லீனா மணிமேகலை
நன்றி வல்லினம்
கவிஞர், இயக்குநர், களப்பணியாளர் என இடையறாது இயங்கிக்கொண்டிருப்பவர் லீனா மணிமேகலை. கடந்த பத்து வருடங்களாக மாற்று சினிமாக்களையும் ஆவணப்படங்களையும் உருவாக்கிவருபவர். எளிய மக்களின் பங்களிப்பைக் கொண்டே அதன் உச்சமான சாத்தியங்களில் மக்கள் பங்கேற்பு சினிமாக்களை உருவாக்குபவர். இடது சாரிக் குடும்பச் சூழலில் வளர்ந்த லீனா இன்று பெரியாரியம், அம்பேத்கரியம் எனது தனது பார்வைகளை வளர்த்தெடுத்து முன்னே செல்பவர். தனது கருத்துகளை எழுத்தின் மூலமும் காட்சி ஊடகங்களின் வழியேயும் வெளிப்படுத்தி வருகிறார். அண்மையில் 'செங்கடல்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வரும் அகதிகள் மற்றும் இலங்கைக் கடற்படையாலும் கொல்லப்படும் தமிழக மீனவர்களின் வாழ்வியலை மையமாகக் கொண்டிருக்கும் இப்படம் தணிக்கை குழுவினரால் தடைசெய்யப்பட்டுள்ளது. அந்தத் தணிக்கையை எதிர்த்து விடாப்பிடியாகப் போராடிக்கொண்டிருக்கும் லீனா வல்லினத்தோடு தீர்க்கமாகவும் உற்சாகமாகவும் உரையாடினார்.
இன்றைய உங்களின் கடைசி நிமிட வாழ்வை பகிர்ந்து கொள்ள முடியுமா?
ம்
பேட்டி கேள்வி ஒன்று
கேளுங்க நவீன்
இந்த நிமிடம்
அந்த சாளரத்தின் கம்பிகள்
பிரித்த என் உடல்
நான்கைந்து பிம்பங்கள்
சூனியக்காரி
ஆர்வத்தில் எட்டிப்பார்க்க தலையை நீட்டியவள்
சிதறி செத்தாள்
பிணத்தைக் கண்டும்
குனிந்த மற்றொருவன்
மண்டை மோதி
மோசக்காரி
முணங்கி செத்தான்
64 தந்திரங்கள் தெரிந்தவள்
பணம் பறிப்பாள்
காரியத்திற்கு படுப்பாள்
எல்லாம் தெரிந்தவள் போல நடிப்பாள்
எண்ணிக் கொண்டே ள் விகுதியை
அழுத்தியதில் நாக்கறுந்தவன்
முனை சறுக்கி செத்தான்
நச்சுப் பாம்பு
தீவினை வைப்பவள்
செய்தி பரவியதில்
கூடிய மக்கள்
நெரிசலில் சன்னல் வெடித்து
மொத்த பேரும் செத்தனர்
காட்சி 1 2 3 4 11 1 1
அலுத்துப் போய்
சந்தைக்கு திரும்பினேன்
மரண பீதி சூழ்ந்ததில்
கறுப்புத் துணி வியாபாரம் சூடு பிடித்திருந்தது
கண்களுக்கென்று வித விதமான காப்பீட்டுத் திட்டங்கள்
சன்னல் பழுதுபார்ப்பவர்கள்
பெருத்திருந்தார்கள்
30 நாட்களில் நீங்களும் கவிதை எழுதலாம்
எல்லோருக்கும் பிடித்த மாதிரி என்பதை சற்று உரக்க கூவினான்
புத்தகம் விற்றுப் போன தம்பி
2. உங்களின் கலை வெளிப்பாட்டிற்கான முதல் தருணத்தை நினைவு கூற முடியுமா?
வயதுக்கு வந்த நேரம், என் அம்மா அருகில் இல்லை, கிராமத்திற்கு எதோ காது குத்திற்குப் போயிருந்தார்கள். அப்பாவிடம், " கிலி பிடித்த குரலில், அப்பா, பாவாடையெல்லாம் ஒரே ரத்தம்" என்று சொன்னேன். வெரிகுட் என்றவர் அம்மாவுக்குத் தொலைபேச மொத்தக் குடும்பமும் பரபரப்பாக கிளம்பி வந்துக் கேட்ட ஒரே கேள்வி, நீ ரத்தத்தை முதன்முதலாக எப்ப பார்த்தாய், சரியான நேரத்தை சொல்லு, சாத்திரம் எழுதனும் என்று! இன்று வரை இதற்கு என்னிடம் பதிலில்லை. அப்புறம் அவர்களாகவே என் அப்பாவிடம் சொன்ன நேரத்தை வைத்து எதோ கணித்து ஜோசியருக்கு நோட்டு எழுதினார்கள்.
உங்கள் கேள்வி ஏதோ இதைத் தான் நினைவுக்கு கொண்டு வருகிறது.
3.உங்களின் தொடக்ககால எழுத்தின் வகை என்னவாக இருந்தது? இன்றைய மன நிலையில் அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
என் தொடக்க கால எழுத்து, முதல் காதலின், அந்த காதல் தந்த முத்தம் போன்றவை. என் குழந்தமை வாசம் கூடியவை. என் சதுரகிரி மலை போல, அத்தியாறு போல, புன்னை மரம் போல, மாவூத்து போல நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கும் ஒரு சொல்லை எழுதிவிட வேண்டும் என்ற வேட்கை கூடிய முயற்சி. அந்தந்த காலகட்டங்களின் சாட்சி தானே எழுத்தும்.
ஒருவித தூய நம்பிக்கைகள் நிறைந்தது என் தொடக்ககால கட்டம் என்று இப்போது நினைத்துப் பார்த்தால் தோன்றுகிறது.
4.பெரும்பாலும் ஆண்களே இயங்கி கொண்டிருக்கும் இலக்கியத்திலும் திரையிலும் நீங்கள் மிகத் தீவிரமாகவே இயங்கி வருகிறீர்கள். தொடக்கத்தில் அதன் சவால்கள் எத்தகையதாக இருந்தது?
பிறந்த குழந்தையை ஆணா, பெண்ணா என்பதை இடுப்புத் துணியை விலக்கிப் பார்த்து தெரிந்துக் கொள்வார்கள்,. அதே மனநிலை தான் இலக்கியத்திலும், கலைத்துறையிலும் நீடிக்கிறது. சதா பிரதியின் ஜட்டியைக் கழட்டிப் பார்க்கும் அறிவுலகில் என்ன உரையாடுவது, எங்கிருந்து உள்ளேறுவது, எப்படி இயங்குவது என்பதை துப்புத் துலக்கி கொண்டிருக்கிறேன். கிடைத்தால் சொல்கிறேன். பாலுறுப்புகளின் வடிவம் பார்த்து ஆணா, பெண்ணா, வேறா, ஆண்பிரதியா, பெண் பிரதியா , வேறு பிரதியா என்று வரையறை செய்து விட முடியாது என்பதை என் தீவிரத்தை தொடர்வதற்காக நம்ப விரும்புகிறேன் .
5.இலக்கியத்திற்கான அல்லது திரைப்படத்திற்கான உங்கள் தொடக்ககால ஆயர்த்தங்கள் அல்லது பயிற்சிகள் பற்றி கூறுங்கள்?
உரையாடலில் எனக்கு தீவிர மோகம். அதுவே என் இன்றைய எல்லா ஆயுத்தங்களின் அடிப்படையும். பலவிதமாக, பல்வேறு உயிர்களிடம், என்னை சுற்றியுள்ள இருப்புடனும், இன்மையுடனும், உரையாடும் முயற்சியாக எழுத்து, பிம்பம்,எண்ணம், செயல், கருத்து, அரசியல்,வாசிப்பு, பிரக்ஞை, இன்ன பிறவையையும் பார்க்கிறேன். சினிமாவுக்கென்ன நூற்றி சொச்சம் வயது தானே ஆகிறது. எழுத்துக்கு வயது சில ஆயிரங்கள் சொச்சம். நமக்கு நாற்பதாயிரம், ஐம்பதாயிரம் வயதென்கிறார்கள். தொழில் நுட்பம் எதுவும் வசப்படாத போதும் உரையாடிக் கொண்டு தானே இருந்தோம்.புதிய சொல்லென்பதோ, பிம்பமென்பதோ ஏதுமில்லை. நினைவோடையின் ஒரு கூழாங்கல்லைப் பொறுக்கியதோடு , அதைக் கொண்டே என் கண்ணாடியை அடித்து உடைக்காத வரை ஒரு புதிய உரையாடலை தொடங்கியபடி இருப்பேன்.
தொடக்ககால ஆயுத்தங்கள் என்று சொல்லப் போனால், என் பள்ளிப் பருவத்தில் கம்யூனிஸ்ட் மேடைகளில் இயக்கப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்த கால கட்டத்தில், பாடியே புரட்சியை கொண்டு வந்துவிடலாம் என்று தீவிரமாக நம்பியிருக்கிறேன். மணிக்கணக்கில் தலைவர்கள் பேசி மக்களை கலைக்கிறார்கள், என் பாடலில் மக்களை திரட்டி ஒன்றுபட வைக்க முடியும் என்ற உறுதியோடு தான் சொற்களைப் போட்டு எழுதி பாடித் திரிவேன். எனக்கு தோழர்கள் கே.ஏ.குணசேகரனும், எம்.பி.சீனிவாசனும் தான் புரட்சிகர இந்தியாவை சாத்தியமாக்கக் கூடியவர்கள் என்று தோன்றும். சொற்களின் மீதும், அவற்றின் கூடிய இசையின் மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையை ஏற்படுத்தியது என் பள்ளி பருவ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கலை இலக்கியப் பெருமன்ற மேடைப் பாடல்கள் தாம். பாரதி, பாரதிதாசன் போன்று மக்கள் கவியாக வேண்டும் என்ற கனவுமிருந்தது. அவையில் பேச்சாளியாய், என் முன்னே கூடியிருக்கும் பார்வையாளர்களுக்கு முன் “அறிவை விரிவு செய், அகண்டமாக்கு, விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று பாரதிதாசனாய் உறுமும் போது கவிதையில் கட்டுண்டிருந்தது என் குழந்தை மனம். பொறியியல் கல்லூரி காலங்களிலும் தமிழ்த்துறை மாணவி போல போய் வா கடலலையே என்று கவிதை எழுதிக் கொண்டு கவியரங்கங்களில் பங்கு கொண்டு அலைவதை வகுப்புத் தோழர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள். தொழில்முறை படிப்பென்பதால் கடுமையான கெடுபிடிகள் இருக்கும். வகுப்புகளை, பிராக்டிகல் வொர்க்ஷாப்புகளை நண்பன் ஒருவனுக்கு கவித்துவமான காதல் கடிதம் எழுதுவதற்காக தியாகம் செய்திருக்கிறேன். பின்னாளில் இலக்கியத்தை தேர்வு செய்தது,, கவிதையை தீவிரமாக பயற்சி செய்ய வேண்டிய துறையாகவும் மேற்கொண்டது என்பதெற்கெல்லாம் வித்தாக என் பதின்பருவ ஆர்வங்களும் நம்பிக்கைகளும் இருந்திருக்க முடியும்.
