Saturday, September 12, 2009

ஆதித்தாயின் கர்ப்பக் கனவுகளால் பின்னப்பட்ட கவிதைகள் - லக்ஷ்மி சரவணக்குமார்

பெருந்திணைகளின் வழி விரியும் கனவுகளாய் ஆதியின தேவதையொருத்தியின் வேட்கை மொழியில் கட்டற்ற மழையென பீறிட்டு வெளிப்படும் சொற்களின் வழி நிறுவப்பட்ட அல்லது நம்பப்படுகிற ஒழுங்குகளின் மாயைகளை எளிதான மறுதலிப்புகளோடு எழுதிச் செல்கிறது இத்தொகுப்பின் கவிதைகள். பெருங்கனவுகள் அழீத்தொழிக்கப்படும் துயரங்களின் பால் விளைகிற அவசமாய் பெண்ணுலகின் கவிதை மொழி பேசத் தவறுபவை ஏராளம். மீறமுடியாத கட்டுப்பாடுகளென ஒன்றுமில்லை என்பதுடன் அதனைத் தகர்க்க வேண்டியதன் அவசியம் தங்களுக்கிருக்கிறதென்பதை உணர்ந்த பெண்கள் வெகு சொற்பமென்கிற தரவுகள் அறிந்ததுதானெனினும் எழுதப்படுதலின் வழி வெளிப்படும் சுதந்திரம் எதை நோக்கியெல்லாம் நிறைந்து விரிகிறதென்பது கவனிக்கப்பட வேண்டியது.

மொழியின் வேதிமாற்றத்திற்குப் படைப்பின் வழி தம்முடலை உட்படுத்தும் முயற்சியாய்த் தோன்றும் லீனா மணிமேகலையின் கவியுலகம் உடலுக்கான மொழியிலிருந்து முற்றிலும் விடுபட்டு தொன்மத்தில் உறங்கும் புராதன ஓவிய மாந்தர்களின் மொழிக்கான உடலாய் தம்முடலை ஒப்புக் கொடுத்திருக்கிறது. பல்வேறு மடிப்புகளால் கட்டப்பட்ட சிதிலமான கனவுகளாய் வெவ்வேறு தளம் நோக்கின பார்வைகளில் சொல்ல வேண்டிய தீர்மானங்களின் மீதான இறுக்கமிருக்கிறது. தனியொரு பெண்ணுடல் எதிர் நோக்கியிருக்க நேரும் பல்லாயிரம் ஆண் குறிகளும், யுத்த களத்தின் துப்பாக்கி முனைகளும் சதாவும் அப்பெண்களை துரத்தியபடியே தானிருக்கிறது, அல்லது காற்றில் அலைவுற்றபடி தனித் தலையும் பெண்களின் உடல்களின் மேல் அத்து மீறி தங்களை நிறுவியபடியும் அவர்களின் அடையாளங்களை கூச்சமின்றி அழித்துவிடுவதினூடாய் தங்களின் அடையாளங்களை நிறுவிக்கொள்வதிலும் தீவிரமாய் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

சபிக்கப்பட்டு இறந்துபோன கன்னிமார்களின் ஆசிர்வாதங்கள் கவிமனமாக விரிவடைந்திருப்பதின் நீட்சியாக தம் படைப்பினையும், சொற்களின் வழி விரியும் உலோக, அதியுலோக மொழியுடல்களையும் அக்கன்னிமார்களுக்கே படையலாக்கியிருக்கிறது.

“நூறாயிரம் பிள்ளைக் குழிகள்
தாண்டிய நகருலாவில்
சாமி
தந்தையர்களின் சுன்னிகளை
படையலாகக் கேட்டது”

என்னுமிடத்தினில், மதுவும், புகையும், இரத்தமும் தோலுரிக்கப்பட்ட சதையுடலுமாய் புராதன மனிதர்களின் மூர்க்கம் தெறிக்க தம்முலகை விரித்துப் பார்க்க முயலும்போது எழுதமுடிந்திருக்கிற கவிதைகளாய் அனேகம் வந்திருப்பதனை நூற்றாண்டு விம்மல் என்கிற இறுதிக்கவிதை வரையிலும் பார்க்க முடிகிறது. எங்கெங்கும் இரத்தம் என புறவுலகின் மீதியங்கும் இன்னுமொரு உலகினை ஞாபகப்படுத்துவதனூடாய் அந்தரங்கமாய் படைப்பாளிகளுக்குள் மிகுந்திருக்கும் வன்மங்களனைத்தும் கொட்டிக் தீர்த்துக்கொள்கிறது பேனா.

