Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Thursday, October 9, 2014

பதின்பருவம் மர்ம விளையாட்டல்ல

நன்றி - குமுதம் 


Berlin ArtParasites
ஒரு மூன்று வருடங்கள் இருக்கும். வார நாள் ஒன்றின் களைத்துப்போன இரவு. படப்பிடிப்பை முடித்துவிட்டு வழக்கம்போல நடுநிசி நெருக்கத்தில் வீடு திரும்பினேன். நான் அப்போது வசித்துக்கொண்டிருந்தது ஒரு மத்திய தர குடியிருப்பு. தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கோணங்களில் மனித மனங்களின் அன்றாட அலுப்பும் சோர்வும் தெரிந்தது. மல்லுக்கட்டி என் ஸ்கூட்டிக்கு ஒரு இடம்பிடித்து நிறுத்திவிட்டு இரண்டாம் மாடியில் இருந்த என் ஃபிளாட்டிற்கு படியேறிக் கொண்டிருந்தபோது என் மூச்சே எனக்கு பலமாக கேட்டது போல இருந்தது. கொஞ்சம் நிதானித்துப் பார்த்ததில், வேக வேகமாக இரையும் வேறு மூச்சுகளின் சத்தம். இருளை விலக்கி சற்று முற்றும் பார்த்ததில் படிகளின் தாழ்வாரத்தில் இரண்டு உருவங்கள் ஆவேசமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தன. சில நொடிகளில் வெளிச்சம் பழகியதில் சுவரில் சாத்தப்பட்டிருந்த பெண் என் எதிர் ஃபிளாட் பெண் போல இருந்தாள். பையன் யாரென தெரியவில்லை. அல்லது மேலும் உற்றுப்பார்க்க லஜ்ஜையாக இருந்தது. அடுத்த அடி எடுத்து வைக்கும்போது, என் ஹை ஹீல்ஸ் செருப்பு சத்தம் அவர்களுக்கு தொந்தரவாக இருக்குமோ என்று யோசித்துகொண்டே செருப்புகள் இரண்டையும் கழட்டி  கையில் எடுத்துக்கொண்டு மிச்சமிருக்கும் படிகளைக் கடந்தேன். க்ரில் கேட்டைக் கூட சத்தமில்லாமல் திறந்து மூடிவிட்டு வெகு நேரமாக தூக்கத்திற்குஅழைத்துக்கொண்டிருந்த உடலைக் கட்டிலில் சாத்தினேன்.

