுவே வதைபடும் தனுஷ்கோடி மீனவர்களின் ஜீவ மரணப் போராட்டங்களையும், ஆயுதத்தாலும் இனவெறியாலும் அலைக்கழிக்கப்பட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ள தனுஷ்கோடி கரையில் ஒதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளின் அவல வாழ்க்கையையும் ஒளிவுமறைவுகள் ஏதுமின்றி நேரடியாகப் பேசுகிறது.
1964-ல் ஆழிப் பேரலையால் நிர்மூலமாக்கப்பட்ட தனுஷ்கோடி கிராமம் கம்பிப்பாடு தனது சிதைவுகளுடனும், மண்ணின் மீனவக் குடும்பங்களுடனும் இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் கடலைத் தவிர வேறு எதையும் அறியாத அந்த மக்கள் மீண்டும் மீண்டும் உயிரைப் பணயம் வைத்து ஒரு பிடி உணவுக்காக கடல்நீரில் இறங்குகிறார்கள். அவர்கள் விடுதலைப் புலியென்றோ, கடத்தல்காரனென்றோ, உளவாளியென்றோ சந்தேகத்தின் பேரால் இலங்கைக் கடற்படையால் அடித்தோ, கொல்லப்பட்டோ, கொள்ளையடிக்கப்பட்டோ துன்புறுத்தப்படுவதுதான் அங்கு அன்றாட நிகழ்வாக இருக்கிறது. சூழலுக்கும், புயலுக்கும், மழைக்கும் போலவே குண்டடிகளுக்கும், துப்பாக்கிச் சூட்டுக்கும் அஞ்சாமல்தான் அவர்கள் தங்கள் வாழ்க்கைப்பாட்டை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. கடல் வழியே ஈழத்து அகதிகள் வந்து நிறையும் இடமாகவும் அது இருக்கிறது. நம்பிக்கைகள் சிதைந்த நிலையிலும், தங்கள் குழந்தைகளுக்காக தங்கள் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளப் போராடும் அந்த மீனவர்கள் மற்றும் அகதிகளின் வாழ்க்கை அதிகார வர்க்கத்தின் அசட்டையினாலும் கடற்படை, மற்றும் காவற்படையின் கண்காணிப்புகளாலும் இழைக்கப்படும் அவமானங்களாலும் மேலும் மாசுபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வாழ்க்கை அவலங்கள் வெளி உலகுக்குத் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்கிற முனைப்புடன் படம் பிடிக்கக் களமிறங்கிய தன்னார்வச் செயலாளி லீனா மணிமேகலை கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவர்கள் பிணமாகத் திரும்புவதையும், மனைவியரின் ஓலங்களையும், நிர்க்கதியான குழந்தைகளையும், நீதி கேட்டு ஊர்வலம் செல்வோர் காவல் துறையால் ஒடுக்கப்படுவதையும் அருகிருந்து பார்த்துப் படமெடுக்கும் நிலையில் தானே ஒரு கையறு நிலை கொண்ட பார்வையாளராகிறார். மீனவர்களின் நல்வாழ்வுக்காக போராடும் மீனவ இனக் குப்புசாமி, கரையொதுங்கும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவிக் கரம் நீட்டி முகாமுக்கு வழி நடத்தும் தொண்டு நிறுவன ரோஸ்மேரி, யுத்தத்தாலும், துரத்தும் மரணங்களாலும் உருக்குலைந்து கிறுக்கனான ஈழ அகதி சூரி, பள்ளிக்குச் செல்ல மனமில்லாமல் கடற்கரை உயிரினங்களுடன் ஓடித் திரியும் சிறுவர்கள் என வாழ்வுணர்வுத் துடிப்புகளும் அங்கே உண்டு. ஆனால் மனித நேயமற்ற நம்முடைய அரசு மற்றும் கண்காணிப்பு நிறுவனங்கள் இந்த அவலங்களைத் தடுத்து நிறுத்தவோ, நாடி வரும் அகதிகளுக்கு கெளரவமான வாழ்க்கை அமைத்துத் தரவோ இயலாதவைகளாகவே இருக்கின்றன. ஆனால் உண்மை நிலவரங்களைத் தெரியப்படுத்த போராடுபவர்களை மிரட்டவும், தடுத்து நிறுத்தவும் அவைகளால் முடியும். எல்லாம் அப்படியே விட்டுவிட்டு கனத்த மனத்துடன் திரும்பத்தான் முடிகிறது போராளிகளுக்கு. ஆனால் நிரந்தர அகதியான சூரியின் வடிவில் மீனவச் சிறுவர்களின் மனமகிழ்ச்சித் துணையாக ரேடியோப் பெட்டியுடன் எங்கும் பிரசன்னமாக உள்ளது ஒரு நம்பிக்கைக் கீற்று.