கி.மு. கி.பி என்பதுபோல எனக்கும் அப்பாவிற்கு முன், அப்பாவிற்குப் பின் என்ற காலகட்டங்கள் உண்டு. என் அப்பா தமிழ்ப்பேராசிரியர், இயக்குனர் பாரதிராஜாவின் திரைப்படங்களில் முனைவர் பட்டம் பெற்றவர். எங்கள் வீட்டு வி.சி.பியில் சதா பதினாறு வயதினிலேயும், நிழல்களும், கிழக்கே போகும் ரயிலும் ஓடிக் கொண்டே இருக்கும், ஃபிலிம் சொசைட்டி திரையிடல்களில் அப்பா மடியில் தூங்கியது போக பார்த்த படங்களும் நிழல் நினைவுகள். சினிமா கட்டுரைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்து தரச்சொல்லுவார் அப்பா. திக்கித் திணறி டிக்ஷனரிகளை கிழித்து தோராயமாக செய்து தருவேன். வாயில் நுழைய முடியாத சினிமா சொல்லாடல்கள் மனதில் சும்மா பெயருக்காவது பதிந்தது அப்போது. மற்றபடி அப்பா தேர்வு செய்யும் படங்களை தான் நான் திரையரங்குகளில், அதுவும் அவரோடு கூடத் தான் போய் பார்க்க முடியும். வளர்ப்பில் அவர் ரொம்ப கறார்.
கல்லூரி காலங்களில் மாணவர் இயக்கங்களோடு இணைந்து கிராமங்களில் தெரு நாடகங்கள் போட்ட அனுபவமும் அது தந்த பாடங்களும் தான் மக்கள் சினிமாவை நோக்கி என்னைத் தள்ளியது எனலாம். பின்னர் வெகுஜன சினிமாவில் இயக்குனர்கள் பாரதிராஜாவோடும், சேரனோடும் கூட பெரிதும் ஒவ்வாமல் தொடர்ந்து வேலை செய்ய முடியாமல் போனது கூட தற்செயலானதல்ல. நானறிந்த சமூகமாக சினிமா இல்லை என்பதும் ஒரு நிலப்பிரபத்துவ செட்அப்பாக சினிமாத் துறை எனக்கு தெரிந்ததும், எனக்கான தனியான சினிமா பயணத்தை தொடங்கினேன்
6.எது உங்களின் சிந்தனை பரிணாமத்திற்குக் காரணமாக இருந்தது?
எம் சமூகத்தில் ஏன் சிலருக்கு மட்டும் உணவு கிடைக்கிறது? ஏன் பலரின் உயிருக்கு மதிப்பில்லை? ஏன் ஒரு சாரார் மற்றும் சமமாக நடத்தப் படுவதில்லை? ஏன் ஒடுக்கப்படுகிறார்கள்? இந்த ஏற்றத்தாழ்வின் ப்ரோக்ராம்மிங்கை யார் செய்கிறார்கள்? என்ற கேள்வி தான் நம் எல்லோருடைய சிந்தனைக்கு வித்தாக இருக்க முடியும் என்று நம்புகிறேன். பன்னாம் பெரிய தத்துவங்கள், கருத்தியல்கள், வரலாறுகள் எல்லாம் அடிமை என்றொருவர் இருப்பதால் தானே இருக்கின்றன.
7.இலக்கியத்தில் அல்லது இயக்கத்தில் யாரை முன் மாதிரியாகக் கொள்கிறிர்கள்?
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையும், பெண் ஏன் அடிமையானாள் புத்தகமும் படிக்க கிடைக்காமலிருந்திருந்தால் இவ்வளவு இறுமாப்போடு உங்களோடு உரையாடிக் கொண்டிருக்க மாட்டேன். பெரியார் என்ற கிழவன் இல்லையென்றால், பெண் என்பவளுக்கு இருப்பு மட்டுமல்ல, நினைவே மறுக்கப்பட்ட ஒரு சமூகத்தில் அவ்வையாரையும், வெள்ளிவீதியாரையும், காரைக்கால் அம்மையையும், ஆண்டாளையும், முத்துப்பழநியையும்,இன்னும் என் மூதாய்களை தேடிப் பகுத்து அறிந்துக் கொண்டிருக்க மாட்டேன். என் முன்னோரை தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லையென்றாலும், என் முன்னோடியாக பெரியாரை தெரிவு செய்திருக்கிறேன்.
இடதுசாரி குடும்ப பிண்ணனி என்பதால் கார்க்கியின் தாய் நாவல் தான் நான் வாசித்த முதல் இலக்கியப் பிரதி. புரட்சியில் இளைஞர்கள், ஜமீலா, முதல் ஆசிரியன், செம்மணி வளையல் போன்ற சோவியத் இலக்கியமும், தாமரையும், பாரதி –பாரதிதாசன் பட்டுக்கோட்டை கலயாண்சுந்தரனாரும் என் தந்தை எனக்கு அறிமுகப்படுத்தியவை. கல்கியும், சாண்டில்யனும், பாலகுமாரனும், ரமணிசந்திரனும் என் அம்மாவின் அலமாரியில் திருடியவை. சுயதேர்வு வந்த பிறகு ஜெயகாந்தனும், அம்பையும் தான் என் ஆதர்ச எழுத்தாளுமைகள். சந்திக்கிற ஆண்களில் ஹென்றியைத் தேடும் நோய் பிடித்து ஆட்டிய காலம் என் பதின் பருவம். அம்பையின் சிறகுகள் முறியும் படித்துவிட்டு நிம்மதியில்லாமல் வெறிபிடித்து அலைந்த இரவுகள் அநேகம். சிறுகதையில் மாண்டோ பெரியவனா, கடவுள் பெரியவனா என வியந்ததுண்டு. கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், புதுமைப் பித்தன், ஜி.நாகராஜன், அசோகமித்திரன், லா.ச.ரா,வண்ணநிலவன், வண்ணதாசன், ஆதவன், சுந்தர ராமசாமி போன்றோரை முறையாக வாசித்தது ஜெரால்டோடு கூடிய நட்பு காலத்தில் தான். தமிழ் மாணவரென்பதால் ஜெரால்டு காதல் நிமித்தம் என் நூலகராகவும் உதவி செய்தார்.
கவிதையில் பிரமிள், கலாப்ரியா, ஆத்மநாம், சி.மணி, நகுலன், பிரம்மராஜனின் மொழிபெயர்ப்புகள், சுகுமாரன், மனுஷ்யபுத்திரன்,யவனிகா ஸ்ரீராம், ஹெச்.ஜி,ரசூல், ரிஷி, சுகந்தி சுப்ரணியன் என்று ஒரு வாசிப்பு தடம் எனக்குண்டு.
ஈழ இலக்கியத்தில் புனைவில் ஷோபா சக்தியும், கவிதையில் சேரன், வ.ஐச.ஜெயபாலன், சிவரமணியும், கட்டுரைகளில் அ.முத்துலிங்கமும், மொழியியலில் நுஃப்மானும், எனக்கு நெருக்கமானவர்கள்.
ஆங்கில வழி தாஸ்தாவெஸ்கி,டாட்ஸ்டாய், செகாவ், மிலன் குந்தரா, பாமுக், மார்குவெஸ், கமலா தாஸ், மஹாஸ்வேதா தேவி,அருந்ததி ராய், அமிதவ் கோஷ், ருஷ்டி, கிரண் தேசாய், காலத் ஹுஸைனி, சில்வியா பிளாத், செக்ஸ்டன், சிக்சூ, உல்ஃப், கேதெ ஆக்கர், அக்மதோவா, கொலண்டாய், ட்ரின் மின் ஹா, காஃப்கா, ஜெர்மைன் க்ரீர் ஆகியவர்களையும் தரிசித்ததுண்டு.
சம காலத்தில், நான் மிக நேசிக்கும் கவிஞர்கள் லஷ்மி மணிவண்ணன், பாலை நிலவன், கண்டராதித்தன், மாலதி மைத்ரி, செல்மா ப்ரியதர்ஷன், இசை, இளங்கோ கிருஷ்ணன் சிறுகதை எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா, அசதா நாவலாசிரியர்கள் பாமா, ஜோ.டி.குரூஸ், ஜாகிர் ராஜா.
அ.மார்க்ஸும், மார்க்ஸின் எழுத்தும் என்றென்றைக்கும் என்னை ஒரு கலகத்திற்கு தயார்படுத்திக் கொண்டேயிருக்கும் உந்துசக்திகள். சாஹிப் கிரான் சுயத்தை இழந்து அன்பிற்காக நிற்கும் என் இலக்கிய தோழமை.
இப்படி எல்லோரும், எல்லாமும் என்னை ஏதோ வகையில் தொடர்ந்து இயங்க வைக்கும் முன்மாதிரிகள் தாம்.
8.இயக்குனர் அல்லது கவிஞர் எனும் ஆளுமைகளைத் தவிர்த்து வேறெந்த
மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள் ?
(கஞ்சா கடத்துவது மற்றும் அடிப்பது, தரகு வேலை பார்ப்பது, பிச்சை எடுப்பது, நண்பர்களுடன் குடித்து விட்டு ரோட்டில் விழுந்துக் கிடப்பது, இவை தவிர தான் வாசிப்பதும், எழுதுவதும், படைப்பதும். ஏங்க உங்களுக்கே ஓவராகத் தெரியவில்லையா?)