காலையில் டம் டம் எனக் கதவு தட்டும் சத்தம், என் தலையணையை இடித்தது. காலிங் பெல்லுக்கு நான் முழித்திருக்கவில்லை. கீழ்வீட்டுப் பையன் ஃ ப்ளாட் அசோஷியேஷன் அவசர மீட்டிங் அறிவிப்பை சொல்லிவிட்டு, இன்னும் அரை மணி நேரத்தில் செக்ரட்டரி வீட்டுக்கு வர வேண்டும் என்றான். நான் ஒரு காஃபியை குடித்துவிட்டு செல்வதற்குள் செக்ரட்டரி வீட்டில் குடியிருப்புவாசிகள் எல்லாம் கூட்டமாக கூடிருந்தார்கள். ஒரு ஓரமாக இரவில் முத்தமிட்டுக்கொண்டிருந்த பெண்ணும் அருகில் ஒரு ஒடிசலான பையனும் குனிந்த தலையுடன் நின்றிருந்தார்கள். எத்தனை யோசித்தாலும் அந்தப் பையனை, 34 ஃப்ளாட்டுகள் கொண்ட என் குடியிருப்பில் நான் பார்த்த நினைவு வரவில்லை. ஆனால் குற்றவாளிகள் போல நின்றிருந்த அவர்களைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. காலை பரபரப்பில் அலுவலகம் செல்லும் ஆயுத்தங்களில் அரை மனமாக பெரும்பாலோர் , அடுப்பில் பாதி சமையலும் அள்ளி முடித்த தலையுமாய் பெண்கள் , விஸ்தாரமான பேச்சொன்றின் முஸ்தீபுகளில் ரிட்டையரான பெரிசுகள் , அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த நண்டு சிண்டுகள் என கலவையாக கூடியிருந்த கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து ஹலோ சொல்லிக் கொள்ளகூட முடியாத இறுக்கம். பிள்ளைகள் அமெரிக்காவில் செட்டில் ஆகியும், ஃபிளாட் ஒனர்களிலேயே சீனியராகவும் இருந்த  செக்ரட்டரி என்பவர் சற்று ஓங்கிய குரலில், "இந்தக் குடியிருப்புக்குன்னு ஒரு ஒழுக்கம் இருக்கு, இது  டீசன்டான குடும்பங்கள் வாழற இடம்" என்று எதேதோ சொல்லிக்கொண்டு போனார். எனக்கு கடும் எரிச்சல் மூண்டது. அந்தப்பெண் கண்ணீர் விட்டுக் கொண்டும், பையன் அவமானத்தில் குறுகிப் போயும் நின்றார்கள். பெண்ணின் அம்மா இழவு விழுந்தது போல அரற்றிக்கொண்டிருந்தார். நைட்டியும் மேலே ஷால் போட்டுக் கொண்டும்  நின்ற மற்ற அம்மாக்களும் முணுமுணுத்துக் கொண்டு நின்றார்கள். நாம் ஏன் ஃ பிளாட்டின் பொது ஏரியாவில் சிசி டிவி வைக்க கூடாது என்ற ரேஜ்சில் போய்க்கொண்டிருந்த விவாதத்தில் எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் போய்க்கொண்டிருந்தது. இடைமறித்து "இப்ப இந்தப்பசங்க என்ன செஞ்சிட்டாங்கன்னு இப்படி பஞ்சாயத்தை கூட்டியிருக்கீங்க செக்ரட்டரி சார்" என்றேன். எல்லோரும் அதிர்ச்சியில் சட்டென அமைதியானார்கள். " உங்களுக்கெல்லாம் என்னங்க இதுல பிரச்சினை? காலேஜ் போற வயசுல இந்த நாட்டை யாரு ஆளனும்னு ஓட்டுப் போட முடிவெடுக்கிறவங்க, யாருக்கு முத்தம் கொடுக்கணும்னு முடிவெடுக்க கூடாதா? இந்தப் பசங்களோட ப்ரைவசியில் தலையிடற உங்களைத் தான் இப்ப தண்டிக்கனும்" என்றவுடன், ஒரு அப்பா காரர் "நீ என்னமா பேசற, ஒரு ஒழுக்கம் வேணாம், பொது இடத்தில இப்படியா பண்றது?" என்று நியாயம் கேட்டார். "பொது இடத்தில் இவங்க என்ன கொலையா பண்ணாங்க, கிஸ் தான பண்ணாங்க? வீட்டிலயும் கெடுபிடி, ஸ்கூல் காலேஜ்லயும் கேர்ல்ஸ், பாய்ஸ்னு பிரிச்சு வைக்கிறீங்க, தப்பித் தவறி கோ எஜுகேஷனல சேர்த்தா ஆண் பெண் சாதாரணமா பேசினாலே பெனால்டி கட்ட சொல்றீங்க, விலக்கி வச்சு ஒருத்தரை ஒருத்தர் ஆணும் பெண்ணும் வெறிச்சு வெறிச்சு பார்க்க வைக்கிற உங்க போலித்தனமான ஒழுக்கம், கிடைச்சா பாய வைக்குது". கூட்டத்தில் சுத்தமாக முணுமுணுப்பு அடங்கியது. அந்த பெண்ணின் அம்மாவின் அழுகை  கூட அடங்கியிருந்தது.. "ஏம்மா இன்னைக்கு இதை செஞ்சவங்க நாளைக்கு இன்னும் வரம்பு மீறிப் போனா என்னமா பண்றது, அத அத அப்பப்ப கண்டிக்கனும்மா" என்றார் செக்ரட்டரி. " பசங்களுக்கு சேஃப்  செக்ஸ் சொல்லிக்கொடுத்து காண்டம் வாங்கிக்க சொல்லிப் பழக்காம  கட்டப்பஞ்சாயத்து பண்ணினா தான் ஆபத்து. நீங்க இப்படி கூட்டம் கூடி இந்தப் பிள்ளைங்கள க்ரிமினல்ஸ் மாதிரி அவமானப்படுத்தறது பத்தாம்பசலித்தனம், திருந்த வேண்டியது அவங்க இல்லை, நீங்க தான் " என்று சொல்லிவிட்டு அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டேன். நம்ம பாரம்பர்யம் என்னாவாவது கலாச்சாரம் என்னவாவது என்ற வகையில் ஆளாளுக்குப்  பேசிவிட்டு முத்தம் கொடுத்த அந்த பெண்ணின் "வகையறா லிஸ்டில்" என்னையும் சேர்த்துக் கண்டனங்களை தெரிவித்து விட்டு அந்தக் கூட்டம் களைந்ததாக பின்னர் கேள்விப் பட்டேன். வழியில் பார்க்கும்போதெல்லாம் எதிர்வீட்டுப் பெண் மட்டும்  நன்றியுடன் பார்ப்பாள். 

