Tuesday, May 12, 2009

முக்கிய எதிரி வீட்டில் தான் இருக்கிறான்

ரோசா : சோஷலிசத் தொடர்ச் சங்கிலியில் ஒரு புரட்சிக் கண்ணி


"......புரட்சியின் போது செத்துப் போனவற்றைத் தட்டி எழுப்பியது பழைய போராட்டங்களை நையாண்டிப் போலி செய்வதற்காக அல்ல: புதிய போராட்டங்களைப் போற்றிப் புகழும் நோக்கத்திற்காகத் தான். யதார்த்தத்தில் அந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பிலிருந்து தப்பியோடுவத்ற்காக அல்ல: கற்பனையில் அந்த குறிப்பிட்ட கடமையைப் பன்மடங்கு பெரிதுபடுத்திப் பார்ப்பதற்காகத் தான். அதனுடைய ஆவியை மீண்டும் நடமாடச் செய்வத்ற்காக அல்ல: புரட்சியின் ஆன்மாவை மீண்டும் கண்டடைவதற்காகத் தான்" - கார்ல் மார்க்ஸ்

ரோசா லக்சம்பர்க் என்ற மாபெரும் பாட்டாளி வர்க்கப் புரட்சியாளரின் சமூகப் பிண்ணனியைப் புரிந்துக் கொள்ளவும், அவரைப் பற்றிய மீளாய்வின் பொருளை உணர்ந்துக் கொள்ளவும் மார்க்ஸின் மேற்காணும் கூற்றை விடச் சிறந்தது ஏதுமில்லை. இரண்டாம் உலகப் போரின் முடிவு தொட்டே ரோசா லுக்சம்ப்ர்கின் வாழ்வு, சிந்தனை ஆகியவற்றின் மீது உலகம் முழுவதுமுள்ள மார்க்சியர்கள் காட்டத் தொடங்கிய ஆர்வமும், அக்கறையும் அதிகரித்துக் கொண்டே வந்துள்ளன. அந்த அக்கறையும் ஆர்வமும் தற்கால முதலாளித்துவத்தின் வளர்ச்சி, அனைத்துலகப் பொதுவுடமை இயக்கத்தில் ஏற்பட்ட மாற்ற்ங்கள் ஆகியவற்றோடு தொடர்புடையவை. உலக முதலாளித்துவத்திற்குத் தற்கால வெற்றியும், சோசலிஸ இயக்கத்திற்கு தற்காலிகச் சரிவும் ஏற்பட்டுள்ள இந்தநாட்களிலும் ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டுக்கும் முன்பே ரோசா எழுப்பிய கேள்வி "சோசலிஸமா அல்லது காட்டுமிராண்டி நிலையா?" இன்றும் பொருத்தமுடையதாக விள்ங்குகிறது. வளைகுடாப் போர், சோமாலியா, அங்கோலா தொடங்கி, இலங்கை வரை ஏற்க்குறைய முப்பதுக்கும் குறையாத இடங்களில் உலக ஏகாதிபத்தியம் மாற்றாள் போர்களை நடத்தி வருகிறது. உலகச் சந்தையை மறுபங்கீடு செய்துக் கொள்ளவும், மூல வளங்களைத் தம் கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளவும் தான் இப்போர்கள். முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் ஒருபோதும் தம் இயல்பை மாற்றிக் கொள்ளாது என்ற உண்மையைத்தான் இப்போர்கள் மெய்ப்பிக்கின்றன, சோசலிஸம் கோட்பாட்டளவிலும், நடைமுறையிலும் மீண்டும் தன் வெற்றியை நிலைநாட்டிக் கொள்வதற்கு இந்த உண்மை ஒன்றே போதும்.
அதே வேளையில் சோவியத முகாமின் தகர்வு, சீனாவின் நிறமாற்றம் ஆகியன ஏற்கெனவே நிலவி வந்த சோசலிஸம் குறித்த மறுஆய்வைப் பல்வேறு கோணங்களிலிருந்து செய்ய வேண்டிய தேவையை அதிகரித்துள்ளன. அனைத்துலக மார்க்ஸிய இயக்கத்திலும் சோசலிஸ கட்டுமானத்திலும் இருந்த குறைபாடுகள், அவற்றில படிந்துள்ள அழுக்குகள் ஆகியவற்றை ஒப்புக் கொள்ளாமல் சோசலிஸத்தைப் புதுப்பிக்க இயலாது. கட்சி சர்வாதிகாரம், தன்னிச்சையான ஒடுக்குமுறைகள், கொடூரமான தணிக்கை முறைகள், சித்திரவதை முகாம்கள், ஆகியன இல்லாத சோசலிஸத்தை உருவாக்க முடியும் என்பத்ற்கான சான்றுகளை மார்க்ஸிய மரபிலிருந்து எடுத்துக் காட்டாமல் சோசலிசத்தைப் புதுப்பிக்க முடியாது. இத்தகைய மரபை உருவாக்கியவர்களில் ஒருவர் தான் ரோசா.