இலக்கியம் மற்றும் சினிமா வாசிப்பும், பயணமும், கலை-கோட்பாடு குறித்த உரையாடல்களில் ஒரு மாணவியாகப் பங்கேற்பதும், திரைப்பட விழாக்களுக்கு செல்வதும், அரசியல் கட்டுரைகளை தமிழிலும், ஆங்கிலத்திலும் தேடி விரும்பி படிப்பதும் தவிர மிச்ச நேரத்தில் தான் எழுதுவதும், திரைப்படங்கள் உருவாக்குவதிலும் செலவிடுகிறேன். மாற்று சினிமா களத்தில் இந்தியா முழுவதும் தீவிரமாக பயணம் செய்து, சுவாதீன மற்றும் ஆவணப்பட இயக்குனர்களோடு கொண்டுள்ள நட்பும், அவர்களோடு தணிக்கைக்கெதிரான, கருத்துச்சுதந்திரத்திற்கான போராட்டங்களில் இணைந்து செயல்படுவதும் எனக்கு உத்வேகம் அளிப்பவை. பெண்ணிய உரையாடல்களிலும் கேரள, வங்காள கன்னடத் தோழமைகளோடு பங்குபெற்றிருக்கிறேன். தமிழகத்திலும், மற்ற மாநிலங்களிலும் இருக்கும் பல்கலைகழகங்களுக்கு, கல்லூரிகளுக்கு, பள்ளிகளுக்கு தொடர்ந்து பயணித்து ஆவணப்பட திரையிடல்களும், சாதி-பெண்ணியம்- கலாசார அரசியல்-சுற்றுப்புறச்சூழல் குறித்த கலந்துரையாடல்களும் செய்ததில் நான் கற்றுக் கொண்டது ஏராளம்.
என் ஆவணப்படங்களைத் திரையிடுவதற்காக தமிழகத்தின் கிராமங்கள் தோறும் சென்றதும் மக்களை சந்தித்து உரையாடியது, விவாதித்தது, அவர்களின் கவலைகளை, நம்பிக்கைகளை, அனுபவங்களை, கோபங்களை, ஆதங்கங்களைப் பகிர்ந்துக் கொண்டதும் நான் கற்ற சிறந்த கல்வி. பள்ளி, பொறியியல் கல்லூரி படிப்பை விட என் சமூகம் பற்றிய புரிந்துணர்வை ஆவணப்ப்டங்கள் மூலம் மக்களோடு உரையாடியதன் வழியே தான் பெற முடிந்தது. கருத்தியல் ரீதியாகவும், மார்க்சியம், தலித்தியம், பெண்ணியம் போன்றவற்றை கோட்பாடாக படிப்பதை விட மக்களின் அன்றாடப் போராட்டங்களின் வழி ஊடாடிப் பார்ப்பது வேறு படிப்பினைகளைத் தருகிற அனுபவம்.
9. கனிமொழி , சல்மா , குட்டி ரேவதி , மாலதி மைதிரி, சுகிர்தராணி போன்ற கவிஞர்கள் ஆரம்பகாலத்தில் மிகவும் பிரபலமாகத் தமிழ்ச் சூழலில் பேசப்பட்டார்கள். இன்று அவர்களின் இலக்கிய செயல்பாடுகள் என்ன?
ஆரம்ப காலம், முடிவு காலம் என்றெல்லாம் இருக்கிறதா என்ன? அவர்கள் இப்போதும் எழுதிக் கொண்டும் இயங்கிக் கொண்டும் தான் இருக்கிறார்கள்.
கவிதையைத் தவிர்த்து அரசியலிலும் ஈடுபடுகிறார்கள். நல்ல விசயம் தானே?
பெண்கள், அதுவும் படைப்பாளிகள் அரசியலுக்கு வருவது ஆரோக்கியமானது தானே?
ஆனால் என்ன, கனிமொழியின் தொலைபேசி அழைப்புகளை யாரும் ஒட்டுக்கேட்காமல் இருந்திருக்கலாம், அல்லது இந்த நீரா ராடியா வின் நட்பையாவது அவர் தவிர்த்திருக்கலாம். 2ஜி, 3ஜி ஊழலெல்லாம் நமக்கும் தெரியாமல் போயிருக்கும். கருவறையிலேயே ஊழல் வாசனை பிடித்திருக்காங்களே மேடம் என்ற அருவருப்பையாவது நாம் தவிர்த்துக் கொண்டிருக்கலாம். குடும்ப பெருமையைக் காப்பாற்றுவதில் அண்ணன்களையும் விஞ்சிவிட்டதால் நம்ம இலக்கியவாதிகள் குலவிளக்கு, குலக்கொழுந்து என்று ஏதாவது விருதை அறிவிக்க, அதற்கு மனுஷ்யபுத்திரன் பாராட்டுப் பத்திரம் வாசிப்பதும் விரைவில் நடக்கும்.
கவிஞர் சல்மா துவரங்குறிச்சியில் உதயசூரியன் சின்னத்தில் நின்று தோற்றார். இப்போது சமூக நலத்துறையில்(?) அவர் சேவை செய்ததற்கு கருணாநிதியின் வீட்டு மோசடியில் பங்காக திருவான்மியூரில் ஒரு கோடி மதிப்புள்ள வீட்டை “சமூக சேவகர்” என்ற அடிப்படையில் பரிசாக பெற்றிருக்கிறார். இனி அந்த வீட்டில் சாவகாசமாக அமர்ந்து மூன்றாம் சாமம் எழுதுவார்.
குட்டி ரேவதி எழுத்தாளர் சிவகாமியோடு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். மாயாவதியின் ஆயிரத்தி ஒன்றாவது சிலையை தமிழ்நாட்டில் நிறுவும் வேலை அவருக்குத் தரப்பட்டிருக்கலாம். அவர் விலகி வந்து விட்டார் என்று நம்புகிறேன். ஒரே ஆசுவாசம், அவருடைய புதிய தொகுப்பும், பழைய நான்கு தொகுப்புகளும் அடையாளம் பதிப்பகம் மூலமாக வெளிவந்திருப்பது தான். அவருடைய பூனையைப் போல அலையும் வெளிச்சம் என்ற முதல் தொகுப்பு நான் இரண்டாயிரமாவது ஆண்டு எழுத வந்தபோது, எனக்கொரு முன்மாதிரி. அந்த வகையில் அவருக்கு என்றும் நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன்.
மாலதி மைத்ரியும் சுகிர்தராணியும் கவிதையில் எனக்கு முக்கியமானவர்கள். எழுத்தில் மட்டும் இல்லாது சமூக இயக்கங்களிலும் பங்கு பெறும், தலைமையேற்கும் ஆற்றல் மிகுந்தவர்கள். நானும் சுகிர்தராணியும் தமிழ்க்கவிஞர் இயக்கத்தில் சேர்ந்து இயங்கியிருக்கிறோம். மாலதிமைத்ரியோடு ஈழத்தமிழர் தோழமை குரலின் இயக்கங்களில் இணைந்து பொறுப்புகளைப் பகிர்ந்துக் கொண்டிருக்கிறேன். மிக உற்சாகமான காலங்கள் அவை. தமிழ் இலக்கியப் பண்பாட்டுச் சூழலில் அரசியலாகவும் படைப்பாளிகள் சுதந்திரமாக இணைந்து பணி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய நாட்கள்.ஆனால் எல்லாவற்றையும் காலச்சுவட்டிற்கு காட்டிக் கொடுக்கும் இவர்களின் அரசியல் மிக மோசமானது. பார்ப்பனீயத்திற்கு, ஆட்காட்டி அரசியலுக்கு, இலக்கிய கமிசாருக்கு இருவரும் காட்டும் விசுவாசம் இவர்கள் பேசும் அரசியலுக்கே எதிரானது. காலச்சுவடு பெரியாரைக் கொச்சைப் படுத்துவதற்கு, ’காலச்சுவடால் அறியப்பட்ட நான்’ என்று தன் தொகுப்பின் முன்னுரையில் எழுதும் மாலதி மைத்ரி என்ன பதில் வைத்திருக்கிறார். இஸ்லாமியருக்கு எதிரான கருத்துக்களைப் பரப்புவதை, பார்ப்பன சங்க விளம்பரங்கள் வெளியிடுவதை இவர்கள் உள்ளிருந்துக் கண்டித்திருக்கிறார்களா?
டெல்லிப் போராட்டத்தை பிரேமா ரேவ்தியை வைத்து ஃபேஷன் பேரேடு என்று எழுத வைத்தது காலச்சுவடு.அரசாங்க எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு, பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துதல், சுயநிர்ணய உரிமை என்ற அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி கவிஞர்கள், படைப்பாளிகள், மாணவர் இயக்கங்கள், மீனவர் இயக்கங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரவாணிகள், பெண்கள் அமைப்பினர் அன்ற பல ஜனநாயக அமைப்புகள் ஒருங்கிணைத்து உருவான ஈழத்தமிழர் தோழமைக் குரலின் முக்கிய ஒருங்கிணப்பாளரான மாலதி மைத்ரி இதற்கு உடன்படுகிறாரா? டில்லியில் பாராளுமன்றத்திற்கு முன் மறியல்,ஊர்வலம், தொடர் உண்ணாவிரதம், சிங்கள தூதரக முற்றுகை-கைது, ஜவகர்லால் நேரு பல்கலைகழகத்தில் எதிர்ப்பு ஊர்வலம் என்று கடுமையான தொடர் போராட்டங்களை மேற்கொண்ட மக்கள பிரதிநிதிகளை ஏதோ மந்தை போல சித்தரிக்கும் தகுதியும், தார்மீகமும் காலச்சுவட்டிற்கு இல்லை என்பதை ஏன் மாலதி மைத்ரி உணரவில்லை.
வால்பாறை தமிழ்க் கவிஞர் இயக்கக் கூட்டத்தையொட்டி, மதுவின் பிடியில், இளங்கவிஞர்கள் ஆதிக்க மனநிலைக்கு மாறுகிறார்கள் என்று சுகிர்தராணி தலித் அரசியல், இலக்கிய அல்லது தலித நேச சக்திகளுக்கு காட்டிக் கொடுத்திருந்தால் நேருக்கு நேராக விவாதித்திருக்கலாம். வடிக்கட்டிய இந்துத்துவ, பார்ப்பன,முதலாளியான கண்ணனுக்கு காட்டிக்கொடுக்கும் எடுபிடி வேலைக்கு சுகிர்தராணி தலித அரசியல் என்றல்லாம் தரகு செய்யாமல் இருந்திருந்தாலும் மன்னிக்கலாம்.
10. உலகம் முழுதும் பல நாடுகளுக்குச் சென்று உங்கள் ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் மக்களிடம் அறிமுகப்படுத்தி வந்துள்ளீர்கள். அது குறித்தான அனுபவங்களைக் கூற இயலுமா?