நினைத்து பார்த்தால் ஆயாசமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும், இந்தக்காலத்து பிள்ளைங்க சரியில்ல, ஒழுக்கம் இல்ல, கீழ்ப்படிதல் இல்ல, விளங்காத தலைமுறை, நாங்க எல்லாம் இந்த வயசில எப்படியிருந்தோம், எந்தப்பொண்ணை யாவது/பையனை யாவது  ஏறெடுத்துப் பார்த்திருக்கிறோமா என்று பெற்றொர்கள் புலம்புவதும் அலுத்துக்கொள்வதும் அறியாமை என்று தான் சொல்ல வேண்டும். என் பதின்பருவத்தில் மொபைல் ஃபோன் இல்லை, இன்டர்நெட் இல்லை, வாட்ஸ் ஆப் இல்லை. ஆனாலும் செய்திகள் பரிமாறிக்கொண்டோம், முத்தமிட்டுக்கொண்டோம், காதலித்தோம். முத்தமிட்டவர்களையெல்லாம் காதலிக்கவும் இல்லை. காதலித்தவர்களோடு எல்லாம் பிள்ளைத்தாச்சியாகவும் இல்லை. திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தபோது ஓடிப்போகவும் இல்லை. அப்போதும் பெற்றொர்கள் இதையே தான் புலம்பினார்கள். பெற்றோர்களாக இருப்பவர்கள்  அவர்களுடைய டீன் ஏஜில் அவர்களுக்கிருந்த வாய்ப்புகளிலும் நிச்சயமாக பொதுவாக சொல்லப்படுகிற எல்லா வரம்புகளையும் மீறி இருப்பார்கள். வசையும் வாங்கித் தான் இருப்பார்கள். நிற்க. அப்புறம் எதற்காக  ஆணையும் பெண்ணையும் மறைபொருளாக்கி  மர்மப் படுத்தி வைத்திருக்க  வேண்டும். அவரவர் சொத்தையும், சாதியையும், மதத்தையும் காப்பாற்றிக்கொள்ள அறிய வேண்டிய  வயதில் இருக்கும்  வயதில் இருக்கும் ஆணையும் பெண்ணையும் கௌரவம் / கலாசாரம் என்று பேசி பிரித்து வைப்பதற்கு பெயர் தலைமுறை இடைவெளியல்ல. அதிகார துஷ்பிரோயகம். பிள்ளைகள் உங்கள் வழியாக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் உங்கள் உடைமைகள் அல்ல என்பார் கலீல் கிப்ரான்.  வளரும் பருவத்தில், முக்கியமாக பதின்பருவங்களில் ஏற்படும் உடல் மாற்றங்களையும் உள்ளக்கிடக்கைகளையும் குறுகுறுப்புகளையும் அனுபவித்துக்  கடக்கும் உரிமைகள் பிள்ளைகளுக்குரியது. மாறாக அவர்களை யங் அடல்ட்ஸ் (Young adults) ஆகப் பார்க்காமல் கொட்டகையில் கட்டிவைத்திருக்கும் ஆடு மாடுகள் போல பார்ப்பதால் வரும் நோய் தான் இளைய தலைமுறையை குறை சொல்லும் புலம்பல்.சமூகத்தில் ஜனநாயகம் வேண்டும் , குடும்பத்திற்குள் நான் ஹிட்லர் என்று சொல்லும் பெற்றோர் தாங்கள் நியாயவான்கள் தானா என்பதை பரிசீலிக்க வேண்டும். சரிபாதி சதவிகித தொகையில் ஜனிக்கும் ஆணும் பெண்ணும் வாழ்க்கையை பகிர்ந்து புரிந்து எதிர்கொண்டு வாழ்ந்து தானே ஆக வேண்டியிருக்கிறது. பாலியலை, உடலை, வேட்கையை கற்றுத் தராமல்  தடுத்து, மூடி, கட்டுப்படுத்தி ஒடுக்கி வைப்பது எவ்வளவு பெரிய ஆரோக்கிய கேடு?  

