Sunday, November 29, 2009

சூரிய கதிர் நவம்பர் 16, குட்டி ரேவதி பேட்டிக்கான எதிர்வினை

நவம்பர் 16 தேதியிட்ட "சூரிய கதிர்" இதழ் என் கவனத்திற்கு வந்தது. குட்டிரேவதி தன் பேட்டியில் உதிர்த்துள்ள எண்ணற்ற அபத்தங்களில்,என் குறித்த கருத்தும் ஒன்று.


377 சட்டப்பிரிவை நீக்குவதைப் பற்றிய உச்சநீதிமன்றத்தின் பரிந்துரை, அதையொட்டி எழுந்துள்ள ஓரினச்சேர்க்கை குறித்த பரவலான விவாதங்கள் பற்றிய கேள்விக்கு எந்த இடத்திலும் குட்டி ரேவதியிடம் நேரடியான பதில் இல்லை. அதை விட்டுவிட்டு ஊடகங்களுக்கு பொறுப்பில்லை, "உலகின் அழகிய முதல் பெண்" கவிதை தொகுப்பில் இருபாலுமை பேசும் லீனா மணிமேகலைக்கு புரிதல் இல்லை என்று அறிக்கை விடுகிறார்.

"ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது தான் இயற்கையின் நியதி"- அட! குட்டிரேவதி இவ்வளவு பெரிய கலாச்சாரவாதியா? "இயற்கை" என்பதற்கு என்ன வரையறை வைத்திருக்கிறார் ரேவதி?குறியும் யோனியும் நேரடியாக உறவு வைத்துக் கொள்வதையா? இயற்கைxசெயற்கை எதிர்வுகளுக்கு குட்டி ரேவதி பரிதாபமாக பலியாகியிருக்கிறார்.

பாலியல் விருப்பங்களும், தேர்வுகளும் அவரவர் சுதந்திரம். பளிச்சென்று சொல்கிறேன், என்னைப் பொறுத்தவரை குறியுடனான புணர்ச்சி என்பதை விட பாலுறுப்புகளை உரசுவதால் உண்டாகும் கிளர்ச்சியே உச்சத்தை தரும். பாலுறுப்புகளை வருடி,முததமிட்டு எழுச்சி ஏற்படுத்தச் செய்வதற்குரிய விரல்களோ, நாக்கோ ஆண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? பெண் தோழமையுடையதாய் இருந்தால் என்ன? ஏன் என்னுடையதாகவே இருந்தால் தான் என்ன? எல்லாமே எனக்கு ஒன்றுதான்,விருப்பம் தான். ஆக இருபாலுமை என்பது என் தேர்வு,உரிமை.

சமூகத்தால் மறு உற்பத்திக்காக கட்டமைக்கப்பட்டிருக்கும் பாலுமை ஒற்றைத்தன்மையை மறுதலிப்பதைப் பற்றி சட்டம் வேண்டுமானால் இப்போதுதான் வாய் திறக்கலாம்.மனித இனம் எப்போதுமே பால்சேர்க்கையில் ஓரினச்சேர்க்கை, எதிர்ப்பாலுறவு, சுயப் புணர்ச்சி, இருபாலுமை என்று பன்மைத் தன்மைகளோடு தான் இருந்திருக்கிறது. வரலாற்றுக்கும் முந்தைய குகை ஓவியங்கள் இதற்கு சாட்சியமளிக்கின்றன.

அப்புறம் ரேவதி என்ன சமூக இலக்கிய கமிசாரா?எங்கள் சமூகப் பொறுப்பு, புரிதல் இவற்றுக்கெல்லாம் அவரிடம் சான்றிதழ வாங்க வேண்டுமா? ஆதிக்க சமூகம் திணிக்கும் அத்தனை பொறுப்புகளையும் மீறுவதாலும், கேள்வி கேட்பதாலும் " பொறுப்பற்றவள்" என்ற பெயரை விரும்பியே சுமக்கிறேன்.இறுதி வரை சுமப்பேன்.

கலாச்சாரத்தை கொட்டிக் கவிழ்க்கும் படைப்பாளிகள்,குறிப்பாக பெண் படைப்பாளிகள் மீது அவசரமாக விழும் குற்ற்ச்சாட்டு "விளம்பரப் பிரியர்" என்பது தான்.."முலைகள்" தொகுப்பு வந்த போதும்,"சண்டைக்கோழி துப்பட்டா" பிரச்சினை வந்த போதும் குட்டி ரேவதியின் மீது அந்த குற்றச்சாட்டு ஏவப்பட்டது. அதையே என் மீதும் ஏவும் ரேவதி கலாச்சாரவாதிகளின் கைக்கூலியாக எப்போது மாறினார்? பகுஜன் சமாஜ் கட்சிக்குப் போய் வந்ததிலிருந்தா?

பார்ப்பனீயத்தோடு கை கோர்த்து ,தலித்துகளுக்காக என்று பேர் பண்ணிக்கொண்டு கேடு கெட்ட அரசியல் செய்யும் தலைமை மாயாவதி,மக்களின் காசையெல்லாம் தன் ஆளுயர சிலைகளாக மாற்றியதைத் தவிர வேறு என்ன செய்தார்? தேர்தல் நேரத்தில் அந்தக் கட்சியில் இணைந்து தனக்கொரு சிலை வைத்துக் கொள்ள முடியாததால் குட்டி ரேவதி அதிலிருந்து வெளியேறினாரா?