ஐரோப்பிய ஒன்றிய ஃபெலோஷிப்பில் இந்தோ ஜெர்மன் கலாசாரப்
பகிர்வின்பால் ஆவணப்படப் பயிற்சிப் பட்டறையில் கார்டிஃப்பின் தாம்சன் மீடியா பவுண்டேஷனிலும், திரைப்படங்களின் மூலம் சமூக சிக்கல்களை அணுகுவது பற்றிய ஃபின்லேண்டில் உள்ள டாம்பரே பல்கலைகழகத்திலும், புதுதில்லி இன்ஸ்டிடூயூட்டின் தயாரிப்பு மேற்பார்வையில் பங்கேற்று ’கனெக்டிங் லைன்ஸ்’ என்ற மாணவ்ர் அரசியலைக் குறித்த ஆவணப்படத்தை என் ஜெர்மானிய இயக்குனர் தோழி மிக்கேலாவுடன் எடுத்தது என்னை வேறு தளத்திற்கு எடுத்துச் சென்றது. அந்த ஃபெலோஷிப்பில் ஐரோப்பா வந்திருந்த தருணத்தில் தான் லண்டனில்,ஃபிரான்ஸில், ஜெர்மனியில், சுவிஸ்ஸில் ஈழத்து நண்பர்களின் அழைப்பில் என் ஆரம்ப கால ஆவணப் படங்களைத் திரையிட்டேன். ஒற்றையிலையென கவிதை நூலைப் பற்றிய விமர்சனக் கூட்டங்களும் நடந்தன. அவர்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.
சிகாகோ சர்வதேச பெண் இயக்குநர்கள் திரைப்பட விழாவுக்காக அமெரிக்கா சென்றிருந்தபோது, அமெரிக்க தமிழ்ச் சங்க தோழமைகள் பல்வேறு திரையிடல்களையும், விவாதங்களையும் , சந்திப்புகளையும் ஒழுங்குபடுத்தினார்கள். சங்கரபாண்டி, விஸ்வநாதன் போன்ற சிறந்த தோழர்களையும், பல்வேறு பல்கலைகழக இந்திய அமெரிக்க நண்பர்களையும், செயல்பாட்டாளரகளையும், ஃபிரண்ட்ஸ் ஆஃப் சவுத் ஆசியா தோழர்களையும் அமெரிக்கப் பயணம் பரிசளித்தது.
சர்வதேச பெண் ஊடகவியலாளர்களின் அமைப்பில் செயலாற்றியதால் அமெரிக்காவிற்கு சர்வதேச மாநாட்டு வேலைகளுக்கு சென்ற தருணங்களில் மீண்டும் தமிழ்ச்சங்க நண்பர்கள மூலம் என்னுடைய அப்போதைய புதிய படங்களின் திரையிடல்களும், சந்திப்புகளும் நடந்தன. அந்த சமயம் கனடாவிலும் ஈழத் தோழமைகள் சேரன், சுமதி ரூபன் உதவியால் படங்களைத் திரையிடும் வாய்ப்பு கிடைத்தது.மலேசியாவிற்கு ஆசியத் திரைப்பட விழாவிற்கு நடுவராக வந்த அனுபவமும் வாய்த்தது. மலேசிய தமிழ் நண்பர்களின் முயற்சியில் மலேசியத் தமிழ்ச் சங்கத்திலும் , சிங்கை தமிழ் நண்பர்களின் அன்பின் பேரில் சிங்கப்பூர் நூலகத்திலும் ஆவணப்படங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் வாய்ப்பும் பெற்றேன்.
அகில உலக சோஷலிஸ்ட் இளைஞர்கள் மாநாட்டிற்காக வெனிசுவலா சென்றது மிக அரிய அனுபவம். மிலிட்டரி மேன்ஷனில் தங்கியதும், பொருட்களைத் திருடு கொடுத்ததும், வேளைக்கு ஒரு பிரட்டும், கால் கோழியும், அரை வாழைப்பழமும் ரேஷனில் சாப்பிட்டதும், லத்தீன் அமரிக்கா பற்றிய என் படிமங்களை மாற்றிப் போட்ட பயணமது. சேவெசின் 11 மணி நேர உரையையும் ஒரு எழுத்து ஸ்பானிஷ் கூட தெரியாமல், புல் தரையில் அமர்ந்து கேட்டது பசுமரத்தாணி போல நினைவிலாடுகிறது. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஊடகச் செயல்பாடுகளைப் பற்றிய கட்டுரைகள் வாசித்ததும், ஆவணப்படங்களை திரையிட்டதும், பார்த்ததும், இன்னும் மாநாட்டின் இறுதி தீர்மானங்களின் போது இடதுசாரி தோழர்களோடு ஈழம் குறித்த பலத்த உரையாடல்களை மேற்கொண்டதும், இலங்கை ஜே.வி.பி,மற்றும் இந்திய மார்க்ஸிஸ்டுகளோடு கடுமையாக வேறுபட்டு சர்வதேச அரங்கில் ஈழம் குறித்த சரியான சித்திரத்தை வழங்கப் போராடியதுமாய் மிகத்துடிப்பான நாட்கள் அவை.
தேவதைகள் என் ஆவணப்பட முயற்சியில், சர்வதேச அரங்கில் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குநராக என்னை நிலைநிறுத்தியது. பெர்லின் திரைப்பட விழா, கென்யாவின் சர்வதேச பெண் திரைப்பட விழா, முனிச் சர்வதேச திரைப்பட விழாவில் ஹாரிசான் விருதுக்காக போட்டியிட்டது, மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் தங்கச் சங்கு விருது வாங்கியது, ரோம் திரைப்பட விழாவில் பங்கு பெற்றது, இன்னும் பெல்போர்ன், பெல்கிரேட், சவுத் ஆப்பிரிக்கா என்று சர்வதேசத்தில் பரந்துபட்டு என்னை திரைப்படைப்பாளியாய் கொண்டு சென்றது தேவதைகள் தான்.
காமன்வெல்த் ஃபெலொஷிப்பில் லண்டன் வந்திருந்தபோது தான் ஷோபா சக்தியோடு நட்பு வலுத்தது. ஃபிரான்ஸிலும், இந்தியாவிலும் சம்பிரதாயமாக சந்தித்திருந்தாலும், லண்டன் சந்திப்பு இடைவெளிகளை அன்பால், உரையாடலால், புரிதலால் நிரப்பி, சேர்ந்து பணி செய்யும் இடத்திற்கு நகர்த்தியது.
11. உங்கள் குறும்படங்கள் சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவர காரணியாக இருந்துள்ளதா?
ஒரு திரைப்படத்தால் சமூகத்தில் மாற்றம் வந்துவிடும் என்பது அதீத நம்பிக்கை. ஆனால் உறுதியாக ஒரு வலுவான உரையாடலை நிகழ்த்த முடியும். இடையீட்டைக் கோர முடியும். ஒரு துண்டு வீடியோ, மக்களிடம் தீயாய் பற்றி ஒரு மக்கள் இயக்கமாக மாறியதை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். மாத்தம்மா, பறை, பலிபீடம் போன்ற என் முயற்சிகள் அத்தகையவையே! அரசாங்கத்தின் இடையீட்டைக் கோரிப் பெற்றதில், இப்படங்கள் வெற்றி பெற்றன.
ஆரம்ப கட்டங்களில் அரிய திரைப்படைப்புகளை தந்துவிட வேண்டும் என்ற உந்துதலெல்லாம் எனக்கில்லை. எனக்கு தொழில்நுட்பம் கைவருகிறது, என் மக்கள பிரச்சினையை ஏதாவதொரு வகையில் வெளிக் கொண்டு வர வேண்டும், சரி, படமெடுப்போம் என்ற வகையிலேயே நான் இயங்கத் தொடங்கினேன். ஒரு மீடியா ஆக்டிவிஸ்டாகத் தான் என்னை வரித்துக் கொண்டேன்.கிராமங்கள தோறும் தெருமுனைகளில், பள்ளிக்கூடங்களில், கல்யாண மகால்களில், தேரடியில், நூலகங்களில், பஞ்சாயத்து அலுவலகங்களில், மாட்டுக் கொட்டில்களில் கூட படங்களைத் திரையிட்டிருக்கிறேன். நிழல் திரைப்பட இயக்கம், அமுதனின் மறுபக்கம் திரைப்பட இயக்கம், இடதுசாரிகளின் இளைஞர்-பெண்கள்-பண்பாட்டு இயக்கங்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், என்,ஜி,ஓக்கள், பல்கலைகழகங்கள என்று என் படங்களை கிராமங்கள் தோறும் கொண்டு செல்வதற்குப் பின் ஒரு பெரிய படை இருக்கின்றது. ஒவ்வொரு திரையாக்கமும், ஒவ்வொரு திரையிடலும் எனக்கு சமூகம் பற்றிய புதிய பாடங்களை கற்றுத் தந்தன.
என்.ஜி.ஓக்களோடு இணைந்து வேலை செய்வதை என் மீதான் விமர்சனமாக வைக்கிறார்கள். என்னுடைய ஒன்பது ப்டங்களில் என்.ஜி.ஓக்களின் நேரடி தயாரிப்பில் இரண்டே படங்களைத் தான் செய்திருக்கிறேன். ஒரு சில படங்களுக்கு ம்க்களை அணுகி வேலை செய்வதற்கான ஊட்கமாக அவர்கள் பயன்பட்டிருக்கிறார்கள். அதற்கான கிரடிட்டை படத்தில் தந்திருப்பேன். அப்படி ஒட்டுமொத்தமாக என்.ஜி.ஓக்களை பொதுமைப்படுத்திப் பார்த்து, அவர்களைத் தவிர்ப்பது தேவையற்றதும் கூட என்றே நான் நம்புகிறேன். அவ்ர்கள் மூலமாக இன்னொரு நூறு மக்களுக்கு நான் என் படங்களைக் காட்ட முடியுமென்றால் எனக்கு ஒப்புக் கொள்வதில் எந்த சிரமமுமில்லை. ரூத் மனோரமா, பெர்னார்ட் பாத்திமா, யேசு மரியான், கிருஸ்துராஜ், நீலவள்ளி போன்ற மிகச் சிறந்த நண்பர்களை என்.ஜீ.ஒ தொடர்பினூடே நான் அடைந்தேன்.
என் படங்கள் சில கேள்விகளை, எளிய நம்பிக்கைகளை, சுய விமர்சனங்களை, இடையீடுகளை, உறுதிமொழிகளை ஒரு கூட்டு மனசாட்சியின் நடவடிக்கையாக ஓரளவு நிகழ்த்தியுள்ளன என்று நான் நிச்சயமாக கூற முடியும்
12. பெரியாரியம் பற்றி பேசினீர்கள். திருமணம் பற்றியும் குடும்ப அமைப்பு பற்றியும் உங்க பார்வை என்ன?