Picasso
ஒரு மாற்றத்திற்கு, சுதந்திரமாக பிள்ளைகளை விட்டுப்பாருங்கள். அறிய வேண்டியதை அறிந்து கொண்டு வீடு வந்து சேர்வார்கள். கட்டுப்படுத்தி வைப்பதில் வளரும் வன்முறையும், குரோதமும், பொய்யும், புரட்டும் அகன்று விடும். ஈவ் டீசிங் இருக்காது. பேருந்துகளிலும், பொது இடங்களிலும், பெண்களை  ஏதோ ஜூவில் (zoo) பார்ப்பது போல பார்த்துக்கொண்டு விசில் அடிப்பதும் சீட்டியடிப்பதுமாய் ஆண்பிள்ளைகள்  நிற்க மாட்டார்கள். பாலியல் அத்துமீறல் நிச்சயம் குறையும். ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் மரியாதையாக இருக்கும் சமூகம் உருவாகும். அன்பு, காதல், நட்பு, காமம், எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவருக்கொருவர் மரியாதையாக இருப்பது தானே மனித நேயத்தின் அடிப்படை. சில வருடங்களுக்கு முன் கேரளத்து  வயநாட்டில் "கனவு" என்ற ஆதிவாசி பள்ளிக்கு சென்றிருந்தேன். பேபி  என்ற நாவலாசியர் தான் அந்த பள்ளியை நடத்திக்கொண்டிருந்தார். ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும், ஆசிரியர்களுமாய் எல்லோரும் மிக சுதந்திரமாக சமத்துவமாக சனநாயகபூர்வமாக ஒரு கம்யூன் போல வாழும் பள்ளியது. அறிவென்பது அதிகாரம் அல்ல என்பதை சுளீரெனப் புரியவைத்த அனுபவம் அது. எல்லோரும் வட்டமாக அமர்ந்து  கலந்துப் பேசிக் கொண்டிருந்த போது, இப்படி எல்லோரும் ஒரு இடத்தில் இருப்பதில் எசகு பிசகாக நடந்து பெண் குழந்தைகள் கர்ப்பமாகி விட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி வந்தது. அதற்கு பேபி, அதில் எசகு பிசகு என்று எதுவும் இல்லை, அதுவும் இயற்கையின் அழைப்பு தான், பிறக்கும் பிள்ளை எங்கள் எல்லோருக்கும் பிள்ளை தான் என்றார். மனித நாகரீகத்தைப் கற்றுக்கொள்ள நாம் ஆதிவாசி கிராமங்களுக்கு தான் திரும்ப வேண்டும்.