ஈழப் பிரச்சனையில் எல்லா படைப்பாளிகளையும் பொத்தாம் பொதுவாக சாடும் இவர், யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், தன்னை அரசியலாக இணைத்துக் கொண்டு வேலை செய்த தேசியக் கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி ஈழம் குறித்து எடுத்த நிலைப்பாடு என்ன என்று கேட்டிருப்பாரா?கேட்டிருந்தால் நமக்கெல்லாம் சொல்வாரா? சமீபத்தில் "இனியொரு" இணையதளத்தில் ஆயுதப் போராட்டத்தை ஃபேண்டசைஸ் செய்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார். குட்டி ரேவதி, குறைந்தப் படசம் ஈழத்திற்கு போய் ஆயுதப் போராட்டத்தில் பங்கு கொண்டிருக்க முடிந்திருக்க வில்லையென்றாலும், இந்தியாவில் நக்சல்பாரி இயக்கத்திலாவது இணைந்து செயல்பட்டிருக்க வேண்டும்.

ஆயுதம் தன் கையில் இருந்தாலும், எதிரியின் கையில் இருந்தாலும் அழிவு அழிவு தான்..


லீனா மணிமேகலை

குறிப்பு : தணிக்கை செய்யப்படாத பிரதி (சூரிய கதிர் ஆசிரியர் குழு வழக்கம் போல தணிக்கையெல்லாம் செய்யமாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்து எதிர்வினையைப் பெற்றுக் கொண்டு, பதிப்பில் வேலையை காட்டி விட்டார்கள்)

Tuesday, November 17, 2009

பாலியல் கலகம் : நொறுங்கும் கலாச்சாரம் - மீனா

‘மனிதரை உள்ளுணர்ச்சிகள் வழிநடத்த வேண்டும்.அறநெறிகள் அல்ல’
-நீட்சே


‘அற’நெறிகளால் மட்டுமே வழிநடத்தப்படும் இந்திய கலாச்சாரத்தை ஆட்டம் காண வைத்திருக்கிறது டில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு. பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இயங்கும் ‘நாஸ் பவுண்டேசன்’ என்கிற தனியார் அமைப்பு, பாலின சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377ஐ நீக்க வேண்டும் என்று டில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தது.  நீண்ட காலமாய் ஒத்திவைக்கப்பட்டு வந்த இவ்வழக்கிற்கு கடந்த ஜீலை 2 ஆம் தேதி நீதிபதி ஏ.பி.ஷா, எஸ்.முரளிதர் ஆகியோர் அடங்கிய பென்ச் தமது தீர்ப்பை வழங்கியிருக்கிறது : இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21[வாழ்க்கைப் பாதுகாப்பு மற்றும் தனிமனித சுதந்திரத்திற்கான உரிமை],14 [சட்டத்தின் முன் அனைவரும் சமம்] மற்றும் 15[மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வேறுபடுத்தலைத் தடுத்தல்] ஆகியவற்றை மீறுகிற தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு மனிதரின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாக இருக்கிறது.வயது வந்தவர்கள் [18 வயது நிரம்பியவர்கள்] பரஸ்பரம் சம்மதத்துடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடத்தடை இல்லை.

நீதிமன்றங்களில் ஆயிரமாயிரம் வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. அனைத்திற்கும் தீர்ப்பு கிடைக்கலாம்.நீதி தான் கிடைப்பதில்லை. சனாதன சமூகத்தில் நிகழ்ந்திருக்கிற இந்த பேரதிசயம் பாலியல் சிறுபான்மையினர் வரலாற்றில் ஆகப்பெரிய வெற்றி.இதற்கு முந்தைய வெற்றி ஒன்று இருக்கிறது. ‘ஸ்டோன்வால் கலவர’ நிகழ்வு. தம்மை ஒடுக்குகிற அதிகாரத்துவ சமூகத்தை எதிர்த்துத் தன்பால் புணர்ச்சியாளர்கள் நடத்திய முதல் போராட்டம் இதுவே. அமரிக்காவில் 1950 மற்றும் 60 களில் பாலின சிறுபான்மையினரை பாரபட்சமின்றி அங்கீகரித்த இடம் ‘பார்கள்’ மட்டுமே. மா•பியாவுக்கு சொந்தமான ‘ஸ்டோன்வால்’ கூட ஒருவகை பார் ஹோட்டல் தான்.இது நியூயார்க்கின் அருகில் உள்ள கிரின்விச்சில் அமைந்திருந்தது. பெண் உடைகளை அணியும் ஆண்கள், திருநங்கைகள்,பாலியல் தொழிலாளிகள், ஆதரவற்ற இளைஞர்கள் ஆகியோருக்கான புகலிடமாக ‘ஸ்டோன்வால்’ இருந்தது.

