Friday, September 3, 2010

செங்கடல்

(விகடனின் கேள்விகளுக்குத் தொகுப்பாக  எழுதி தந்தது)

செங்கடல், சாட்சியாகவும், கதைசொல்லியாகவும் நான் நிற்கும் இடம். தனுஷ்கோடி என்பது ஒரு அசுரத்தனமான மணல் காடு. அங்கு ஓயாமல் சுழன்றடிக்கும் காற்றில் தங்கிவிட்ட ஓலமும் , முகத்திலப்பும் மணல் துகள்களின் கதைகளும் தான் என்னை செங்கடலுக்கு இழுத்து சென்றது.

செங்கடலின் கதைநாயகன் பட்டாளம் என்ற முனுசாமியுடன்


மார்ச் 2009 லிருந்து தனுஷ்கோடி நோக்கிய என் பயணமும் தேடலும் இன்றும், என்றும் முடியுமா தெரியவில்லை. புயல் அழித்த நகரத்தின் சிதிலங்களை வீடாக கொண்ட தனுஷ்கோடி கம்பிப் பாடு கிராம மீனவர்களின் குசினிகளில்  உண்ட மீனும் நண்டும் இன்னும் என் கைகளில் வாசனையாய் மணக்கிறது. சராசரி ஒவ்வொரு மூன்று மீனவக் குடும்பங்களிலும் ஒரு விதவையையாவது, அல்லது மகனை இழந்த தாயையாவது பார்க்க நேர்ந்தது தான் செங்கடலை எழுத தூண்டியது.  த்மிழ் என்ற மொழியை பேசுவதாலும், கறுப்பாய் இருப்பதாலும் மட்டுமே அடித்து நொறுக்கப்பட்ட , கொல்லப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட, துன்புறுத்தப்பட்ட, சிறையிலடைக்கப்பட்ட இந்திய  மீனவர்களின் கதைகளை நான் கேட்டு வெறும் மௌன சாட்சியாகி போகாமல், பல ஆயிரம் செவிகளுக்கும், கண்களுக்கும், மனசாட்சிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையே செங்கடலை திரைப்படமாக்க தூண்டியது.

'இந்தத் திரைப்படத்தில் வரும் எந்தக்  காட்சியும் கற்பனையல்ல, அனைத்தும் உண்மைச் சம்பவங்களே. இதில் குறிப்பிடப்படும் மனிதர்களும் உண்மையானவர்களே. இந்தத் திரைப்படத்தில் நடித்திருப்பவர்கள்  எல்லோரும் ஈழத்து அகதிகளும் தனுஸ்கோடி மீனவர்களும் இராமேஸ்வரப் பொது  மக்களும, சில நாடக நடிகர்களுமே!' என்ற அறிவிப்போடு தான் திரைப்படம் தொடங்குகிறது.

பல பயிற்சிப் பட்டறைகள் நடத்தி, ஒத்திகை பார்த்து, ஸ்டில் கேமிரா கூட தங்கள் வாழ்க்கையில் பார்த்தறியாத மீனவர்களுக்கு கேமிரா தொழிநுட்பக் கருவிகளைக் குறித்த பயம் நீக்கி, திரைப்படத்தில் மக்களைப் பங்கெடுக்க வைத்தேன். படப்பிடிப்பின் இறுதி கட்டத்தில், கம்பி பாடு கிராமக் குழந்தைகள் 'ஆக்சன், கட். ஸ்டார்ட் காமிரா' சொல்லி, காட்சியில் நடிப்பவர்களுக்கு நடிப்பு டிப்ஸ் கொடுத்து, கூடும் கும்பலை படப்பிடிப்பிற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுமளவுக்கு சூழல் மாறியது மறக்க முடியாத அனுபவம். 

சினிமாவில் பல வகை உண்டு, பார்வையாளர்களை ஒருவித அதீத்திற்குள் , மாயத்திற்குள் தள்ளி மந்தையாக்குவது ஒரு வகை தப்பித்தல் சினிமா. அதில்  எனக்கு ஆர்வம் இல்லை. பார்வையாளர்களையும் கதாபாத்திரங்களாக்கி பங்கேற்க வைக்கும் முப்பரிமான சினிமா தான் எனக்கான களம். அதை எந்த விட்டுகொடுத்தலும் இல்லாமல் நேர்மையாக செய்திருக்கிறேன். செங்கடல் '24 பிரேம்ஸ் / நொடி' உண்மை. அது கண்டிப்பாக உலுக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