கதை சொல்லியாய், குறி சொல்லியாய் சதாவும் நீண்டு கொண்டிருக்கிற புனைவுகளுக்குள் தம் ஆன்மாவை உலவ விட்டுவிடுவதின் வழி ஆதியாண்கள் சிலரைக் கண்டடைந்து மீட்டுவர முயற்சிக்கையில் சாம்பானாகவும், அந்தைராவதனாகவும் இன்னும் சில தொன்மங்களின் சாட்சியாகவும் உருமாற்றமடைந்திருக்கின்றன.

“கலவி கூர்புனலைப்
பருகிய கீழுதட்டின்
தூசி ருசி
ஆதிக்கள்
குடித்த மதர்ப்பில்
உடல்களை
புராணங்களுக்குக் கடத்துகிறது…”

என்கிறான் சாம்பான். நிகழ்காலம் செரிக்கவியலாததொரு துயரமாகவே இருப்பதால் தொன்மத்திலும், புராதனத்திலும் கரைந்து போய்விடத் துடிக்கிற இயல்பான படைப்பு மனம் ஒவ்வொரு முறையும் எங்கெங்கோ சுற்றியலைந்துவிட்டு உறங்க மறுத்த மிருகமாய் மீண்டும், மீண்டும் அவ்விடம் நோக்கத் தம்மை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

ஓர் சமூகத்தின் நிலம்பிடுங்கி எறியப்படும் துயரத்தில் கட்டற்ற வெறிகொள்ளும் அடைபட்ட மனிதர்களின் சதை முதலான உடலை நிதானமாக சுவைப்பதில் குரூர ஆர்வங்கொண்ட அதிகார மையங்களும், மிகுதியானவர்களென தங்களைப் பற்றின மனப்பதிவில் திளைப்பவர்களும் சர்வ நிச்சயமாய் எதிர்கொள்ள வேண்டியதானிருக்கும் மன்னிப்புகளற்ற தண்டனைகளை தம்முடலையே ஆயுதமாய் மாற்றும் உச்சபட்ச போராட்ட முறையின் ‘தற்கொடை’ என விழித்திருந்த சமீபத்திய தமிழ்க் கவிஞர் ஒருவரின் வார்த்தையையும் இவ்விடத்தில் நினைவிற்கு வராமலில்லை. “என் உடலில் சில கன்னிவெடிகளை புதைக்கிறேன்” எனத் துவங்கும் கவிதையில் இயல்பாகவே என் மனம் வன்னிக்காடுகளுக்குள் தான் ஓடியது.

“உன் மேன்மைக்கான தந்திர விளையாட்டுகளுக்கு
போர் எனப் பெயரிடுவாய்
இறையாண்மை என்ற அழித்தொழித்தலின்
ஆற்றலைத் தகர்ப்பேன்
ஒரு தற்கொலையால்
என் மறுமையிலும்”

இன்னும் யுத்த சாட்சியாய் தம்மை மாற்ற விளைகிறபொழுதும் பெண்களுக்கு எல்லாவற்றையும் விட உடலே மாபெரும் ஆயுதமாய் எழுந்திருப்பதுடன் நுட்பமாய் கவனிக்க முடிந்தவொரு விஷயம், போராட்டங்களில் தம்முடல்களில் வெடியேற்றிக் கொள்ளும் ஆணுடலைவிடவும் மிகுதியாயிருப்பது பலசமயங்களில் பெண்ணுடலில்தான்.

வர்ணங்களின் மீதும் மரம், நீர், பாறைகள் உள்ளிட்ட இயற்கையின் மீதும் பறவைகளாய், வண்டுகளாய் அலைந்து திரிந்து கூழாங்கற்களை பொறுக்கியெடுக்கிற சிறுமியின் பரவசத்தோடு அவற்றை கண்டடைந்திருக்கும் மகிழ்ச்சியில் அவற்றோடெல்லாம் உறவாடவும், முயன்றிருக்கின்றன சில கவிதைகள். சாம்பலும், பழுப்பும், அழுத்தமான பதிவென தொடர்வதின் பின்புலமாய் ஏமாற்றங்கள் நிரம்பிய ஓர் ஓவியனின் வரையப்படாத கேன்வாசுக்குள் வினோத ஓவியங்களை தீட்டி முடிக்க வேண்டுமென்கிற முனைப்பும் அச்சித்திரங்களின் மௌன மொழியினையும் தம் கவிதைகளில் பலவிடங்களில் உலவவிட்டிருக்கிறார்.