1960களில் இங்கு பொலிஸ் சோதனை செய்வது வழக்கமாகிப் போன போது,அதனை எதிர்த்து இவர்களால் வெடித்த கலவரம் காக்கிச்சட்டைப் போலிஸ்களை மட்டுமில்லை கலாச்சார போலிஸ்களையும் திணறடித்தது. இதுவே இவர்களது முதல் வெற்றி. வெகு விரைவிலேயே அடக்குமுறைகளுக்கு அஞ்சாத வலுப்பெற்ற அமைப்பாக இவர்கள் உருவெடுத்தனர். ஆறு மாதங்களிற்குள் தன்பால் புணர்ச்சியாளர்களுக்கான அமைப்பு ஒன்று நியூயார்க்கில் நிறுவப்பட்டது.சமுதாயத்தில் தங்களின் உரிமைகளை வளர்த்தெடுக்க ‘கே’ மற்றும் ‘லெஸ்பியன்’களுக்கான 3 பத்திரிக்கைகளை இந்த அமைப்பு துவக்கியது.

சில வருடங்களுக்குள்ளாக தன்பால் புணர்ச்சியாளர்களுக்கான அமைப்புகள் அமரிக்கா மற்றும் உலகெங்கும் நிறுவப்பட்டன. ‘ஸ்டோன்வால்’ கலவரத்தின் முதலாம் ஆண்டு நிறைவின் போது முதல் முறையாக தன்பால் புணர்ச்சியாளர்களின் பேரணி லாஸ் ஏஞ்சலிஸ் மற்றும் நியூயார்க்கில் 1970 ஜுன் 28 ஆம் நாள் நடத்தப்பெற்றது.இதன் பிறகு,1973 இல் APA[American Psychiatric Association] தன்பால் புணர்ச்சியை மனித உடலுறவின் இயல்பான மற்றொரு வகைமை என ஏற்றுக் கொண்டது.கலாச்சார அதிகாரங்களின் முன் அடங்கமறுக்கும் திராணியோடு உரிமைக்காக குரலுயர்த்திய ‘ஸ்டோன்வால் கலவரத்தை’ நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் ஜுன் மாத இறுதியில் தன்பால் புணர்ச்சியாளர்களின் பேரணியும், நிகழ்வுகளும் உலகெங்கும் நடத்தப்படுகின்றன.

தென்னிந்தியாவிலேயே முதல் -முறையாக சென்னையில் கடந்த ஜுன் மாதம் இத்தகைய பேரணி நடைபெற்றது.200 LGBT [Lesbian Gay BI-sexual Transgender] உறுப்பினர்கள் மட்டுமன்றி அவர்களது நண்பர்கள், பெற்றோர்கள் இதில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.தம்மைக் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்வுகளை ஜுன் மாதம் முதலிலிருந்தே துவக்கி, மாத இறுதியில் ‘பெருமைமிகு வானவில் பேரணியை’ மெரினா கடற்கரையில் நடத்தினார்கள்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது. 148 ஆண்டுகால அதிகார வன்முறையை அதிரடியாக முடக்கிப் போட்டிருக்கிறது உயர்நீதிமன்றத் தீர்ப்பு. நீதிபதிகளை உளமாரப் பாராட்ட வேண்டும்.தமது உறவுகளுக்குக் கிடைத்திருக்கும் சட்டஅங்கீகாரம் தன்பால் புணர்ச்சியாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறது.மனித உரிமை ஆர்வலர்கள் தீர்ப்பை பெரிதும் வரவேற்கிறார்கள்.தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தின் இயக்குனர் சுஜாதா ராவ், ‘இது ஒரு நல்ல தீர்ப்பு.பி¡¢வு 377 ஐ நீக்க வேண்டும் என்பது தான் எங்களின் நீண்ட நாள் கோரிக்கை.தற்போது நிறைவேற்றப் பட்டிருப்பதின் மூலம் எஸ்.ஐ.வி/எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களை அணுகுவதில் உள்ள சிரமம் பெருமளவு குறைந்துவிடும்’ என்று சொல்லி இருக்கிறார்.ஐ.நா மற்றும் பல்வேறு உலக அமைப்புகளும் நீதிமன்றத் தீர்ப்பை பாராட்டி உள்ளன.

தீர்ப்புக்கு ஆதரவு ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் எதிர்ப்பு வலுத்துக் கொண்டிருக்கிறது. அறிவிக்கப்பட்ட நாள் முதல் பல்வேறு போராட்டங்களின் மூலம் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகிற மதவாத-கலாச்சார அமைப்புகள் இதன் உச்சமாய் உயர்நீதிமன்றத் தீர்ப்பை நீக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.தமக்குச் சாதகமான தீர்ப்பு கிட்டும் என்று இவர்கள் இரண்டைப் பொருத்தமட்டில் நம்புகிறார்கள். ஒன்று உச்சநீதிமன்றம். மற்றொன்று மத்திய அரசு.

டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது ‘ஓரினச் சேர்க்கைக்கு தண்டனை விதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக் கூடாது’ என்று தனது தரப்பில் மத்திய அரசு கூறியது. ‘இது ஒரு கிரிமினல் குற்றம்.இதனை நாட்டில் அனுமதிக்க முடியாது’ என்று கொதித்தெழுந்தார் சட்டத்துறை அமைச்சர் வீரப்பமொய்லி.ஆனால் மத்திய அரசின் தற்போதைய நிலைப்பாடு ‘கழுவுற மீனில் நழுவுற மீன்’ என்கிற கதையாய் இருக்கிறது.சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்,சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகிய மூவா¢ன் தலைமையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பின் நன்மை தீமைகள் அலசி ஆராயப்பட்டு மத்திய அரசிடம் அளிக்கப்பட்டது.இதனைப் பரிசீலித்த பின், ‘இதில் உச்சநீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டது மத்திய அரசு.இனி கலாச்சாரவாதிகளின் நம்பிக்கை ஒன்றே ஒன்று தான். உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் மாதத்தில் துவங்குகிறது.தீர்ப்பிற்காக காத்திருக்கும் பொழுதில் வழக்கு தொடுத்த கலாச்சாரவாதிகளின் நிலைப்பாட்டைக் கொஞ்சம் விவாதிப்போம்.

உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிராகக் கலாச்சாரவாதம் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டு போகிறது என்றாலும் அவற்றுள் பிரதானமானது ‘ஓரினச் சேர்க்கை இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’ என்பது தான். நன்மை*தீமை, நாம்*அவர்கள் உள்ளிட்ட எதிர்வுகளின் கதையாடல்கள் எல்லாம் கட்டுடைக்கப் பட்டுவிட்ட நிலையில் இந்த இயற்கை*செயற்கை நமக்கொன்றும் புதிதில்லை தான். ஆனபோதிலும் கலாச்சாரத்தைத் தோலுரித்துப் போடுவதென்பது ஒருமுறை அல்ல ஒவ்வொரு முறையும் நிகழ்த்த வேண்டி இருப்பதால் வழமை தானே என எளிதாகக் கடந்துவிடுவதற்கில்லை.

‘ஓரினச் சேர்க்கை இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது’ என்பது இவர்களின் வாதம்.தன்பாலினரோடு கொள்கிற உறவு செயற்கையானது என்றால் எதிர்ப்பாலினரோடு கொள்கிற உறவு இயற்கையானதாக இருக்க வேண்டும். ஆனால் இயற்கை என்பதற்குக் கலாச்சாரத்தின் வரையறை ‘யோனியும், குறியும் நேரடியாகக் கொள்கிற உறவு’ என்பதுதான். இந்த ‘நேரடி உறவை’ அத்துமீறுகிற முன்னின்பம், வாய்வழிப்புணர்ச்சி, குதப்புணர்ச்சி...உள்ளிட்ட அனைத்தும் செயற்கையானது.

புணர்ச்சியின் பன்மைத் தன்மைகள் மறுக்கப்பட்டு ‘வாரிசு உருவாக்கம்’ என்கிற ஒற்றைத் தன்மை கட்டாயமாக்கப்படுவதன் பின்புலம் தனியுடைமையின் தோற்றம்.இதன் உடனிகழ்வு யோனியின் மீதான சொத்துடைமை எண்ணம். சுருங்கச் சொல்வதெனில்,இந்த ‘இயற்கை’யின் வரையறை தான் ஆதிக்கப்பாலியலின் முதல் காமசூத்திரம்.பெண்ணுடலின் மீதான முதல் அதிகாரக் கட்டமைப்பு.

இந்த ‘இயற்கை’ கொட்டிக் கவிழ்க்கப்பட்டால் அது செயற்கைமட்டுமில்லை. பெருங்குற்றம்.தண்டிக்கப்பட வேண்டிய குற்றம்.தண்டனையை வழங்குவதற்காய் உருவாக்கப்பட்ட அரச அதிகாரமே ‘பிரிவு 377’.இதன் வரையறைப்படி, தன்பால் புணர்ச்சி மட்டுமில்லை,’வாரிசை உருவாக்காத எந்த ஒரு பாலியல் உறவும்[ வாய்வழிப்புணர்ச்சி, குதப்புணர்ச்சி...] இயற்கை ஒழுங்கிற்கு எதிரானது.சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டியது’. இங்கொன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.கலாச்சாரத்தின் எல்லைகள் உடைபடுகையில் தண்டிக்கப்படுவர்கள் மனிதர்கள் இல்லை.பெண்கள். ‘எத்தனை பேர் நட்ட குழி’ என்று எகத்தாளம் பேசுகிற இந்த கேடுகெட்ட சமூகம் ‘எத்தனை பேரில் நட்ட குறி’என்று கேட்க எத்தனித்ததும் இல்லை.இவர்கள் 377 இற்காக தவமாய் தவம் கிடப்பதன் முக்கிய நோக்கமும் தன்பால் புணர்ச்சியாளர்களைத் தண்டிப்பது அல்ல.லெஸ்பியன்களைத் தண்டிப்பது.லெஸ்பியன்களை மட்டுமல்ல கட்டமைப்புகளைக் கலைத்துப் போடுகிற கலகக்காரிகளைத் தண்டிப்பது.