உண்மை நிலவரங்கள் அறியப்படுவதைத் தடுக்க நினைக்கும் அரசு அமைப்புகளுக்கு எதிராக மனித உரிமை இயக்கங்களின் துணையுடன் ஒரு பரந்த அணியை முன்னிறுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையிலும் தடைகள் நிறைந்த தனி மனித முனைப்பின் தோற்றத்தையே இயக்குனரின் பாத்திரச் சித்திரிப்பு உருவாக்கினாலும் ராமேஸ்வரம் மீனவர்கள், கிடாத்திருக்கை கிராமக் கூத்துக் கலைஞர்கள், நாடகக் குழுக்களின் நடிகர்கள், எழுத்தாளர்கள் என ஒரு கூட்டியக்கம் சாத்தியப்பட்டிருக்றிது. முக்கியமாக கம்பிப்பாடு மீனவர் சமூகமே ஒட்டு மொத்த தயாரிப்பிலும் பங்கு கொண்டிருக்கிறது. பல கட்டுப்பாடுகளுக்கு இடையிலும் மண்டபம் முகாம் ஈழத்து அகதிகளும், கடலிலும் சுடுமணலிலும் கூட சிறுவர்களும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள். சதா ஓலமிடும் கடல் முழக்கங்களுக்கு இடையே இச்செங்கடல் திரைப்படம் மரணம் துரத்திக் கொண்டிருக்கும் வலிகள் நிறைந்த ஒரு உண்மை வாழ்வை அதன் பல்வேறு முகங்களுடன் பதிவு மிகைப்படுத்தலோ, உணர்ச்சி மயமாக்கலோ இன்றி பதிவு செய்துள்ளது. ஷோபா சக்தி நடிகராகவும் கதை வசனகர்த்தாவாகவும் ஒரு சிறப்பான கலைப்பங்களிப்பு செய்துள்ளார்.
தன்னுடைய வழக்கமான பிற்போக்குப் பார்வையுடன் நம்முடைய சென்ஸார் போர்டு இப்படத்துக்கு அனுமதி மறுத்துள்ளளது. அரசாங்கங்கள் முறைதவறி விமர்சிக்கப்படுவதும், திரைப்படத்தில் சில இடங்களில் உபயோகப்படுத்தப்படும் மொழி unparliamentary யாக இருப்பதும் தடைக்கான காரணங்களாக காட்டப்பட்டுள்ளன. பெருவாரியான மக்களைச் சென்றடையும் வர்த்தகப் படங்களில் இரட்டை அர்த்தங்கள் கொண்ட ஆபாச வசனங்களையும், கட்டற்ற வன்முறையையும் அனுமதிக்கும் சென்ஸார் போர்டு எளிய மக்கள் பேசும் இயல்பான கொச்சைப் பேச்சுவழக்கை unparliamentary யாகப் பார்ப்பது எவ்வளவு பெரிய முரண்? வட்டார வழக்குகளை ஏற்றுக் கொள்ளத் தெரியாத கலை உணர்வற்ற ஒரு மேட்டிமைக் குழுதான் இதுபோன்ற படங்களின் தரத்தை தீர்மானித்துக் கொண்டிருக்கிறது. மேலும் அரசாங்கங்கள் மக்களுடைய நலன்களுக்கு எதிராக செயல்படும்போது அவைகளை விமர்சிக்கும் உரிமை குடிமக்களுக்கு இல்லையா? வளர்ச்சி பெற்ற ஜனநாயக அமைப்புகளில் எல்லாம் கருத்து சுதந்திரம், விலகல், மறுப்பு இவை குறித்த ஆழமான கருத்தாக்கங்கள் வலுப்பெற்று வரும் இன்றைய காலகட்டத்தில் நம்முடைய அரசு அமைப்புகள் தற்குறிகளாய் More loyal than the king அணுகுமுறையையே பின்பற்றி வருகின்றன. அருந்ததிராய், பினாயக் சென் போன்ற மனித உரிமைப் போராளிகளையே தேசத்துரோக வழக்குகளால் முடக்க முடியுமென்றால் இங்கே எந்தக் கருத்துரிமைதான் சாத்தியம்?