சிக்சிலியாய் தம்முடலை மாற்றிக்கொள்ளும் வேளைகளில் பறவைகளுக்கேயான ஓர் வெளியை உருவாக்கிக் கொண்டு விடுவதுடன் பறக்க நினைக்கிற ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒளிந்திருக்கின்றன சிறகுகள் என்கிற படிமத்தினையும் பார்க்கமுடிகிறது.

“அம்மணமும் ஆசையுமாய்
ஆலிங்கனத்துக்கு
யோனி விரித்திருக்கின்றன
கனவுகள்
கனவுதோறும் வனங்கள் பெருகின ”

இப்படி எரியும் மூங்கில் குருத்துகளாய் மரம், செடி, கொடிகளாய் ஏதோவொரு கணத்தில் மக்கி மீண்டும் வீர்யத்துடன் பூத்துவிடுகின்றன உடலும், கவிதைகளும். ஆணுடல் மீன்களாகவும் இன்ன பிற வேட்டை விலங்குகளாகவும் சதாவும் கொலைவெறி கொள்ளும் தாபத்துடன் அலைந்துக் கொண்டிருப்பதினால்தான் பெண்ணுடல் மீதான மூர்க்கங்களும், ஏமாற்றங்களும் மாறி மாறி தொடர்ந்துவர நேர்கிறது. அருவருப்புகளாகவும், அசிங்கங்களாகவும், பார்க்கப்படுகிற ரகசிய உறவுகளுக்குப் பின்னாலிருக்கும் மெல்லிய அழகுணர்வும், சிறு நிம்மதியும் சிக்கல் மிகுந்த இச்சூழலிலிருந்து தம்மை விடுவித்து எடுத்துக்கொள்ள முயலும் ஒவ்வொருவருக்குள்ளும் நிகழ்ந்தபடியே இருக்கின்றன என்பதை வலிந்தோ, மௌனமாகவோ ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டியிருக்கிறது.

“கசந்தும் கிளர்த்தும்
மதுவைப் போல்
ரகசிய உறவுகள்
பிடிக்கவே செய்கின்றன”

என்கிற வரிகளிலிருந்து மேலோட்டமாய் பேசப்பட்டுவரும் அபத்தமான போலி ஒழுக்கங்களை புறந்தள்ளி வீர்யத்துடன் சில புத்தொழுக்கங்களை முன்வைத்திருக்கின்றன ‘பகை பற்றிய படலம்’ என்கிற கவிதையில் நேசம் கொண்டுவிட்டபின் அடைய நேர்கிற ஏமாற்றங்களை சகித்துக் கொள்ள முடியாத மனம்

“நீ சிறிதேனும் நேசித்திருக்கலாம்
இல்லை
தீண்டாமல் இருந்திருக்கலாம்”

என நேசத்தால் வெடிக்க நேர்ந்த கொப்புளங்களில் வழியும் நிணநீரின் வேதனையாய் வழிந்திருக்கிறது.

தூமை குடித்தவன், சாண்டைக் குடித்தவனென்பதை இழிசொல்லாய், பழக்கப்படுத்தி பல காலம் பேசி வந்திருக்கும் சமூகத்தில் தூமை தூமையென்று தன் தூமை கொள்ளும் வளர்சிதை மாற்றங்களை மிகுதியாய் பேசுகின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள். அடிப்படையில் ஜீவித்திருக்கும் அனேக மனிதப் பிறவிகளும் தூமை குடித்து, உண்டு அதன் வாயிலாகவேதான் ஜனித்திருக்கின்றன. பின் எப்படி இது இழிவானதாய்ப் போனதென்பதுதான் புரியாத முரணாய்க் கிடக்கிறது. ‘பெண்ணின் தூமையை வறுத்து சாண்ட்விச்சில் வைத்துத் தின்றதாய்’ ஓர் ஆண் கவிஞனால் எழுத முடியுமென்றால், தூம கிரஹணம், தூமத்திப்பூ, தூமையின் வயது பதிமூன்று என அதனைக் கொண்டாட ஓர் பெண்ணால் இயலாமல் போய்விடுமா என்ன?