திருமணம், குடும்ப அமைப்பு நிச்சயம் பெண்ணை இரண்டாம் பட்ச நிலைக்குத் தள்ளுபவை தான். இன்று போரினால் கொல்லப்படும் மக்களை விட, வறுமையால் இறக்கும் மக்களைவிட, குடும்ப வன்முறையால் சாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்று புள்ளிவிபரங்கள சொல்கின்றன.
உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் போன்றவற்றால் பெண்கள் பெருவாரியாக படிக்கிறார்கள், வேலைக்கு வந்துவிட்டார்கள் என்றெல்லாம் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதனால் பெண்களுக்கு இரட்டைச் சுமை தான் எஞ்சியுள்ளது. குடும்பங்களில் ஆண் பெண் வேலைப்பகிர்வு என்பது எல்லாவகையிலும் சனநாயகப்படுத்தப் படவில்லையென்றால், பெண்கள் அழுத்தத்தில் தற்கொலை செய்துக் கொளவதையும், மனப்பிறழ்வடைவதையும், வெளியேறுவதையும் தடுக்க முடியாது. குடும்பங்களில் பெண்கள் செய்யும் சமையல், துப்பரவு, குழந்தை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் போன்ற வேலைகளுக்கு ஊதிய மதிப்பை கணக்கிட்டுப் பார்த்தால் புரியும், குடும்பம் எத்தகைய சுரண்டல் அமைப்பென்று!
மாடுபிடிக்கும் வேலைபோல சொந்த சாதியில் பெண்களை விலைபேசி விற்கும் இழிவு இந்த நூற்றாண்டிலும் நம் சமூகத்தில் தான் நடந்துக் கொண்டிருக்கிறது. கேவலம் பிடித்த மேட்ரிமோனியல் அறிவிப்புகள் நம் சமூகத்தின் அவமானச் சின்னம். பெண்ணிற்கு சுய தேர்வை மறுக்கும் கெளரவக் கொலைகள் குடும்பம் மற்றும் சாதியின் கொடூர வன் முகங்கள்.
ஜெரால்டு என்ற என் தோழனை நான் கைப்பற்றியபோது, திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ எங்கள் குடும்பங்கள் அனுமதிக்கவில்லை. என் குடும்ப வரலாற்றிலேயே, முதன் முதலாக சாதி-மத-சடங்கு மறுப்பு திருமணத்திற்காக வெளியேறியவள் நான். ஏன் தாலியில்லை என்ற கேள்விக்கு பதில் சொன்ன காலம் கடந்து, இன்று விவாக மறுப்பு காலம் வரை வந்துவிட்டேன். வலி நிறைந்த வாழ்க்கைப் போராட்டம். நம்பும் கொள்கைகளை சொந்த வாழ்க்கையிலாவது கடைப்பிடிக்க வேண்டும், நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற என் பிடிவாதத்திற்கு நான் கொடுத்த விலை அதிகம். என் அன்புக்குரியவர்களை கொடூரமாக மனக்காயப் படுத்தியிருக்கிறேன் என்று எண்ணி இரவிரவாக சில சமயங்களில் அழ நேர்ந்தாலும், வேறு வழி தெரியவில்லை. சொந்த சாதியில் சீர் செனத்தி, நில பாகங்களோடு திருமணம் செய்திருந்தால் என்னைப் புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும். குடும்ப அமைப்பை சனநாயகப்படுத்துதல், பெண்ணின் சுயதேர்வு, ஆண்-பெண் வேலை பகிர்வு, வரதட்சணை ஒழிப்பு, பெண்ணுக்கு சொத்துரிமை, சாதி மறுப்பு திருமணங்கள், காதல் வாழ்வில் சேர்ந்திருப்பது, குடும்பமின்மையைத் தேர்வு செய்வது, மண விலக்கிற்கான பூரண சுதந்திரம் என்று பல புள்ளிகளில் சீரமைப்பு தேவையாய் இருக்கின்றது.
வர்ஜீனியா வுல்ஃப் சொன்னது போல் Room of my own முப்பத்திரண்டு வயதில் தான் எனக்கு சாத்தியமாகியிருக்கிறது. ஒரு பெண் தனக்கென்று ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொள்வது, வாழ்வது என்பதை இன்னும் இந்த குடும்ப அமைப்பு அடாத செயலாக, ஒழுங்கு மீறலாக, நடத்தை கெட்ட தனமாகத் தான் பார்க்கிறது. எப்படி தனியாக இருக்கிறீர்கள் என்ற இந்த சமூகத்தின் கேள்விக்கு என் காதுகள் செவிடாகக் கடவதாக!
13.தமிழகத்தின் தற்போதைய இலக்கிய சூழலில் சிற்றிதழ்களாகத் தங்களை அடையாளம் காட்டிக்கொள்பவை உண்மையில் இலக்கியம் வளக்க செயல்படுகின்றன என நம்புகிறீர்களா?
புது எழுத்து, மணல் வீடு, கல்குதிரை, புதுவிசை, உன்னதம், நிழல், தக்கை, கருக்கல், தாமரை, புத்தகம் பேசுது, உங்கள் நூலகம், சஞ்சாரம், செம்மலர், பவளக்கொடி, தலித் முரசு, அணி, அகநாழிகை என்று இன்றும் சிறுபத்திரிகைகள் மாத இதழ்களாக, இருமாத இதழ்களாக, காலாண்டிதழ்களாக, தம்மளவில் சாத்தியமான கால அலகுகளில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இடையறாமலும் வெளிவந்தபடி இயக்கம் பெற்றிருக்கின்றன. காலச்சுவடு, உயிர்மை போன்ற மடாலயங்களில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளாமல், அவர்களின் நிலைய வித்துவான்களின் வரிசாக்கிரமங்களில் இடம்பெறாத என்னைப் போன்ற தவிட்டுக் குழந்தைகளுக்கு சிறுபத்திரிகைகள் மட்டுமே நம்பிக்கைவெளி. ஒவ்வொரு தீவிர இலக்கிய வாசகரும் இவற்றைத் தேடிப் படித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இன்றளவும் கலாசாரப் பெரும்போக்குகளில் உடைவுகளை ஏற்படுத்திய படைப்புகள் சிறுபத்திரிகைகளிலேயே வெளிவந்துள்ளன.
போர்ஹே, மார்க்வெஸ், வில்லியம் பர்ரோஸ், லோசா, நபகோவ், போன்றோரது நேர்காணல்களையும் கதைகளையும் மொழிபெயர்த்து மிகுந்த சிரமங்களுக்கிடையே வெளியிடுகிறது ’உன்னதம்’. ரோலன்பார்த்தின் 'ஆசிரியன் என்பவன் யார்?', மிஸல்பூக்கோவின் 'ஆசிரியனின் மரணம்' என மிக முக்கியமான பின் நவீனத்துவக் கட்டுரைகளை ஒரு ஆரம்ப நிலைப் படைப்பாளியாக எனக்கு வாசிக்க தந்ததும் உன்னதமே.
அரசியல் நீக்கம் செய்யப்பட்ட பிரதிகளைக் கொண்டாடும் மனநிலைக்கு வாசகர்களைத் தள்ளும் இலக்கிய விசாரங்களுக்கு மத்தியில் காத்திரமான அரசியல் விவாதங்களையும், சமூக முரண்களை அலசும் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் சமரசமின்றி முன்வைக்கின்றது ’புதுவிசை’. புதுவிசையின் ஒவ்வொரு இதழையும் அழுக்கேறி, பக்கங்கள் கசங்க கசங்க வாசிக்க தீவிர இலக்கிய மனம் பித்தம் கொள்ளும்.
தமிழ்க்கவிதை மீதான கனவுகளுக்கும், கவிதை பாய்ச்சலெடுக்கும் பாதைகளின் மீதான கட்டியம் கூறுதலுக்கும் ’புது எழுத்து’ சளைக்காமல் உழைக்கிறது. கடும் சவால்களைக் கடந்தும் இதழை உயிர்ப்போடும் உயிரோடும் வைத்திருக்கும் மனோன்மணி அவர்களின் உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்குமான அங்கீகாரமாக சிறந்த சிறுபத்திரிக்கைக்கான தஞ்சைத் தமிழ்ப் பல்கலையின் விருதைப் புது எழுத்து சமீபத்தில் பெற்றது.
மானாட மயிலாட ஊடக வன்முறைகளுக்கு மத்தியில் எது கலை, எதற்கு கலை, யாருக்கு கலை என்ற கேள்விகளை சதா எழுப்பிக்கொண்டு, காலம் தின்று வாழும் மண்ணின் கலைகளை, கலைஞர்களை, அவர்களின் வாழ்க்கையைத் தொடர்ந்து பதிவு செய்வதோடு, அவர்களை மரியாதை செய்யும் பணியாக கலை இலக்கிய விழாக்களையும் வருடந்தோறும் நிகழ்த்தி வரும் ’மணல் வீடு’, இலக்கிய அரசியல் குறித்து வைக்கும் விவாதங்கள் இலக்கியப் பீடங்களை கூசச் செய்பவை.
தரமான சினிமாவையும், கலைப்படங்களையும், குறும்படங்களையும், விவரணப்படங்களையும் வாசகர்களுக்கு அறிமுகம் செய்யும் ’நிழல்’ மாற்று சினிமாவுக்கான ஆற்றலுள்ள களம். என்னைப் போன்ற மாற்று சினிமா முயற்சியாளர்களை அடையாளப்படுத்தியதில் நிழல் பத்திரிகை, திரைப்பட இயக்கம் இரண்டிற்கும் தவிர்க்க முடியாத பங்குண்டு., சினிமாவை கருணாநிதி குடும்ப மாஃபியாக்கள் ஆக்கிரமித்திருக்கும் இன்றைய கால கட்டத்தில், சுவாதீன முயற்சிகளை கற்பனையில் கூட நினைத்து பார்த்து விட முடியாத வன்சூழலில் நிழல் போன்ற பத்திரிகைகள் தொடர்ந்து வருவதும் கூட பண்பாட்டுச் சூழலில் மிக முக்கியமான சலனம்.
