Wednesday, March 31, 2010

மனிதனின் மொழி

(தணிக்கை செய்யப்படாத பிரதி)

கவிதை ஒன்றும் அழகுக் குறிப்புக் கிடையாது. வாசகருக்கு வாசிப்பு இன்பத்தை அளிப்பதைக் காட்டிலும் வாசகர்களின் கண்களில் அவர்களது சக மனிதனின் மனுஷியின் துயரத்தையும் ஆற்றாமையையும் இழிவையும் இரத்தத்தையும் எழுதிக்காட்டவே நான் விரும்புவேன். அங்கீகரிக்கப்பட்ட சொற்களால் மட்டுமே எழுதுவதற்குக் கவிதை அரசு அலுவலகக் குறிப்பல்ல. கவிதைக்கு புனிதச் சொற்கள் என்றோ விலக்கப்பட்ட சொற்கள் என்றோ விதிகள் ஏதும் கிடையாது. உண்மையின் தடத்தைப் பற்றியே நகரும் கவிதைக்குச் சட்டங்கள் குறித்து எந்த அச்சமும் கிடையாது.

அண்மையில், "உலகின் அழகிய முதல் பெண்" என்ற எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ஆபாசங்களின் தொகுப்பாக இருக்கிறது, அதனால் அந்த புத்தகத்தையும், எனது வலைப்பதிவையும் தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன், ம. க. இ. க ஆதரவு இணையதளமொன்று அதே கவிதைகளுக்காக என்மீது ஆணாதிக்க வக்கிரத்தோடு அவதூறுகளைப் பரப்பியிருந்தது. அவர்கள் இந்துத்துவாவைக் கடுமையாக எதிர்ப்பவர்கள். பெண்ணுக்கான மரபுகளையும் கலாச்சாரங்களையும் காப்பாற்றி வைப்பதில் இந்துத்துவ எதிர்பாளர்களும் இந்துத்துவாக்காரர்களும் ஒரே புள்ளியில் சந்திப்பது தமிழகத்தில் திரும்பத் திரும்ப நிகழும் முரண்நகை வரலாறு.

எனது கவிதைத் தொகுப்பைத் தடைசெய்வது என்றால் முதலில் அவர்கள் ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியைத் தடைசெய்ய வேண்டும். ஆண்டாளைக் கடந்து நானோ, இதே வகையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட எனது சக பெண் கவிஞர்களோ காமத்தையும் வேட்கையையும் எழுதிவிடவில்லை. நமது கோயில் கோபுரங்கள், குளங்கள், தேர்களில் இருக்கிற சிற்பங்களையும், ஓவியங்களையும் கொஞ்சம் நின்று பார்த்தால், நமக்கு பக்தி வருகிறதோ இல்லையோ இங்கே கலையில் ஒழுக்கவியல் மதிப்பீடுகள் என்றும் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதாவது என்று புரியும். நமது பெண்கள் விலங்குகளுடன் புணரும் நிலையிலுள்ள சிற்பங்கள் சீரங்கம் கோவில் மண்டபத்திலேயே இருக்கின்றன.

காலங்காலமாக ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலக்கியத்தையும் மொழியையும் பெண்கள் கைப்பற்றும்போது ஆணாதிக்கம் அதிகாரமும் துடித்துப் போகிறது. அவள் தனது உடலையும் விருப்புகளையும் இச்சைகளையும் இலக்கியத்தில் பேசும்போது கலாச்சாரம் கெட்டுவிட்டதாக ஆண்கள் கொதிக்கிறார்கள். பெண் விடுதலை குடும்பத்தின் வன்முறை சுதந்திரக் காதல் ஒழுக்கத் தடைமீறல்கள் இவற்றையெல்லாம் வியக்கத்தக்க முறையில் காலத்தைத் தாண்டிச் சிந்தித்து அறிவித்த தந்தை பெரியாரின் மண்ணில் இன்று கவிதை இந்துத்துவ சக்திகளால் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வெறுமனே புகார் மிரட்டல் என்று இதை நான் அலட்சியம் செய்ய மாட்டேன். இவ்வாறான கலாச்சார அடிப்படைவாதிகள் மிரட்டல்களில் தொடங்கிக் காலப்போக்கில் கொலைகளில் முடிப்பார்கள் என்பதே வரலாறு. மெல்ல வளரும் கலாச்சாரப் பாஸிசத்தின் தொடக்கப் புள்ளியாகவே நான் இதை அடையாளம் காண்கிறேன்.

இங்கே மட்டுமல்ல உலகம் முழுவதுமே விடுதலையை எழுதும் பெண்கள் எதிர்கொள்ளும் நிலை இது தான். அவதூறு, மிரட்டல், கைது, வன்முறை, கொலை, நாடுகடத்தல், இல்லாமல் ஆக்குதல்,ஃபத்வா, என்று அதிகாரத்தின் ஆயுதங்கள் பெண்கவிகள் மீது எறிந்த ஆயுதங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல.