“சாண்டையின்
கட்டற்ற போக்கு
வரைபடத்தின் ரேகைகளை
மாற்றி எழுதிப்
பார்க்கிறது
தோன்றும் புதிய பரப்புகளில்
சூரைத் தீ பற்றுகிறது”

என தூமத்திப் பூவிலும்

“என் தாயின்
தாயின் தாயின் தாயின்
உப்பு
திரவியமாக்கி என்னை
மிதக்க வைத்ததில்
மொழியின் துடுப்புகளும்
வயதிற்கு வந்திருந்தன”

என தூமையின் வயது பதிமூன்றிலும் காண நேர்கிற வரிகள் சராசரி தமிழ் வாசக, படைப்பாளிகளின் மனங்களில் அதிர்வேற்படுத்தக் கூடியதுதான். பெண்ணுலகம் பேச முனைந்திருக்கும் அரசியலின் பார்வையின் இக்கவிதைகளை அணுக நேர்ந்தால் அதனைக் கொண்டாடி மகிழும் ஓர் தன்மை பால் நிலைகளைத் தாண்டி உயிர்பெறக் கூடும்.

தீவிரம் மிகுந்தவொரு வேட்டைகாரியாய் தம் வேட்கையை, ஆளுமையை, இந்நிலத்தின் தொன்மத்தில் புதைந்து கிடக்கும் மறுக்கப்பட்ட வரலாறுகளையென தேடிக்தேடி பேச விளைகின்றன லீனாவின் கவிதைகள். மிகுதியான உப்பினால் ஆன ஓர் வேதி உடலாகவே உலவுவதால் படைப்பின் அடியாழம் தேடின நீந்துதலில் மீன்களாகவும், பறவைகளாகவும் தொடர்ந்து இதுபோல் பயணித்துக் கொண்டிருக்க முடியுமென்பதுதான் மௌன சாட்சியாய் இதனை வாசிக்கிற வாசகனும் இருக்கக்கூடும், இருக்க முடியும்.

உலகின் அழகிய முதல் பெண், கவிதைகள்: லீனா மணிமேகலை, வெளியீடு: கனவுப்பட்டறை, 3, பிரகதாம்பாள் தெரு, நுங்கம்பாக்கம், சென்னை - 600 034.


நன்றி மணல் வீடு ஆகஸ்ட் 2009

Friday, September 4, 2009

“உலகின் அழகிய முதல் பெண்” , கவிதைப் பிரதியை முன்வைத்து

நவீனப் பெண் எழுத்தின் உச்சம்
க. பஞ்சாங்கம்

ஆணை நோக்கப் பெண் இயற்கைக்கு மிக நெருக்கமாக இருக்கிறாள் என்று காரல் மார்க்ஸ் கூறியதன் பொருள் என்ன? ஆணை விட இயற்கையின் பிடிக்குள் பெண் அதிகமாகச் சிக்கியிருக்கிறாள்; இயற்கை மனிதத்திலிருந்து சமூக மனிதத்திற்கு ஆண் மாறிக் கொள்ளுகிற அளவிற்குப் பெண் மாறிக் கொள்ள இயலாது என்பது இதன் பொருளா? அல்லது இயற்கை போலப் படைப்புத் தளத்தில் ஆணைவிட அதிகமாகப் பங்கெடுக்கிறவாறு விதிக்கப் பட்டிருக்கிறாளா?; எனவே படைப்புத் தளத்தில் நிரந்தரம் கொண்டிருக்கும் புரியாத புதிர்க்குணமும் நேர்க்கோட்டில் சிக்காத சிக்கலான ஓர் உயிரியாகவும் பெண் விளங்குகிறாள் என்பது அந்தக் கூற்றின் பொருளா? அல்லது மனிதர்களின் குறியீட்டு மொழிக்கு வெளியே “இயற்கை” என ஒன்று இருக்கிறதா? எனவே “இயற்கை” என்பதே மொழியாலான புனைவுதானே ஒழிய, இயற்கையை ஒருக்காலும் மனிதம் அதன் இயல்புப்படிப் புரிந்து கொள்ள சாத்தியப்பாடே இல்லை என்பது போலப் பெண்ணைக் குறித்த மனிதப் புரிதலும் மொழிக்குறியீடுகளாலான புனைவுதானே ஒழிய, “பெண்” என்பது ஒருக்காலும் புரிதலுக்குள் சிக்கக்கூடியது அல்ல என்பதைத்தான் மார்க்ஸ் அப்படிக் கூறுகிறாரா? எண்ணிப் பார்த்தால் பெண் மட்டுமா எதைத்தான் இங்கே புரிந்து கொண்டதாக அமைதி அடைய முடிகிறது? மனிதர்களின் மாபெரும் கண்டுபிடிப்பான இந்தக் குறியீட்டு மொழிக் கூட்டங்களே பெண் ஆண் என்றே இந்த உறவு போராட்டங்களில் இருந்தே வடிவமைக்கப்பட்டிருக்குமோ அதனால்தான் மனித மொழியும், ஒரு வரையறைக்குள் சிக்காத நனவிலி மனத்தின் செயல்பாட்டையே தனது இயங்கும் முறையாகக் கொண்டிருக்கிறது என்று தோன்றுகிறது.