இப்படி, ஒவ்வொரு சிறு பத்திரிகையும், தனிநபர்களை மையமாகக் கொண்ட இலக்கிய அரசியலின் வன்முறைகளுக்கு மத்தியில் தன்னிச்சையாகவும், பிரஞ்யாபூர்வமாகவும் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. கார்பரேட் குருக்களாகவும், அதிகாரத்தின் கைக்கூலிகளாகவும், வணிக சினிமாவின் பஞ்ச் டயலாக் வசனக் கர்த்தாக்களாகவும், இணைய ஃபாஸ்ட் புட் பிளாக் எழுத்தாள காளான் பண்ணைக்காரர்களாகவும் இருக்கும் எழுத்தாள பீடங்களின் மேல் பூச்சிக் கொல்லி மருந்தை அடிக்கும் புகை மண்டிய வண்டிகளின் ஓட்டுநர்கள் நமது சிறுபத்திரிகை காரர்கள். அவ்வண்டிகளின் பின்னே தொற்றிக் கொண்டு ஆராவாரித்துக் கொண்டே செல்லும் சாலை சிறுவர்களாய் என்னைப் போன்ற தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள்.
என்னளவில் திரைப்பட ஆர்வலர்களாக நானும் ஜெரால்டும் ’திரை’ பத்திரிகை என்ற சிறு முயற்சியை செய்து, ஏழு இதழ்களுக்கு மேலாக பொருளாதார நெருக்கடி மற்றும் விநியோகம்-சந்தை குறித்த போதாமைகளால் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டோம்.
ஒரு இலக்கிய வாசகியாக, லும்பினி தோழமையோடு இணைந்து நிறப்பிரிகையின் பதின்மூன்று இதழ்களையும் சேகரித்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்த முயற்சி மனதுக்கு மிகவும் நெருக்கமான தருணம். நிறப்பிரிகை தமிழ் நவீன இலக்கியத்தில் ஒரு அழியா சுனை.
http://www.vallinam.com.my/issue28/interview.html
14. தமிழ்ச்சினிமாவில் ஒரு ஹீரோவை சில பில்டப்புகள் கொடுத்து உருவாக்கிவிட்டு, பின்னர் அவர் பெயரை வைத்து சம்பாதிக்கும் மலிவான சூழல் போல தமிழகத்தில் நீங்கள் சொன்ன இதழியல் மடாலயங்களும் செயல்படுவதைப் போன்று வெளியிலிருந்து பார்க்கும் என் போன்ற வாசகர்களுக்குத் தோன்றுகிறது. அது பற்றி கூறுங்கள்...
இளம் படைப்பாளராகவும், வாசகராகவும், தமிழ்ச் சூழலின் சந்தைமயச் சூழல் என்னை கவலையில் ஆழ்த்துகிறது. சந்தை என்ற பேரதிகாரத்திற்கு எதிராக எந்த எழுத்தும் உருவாகி விடக் கூடாது என்பதில் இலக்கிய மடங்கள் மிக கவனமாகவே உள்ளன.
சர்வதேச பார்ப்பன வலைப்பின்னலை வைத்துக் கொண்டு சமூகத்தின் உள்முரண்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் காலச்சுவடு கண்ணன் தன்னை விக்கி லீக்ஸ் அளவுக்கு நம்பிக் கொள்வதும் , நம்மை நம்ப வைக்கத் துணிவதும் இலக்கியச் சூழலின் சாபக்கேடு. சுந்தரராமசாமியோடு காலச்சுவடு நின்றிருந்தால் இலக்கியப் பிரதியாகவாவது காலத்தின் நினைவில் இருந்திருக்கும். தொண்ணூறுகளில் இஸ்லாமிய தீவிரவாதம் என்றெல்லாம் பேசி பரப்பி, இஸ்லாமிய வெறுப்பை கக்கிய கண்ணன் இரண்டாயிரங்களில் இஸ்லாமியப் பிரதிகளை விற்கிறார். அவருக்கு பத்திரிக்கை நடத்த தெரிந்திருக்கிறது. அல்லது வாசகர்களின் மறதியையும், முட்டாள்தனத்தையும் சந்தைப் படுத்தும் தந்திரம் கைவந்திருக்கிறது.
பார்ப்பனிய சங்கத்திற்கு சென்று பார்ப்பனிய விழுமியங்களைப் பேசிய சுஜாதாவை இலக்கிய கர்த்தாவாக கூவி விற்கும் மனுஷ்ய புத்திரன் மனிதர்களைப் பேதபடுத்திப் பார்க்க முடியாத குழந்தையாகிவிட்டார். அவருக்கு எல்லோரையும் அன்பு செய்ய வேண்டும் போலிருக்கிறது. இதற்கிடையில், அவர் காலச்சுவட்டில் விட்டு வந்த மூட்டையை வேறு எரித்துவிட்டார்கள். அவருடைய அன்பின் பரிமாணம் எல்லா திசைகளிலும் சந்தை வரை வழிகிறது. மேல்தட்டு பாலியல் அரிப்புகளை சுரண்டும் கார்பரேட் பிரதிகளையும், மிக கவனமாக அரசியல் நீக்கத்தை தணிக்கை முறையாக கொண்ட இலக்கியப் பிரதிகளையும் , புனைவு மொழியாக ஆர்.எஸ்.எஸ் வேலைத் திட்டங்களை முன்னெடுக்கும் பழைய ஆசிரியப் பிரதிகளையும் அவர் அன்பிற்காகவே உற்பத்தி செய்து தரும் நாயகர்களும் அவருக்கு வாய்த்திருக்கிறார்கள்.
15.உங்கள் கவிதைகளின் சொல் மற்றும் வரிகளின் அடுக்குகள் அவற்றுக்கென தனிச் சிறப்புடன் ஓர் இடத்தில் அமர்கின்றன. மிகுந்த பிரக்ஞையோடு அவற்றை அடுக்குகிறீர்கள். அவை எவ்வகையில் கவிதைக்கு அவசியமாகின்றன ?
கவிதையில் இயங்கும் வார்த்தைகள் அதற்கெனவே கொடுக்கப்பட்ட இடங்களில் வாகாக சென்று அமர்வதில்லை. ஒழுங்கு குலைந்த அடுக்குகளில் தான் இடம்பெறுகிறது. அவை வாசிப்பவரின் அர்த்தம் கோரும் நேர்க்கோட்டுத்தன்மையை விட உணர்வுத் தளங்களை அதிகம் கோருகின்றன, வெறும் உணர்ச்சிக் கோர்வைகளா என்று கேட்டுவிட வேண்டியதில்லை. ஆணின் அத்தனை பிரதிகளிலும் உணர்ச்சியற்ற இடத்தில் தானே பெண் வைக்கப்பட்டிருக்கிறாள்? அதனாலேயே கவிதையில் உணர்வுத் தளம் என்பதும் ஒழுங்கற்ற அரசியலாகவே இருக்கின்றது.
ஆமாம், நான் பிரக்ஞையோடு தான் வார்த்தைகள், அடுக்குகள், வடிவங்கள் வழியாக கவிதைகளைத் தயாரிக்கிறேன். அதிக ரொட்டிகளைத் தயாரிப்பதாலேயே என் பெயர் அவற்றில் பொறிக்கப்பட வேண்டியதில்லை என்ற பிரெக்டின்(Brecht) குறிப்பொன்று கூடவே நினைவுக்கு வருகிறது.
16.எழுதுவதால் அதிகம் விமர்சிக்கப்படுகிறீர்கள். இதை எவ்வாறு எடுத்துக்கொள்கிறீர்கள்.
ஆசிரியர் இறந்து விட்டார் என்பதை ஏற்கெனவே முன்மொழியப்பட்ட கருத்துருவங்கள் இறந்துவிட்டதாகத் தான் நான் எடுத்துக் கொள்கிறேன். அவ்வகையில் உலகத்தின் மொத்த மூல ஆசிரியப் பிரதிகளும் இறந்துவிட்டன என்று சொல்லலாம் எனக் கருதுகிறேன். கடவுள் உட்பட.
இப்பொழுது எழுதப்படுவது வாசக மறுபடைப்பு பிரதிகள்.
வாசகர் படைப்பாளியாக கோரவில்லை. அவர் தன் அரசியல் உரிமையை மீட்டெடுக்கிறார். அவ்வளவில் பிரதி மீதான ஆசிரிய ஆதிக்கம் இல்லாமல் போகிறது. வாசக மறுபதிப்பு பிரதிகளை அடித்தளப் படைப்புகளாக புரிந்துக் கொள்ளும் பட்சத்தில், மூலப்ப்பிரதி என்பது எப்படி எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக, வழிமொழிவதாக இருக்கிறதோ, வாசக மறுபடைப்பு பிரதி எல்லாவற்றிலிருந்தும் வெளியேறி இருப்பதையும் நாம் புரிந்துக் கொள்ளலாம். அந்தப் பாதையில் எனக்கென்ற உலகை புதியதாக கட்ட முயன்ற அளவில் என் மீதான விமர்சனங்களை பொருட்படுத்தியும், கடந்தும் செல்ல எத்தனிக்கிறேன்.
17.உங்கள் கவிதைக்கான ஆரோக்கியமான விமர்சனங்கள் , உரையாடல்கள் தமிழ் சூழலில் நிகழ்ந்துள்ளதா?
இல்லை. நடந்த உரையாடல்களும் சமூகத்தின் ஆரோக்கியமின்மையையும், நோய்மையையும் காட்டியது. அது குறித்து எனக்கு வருத்தம் தான்.,
சமுகம் என்பது ஒரு புனைவு. அதை நீண்ட காலமாக பழக்கப்படுத்திக் கொண்டவர்கள் ஒழுக்கவாதிகளாக இருக்கிறார்கள். பெண் தன் உடலை, உலகை எழுதும்போது பரத்தமை கால செவ்வியல் பண்புகளில் ஒருவித பதட்டம் ஏற்படுகிறது. இங்கே மத அடிப்படை வாதிகள் வைக்கும் அதே குற்றச்சாட்டைத் தான் மார்க்சிய வாதிகளும் வைக்கிறார்கள், எல்லா வாதிகளும் வைக்கிறார்கள். பெண்ணை நிலைகுலைய செய்ய வைக்கும் வார்த்தைகள் இன்னும் ஏராளமாக சமூகத்தின் கையிருப்பில் இருக்கிறது.
ஆனால் பொதுவாக அத்தகைய "சமூக" ஆரோக்கியம்? குறித்து நான் கவலைப்படுவதில்லை.
18.கவிதை தவிர வேறெந்த இலக்கிய வடிவத்தில் முயன்றுள்ளீர்கள்?