அதிகாரத்தால் ஆட்டிப்படைத்து எப்படியேனும் சட்டத்தை மீட்டுவிட வேண்டும்.இல்லையென்றால் குடும்ப அமைப்பு சிதைக்கப்படுவதன் மூலம் பெண்ணின் சுதந்தரவெளி அகண்டமாவது,யோனியின் மீதான இனப்பெருக்க கட்டாயம் குப்பையில் எறியப்படுவதால் பாலியல் களம் மீண்டும் இன்பத்துய்ப்பிற்கே உரியதாக்கப்படுவது உள்ளிட்ட புரட்சிகள் ஆணாதிக்கத்திற்கு ஆப்பு வைக்கும் என்பது இந்த குள்ளநரிகளுக்குத் தெரியாதா என்ன?

தன்பால் புணர்ச்சியை வேரறுக்கும் முயற்சியில் இவர்களால் முன்வைக்கப்படும் குற்றங்களில் சில:

1.பால்வினை நோய்கள் பெருகுகின்றன. 2.இப்போது ஓரினப் புணர்ச்சியை ஆதாத்தால் பிறகு விலங்குப் புணர்ச்சியையும் ஆதரி என்பார்கள். 3.எதிர்ப்பால் உறவில் மட்டுமே முழுத்திருப்தி அடைய முடியும். 4.வகுக்கப்பட்ட ஒழுக்கங்களை மீறுவது தான் அடிப்படை உரிமையா? உணவு,உடை,உறைவிடம் தான் ஒவ்வொரு மனிதரின் அடிப்படை உரிமை.

1.பால்வினை நோய்கள் பாதுகப்பற்ற உடலுறவால் ஏற்படுபவை. எதிர்ப்பாலினருக்கான உறவில் இதே பிரச்சனை எழும்போது ‘உறைகள்’ தானே தீர்வாய் சொல்லப்பட்டது. ’எஸ்.ஐ.வி உள்ளவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே அவர்களுக்கும் வளர,வாழ,படிக்க,பழக உரிமை உண்டு-இனி ஒரு விதி செய்வோம்’ என தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், நம்பிக்கை மையம் போன்றவை தமிழகத்தைச் சபதமேற்கச் செய்து கொண்டிருக்கின்றன. அதற்கெல்லாம் வாயைப் பொத்திக் கொண்டிருக்கிற கலாச்சாரவாதிகள் இப்போது மட்டும் வாயில் வயிற்றில் அடித்து கொள்வது ‘சிறுபான்மையினர்’ என்பதாலா? இந்த உறவு மனித இனத்திற்கு கேடு என்றால் உலக சுகாதார நிறுவனம்[WHO] 1992 இல் தன்பால் புணர்ச்சியை அங்கீகாத்ததாக அறிவித்தது எப்படி?

ஒருவகை. தமக்கு உதவிய வளர்ப்பு விலங்குகள் மீது மனிதருக்கு இருந்த மோகமே[அன்பு] விலங்குப் புணர்ச்சியாய் முடிந்தது. இன்றைக்கும் pet animals மீதான மோகமே விலங்குப் புணர்ச்சிக்கு அடிப்படையாய் இருப்பதை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.தனது உடலோடு பாலியல் உறவு வைத்துக்கொள்ளும் புறநிலையைத் தேர்வு செய்வது தனிநபர் உரிமை. பெல்ஜியம், ஜெர்மனி,ரஷ்யா போன்ற நாடுகள் விதிகளுக்கு உட்பட்டு இதை அனுமதித்து இருக்கின்றன. விலங்குப் புணர்ச்சி பாலியலின் ஒரு வடிவம் இல்லையென்றால் காமக் கலைக்கோவிலில்[கஜுராகோ] மனிதரும், விலங்கும் புணர்கிற சிற்பம் தத்ரூபமாய் வடிக்கப்பட்டிருப்பதன் பொருள் என்ன?

3.இதை விடவும் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் வேறொன்று இருக்க முடியுமா? இந்த எதிர் உறவில் பெண்ணுக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடம் என்ன?நிரப்பப் படவேண்டிய பாத்திரம். துய்க்கப்பட வேண்டிய பொருள் அவ்வளவே.உதட்டைக் கடித்தால் அந்தப்பக்கம் பத்து பெண்களும், உற்றுப்பார்த்தால் இந்தப்பக்கம் பத்து பெண்களும் மயங்கிச் சரிவதெல்லாம் நாறிப்போன தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.ஆதிக்கப் புணர்ச்சியில் பெண்ணுக்கு மிஞ்சுவது வெறுமை மட்டுமே.எதில் இன்பம் என்பது தீர்மானிக்கப்பட்டதல்ல. தீர்மானிக்கப்படுவது.

4.’பசி,நித்திரை,புணர்ச்சி ஜீவ சுபாவம்’ நமது பெரியார் சொல்லிக் கொடுத்து நூற்றாண்டு கடந்துவிட்டது.இன்னுமா ஒன்றாம் வகுப்புப் பாடத்தையே நம்பிக்கொண்டிருப்பது? பாலுணர்ச்சி பிறப்பிலேயே ஒட்டிப்பிறந்த உணர்ச்சி-அடிப்படை உணர்ச்சி.இதற்கே உரிமையில்லையென்றால் எப்படி?உடை,உறைவிடமெல்லாம் வெறும் கற்பித உணர்ச்சிகள் தானே!