லீனா மணிமேகலை 

Thursday, April 8, 2010

சிட்டுக்குருவி

குறிப்பு -  புத்தகம் பேசுது - முதல் பிரேவசம் பகுதிக்காக எழுதப்பட்டது


என் முதல் பிரேவசம் என்பது என் பதினோரு வயதில், கோகுலம் என்ற குழந்தைகளுக்கான பத்திரிகையில் வெளிவந்த "சிட்டுக்குருவி" பற்றிய கவிதை தான். என் காலஞ்சென்ற தந்தை பேராசிரியர் இரா.இரகுபதி அப்போதெல்லாம் குமுதம், விகடன் கூட வாசிக்க விட மாட்டார். தாமரை, செம்மலர், கோகுலம், பூந்தளிர், ஆங்கிலத்தில் வரும் சோவியத் பத்திரிகைகள் தவிர மற்றவற்றிற்கெல்லாம், வீட்டில் தடை.நாங்கள் குடும்பமாக போவதென்றால் தாத்தா வெங்கடசாமியுடன்(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர்) கட்சியின் மாவட்ட கவுன்சில் போன்ற கூட்டங்களுக்கோ அல்லது அப்பாவுடன் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வருடாந்திர முகாம்களுக்கோ தான் செல்வோம். எனக்கு அந்த சமயங்களில் ஒரே கொண்டாட்டமாகிவிடும். தோழர் எம்.வி.எஸ்ஸின் சேர்ந்திசைப் பாடல்களில் கோரஸ் பாடுவதற்கும், தோழர் கே.ஏ.குணசேகரனின் நாட்டுப்புறப் பாடல்களில் தன்னானே போடுவதற்கும் எனக்கொரு வாய்ப்பு கிடைக்கும்.

பாடல்களோடு தான் கவிதைக்கான என் பரிச்சயம் தொடங்கியது. கர்நாடக இசையை முறைப்படி படித்திருந்தாலும், "அனுமதியோம், அனுமதியோம், நாட்டைத் துண்டாட அனுமதியோம்" என்ற சேர்ந்திசையிலும், "பாவாடை சட்டைக் கிழிஞ்சுப் போச்சுதே", "ஓலையக்கா கொண்டையில ஒரு கூட தாழம்பூ" என்ற தெம்மாங்கு பாடல்களிலும் தான் மொழி என் வசமாவதை உண்ர்ந்தேன். பரதத்தில் ஆடும் பதங்களிலும், வர்ணங்களிலும் சமஸ்கிருதத்தையும், தெலுங்கையும் அந்நியமாக உணர்ந்ததால்.எளிய தமிழில் அடவமைக்கப்பட்டிருந்த குறவஞ்சியையும், பாம்பு நடனத்தையும் மட்டும் விரும்பி ஆடுவேன்.

பள்ளிப் பருவங்களில் எதுகை, மோனை எல்லாம் போட்டு எளிய சொற்களில், பாடலுக்கான சந்தத்தோடு கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. கான்வென்டில் படித்ததால்,ஆங்கில கிறிஸ்தவ கோரஸ்களை நிறைய கற்றுத் தருவார்கள். அதை தமிழ்ப்படுத்தி,அதிலிருக்கும் வார்த்தைகளையெல்லாம் புரட்சி, எழுச்சி என்று மாற்றிப் பாடி பார்த்து தீவிரமாக டைரியில் எழுதி வைப்பேன். கட்சி மேடைகளில் தலைவர்களின் உக்கிரமான பேச்சுக்களின் நடுவே எனக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்பில் ஒரு மக்கள் கவிஞராக என்னைக் கற்பனை செய்துக் கொண்டு சொந்த வரிகளுக்கு மெட்டுப் போட்டு போடுவேன். பல மணி நேரங்கள் தலைவர்கள் உரையாற்றுவதை என் பாடல் ஒரு சில நிமிடங்களிலேயே சாதித்துவிடும் என்றும், சமூக மாற்றத்திற்கு முதல் படியே எல்லா தோழர்களையும் சேர்ந்திசைக்க வைப்பது தான் என்றும் திட்டவட்டமாக நிம்பியிருந்த காலங்கள் அவை.கவிதைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் என்று எல்லாவற்றிலும் என் சொந்த வரிகளை எழுதும்போது,சொற்களால் சமூகத்தையே புரட்டிப் போட்டுவிடுகின்ற திமிருடன் ஒரு காவல்தெய்வத்தின் ஆணவத்தோடு திரிந்திருக்கிறேன்.