ஜனநாயகம் பற்றிய அவரது கீழ்க்காணும் கூற்று பல்வேறு சர்ச்சைக்குள்ளானது: " அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு மட்டும், ஒரு குறிப்பிட்ட கட்சியின் உறுப்பினர்களுக்கு மட்டும், சுதந்திரம் வழங்கப்படுமாயின் அது சுதந்திரமாக இருக்க முடியாது, சுதந்திரம் என்பது வித்தியாசமான கருத்துக்களைக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான்..அது தனிச் சலுகைகளாக மாற்றப்படும் அந்தக்கணமே அதன் பாத்திரம் மறைந்து விடுகிறது" உட்கட்சி ஜனநாயகம், பரந்துபட்ட மக்களின் ஜனநாயகம் ஆகிய இரண்டையும் மிக உயர்ந்த தளத்திற்கு எடுத்துச் செல்லும் ஆற்றலுடையவை அவரது கருத்துக்கள்.

பொது விதிகளை உருவாக்கிக் கொண்டு வரலாறில் ஏற்படும் தேசிய இனப் பிரசினைகளுக்கு தீர்வு காணமுடியாது" என்ற ரோசாவின் கருத்தோடு லெனின் முரண்பட்டது, இனறைய காலகட்டத்திலும் முக்கியத்துவம் பெறுகிறது.

ரோசாவின் கருத்துக்களை நேர்மையாக எடுத்துக் கூறாமலும், சர்வதேசப் பாட்டாளி வர்க்க லட்சியத்திற்காக அவர் செய்த மாபெரும் தியாகத்தை அங்கீகரிக்காமலும், அவரை லெனினின் புரட்சிகர மரபுக்கு எதிரானவராகக் காட்டும் அற்பத்தனத்தை சோவியத்துகளோடு, இந்தியாவிலுள்ள மார்க்ஸியர்களிடையேயும் காணலாம்.

ஒருநாளில் ஒருதடவையாவது ரோசா லக்சம்ப்ர்கின் பெயரை உச்ச்ரித்துவிடும் என் தோழன் ஷோபா சக்திக்காக, ரோசா தன் நண்பருக்கு எழுதிய கடிதத்திலிருந்து ஒரு பகுதி, "உலக வரலாறு ஒரு சுவையற்ற மலிவான மர்ம நாவலைப் போன்று காணப்படுகிறது, அதில் திகைப்பூட்டும், ரத்தம் உறையச் செய்யும் அமசங்கள் வாசகனை உணர்ச்சி வசப்பட செய்வதற்காக ஒன்றையொன்று முந்துகின்றன, ஏனெனில் ஒருவன் அத்தகைய நாவலைப் படிக்காமல் வைத்து விடக் கூடாது.வரலாற்றின் இயங்கியலில் நான் ஒருபோதும் ஐயுறுவதில்லை, வரலாறு இயங்குகிறது"

அப்புறம் எனக்கே எனக்கான ரோசாவின் வார்த்தைகள் "சிறைக் காவலின் கனமான் காலடிகளின் கீழ் சிக்குண்ட ஈரமண் அரைபடும் ஓசை ஒரு எளிய கவிதை போன்றது, அதனை எப்படி கேட்பது என்பதைத் தெரிந்துக் கொண்டதால்"

பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியில் மட்டுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தவர் ரோசா. மிக்க பலம் கொண்டும், அறிவாற்றல் மிகுந்தும் சமூக ஜனநாயக ரீதியில் பயிற்றுவிக்கப்பட்டும், அமைப்புரீதியாக ஒழுங்கமைவு கொண்டும், கொள்கை ரீதியாகக் கற்பிக்கப்பட்டும் பாட்டாளிவர்க்கம் ஒருநாள் எழுச்சி பெறும் என்று ஜெர்மானிய பாட்டாளிவர்க்கம் பற்றிய அவரது நம்பிக்கை மானுடத்திற்குமானது.

போலந்து சிந்தனையாள்ர் ஐசக் தாட்சர் கூறியுள்ளதை நினைவு கூறுவது இங்கு பொருத்தமாக இருக்கும். "சந்தேகமில்லாமல் அவர் சில தவறுகளை ரோசா செய்திருந்தார், ஆனால் அவை லெனின், ஸ்டாலின் செய்த தவறுகளைப் போல மோசமானதல்ல"

ரோசாவை ஆழமாக கற்பது, அவரது போராட்டத்தை, வீரமரணத்தை தெரிந்துக்கொள்வது, புரட்சிகர வரலாற்றின் ஒதுக்கப்பட்ட பகுதிகள் தன்னியல்பு பெறுவத்றகு உதவியாக இருக்கும்.

நன்றி ரோசா லக்ஸம்ப்ர்க் பற்றிய தோழர் ராயனின் கட்டுரையும் புத்தகமும்

No comments:

Post a Comment