கலாச்சாரத்தின் முகத்தில் அறைவதற்கு நம்மிடம் ஆயிரமாயிரம் எதிர்வினைகள் இருக்கின்றன.இறுதியாக ஒரே ஒரு உண்மை.மனித சமூகத்தை உள்ளுணர்ச்சிகள் தான் வழிநடத்தும் அறநெறிகள் அல்ல.

2

அப்போது நாங்கள் கிராமத்தின் வாடகை வீடொன்றில் குடியிருந்தோம். எங்கள் ஊ¡¢ல் கோடைக் காலமென்றால் பெரும்பாலும் வீட்டிற்குள் உறங்கமாட்டார்கள்.ஒரு கோடைக்கால இரவு.வீட்டு முற்றத்தில் பாய் விரித்தோம்.எங்களுடன் வீட்டு சொந்தக்காரர்களும். நானும் அந்த வீட்டின் கடைசி பெண்ணும் அருகருகில்.எல்லோரும் கண்ணயர்ந்த நடுநிசி அவள் என்னை நெருங்கினாள்.நான் விலகவில்லை.தீண்டினாள்.சுகித்தாள்.காற்றில் மிதக்கும் பஞ்சானேன். அப்போது எனக்கு 6 அல்லது 7 வயது.அவளுக்கு 15 க்கும் மேல். .சமீபத்தில் அவள் மரணித்தாள்.மூளைக்குள் ரத்தம் கட்டி, இதயம் பலவீனம் அடைந்து உடல் முழுக்க பல நோய்கள் தாக்கியிருந்தன. இதன் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே உணர்ந்திருக்க முடியும் என்றும், அப்போதே சொல்லி இருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும் டாக்டர்கள் சொன்னார்கள்.அவளுக்கு சொல்லத் தெரியாது.அவள் மனவளர்ச்சி குன்றியவள்.உளநோய்க்குறிகளுக்கு குழந்தைப் பாலுமையின் பாதிப்புகள் முக்கிய காரணமாய் இருப்பதாக உளப்பகுப்பாய்வியல் கூறுவதை இங்கு நினைவிலிருத்துவது அவசியம்.

கிட்டத்தட்ட இதே வயது.நான்காம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். அவன் 5ஆம் வகுப்பு.அவன் என்னை ‘சைட்’ அடித்துக் கொண்டிருப்பது என் வகுப்பு அறிந்த கதை.நடந்து வருகையில் தனியாக சிக்கிக் கொண்ட நேரம் என்னை வழிமறித்தான். அருகில் வந்தவன் சொன்னான் ‘வாயேன் மீனா இப்பவே பூண்டிக்கு [பக்கத்து ஊர்] ஓடிப் போயிடலாம்.அங்க என்னோட பெரியப்பா இருக்கார்.ரொம்ப நல்லவர். நமக்கு கல்யாணம் பண்ணி வெச்சி சாப்பாடுலாம் போடுவார்.அவர் வீட்லயே தங்கிக்கலாம்’. சொன்னதோடு மட்டுமில்லை, அவனை ஏறெடுத்தும் பார்க்காது இருந்த என் முகத்தில் இதழ் பதித்துவிட்டு ஓடிப்போனான்.அந்த நிகழ்விலிருந்து அவன் மீதான வெறுப்பு பலமடங்கு கூடியது.அதை வெளிக்காட்டவும் செய்தேன்.அவனை பார்த்த மாத்திரத்தில் முகத்தை அருவருப்பாக வைத்துக் கொள்வது, அவனை தூரத்தில் பார்த்ததும் உமிழ்நீரை சேகரித்து வைத்து அவனருகில் வந்ததும் த்த்தூ..... என்று காரி உமிழ்வது இப்படியாக[என் செயல்களை எண்ணி நானே நொந்து கொள்பவைகளில் இது முதன்மையானது.அவனது குமரப் பருவத்தில் அவன் மனநோயால் பாதிக்கப்பட்டான். உடனடியாய் அவனுக்குத் திருமணம் முடித்தார்கள்].நான் உணர்ந்ததில்லை என்ற போதும் உண்மையில் அவன் மீது எனக்கு ஈர்ப்பு இருந்திருக்க வேண்டும்.

இதே வயதில், இதே வேட்கையோடு என்னை நெருங்கிய உடலை ஆலிங்கனித்து கொண்டாடிய என் பாலுமை இந்த உடலின் மீது மட்டும் அசூசையை உமிழ்ந்தது.காரணம் அங்கே ‘பெண்’ இங்கே ‘ஆண்’. அவள் இதையெல்லாம் யாரிடமும் சொல்லமாட்டாள் என்பது உறுதியாகத் தெரியும். நான் ஒப்புக்கொண்டிருந்தால் பள்ளி முழுக்க அவன் டமாரம் அடித்திருப்பான்.ஒருவேளை அவள் சொல்லிவிட்டாலும் அம்மாவிடம் தர்ம அடியின் வலிகளோடு இது முடிந்து போகும். அவன் சொல்லிவிட்டால்....? அநேகமாய் என் எதிர்கால திருமண வாழ்வு குறித்துத் தான் நான் கவலைப்பட்டிருக்க வேண்டும்.சிமோன் தி பொவாரின் வரிகள் நினைவுக்கு வருகின்றன. ‘நானும் பிறக்கவில்லை உருவாக்கப்பட்டிருந்தேன்’.