இங்கே இயற்கைக்கு பெண்ணுக்கு, மொழிக்குக் கூறிய அனைத்தும் கவிதைக்கும் பொருந்தும், அதுவும் லீனாவின் இந்தக் கவிதைத் தொகுப்பிற்கு முற்றிலும் பொருந்தும். தொகுப்பிலுள்ள ஒவ்வொரு கவிதையையும் வாசிக்கும் போது நனவிலி மனத்தோடு வாழ்வதாய்ப்படுகிறது அதாவது நமது உண்மையான மனத்தோடு வாழ்வதாய் உணர நேர்கிறது ஆதிக்கச் சமூகம் கட்டமைத்த மதிப்பீடுகளும், புனிதங்களும், தர்மங்களும் லீனாவின் “கவிதை மீறலுக்கு” முன்னால் உதிர்ந்து விழுகிற சத்தத்தைக் கேட்க முடிகிறது.

பெண் / ஆண் உறவுப் போராட்டத்தில் ஆதிக்கச் சக்தியாக ஆண் மேலெழும் போது, அது கையாண்ட மிகப்பெரிய தந்திரம், தன்னைத் ‘தனியாளாகப்’ வடிவமைத்துக் கொண்டு பெண்ணைத் ‘தனியாளாக’ உணரவிடாதபடிப் பின்னிய வலையைத்தான் முதலில் குறிப்பிட வேண்டும் எந்தவொரு பெண்ணும் எவ்வளவு முயன்றும் எவ்வளவோ உதறி எழுந்தும் கூடத் தன்னைத் ‘தனியாளாக’ உணர்ந்து வாழ இயலாதபடி இந்த ஆண்மேலாண்மைச் சமூகம் பெண்ணைக் கட்டமைத்துள்ளது; ஒவ்வொரு பெண்ணும் தன் தாயோடும் தன் பிள்ளையோடும் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறாள்; சீனாவில் பெண் குழந்தையின் பாதங்களில் மட்டை வைத்துக் கட்டி அதன் பாதங்களைச் சிறியதாக ஆக்குவதன் மூலம் பெண்ணின் “உடம்பு உலகத்தை” ஒடுக்கும் தந்திரம் போல மேற்கண்டவாறு தாயாய்ப் பிணைத்துக் கட்டுவதன் மூலம் பெண்ணின் “மன உலகத்தை” ஒடுக்கும் தந்திரம் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. லீனா இந்தத் தொகுப்பில் சாதித்திருப்பது இந்த ஒடுக்குமுறையிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதுதான் ‘வேட்கையை மொழிதல் என்ற தன் முன்னுரையில் தந்தை, தோழர், நண்பர்கள், எழுத்தாளர்கள், தம்பி, மைத்துனி, அம்மா என்று ஓர் உறவுக் கூட்டத்திற்குள் தன் இருப்பு நிகழ்வதாகச் சொல்லிக் கொண்டாலும், கவிஞராய்ப் பரிணமிக்கும் போது, பெண்கவிஞர் பலரும் தோற்றுப்போவது போலத் தானும் தோற்றுப் போகாமல், தன்னைத் தன்னந்தனியாய், தனித்தனியாய், தனி ஆளாய் நிலைநிறுத்திக் கொண்டு மொழி விளையாட்டை, அவரால் நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது. நவீனப் பெண்ணிய எழுத்தின் உச்சமாக நானிதை அவதானிக்கிறேன் தன்னை எந்த உறவிற்குள்ளும், எந்தக் கோட்பாட்டிற்குள்ளும், எந்தத் தர்மத்திற்குள்ளும் அடங்காத ஒரு தனி உயிரியாக வென்றெடுத்த ஒருவரால்தான்,

“விடாயின் களிறு கட்டிய
தேசங்களுக்குப்
பெயரிடுகிறேன்
குருதிக் காட்டூர்களென”

என்று எழுத முடியும்;

“கவிதை கூர்புனலைப்
பருகிய கீழுதட்டின்
தூசிருசி
ஆதிக்கள்
குடித்த மதர்ப்பில்
உடல்களைப்
புராணங்களுக்குக் கடத்துகிறது”

என்று வரைய முடியும்.