கவிதை தவிர என் கவனமெல்லாம் சினிமா மட்டுமே.
19.தனுஷ்கோடி கம்பிப்பாடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வின் துயரத்தைக் கண்டும், அதிகாரத்தால் சுரண்டப்பட்ட கொடூரத்தையும் கண்டும், சராசரியாக மூன்று மீனவக் குடும்பங்களில் ஒரு விதவையாவது இருப்பதை உணர்ந்தபோதும், செங்கடலை எழுதத் துவங்கினேன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒட்டுமொத்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும் கூட்டத்தில் நீங்கள் தொட்டிருப்பது மீனவ சமூகத்தை மட்டும் என்பதால் அவர்களின் துயரத்தை நெருக்கமாக உணரும்போது, ஈழம்/யுத்தம் குறித்த உங்களின் மனநிலை எப்படி மாறுபட்டது?
யுத்தம் என்பது தேசிய அரசாங்கங்களின் பிரச்சனை. தேசியத்திற்கு எதிரான புரட்சி என்பது மக்கள் பிரச்சினை. இடையில் தேசிய வரைவெல்லைகளில் மக்கள் பலியாவார்கள். வளர்ந்த நாடுகளில் குடியமர வேண்டி முன்றாம் உலக நாடுகளிலிருந்து தப்பி எல்லை தாண்ட முயற்சிக்கும் லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கும் கொடூரமாக கொல்லப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்தில் சிறிமாவோ -லால் பகதூர் சாத்திரி ஒப்பந்தத்தால் லட்சக்கணக்கான மலையக மக்களை இந்தியா திருப்ப பெற்றுக் கொண்டதும் , இந்திரா காந்தி கச்சத் தீவை விட்டுக் கொடுத்ததும் இனப்போருக்கு முன் தானே நிகழ்ந்தது.
இலங்கை என்கிற தீவினுடைய சர்வதேச மதிப்பு பன்னாட்டு கம்பெனிகளுக்கு நன்றாகத் தெரியும். பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு தன்னைத் திறந்து விடும் சிங்கள அரசாங்கம் அதை ஏற்று வாழாத, அல்லது எதிர்வினை செய்கிறவர்களை அழித்தது. ஜே.வி.பி.முன்னெடுத்த மார்க்சிய எழுச்சியின் போது பெரும்பான்மை இனமான சிங்களர் களிலேயே ஒரு லட்சம் மக்களை கொன்றது. பிறகு இன உள்முரண்களை ஊதி சிங்கள தமிழ் இனங்களைப் பிரித்தாண்டு சிறுபான்மை தேசிய இனத்தை ஒழித்தது.
சந்தை மதிப்பு மிக்க மனிதர்கள் தவிர ஒரு நாட்டின் எல்லைக்குள் அதன் சொந்த வருமானத்திற்குப் பயன்படாத அன்னியர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு வேளை மீனவர்கள் வரி கட்டுபவர்களாக, அந்நியச் செலாவணியில் பங்கு கொள்கிறவர்களாக இருந்தால், அரசாங்கங்கள் பதில் சொல்லும். ஆனால், எல்லை தாண்டும் "சர்வதேச குற்றவாளிகளை" காப்பாற்றுமா என்றால் செய்யாது.பாரம்பர்யமாக மீன் பிடிப்பவர்களுக்கு சர்வதேச எல்லைகள் கிடையாது என்பதை தேசிய அரசாங்கங்கள் கையெழுத்துப் போட்டு ஒத்துக் கொள்ளும். ஆனால் நடைமுறையில் எல்லைகளில் கொலைகாரர்களை நிறுத்தும்.
ஆகவே மீனவர் பிரச்சனையை மனிதாபிமான பிரச்சினையாக பார்க்க முடியாது. அது அரசியல் பிரச்சனை.
ஏகாதிபத்தியத்தின் சர்வதேசிய வல்லாதிக்கத்தினை ஏற்றுக் கொள்ளாத எந்த நாடும் தனித்து வாழ முடியாது. அதன் வெளிப்படையான முரண்பாடு தான் யுத்தம்.மக்களை சதா சாமானியர் களாக்கி அச்சுறுத்துவது தான் யுத்தத்தின் வெற்றி. அதற்காகத் தான் அரசாங்கங்கள் தங்கள் ராணுவத் தளவாடங்களில் இரவு பகலாக கருவிகளை உற்பத்தி செய்கின்றன.
இதுவே செங்கடல் அனுபவம் எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்
20.தனுஷ்கோடி, ராமேஷ்வரம் மீனவர்களின் வாழ்க்கையை சினிமாவின்(செங்கடல்) மூலம் மீளுருவாக்கம் செய்யும் பணியில் அவர்களின் ஒத்துழைப்பு எப்படி இருந்தது? சினிமாவின் வழி அவர்களின் வாழ்வைப் பதிவாக்கும் முயற்சியில் அவர்களிடம் பழகிய கணங்களில் உங்களுக்குள் ஏற்பட்ட பதிவுகள் பற்றி சொல்லவும்.
எப்படி கடற்கோள் ஒரு நகரத்தை அழிக்கும் என்ற பீதியை ஏற்படுத்தும் காட்சிப் பொருளாக, நாடெங்கிலுமிருந்து பேரழிவின் சின்னத்தைப் பார்த்துவிட்டு போய்விடலாம் என்ற சாடிசத்தொடு வரும் டூரிஸ்டுகளின் வடிகாலாக, பூணூல் போட்ட அய்யர்சாமிகள் இறந்தவர்களுக்கு திதி குடுக்கும் வங்காள வரிகுடாவும் - இந்தியப்பெருங்கடலும் சங்கமிக்கும் புனிதஸ்தலமாக தனுஷ்கோடி இதுவரை அறியப்பட்டிருக்கிறது. எனக்கு அது ஒரு பராரி நிலம். நடந்து செல்லும் மணல் மேட்டிற்கு கீழே புதைக்கப்பட்டிருக்கும் சடலங்களைக் குறித்த கதைகள் துரத்தும் காடு.உயிர் வாழ்தலை மட்டுமே செய்துக் கொண்டிருக்கிற அந்த மீனவ சமூகம் என் அலைவுறுதலையும் தன் பாடோடு இனம் கண்டது. குறைந்தபட்ச வாழ்வாதாரங்களோடு தங்கள் இருப்பை நீட்டித்துக் கொண்டிருக்கும் அவர்களை அதிகாரம் குற்றவாளிகளாகப் பார்ப்பதை முறையிட்டது. அதை வெளி உலகத்திற்கு எடுத்துக் காட்டி தங்கள் வாழ்வுரிமைக்கான எளிய நம்பிக்கையை செங்கடல் பெற்றுத் தரும் என்று நம்பியது. அரசாங்கங்களுக்கு எல்லைகள் குறித்தான பிரக்ஞை இருப்பது போல மக்கள் குறித்தான பிரக்ஞை இல்லை. அந்த சமூகத்திற்கு நற்செய்தி சொல்லிவிடும் வல்லமை எனக்கில்லை என்பது எனக்கு தெரியும். ஆனால் பொது நீதிக்கும், தன்னிலைக்குமிடையே அவர்கள் படும் போராட்டத்தை மிக நேர்மையாக, உண்மைக்கு நெருக்கமாக என்னால் செங்கடல் மூலம் எடுத்துச் சொல்ல முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருந்தது. அதை எந்த பழுதுமில்லாமல் செய்திருக்கிறேன்.
ராணுவம், காவல் துறை, சுங்க வரித்துறை, உளவுத்துறை, என்று அதிகாரம் நசுக்கும் தனுஷ்கோடியின் மீனவ வாழ்வியல் மிக மிக ஆதாரமான உரிமையையே கோருகின்றது. ஆனால் நானும் கூட இரண்டு நாடுகளுக்கான சட்டங்களுக்கு அவர்களைக் கையளித்து விட்டே திரும்ப வேண்டியிருந்தது. அவர்களின் ஆதாரமான வாழ்வின் தோல்வியே என் கலையின் தோல்வியாக இருக்கிறது என்று நினைக்கிறேன். படம் முடக்கப்பட்ட நிலையில் சட்டங்களை மீறி கூட மீனவர்கள் வாழத் தான் செய்வார்கள் என்ற உணர்வே எனக்குமான உணர்வாக இருக்கிறது.
ஆனால், இப்படிப்பட்ட நிலங்களைத்தான் ஒரு காட்சிக் கலைஞராக நான் வாழ்நாள் முழுதும் தேடி கண்டடைவேன் என்ற உறுதி மட்டும் என்னுடன் திண்ணமாக மிஞ்சியிருக்கிறது.
21. ஷோபா சக்தியின் இலக்கிய ஆளுமையும் அதே சமயத்தில் யுத்தம் தொடர்பான நெருக்கமான அவருடைய அனுபவமும் செங்கடல் சினிமாவில் எப்படி வெளிப்பட்டுள்ளது? சினிமாவின் எந்தப் பகுதியில் அவருடைய ஆளுமைத் தீவிரமாக இயங்கியது?
ஒரு இலக்கிய வாசகராக ஷோபாசக்தியின் தீவிர காதலி நான். அவரின் பிரதிகளிலேயே ஒரு நூறு திரைக்கதைகள் விரவியிருக்கின்றன. செங்கடலை பற்றி சொன்ன போது, இது தனுஷ்கோடி மீனவ சமூகத்தை கள ஆய்வு செய்ததன் மூலமாக எழுதப்பட்ட கதை, அதன் அடிப்படையிலேயே திரைக்கதையை உருவாக்க வேண்டும் என்றேன். குறிப்பாக இலங்கைத் தமிழ் மக்கள் வரும் காட்சிகள், வசனங்கள், கதாபாத்திரங்கள் போன்றவற்றிற்கு அவர் பொறுப்பேற்று உதவ வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தேன். ஜெரால்டோடும், என்னோடும் திரைக்கதைப் பணியில் இணைந்துப் பணியாற்றுவதற்கு உற்சாகமாக ஒத்துக் கொண்டார். வசனத்தையும் பொறுப்பேற்று செய்தார். அது அவரின் பெருந்தன்மை. அந்த நிமிடத்தில் இருந்து இன்று வரை செங்கடலில் என்னை விடவும்,ஜெரால்டை விடவும் அதிக நம்பிக்கை வைத்திருப்பவர் அவர்.தயாரிப்பாளர் இருந்தபோது சரி, கைவிட்டபோதும் சரி, எந்த ஆதரவும் இல்லாமல் நண்பர்களிடமும், குடும்பத்திடமும் கடன் வாங்கி படப்பிடிப்பு நடந்த காலக்கட்டத்திலும், படத்தை தொடர்ந்து முடிக்க முடியுமா, வேறு தயாரிப்பாளர் கிடைப்பாரா என்ற அவநம்பிக்கையும், அலைதலும், விரக்தியுமாய் நொந்து திரிந்த நேரத்திலும், எண்ணற்ற தடைகளும், கல்லடிகளும் அவமானமுமாய் மௌனித்திருக்கும் தருணங்களிலும் அவர் தந்த அசைக்க முடியாத உறுதி எனக்கு பாரிய ஆறுதல்.