பதினாலு வயதில் காதல் வந்த போது தான் குழப்பமே வந்தது. டைரியில் நான் எழுதத் தொடங்கியிருந்த காதல் கவிதைகளை அப்பா உளவு பார்த்து கண்டித்தது என்னை கடுமையாக பாதித்தது. வாழ்த்து அட்டைகள், காதல் கடிதங்கள், பரிசுகள், இவற்றோடு கவிதைகளையும் பதுக்குவது பெரிய சாகசமாயிருந்தது."உன் கண்களால் நான் கொஞ்சம் தூங்கி கொள்கிறேன்", "நீ நலம், நான் அங்கு நலமா" போன்ற கவிதைகள் கவர்ந்த காலங்கள் அவை.எனக்கு வந்து சேரும் காதல் கவிதைகளில் சிறிது கவித்துவம் கூடி எழுதும் பசங்களுக்கு அதிகம் கரிசனம் காட்டுவது, ஒரு கவிதை டீச்சர் போல வரிகளைத் திருத்திக் கொடுப்பது என்று அட்டகாசமாய் காதலியை விட காதலை நேசிக்கும் விடலைப் பசங்களோடு என் கவிதைப் பிரயத்தனங்கள் வளர்ந்தது. கவிதைப் போட்டிகளில் நண்பர்களுக்கு எழுதிக் கொடுத்து பரிசு வாங்கித் தருவது, அதைக் கொண்டாடுவது என்று நட்புக்கும் கவிதை உதவியது.

குடும்பத்தின் கண்களிலிருந்து கவிதையை மறைக்க ஆரம்பித்ததில் கவிதை எனக்கு ரகசியங்களின் கிடங்காக மாறியது.பெண், சாதி, குடும்பம், வர்க்கம்,நம்பிக்கைகள்,இருப்பு என்று எல்லாவற்றையும் பற்றிய கேள்விகளும், தேடல்களும் தீவரமடைந்த போது, கவிதை எனக்கு நானே நடத்திக் கொண்ட உரையாடல் களமானது. பதிப்பிக்க வேண்டும், பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும், மேடைகளில் வாசிக்க வேண்டும் என்று எந்த நோக்கமும் இல்லாது என் உடல்தட்ப வெப்பத்திற்கேற்ப நீளும் அல்லது மறையும் நிழலாக கவிதை என்னைத் தொடர்ந்தது.நான் படித்த முதல் நாவல் தாய் தான் என்றாலும் நம்ம ஊர் படைப்பாளிகளைத் தேட தொடங்கினேன். ரமணிச்சந்திரன், சுஜாதா, பாலகுமாரனைத் தாண்டி ஜெயகாந்தனும், அம்பையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். சுபமங்களாவை புரிந்தும் புரியாமலும் மேலிருந்துக் கீழாக, கீழிருந்து மேலாக பல தடவை வாசித்துப் பழகுவேன்.