“என் காமம் மூங்கில் காடென
சடசடக்கிறது
ஈரத்தால் தீ மூட்டியவன்
தன்
நாக்கையும் விட்டுவிட்டுப் போய்விட்டான்”

என்று உடல் நடத்தும் காம விளையாட்டை மொழிப்படுத்த முடியும்.

நம்முடைய பெரும்பாலான மொழிப்படுத்தல்கள் சமூகப் பொது அறத்தின் நெற்றிக்கண் பார்வைக்குப் பயந்து பதுங்குபவை; லீனா நிகழ்த்தும் மீறல்கள் பயம் என்பதையே அறியாத ஆதிமனத்தின் நிகழ்கலையாக விரிகின்றன. அதனால் தான் தூமகிரஹணம் என்கிற சித்திரத்தை வரையமுடிகிறது; தூம கிரஹணத்தில் என்ன நிகழ்கிறது எனப் பட்டியலிடும் அந்தக் கவிதை இப்படி முடிகிறது

“பிரபஞ்சத்தின் ஆதி உடலை உவந்து
இருப்பை உடைப்பை
செங்கொடியெனப் பறத்துகிறது
வாழ்வெனும் மாய ஒளிக்காட்டின்
கங்குகளை ஊதிப் பெருக்குகிறது”

“செங்கொடி” யென்ற இந்தப் படிமம் தீவிரமான பெண்ணியவாதி ஒருவரிடம் மட்டுமே பிறக்கக்கூடிய ஒன்றாகும்.

பெண்ணைத் தாயோடு பிணைத்துப் போட்ட ஆதிக்கசக்தி, பெண்ணின் காம உடலை, ‘சமூக உடலாக’ மாற்றி அமைத்தது அதன் ஆகப்பெரிய வேலைப்பாடாகத் தெரிகிறது இந்த மாற்றத்தை நிகழ்த்த ஆண்கள் கையாண்ட வன்முறை, பெண்களின் தொடைகளில் ஓடும் குருதி வெள்ளத்தை விட அதிகமான குருதியைக் கொட்ட வைத்துள்ளது. மேய்ச்சல் நாகரிகத்தில் ‘பெண் ஆடுகளைக் குட்டிபோடப் பேணுவது போல, ஆண்களின் நாகரிகத்தில் பெண்களின் உடல், வாரிசுகளின் உற்பத்திக்காக மட்டுமே என ஆக்கப்பட்டிருக்கிறன. அதற்கேற்ப பெண் உடலை ஒடுக்குவதைக் குறித்தே ஆண்களின் எல்லாவகையான சொல்லாடல்களும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த வரலாற்று மோசடிக்கு எதிராகப் பெண் உடலை, அதன் காமத்தை, அதற்கே உரிய தங்குதடையற்ற ஆதி ஆற்றலோடு கொண்டாடுதல்; அதன் மூலம் பெண்ணின் ஆதி உடலை மீட்டெடுத்தல், அதன் மூலம் ஆணை அவஸ்தைக்கு உள்ளாக்குதல் என்பதல்ல; ஆணும் பெண்ணும் சேர்ந்து இந்த வாழ்வை அதன் மொத்தப் பன்முகப்பட்ட அழகோடு கொண்டாடிக் களித்தல் என்கிற முறையில் லீனாவின் “காமக்களியாட்டக் கவிதைகள்” இந்தத் தொகுப்பில் பதிவாகியுள்ளன. ஒடுக்கப்பட்ட பாலியலின் மடைமாற்றம் தான் இலக்கியம் என்கிற புகழ்பெற்ற ஃபிராய்டின் வாசகம் பொய்யாக்கப்பட்டுள்ளது பாலியலின் திருவிழாக் கொண்டாட்டம் தான் இலக்கியம் என்று தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆண்களும் தான் தங்கள் காமக் களியாட்டத்தை எத்துனையோ விதமாகப் பதிவு செய்திருக்கிறார்கள் ஆனால் அவற்றில் வெளிப்படும் எந்தவிதமான வக்ரமோ, செயற்கையோ, போலிமையோ, பொய்மையோ இந்தக் காமக் கொண்டாட்டக் கவிதைகளில் இல்லை; ஆடை என ஒன்றை அறியாத ஆதிமனப் பெண்ணின் தங்கு தடை எதுவுமற்ற நிர்வாணக் கூத்தை இன்றையப் பெண் ஒருத்தி நிகழ்த்திக் காட்ட முடிந்திருக்கிறது என்பது பல்வேறு நடைமுறை இழப்புகளையும் அவஸ்தைகளையும் எதிர்கொண்ட போராட்டக் குணம் செறிந்த ஒரு மனுஷியால் மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகும். லீனா பன்முக ஆளுமை மிக்கவர்; மிகச் சிறந்த போராளி என்பதை அவருடைய சமீபத்திய நடைமுறைகள் உறுதிப்படுத்தியுள்ளன; அதே அளவிற்கான வீச்சோடு பிரதி உருவாக்கத்திலும் அவர் இயங்கியுள்ள முறை அவரைத் தனியாக அடையாளப்படுத்துகிறது.