திருமணத்திற்கு முன் எனது உடல் தீண்டப்படாமல்[ ஆணால் ] புனிதமாய் பாதுகாக்கப்பட வேண்டியது என்பதை இந்த கலாச்சார சமூகம் என் நனவு மனதிற்குள் அழிக்க இயலாதபடி எழுதி முடித்த கணம் எனக்குள் நனவிலி [unconscious ] பிறந்தது. பாலியலைக் கொண்டாடிக் களிக்கும் சுதந்திரமும், தகுதியும் [பருவமடையாதவள்] எனது சின்னஞ்சிறிய உடலுக்கு இல்லையென்று இந்த சமூகம் வஞ்சித்தபோது, தேங்கிக்கிடந்த வேட்கைகள் நனவிலியின் ஆழத்தில் புதைந்து கதறியது. கதறலின் பேரோசையை இந்த எழுத்துக்களில் மட்டுமில்லை ஒவ்வொரு மனித நனவிலியின் ஆழத்திலும் நிச்சயம் எதிரொலிக்க கேட்கலாம்.சமூக விழுமியங்களுக்கு அஞ்சி உள்ளுக்குள் அமுக்கப்படும் [repression] உணர்ச்சிகளின் புதைவே ‘நனவிலி’. எல்லா மனங்களும் ஏதேனும் ஒரு சமயத்தில் அஞ்சுபவையே. விருப்புகளை புதைத்துக் கொண்டிருப்பவையே.

மனித உளவியலைப் பகுத்தாய்ந்த சிக்மண்ட் •ப்ராய்டின் கருத்துகளை இங்கு நினைவு கூர்தல் பொருத்தமாக இருக்கும். பாற்குறிகள் முதிர்ச்சி அடைந்த உடல்கள் மட்டுமே கலவிக்கு உரியவை, பருவமடைதலுக்குப் பிறகே பாலியல் உணர்ச்சிகள் எழுகின்றன [இதனால் தான் கிராமப்புறங்களில் பருவமடைந்த பிறகு பெண்ணின் மீதான கண்காணிப்பு தீவிரமடைகிறது], எதிர்ப்பாலோடு கொள்கிற உடலுறவே ‘இயற்கையானது’ என்றெல்லாம் கலாச்சாரம் கட்டமைத்தவைகளில் ‘பெரும்பான்மையைக்’ கட்டுடைத்துப் போட்டது சிக்மண்ட் •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வு அறிவியல். [‘எல்லா பெண்களும் ஆண்குறி ஏக்கம் கொண்டவர்கள்’ ‘பெண்= -ஆண்’ ‘விலங்கு மோகம் நோய்க்குறிகளில் ஒன்று’ உள்ளிட்ட •ப்ராய்டின் கோட்பாடுகள் மீதான விமர்சனத்தை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிப்போம்]

தன்பால் மோகத்தைக் குரங்கினத்தின் தொடர்ச்சி என்றும், தன்பால்மோகிகள் இயல்பு நிலையினின்று பிறழ்ந்த தனித்த பண்புடையவர்கள் இல்லை என்றும் சொல்கிற •ப்ராய்ட் நனவிலியின் பாலியல் வேட்கைகளில் ஒன்றாக தன்பால்மோகம் இருப்பதாகவும் கூறுகிறார். •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வில் குழந்தைப் பாலுமையே முக்கிய இடம் வகிக்கிறது.மனிதப் பிறப்பின் முதன்மைக் குறிக்கோள் பாலின்பத்தை அடைவது. மனிதா¢ன் முதல் மோகப்பொருள் தாயின் மார்பகம்.குழந்தை தனது உடலியல் தேவைகளைக் கொண்டு பாலின்பத்தை நிறைவேற்ற கற்றுக்கொள்கிறது.அதாவது, முதலில் குழந்தையின் உடற்பசியை போக்குவதற்கான தேவைப் பொருளாக இருந்த மார்பகம் நாளடைவில் இன்பம் துய்ப்பதற்கான மோகப்பொருளாக மாறிவிடுகிறது.இந்நிலையில் பாலை உள்வாங்கிக் கொள்வதை விடவும் காம்பை சூப்புவதின் இன்பத்தை அடையவே குழந்தையின் மனம் விழைகிறது.வளர்ந்துவிட்ட நிலையில் தாய்ப்பால் மறுக்கப்படுகிறபோது தனக்கான மோகப் புறநிலையாக தன்னையே மாற்றிக் கொள்கிறது. மார்பகத்திற்கு பதிலாக கை அல்லது கால் விரல்களை சூப்பி இன்பம் அடைகிறது. இந்த நிலை தான் தன்மதனத்தின் - வேறு வார்த்தையில் சொல்வதானால் சுயஇன்பத்தின் துவக்கம். ஆக நாம் எல்லோருமே சுயஇன்ப மோகிகள் தான்.