கல்லூரி நாட்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தோடு சேர்ந்து, கிராமங்கள் தோறும் வீதி நாடகங்களில் பங்காற்றியிருக்கிறேன். அப்போது நான் அறிந்துக் கொண்ட கிராமத்து சொலவடைகளும், நாட்டுப் பாடல்களும் நான் எந்த புத்தகத்திலும் படித்தறியாத அனுபவத்தையும் உணர்வையும் தந்தது. அப்பா நூலகத்தில் நான் பார்த்தறிந்த அகராதிகள், நிகண்டுகள் , அபிதான சிந்தாமணிகள் எதிலும் கற்றுக் கொள்ள முடியாத கிராமத்து பெரிசுகளின் சொற்களும் அர்த்தங்களும் மொழி, அழகியல்,பண்பாடு குறித்த புதிர்த்தனமான மனநிலையை தோற்றுவித்தன..ஆனால், பொறியியல் கல்லூரியில் படித்ததால், கவிதை ஒன்று தான் என்னை மொழியோடு,நான் வாழும் சமூகத்தோடு பிணைத்திருந்தது. எனக்கென்று ஒரு அரசியல் பார்வையையும் மொழிமூலமே பெற முடிந்தது. தொழில்படிப்பென்பதால், பாடங்களும் பயிற்சி வகுப்புகளும் கடுமையாக இருக்கும். ஆனாலும் அப்பாவின் நூலகங்களிலிருந்து உருவிய புதுமைப்பித்தனும், கி.ராஜநாராயணனும்,கு.அழகிரிசாமியும் என்னை சுண்டி இழுத்தார்கள்.வாசிப்பில் கதைகள் தான் அதிகமென்றாலும், தனியே நான் எழுதிப் பார்க்கையில் கவிதை மாதிரி ஒன்றைத்தான் என்னால் எழுத முடிந்தது.ஆனால்,நவீன கவிதை என்றால் என்ன என்ற அனா,ஆவன்னா தெரியாத காலத்தில் கூட நான் எழுதும் கவிதைகள் மிகவும் நாடகத்தனமாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்கிருந்தது. அதனால் யாரிடமும் நான் எழுதியதைக் காட்டுவதற்கு வெட் கமாகவும் தயக்கமாகவும் இருக்கும். கணினிகளோடும், எலக்டிரானிக் சிப்களோடும், மெஷின்களோடும் வாழப் போகும் எனக்கு கவிதை சாத்தியமாகுமா என்ற கேள்வியும் அவ்வப்போது என்னை ஒடுக்கிவிடும்.

இயக்குநர் பாரதிராஜா, கவிதைக்கான என் வேட்கையை அடையாளம் கண்டவர். அவரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் அவர் மேஜையில் அன்று மலர்ந்தப் பூக்களும்,என்னுடைய கவிதை ஒன்றுமிருக்கும். அவர் அதைப் படித்துவிட்டு உயர்த்தும் புருவத்திலும், சுருக்கங்கள் நெளிய காட்டும் முகபாவத்திலும் என் அடுத்தடுத்த கவிதைக்கான முகவரி இருக்கும்.என் தந்தையின் கண்டிப்புக்கும், ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் அஞ்சி பதுங்கியிருந்த என் மொழி, இயக்குநரின் நேசத்திலும் உரையாடல்களிலும் பாராட்டுகளிலும் ஒரு காட்டாறு போல பாயத்தொடங்கியது.

ஆத்மநாம், நகுலன், இன்குலாப், வ.ஐ.ச ஜெயபாலன், கலாப்ரியா, சுகுமாரன், சேரன், சிவரமணி என்று தேடி தேடி வாசித்தேன்."தாமரை" என்னுடைய கவிதைகளை பிரசுரித்தது. கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாட்டுக் கவியரங்கத்தில் முதல் தடவையாக கவிஞர் லீனா மணிமேகலை என்று அச்சிட்டு வந்த அழைப்பிதழை வெகு நாள் பாதுகாத்து வைத்திருந்தேன். கவிஞர் குட்டிரேவதியின் "பூனையைப் போல அலையும் வெளிச்சம்" படித்தபோதுதான் நானும் ஒரு தொகுப்பு வெளியிடுமளவு கவிதைகள் எழுத வேண்டும் என்று உந்துதல் வந்தது. மாலதி மைத்ரி, சல்மா, கிருஷாங்கனி,லதா ராம்கிருஷ்ணன் இவர்களையெல்லாம் படித்து என் கவிதைகளைப் பலவாறு சுயவிமர்சனம் செய்து கொண்டு, இன்னும் எழுதிப் பழகனும், தொகுப்பெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