இலக்கியப் பிரதி என்பது எழுத்தாளரால் உருவாக்கப்படுகிறது; அது புனிதமானது; சார்பற்றது என்கிற புனைவுகள் எல்லாம் உடைப்பட்டுப் போன பின் நவீனத்துவச் சூழலில், ‘பிரதி குறித்த பிரமைகளும்’ அழிவிற்கு உள்ளாகியுள்ளன. பல்வேறு பிரதிகளின் நினைவுக்குறிப்புக்கள் நிகழ்த்தும் மாயைதான் புதியபிரதிகளுக்கான தோற்றுவாய் என்கிற பார்வை வலுப்பெற்றுள்ள சூழலில், லீனாவின் பிரதியாக்கம் குறித்த அக்கறையும் உழைப்பும் வாசகர் மனத்தில் பிரமிப்பை உருவாக்குகின்றன. நனவிலிமன உலகை, நனவிலிசார்ந்த குறியீடுகளால் மொழிப்படுத்துவது என்ற தனது நோக்கிற்கு ஏற்ப ஆதிமனக்குகை சார்ந்த ஓவியங்களைக் கூடவே பொருத்தியிருப்பது, சாதாரணமான ஒரு பெண்ணியல் பிரதியாக இதை அணுகிவிட வேண்டாம் என்கிற செய்தியைச் சொல்லிவிடுவதாக அமைகிறது. எல்லாமே பிரதிக்குள் தான் இருக்கிறது பிரதிக்கு வெளியே ஒன்றுமில்லை என்ற தெரிதாவின் புரிதலை லீனாவின் நனவிலி உலக வார்த்தையாடலை வைத்து நாம் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது லீனாவின் எந்தவொரு கவிதையிலும் வார்த்தைகள் நனவு உலகத்தில் அறியப்பட்ட பொருளில் வந்து பொருந்தவில்லை அவர் பயன்படுத்தும் பழைய குறியீடுகளான படகோட்டி, பருந்து, வேடன், கள்வன் முதலியவைகள் கூடப் பல்வேறு அர்த்தக் கசிவுகளோடு இணைக்கப் பட்டுள்ளன. எனவேதான் பிரதிக்குள் பிரவேசிக்கிற வாசகருக்குள் அர்த்த உற்பத்தி என்பது சாத்தியப்படாமல் அதைத் தள்ளிப்போட்டுக் கொண்டே போகிற பயணம் வாய்க்கிறது. உம்பர்ட்டோ ஈகோ சொல்வது போல இலக்கியப் பிரதி சோம்பேறியாய்க் கொட்டாவி விட்டபடிக் கிடக்கிறது. (இதை ஆழமான கோதாவரி ஆறு மெல்ல நகர்வது போல என்பான் கம்பன்) அதன் வேலையை வாசகன் தான் செய்து கொள்ள வேண்டுமெனக் கோருகிறது; வாசகர்களின் சுறுசுறுப்பும் தேடலும் பிரதிக்கு இருப்பினை வழங்குகின்றன. தமிழ்ச் சூழலில் லீனா அத்தகைய வாசகர்களை அதுவும் பெண் வாசகர்களை அரிதாக வேணும் பெறக் கூடிய சூழல் இந்த இரண்டாயிரத்தில் ஏற்பட்டிருப்பதாகவே கருதுகிறேன். அப்படி ஒரு சூழல் உருவாகியிருப்பதுதான் இப்படியொரு பிரதி உருவாக்கத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளது.