அடுத்ததாக •ப்ராய்ட் போட்டு உடைப்பது நமக்குள் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒருபால் தன்மையை[ mono-sexuality]. உள்ளத்தின் பாலுணர்ச்சியே இரட்டைப்பாலியல் இயல்பு [bi-sexual nature] கொண்டது . இருபால் தன்மைகளைக் கொண்டுள்ள இரட்டைப்பாலுமை அகிலப்பண்பு [universal character] என்று சொல்கிறார். மேலும், மாற்றுப்பால் மோகம் [transexualism] என்பது அறுவை சிகிச்சைகள் மூலம் பெண் ஆணாகவும், ஆண் பெண்ணாகவும் மாற்றமடைவது மட்டுமில்லை தமக்கான புனைப்பெயர்களில் பெண்கள் ஆணின் பெயரையும் ஆண்கள் பெண்ணின் பெயரையும் வைத்துக் கொள்வது அல்லது இணைத்துக் கொள்வது கூட மாற்றுப்பால் மோகமே என்கிறார்.இயற்கை என்பது ஒற்றையானதல்ல.வரையறைகளால் வகுக்கக் கூடியதும் அல்ல.அது முன்முடிவுகளற்றது.கற்பிதங்களுக்கு அப்பாற்பட்டது.அதற்கான ஒருவகை சான்று •ப்ராய்டின் உளப்பகுப்பாய்வியல்.

என்னுடைய 12 ஆவது வயதில் முதல் முறையாக ‘லெஸ்பியன்’ என்கிற வார்த்தையையும்,அதற்கான அர்த்ததையும் தமிழ் நாளிதழ்களின் மூலமாகத் தெரிந்து கொண்டேன்.அப்போதெல்லாம் லெஸ்பியன் பற்றிய சர்ச்சைகளும், லெஸ்பியன் உறவு கொண்டவர்கள் சிக்கிக்கொண்டது குறித்த ‘கிலுகிலுப்பூட்டும்’ தகவல்களும் இதழ்களில் வந்த வண்ணம் இருந்தன.அவற்றில் பெரும்பாலானவை லெஸ்பியன்களை நக்கலடிப்பவையும்,  ‘கலி முத்திப்போச்சு’ என்கிற வறட்டுத்தனங்களுமே. இவற்றை வாசிக்கும் போதெல்லாம் அந்த கோடைக்கால இரவு நினைவில் நிழலாடும்.அனிச்சையாய் குற்றவுணர்ச்சி பிடித்தாட்டும். கைகளில் விலங்கு தொங்கும். என்னை நானே வெறுத்தேன். சில வேளைகளில் மன உளைச்சலுக்கும் ஆளானேன்.ஆனால் எந்தச் சூழலிலும் என்னுடைய நெருங்கிய தோழிகளிடம் கூட நான் இதைப் பகிர்ந்து கொண்டதில்லை. அவர்கள் முன் ஒரு குற்றவாளியாக என்னைப் பகிரங்கப்படுத்த விரும்பாததே காரணம்.

ஏறக்குறைய 18 வருடங்கள் ஓடிக்கழிந்துவிட்டன.ஒருவரிடமும் பகிர்ந்து கொள்ளாத இந்தப் பரமரகசியத்தைப் பட்டவர்த்தனமாக்குகிறேன் நாடறிய-உலகறிய.இப்போது என் கைகளில் விலங்கில்லை. எனக்கு குற்றவுணர்ச்சியுமில்லை. என் கண் முன்பாகவே நான் மாறிக்கொண்டு வருகிறேன். என் கண் முன்பாகவே இந்தச் சமூகமும் மாறிக்கொண்டு வருகிறது.இப்போதெல்லாம் நாளிதழ்களில், இணையப் பக்கங்களில் லெஸ்பியன்கள்/தன்பால் புணர்ச்சியாளர்களது சிலாகிப்புகளையும், அவர்களுக்கான ஆதரவுகளையும் தான் அதிகம் பார்க்க முடிகிறது. LGBT யினரின் பேரணியில் பெற்றோர்கள் பங்கெடுக்கிறார்கள். நண்பர்கள் ஆதரிக்கிறார்கள். சட்டம் ஒருபுறம் அங்கீகரிக்கிறது. உலக அளவிலான பாராட்டையும் பெறுகிறது.

கலாச்சாரம் உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம்.தீர்ப்பு கிட்டும் வரை தொடர்ந்து போராடலாம். ‘இயற்கைகளை’ தொடர்ந்து கட்டமைக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம்.கலாச்சாரத்தின்-ஆணாதிக்கத்தின் எல்லை சுருங்கிக் கொண்டு வருகிறது. மறுக்க முடியாது, ஒருநாள் அது இல்லாமலும் போகலாம்.


நன்றி தீராநதி(நவம்பர் 2009)