ஜெரால்ட் தோழனான பிறகு, தமிழ் மாணவரான அவர், நான் எழுதுவதையெல்லாம் காட்டமாக விமர்சிப்பார். இலக்கியம், சினிமா, அரசியல், கலை என்று கன்னா பின்னாவென்று சுற்றித்திரிந்தபின் எழுது, அனுபவம் போதாது என்பார்.கணையாழி,தீராநதி, என்று எல்லா சிறுபத்திரிகைகளுக்கும் எழுதினேன். ஒரு தொகுப்பு வெளியிடுமளவுக்கு பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் சேர்ந்தபோதும் தயக்கம் தான். சரி, நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் சுகுமாரனுக்கு அனுப்பி பார்க்கலாம்.அவர் முன்னுரை அளித்தால் வெளியிடலாம் என்று தோன்றியது.கவிஞர் சுகுமாரன் "தமிழ்க் கவிதையில் கேட்கும் அசலானதும், தீவிரமானதுமான குரல்களில் லீனா மணிமேகலையின் குரலும் ஒன்று என்றும், சில ஆண்டுகளுக்கு முன் அவர் கணையாழியில் அவரெழுதிய "பெண் கவிதை மொழி, கணையாழி ஏப்ரல் 94" என்ற கட்டுரையைத் திரும்ப பெற்றுக் கொள்வதாகவும்" எழுதியது எனக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்தது. ஜெரால்டு தன் கல்லூரிக்காலங்களிலிருந்து கண்ட பதிப்பக கனவை கனவுப்பட்டறையாக உருவாக்கினார். என் "ஒற்றையிலையென" அதன் முதல் புத்தகமாக வெளியானது.அப்போது எனக்கு வயது 23.என் தந்தையிடம் காட்டவே முடியாத பிரதி.எனக்கு அவரோடு இருந்த நட்பு முரண் இன்னும் தீர்த்துக் கொள்ள முடியாத கணக்கு.

சினிமாவும், தொலைக்காட்சியும் பிரதான ஊடகங்களென நான் தெரிவு செய்து பணியாற்றத் தொடங்கியபோது சுளீரென்று உரைத்த உண்மை ஒன்று தான். கவிதை என்பது உண்மையில் நான் எழுதிப்பார்க்கும் வரிகள் மட்டும் அல்ல. கவிதை என்பது ஒரு மனநிலை.ஒன்றை கதையாக்கி விரிப்பதும், காட்சிகளாக்கி பார்ப்பதும் கவிமனம் தான். எந்த ஒரு படைப்பாளிக்கும் கவிமனம் தான் ஆரம்பப் புள்ளி. எந்த கலையனுபவமும் அடிப்படையில் கவிதானுபவம் தான். ஒரு சொல், ஒரு பிம்பம், பல சொற்கள் ஒரு பிம்பம், பல பிம்பங்கள் ஒரு சொல் என்று கலையும், உணர்வும், தொழில்நுட்பமுமாய் சினிமா எனக்கு கவிதையின் நீட்சியாய் புலப்பட்ட போது தெளிவு பிறந்தது.

இன்று வெகு தூரத்திற்கு வந்துவிட்டேன்.கவிதைகளைப் பற்றிய என் அரசியல் பார்வை தீர்க்கமடைந்திருக்கிறது. வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று எழுத்தின் செயல்பாடுகளை கூர்மைபடுத்த விரும்புகிறேன்.என் கவிதை எதிர் கலாச்சார நடவடிக்கையாக மேலும் மேலும் தொழில்படும். எல்லா சட்டங்களையும் மீறும், வெளியேறும்,திளைக்கும். என் கலை வெட்டிவிட்ட பாதையில் ஒருபோதும் போகாது.

"உலகின் அழகிய முதல் பெண்" என்ற எனது இரண்டாவது தொகுப்பிற்கு சர்வதேச விருதும் கிடைத்திருக்கிறது, வக்கிரமான அவதூறு கட்டுரைகளும் நடந்திருக்கிறது ,போலீஸ் கேஸ், கட்சி வழக்குகளையும் இனி சந்திக்கும்.

ம.க.இ.க, இந்து மக்கள் கட்சி இன்னும் எங்கிருந்து எந்த தாக்குதல் வந்தாலும் என் படைப்பு ஒன்றே என்னிடமிருக்கும் முதலும், கடைசியுமான ஆயுதம்.



லீனா மணிமேகலை 25 . 03. 2010