“பெண் எழுத்து” என்ற ஒற்றை வாதத்தைக் கடக்க விழைகிறேன் பிரதிக்குப் பாலினம் கிடையாது என்ற புள்ளியில் இருந்தே செயல்பட விரும்புகிறேன் என்ற தன் விருப்பத்தை லீனா தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் இருபால் பாலியல் பண்புடையவர்கள் என்ற புனைவிலிருந்து தனது புனைவுலகத்திற்குள் நுழைகிறார். ஜெனே போன்ற ஒரு சில எழுத்தாளர்கள் அத்தகைய பாலினம் கடந்த பிரதிகளை உருவாக்கியுள்ளதாகத் திறனாய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். ஆனால் படைப்புத்தளத்திற்கு வெளியே அமைகிற விருப்பம், படைப்புத் தளத்தில் சாத்தியமாவதில்லை; ஏனென்றால் ‘படைப்பு’ என்பது படைப்பாளியால் மட்டுமே உருவாக்கப்படுவதில்லை அதில் பல்வேறு படிநிலைகள் அமைந்து கிடக்கின்றன; பல்வேறு கலவைகளின் வேதியியல் செயல்பாடுகள் நிகழ்கின்றன; குறிப்பாக ‘மொழிக்குள்’ புதைந்து செறிந்து கிடக்கும் அதிகார ஆணாதிக்கக் கூறுகளை யாரும் அவ்வளவு எளிதாகக் கடந்துவிட முடிவதில்லை; என்னதான் நனவிலிமனத்திற்குள் புகுந்து விளையாட முயன்றாலும் எல்லாவற்றிற்குமான ஆவணக் காப்பமாகக் கிடக்கும் நனவிலிமனமும் அவ்வளவு எளிதாகச் சிக்கக்கூடியதில்லை; மிகவும் கொடூரமான, வக்ரமான, கோழைத்தனமான, தந்திரமான, நெளிவுசுழிவான, கேவலமான முறையையே வாழ்வின் நெறிமுறையாகக் கொண்டது மட்டுமல்லாமல், அதை ஒரு சிறிதும் சிதறிவிடாமல் பொத்திக் கொண்டு வரக்கூடிய அத்தனை பாதுகாப்பு வளையங்களையும் நிரந்தரப்படுத்தியுள வைதீக வாழ்முறையைக் கொண்டுள்ள தமிழ்ச்சூழலில், பாலினம் கடந்து எழுத்து இவ்வளவு சீக்கிரத்தில் சாத்தியமாகிவிடும் என்று நான் நம்பவில்லை. பெண் எழுத்து என்ற எதிர்நிலையை உருவாக்கிய பிறகுதான், ஆண் எழுத்து பெண் எழுத்து என்ற இருமை கடந்த உன்னத நிலைக்கு நகர முடியும், இப்பொழுது, பெண் எழுத்தை உருவாக்குகிற காலகட்டமாகவே தமிழ்ச்சூழலை என்னால் உணரமுடிகிறது; அந்தத் தளத்தில் தான் லீனாவின் எழுத்துக்கக்களையும் என்னால் கணிக்க முடிகிறது; லீனா எதிர்காலத்தில் பாலினம் கடந்த எழுத்துக்களை எழுதும்போது சமூகத்திலும் பாலினம் மறந்த வாசகர்களும் உருவாகியிருப்பார்கள். அப்படியொரு வாசகர்கள் இல்லாத தமிழ்ச் சமூகத்தில் அப்படியொரு எழுத்துமுறை உருவாகிவிட்டதாக உணர முடியாது என்றே நம்புகிறேன்; மேலும் பாலினம் கடந்த எழுத்து என்கிற புனைவும் மறுபடியும் புனிதம் என்கிற தூய்மை வாதத்தை நோக்கித்தான் நம்மைத் தள்ளிச் செல்லும் என்கிற விழிப்புணர்வும் தேவை எனபடுகிறது. கனவுகள் தேவைதான். ஆனால் லீனாவே ஓரிடத்தில் “கனவுதோறும் வனங்கள் பெருகின” என்று சொல்வது போல நிலம் சாராத வளங்களை நாம் கற்பனை செய்யத் தேவையில்லை என்று படுகிறது;

மொத்தத்தில் “காம உடம்பு எழுப்பும் ஒவ்வொரு குரலுக்கும் செவி சாயுங்கள்; எந்தவிதத் தணிக்கைக்கும் சிக்காமல் அனைத்தையும் மொழியில் கொட்டித்தீருங்கள்; பெண் எழுத்து பிறக்கும்” என்ற ஹெலன் சீச்சுவின் எண்ணம் லீனாவின் இந்த “உலகின் அழகிய முதல் பெண்” என்ற தொகுப்பில் அதன் உச்சக்கட்ட அளவில் வெளிப்பட்டுள்ளது. தமிழ்ச் சூழலில் இது மிகப்பெரிய சாதனை எனச் சொல்ல வேண்டும்.

நன்றி பவளக்கொடி செப்டம்பர் 2009