நேரடி அரசியல் சினிமாவாக இருக்கிறதே, தணிக்கையை எப்படி சமாளிப்பீர்கள் என்ற கேள்வி எழுப்புகிறார்கள். ஒரு படைப்பாளி தன் படைப்புக்கு மட்டும் தான் விசுவாசமாக இருக்க முடியும். எந்த வித அதிகாரத்திற்கோ, நிறுவனங்களுக்கோ, சந்தைக்கோ, விசுவாசமாக இருக்க முடியாது. உண்மைக்கு எப்போதும் சோதனைகள் அதிகம். எதிர்ப்போம். வெறும் அவநம்பிக்கைகள் சூழ்ந்திருக்கும் இந்த காலகட்டத்தில் எதிர்ப்பு மட்டுமே சாத்தியம் என்று நினைக்கிறேன். முத்துக்குமாரளவிற்கு உயிரைத் தர முடியவில்லைஎன்றாலும், என் எதிர்ப்பையாவது செங்கடலாக பதிவு செய்ய விரும்புகிறேன்.என்ன செய்வது? வரலாறு நம்மை வேடிக்கை பார்க்கிறது. பாசிசத்தின் கண்களை நாமும் உற்றுப் பார்க்க முயற்சிப்போம்.

ஜெரால்டுடன்

ஷோபா சக்தியுடன்


கரையில் உயிரைக் காவலுக்கு வைத்துவிட்டு கடலுக்கும் செல்லும் மீனவர்களில் ஒருவராக பட்டாளம், தன் கணவரையும், தன் மூன்று சகோதரிகளின் கணவர்களையும் கடலில் இலங்கை ராணுவத் துப்பாக்கி சூட்டிற்கு பலி கொடுத்துவிட்டு கத்தோலிக்க அகதிப்பணி செய்யும் ரோஸ் மேரி, போரால் மனச்சிதைவிற்குள்ளான , மயங்கும் உண்மைகளை முன்னறிவிக்கும் தீர்க்கதரிசியான ஈழத்து அகதி சூரி, ஆவணப்பட இயக்குனர் மணிமேகலை என்று இவர்களைச் சுற்றிப் பின்னப்பட்டதே செங்கடலின் கதை. திரைக்கதை, வசனம் என்று பங்கு கொண்ட ஜெரால்டும், ஷோபா சக்தியும் இல்லையென்றால், செங்கடல் சாத்தியப்பட்டிருக்காது. அவர்களின் பங்கு அதனினும் மேலானது. ஷோபாசக்தி எந்தப் பிரதிபலனும் பாராது இன்று வரை செங்கடலின் ஒவ்வொரு நகர்தலையும் செம்மையாக்கி வருகிறார். அவரின் அசாத்தியமான ஈடுபாடு என்னை சில சமயம் திணறடிக்கும். இன்னும் செங்கடலின் தொழில்நுட்பக் கலைஞர்களின் பட்டியல் இந்தியாவின் ஆகச் சிறந்த பெயர்கள். கேரளாவிலிருந்து 'தேசாடனம்', 'மரண சிம்மாசனம்', போன்ற ஒப்பற்ற கலைப்படைப்புகளின் ஒளிப்பதிவாளர் எம்.ஜே.இராதாக் கிருஷ்ணன்,ஒலி வடிவமைப்புக்காக  பெங்காலிலிருந்து சுபதிப் சென்குப்தா, படத் தொகுப்புக்காக ஏழு முறை தேசிய விருது பெற்ற ஸ்ரீகர் பிரசாத், இசைக்காக எல்.வைத்தியநாதனின் மகன் எல்.வி.கணேசன் என்று எல்லோரும் தங்கள் உழைப்பைத் தந்திருக்கிறார்கள். பல பிரச்சனைகளிடையே, தாங்க முடியாத வலியும அவமானமுமாய் நின்ற போது, கை கொடுத்து,  தயாரிப்பு பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார் தோழி ஜானகி சிவக்குமார் (தோல்பாவை திடேட்டர்ஸ்) இப்படி பல நல்ல ஆன்மாக்களின் கூடு பிரார்த்தனை தான் செங்கடல். 

எல்லை, பாஸ்போர்ட், தேசங்கள், அகதி, காவல்துறை, ராணுவம், குடியுரிமை இவற்றுக் கெல்லாம் ஆயுள் ஒரு ஐம்பது அறுபது ஆண்டுகள் தான். ஆனால் கடலும், மீன்களும், மீனவர்களும், மொழியும், என்று மானுடத்தின் ஆயுள் பல்லாயிரம் ஆண்டுகள்.யுத்தத்தால் சிதறடிக்கப்படும் எளிய மக்களைப் பற்றிய, அவர்களின் வாழ்வு குறித்த அக்கறை தான் செங்கடல். வேறொன்றுமில்லை என்னிடம் தருவதற்கு...


ஆனந்த விகடன் நேர்காணல்