படத்தில் அகதிகளாக நடித்தவர்களும் அகதிகளே. அவர்களைப் பயிற்றுவித்ததும், அவர்களின் அனுபவங்களை வசனங்களாக மாற்றியதும், முக்கியமாக சூரி என்ற கதாபாத்திரத்தை உருவாக்கியதுமாய் செங்கடலின் ஆக்கத்தில் அவர் பங்கு முக்கியமானது. ஒரு குறிப்பிட்ட அகதி கதாபாத்திரத்திற்கு யாரும் சரியாக வராததால், நானும் அகதி தானே, எனக்கு வாய்ப்பு தர மாட்டீர்களா என்று கேட்டதோடு , அதை மிகச் சிறப்பாக நடித்தும் தந்தார்.
எந்த சூழ்நிலையிலும், படைப்பாக்க மன நிலையையும், ஆன்மாவையும் சிதைக்க அனுமதிக்காத அவரின் தோழமை செங்கடல் எனக்குப் பெற்றுத் தந்திருக்கிறது.
22.தங்களின் முந்தைய படைப்புகளின்(குறும்படங்கள், ஆவணப்படங்கள்) மீது உங்களுக்கு அவ்வளவு பெரிய ஈர்ப்பு இல்லாததாக ஒருமுறை சொல்லியிருந்தீர்கள். உங்களுடைய முந்தைய குறும்படங்கள், ஆவணப்படங்களின் அடைவுநிலையை எப்படி மீள்பார்வை செய்கிறீர்கள்?
ஆரம்ப கால படைப்புகளைப் பற்றி யார் கேட்டாலும் எனக்கு நினைவுக்கு வருவது நபகோவின் மேற்கோள் ஒன்று.
"யாராவது தன்னுடைய கோழையையே தட்டில் வைத்து சுற்றுக்கு விடுவார்களா?"
செங்கடலை விட்டே நான் வெளியேறி விட்டேன்.
நிம்மதி என்பது ஆன்மாவிற்கு இழிவாம் நவீன்.
23. இத்தனை சிரமங்களுக்கிடையில் தனிகை குழுவினரால் நிராகரிக்கப்பட்ட செங்கடலைத் திரையிட அடுத்த தங்களின் செயல்பாடு என்ன? தணிகை குழுவினர் சொல்லும் காரணம்தான் என்ன?
வெட்கங்கெட்ட இந்திய சனநாயகம் கலையைக் கண்டு அஞ்சுகிறது. சட்டமன்றம் நாடாளுமன்றம் போன்ற தன் கண்ணாடி கூடுகளை நிஜமான கலை, சிறு கல் கொண்டு எரிந்து நாசம் செய்து விடுமோ என்று நடுங்குகிறது. அவ்வளவு பலவீனமான அரசு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து மக்களுக்குமான கருத்துச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் ஆர்டிகல்(Article) பத்தொன்பதை வாபஸ் பெற்றுக் கொண்டு இந்தியாவில் எமெர்ஜென்சி யை அறிவிக்கட்டும். ஏன், எல்லோரையும் முட்டாளாக்கி சுதந்திர இந்தியா என்று நம்ப வைக்க வேண்டும்?
எண்பதுகளிலேயே,மத்திய தணிக்கை குழு, மத்திய சான்றிதழ் குழு என சட்டப்படி மாறிவிட்டது.எல்லோரும் பார்க்கும் படம்(U), அல்லது பெற்றோர் வழிகாட்டுதலின் பேரில் குழந்தைகள் பார்க்கும் படம் ( UA ) அல்லது வயது வந்தோருக்கான படம் (A ) என்று சான்றிதழ் வழங்கும் வேலை மட்டும் தான் சான்றிதழ் குழுவிற்கானது.அந்நிலையில் கத்தரிக்கோலை வைத்துக் கொண்டு திரைப்படைப்பாளிகளை அதிகாரம் செய்ய, இவர்களுக்கு யார் உரிமை தந்தது.
என் கலையை மக்கள் மன்றத்தின் முன் வைக்க தடை செய்வது என் அடிப்படை உரிமையைப் பறிப்பது அன்றி வேறென்ன? மக்களின் அறியாமையை மூலதனமாக வைத்து அவர்களை சிந்திக்க விடாமல் மந்தையாக்கும் குப்பை சினிமா கலாசாரம் "தணிக்கை அதிகாரிகளால் பாராட்டு பெற்ற படம்" என்று ஆளுயுர கட் அவுட் விளம்பரம் வைக்கும் வணிகத்திற்கு மத்தியில் என் உரிமைக்கான குரல் ஒரு பைத்தியக்காரியின் குரலாக இந்த காயடிக்கப்பட்ட தமிழ்ச் சூழலில் பார்க்கப்படுகிறது.
24 மணி நேரமும், குறைந்தபட்சம் 200 தொலைகாட்சி சேனல்கள் ஒவ்வொரு வீட்டு வரவேற்பறைகளிலும் தணிக்கையில்லாமல் தான் ஓடுகின்றன. இதில் கட்சிக்கொரு ஊடகம் வேறு. இணைய வெளி எல்லோருக்கும் எதற்கும் திறந்தே கிடக்கின்றது. அரை மணி நேரத்திற்குள், ஒரு நூறு விளம்பரங்கள் நம்மீது ஏதோவொரு ஷேம்பூவையோ , சிவப்பழகு க்ரீமையோ , ஆணுறையையோ எறிந்து விட்டுப் போகின்றன. ரேடியோ, பத்திரிக்கை என்று எதிலும் தணிக்கை இல்லை. ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கி சினிமா பார்க்க வரும் பார்வையாளன் மட்டும் எப்படி அரசாங்கத்திற்கு முட்டாளாக தெரிகிறான்?
செங்கடலைத் தடை செய்ய மூன்று காரணங்களாம். ஒன்று - படம் நேரடியாக தமிழக இந்திய அரசாங்கங்களை விமர்சனம் செய்கிறது. இரண்டு - படம் இலங்கை அரசாங்கத்தின் செயல்பாட்டை விமர்சனம் செய்கிறது. மூன்று - நியதிக்கு புறம்பான ஆபாச மொழி பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
படத்தில் பங்கேற்று நடித்த மீனவ, அகதி மக்கள் பயன்படுத்துவது வட்டார வழக்கு சொற்கள். இந்தியப் பாராளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் பயன்படுத்தும் ஆபாச சொற்களை விட மீனவனின் மொழி மேலானதே! அப்படியென்றால் பாராளுமன்றத்தை தடை செய்வோமா? மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசு தன் உறுப்பினர்களை நியமித்து தன் சொந்த மக்கள் பேசும் மொழியையே அவமானப்படுத்துகிறது. விக்டோரியா மகாராணி, அதிகாரத்தின் மன அமைப்புகளில் இன்னும் சாக வில்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்திய இலங்கை நாட்டு நட்புறவுகளை அப்பாவி மீனவர்களின் சடலங்களின் மீது நின்று அரசாங்கங்கள் பாதுகாக்க நினைத்தால், எப்படி மக்களும், கலைஞர்களும் எதிர்க்காமல், உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்க முடியும். அரசை விமர்சிக்க கூடாது என்று எந்த சட்டத்தில் எழுதியிருக்கின்றது?
ராஜபக்சேயும், மன்மோகன் சிங்கும், கருணாநிதியும், தங்கள் சொந்த மக்களைக் கொன்றார்கள். அரச பயங்கரவாதிகளுக்கு ஒரு கலைஞன் எப்படி பல்லக்கு தூக்க முடியும்.
ஒரு வேளை,செங்கடல் உதயநிதி ஸ்டாலின் அண்ட் கோ வழங்கும் படமாக இருந்திருத்தால் , அல்லது சன்பிக்சர்ஸ் பெருமையுடன் திரையிடும் படமாக இருந்திருத்தால், மீனவர்கள் கடலுக்குச் சென்று தாங்களே தற்கொலை செய்துக் கொள்கிறார்கள் என்று எடுத்திருப்பார்கள் , தடையேதும் இருந்திருக்காது. காட்சிப் பிழை போன்று இன்டலக்சுவல் திரைப்பட பத்திரிகை நடத்தும் மேதாவிகள் கூட சூட்டோடு சூடாக படத்தை மதித்து, அலசி, ஆராய்ந்து அதிகாரத்திற்கு , முதலாளிகளுக்கு தங்கள் அறிவைக் கப்பம் கட்டியிருப்பார்கள்.
ஆதிக்கங்களிலிருந்து நழுவுவதும், அவற்றைக் காட்டிக் கொடுப்பதும் தான் என்னைப் பொறுத்தவரை கலை. தணிக்கையில்லாமல் செங்கடலை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வது வரை நடக்கும் என் போராட்டம். I know, it is a lonely fight.
தமிழ் நாட்டின் அறிவுத்துறையில் தொண்ணூறு சதவிகிதம் கேடு கேட்ட கும்பல். பிரதியைக் குறித்தல்லாமல் பிரதியாளரைக் குறித்துப் பேச்சைப் பெருக்கும் சாதீயப் புற்று நோய் பிடித்தவர்கள். அவர்கள் செங்கடலை மௌனித்து விடலாம் என நினைப்பது நடக்காது.ஏனெனில் செங்கடல் அவர்களுக்காக எடுக்கப்பட்டதல்ல.
ஒரு பார்ப்பனரல்லாத, முதல் தலைமுறை பட்டதாரி சிறுபான்மை இனப் பெண் அறிவுத்துறையில், கலைத்துறையில் பயிற்சி பெற்று எடுத்த தேவதைகள் என்ற ஆவணப்படம் மும்பை சர்வதேச திரைப்படப் பிரிவில் தங்கச் சங்கு அங்கீகாரத்தைப் பெற்றது தற்செயலானதல்ல.
எனக்கு என் நேர்மையிலும், மக்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிலும் இன்னும் நம்பிக்கை மிச்சமிருக்கிறது.
நன்றி நவீன்