"என்னுடைய பெயர்களுள் ஒன்று

அந்த மலை முகடுகளுக்கிடையே

ஒருநாள் சூரியனாக உதயமாகும்

பெருமழையில் நனைந்துப் போயிருக்கும் இருளுக்கும்

சுழல்வெள்ளத்தில் களைத்துப் போயிருக்கும் மீனுக்கும்

நம்பிக்கையின் நினைவுகளாய் அது ஒளிவீசும்"

என்று எழுதிய ஆஃப்கான் கவிஞர் நாடியா அஞ்சுமான் 25 வயதில் கொல்லப்பட்டார். ஏனென்றால,அவர் பெண்களின் விடுதலையை எழுதினார். நாடியா தாலிபான்களால் தடைசெய்யப்பட்ட அவரது கவிதைகளை ஆஃப்கானிஸ்தான் தெருக்களில் இரகசியமாகப் பாடிச் சென்றவர்.புர்காவுக்குள் சொற்களைப் பதுக்கி, அவற்றை விடுவிக்கும் ஒவ்வொரு முறையும் தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்த ஒரே குற்றத்திற்காக நாடியா நயவஞ்சகமாக "மார்க்கத்துக்கான கொலை" என்ற பெயரில் தன் கணவராலேயே கொல்லப்பட்டார். வாப்பா ! இத்தனை நபிகளுள்ளும் ஏன் ஒரு பெண் நபி இல்லை என்று கேட்ட G.H. ரசூலின் முக்காடணிந்த கவிதைச் சிறுமி இதை எழுதும்போது என் ஞாபகத்தில் வருகிறாள்.

"அவர்கள் சொல்வார்கள்

இதெல்லாம் மிகச்சாதாரணம் என்று

பெரிதாக அலட்டிக் கொள்ளாதே என்று

சிறிது பணிவாக நடந்துக் கொள் என்று

அழுகையை அடக்கிக் கொள் என்று

அவர்கள் சொல்வார்கள் தான், ஆனால்

நீ எழுந்து நிற்க வேண்டும்

தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்

மனதை உரத்துப் பேச வேண்டும்

சத்தம் கேட்க கேட்க

அவர்கள் சொல்வார்கள்

வெட்கம் இல்லாதவள் என்று

நீ அதைக் கேட்டு இன்னும் உரத்து சிரிக்க வேண்டும்

சத்தம் கேட்க கேட்க

மேலும் அவர்கள் சொல்வார்கள்

மானங்கெட்டவள் என்று

இன்னும் நீ கத்தி சிரிக்க வேண்டும்

மேலும்,மேலும் அவர்கள் சொல்வார்கள்

பரத்தை என்று

நீ "ஆம் நான் பரத்தை" என வேண்டும்

அவர்கள் அதிர்ச்சியடைவார்கள், நம்ப மறுப்பார்கள்

ஆண்கள் நீ வேறு எதுவும் சொல்லிவிடுவாயோ என்று அஞ்சுவார்கள்

பெண்கள் உன்னைப் போல் பரத்தையாக உள்ளூர விரும்புவார்கள்"

என்று எழுதிய தஸ்லிமா நஸ் ரீன் மருத்துவராக மட்டும் பணி செய்திருந்தால் சமூகம் கொண்டாடியிருக்கும். கவிதை எழுதியதால் அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னது. ஆணாதிக்கம் அடித்தது, உதைத்தது. மதவாதம் அவர் தலைக்கு விலை நிர்ணயித்தது.ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லை,ஒரு பெண்ணாக எனக்கென்று ஒரு நாடு வேண்டாம், ஒரு பெண்ணாக இந்த உலகமே என் நாடு என்று தஸ்லிமா வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார். தஸ்லிமா தஞ்சம் என்று வந்தபோது மேற்கு வங்கத்தின் கம்யூனிஸ்ட் அரசு கூட அவரைக் கைவிட்டது.

"அர்த்தமற்ற நாள்களில்

வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்

அவலத்திலும் அச்சத்திலும்

உறைந்து போன நாள்கள்…..

காலைப் பொழுதுகளில்

பனியில் குளிக்கும் ரோஜாக்களை விட

பக்கத்தில் இளமொட்டு முகையவிழ்க்கும்

தொட்டாற் சிணுங்கியில்

கண்கள் மொய்க்கின்றன

இன்னுமெப்படி களையெடுப்பவன்

இதனைக் காணாது போனான்? "

என்று காத்திரமான கேள்விகளை கவிதைகளில் கேட்டதாலேயே செல்வி ஈழத்தில் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு "இல்லாமல் ஆக்கப்பட்டார்".செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள், குறிப்புக்கள், கடிதங்கள், புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பும் தார்மீகம் ஒரு கவிக்கு மறுக்கப்பட்டது.அரசு மட்டுமல்ல போராளிக் குழுக்களும் பெண்கள் "தன்னுணர்வை" பெறுவதை விரும்பவில்லை. இயக்கங்களிலும், போராட்டங்களிலும், புரட்சிகளிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துக் கொண்ட போதிலும், ஆண்களின் பிண்ணிணைப்புகளாகவே செயல்பட அனுமதிக்கப்படிருக்கின்றனர். தலைமை, தலையீடு, சுயேச்சயான இருப்பு என்ற இடத்தில் நசுக்கப்பட்டே வந்திருக்கின்றனர்.

சர்வதேச கவிஞர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பு உலகப் புகழ்பெற்ற 'POETRY INTERNATIONAL AWARD என்ற கவிதைக்கான சர்வதேச விருதை கவிஞர் செல்வி கைது செய்யப்பட்டிருக்கும் போது, அவருக்கு வழங்கி கவுரவித்தது.

அந்த விருது வெளியீட்டு பிரசுரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

'மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும் அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதற்கு போராடுவதற்கும் உலகம் தழுவிய முயற்சிகள் இருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தை நேர்மையாக பகிரங்கப்படுத்தும் குரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்பும் என்பது மனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது'.

இன்று எல்லா மொழிகளிலும், பண்பாடுகளிலும், எழுதிவரும் பெண்களின் கவிதைகள் கலாசாரம் என்ற நுகத்தடி கொண்டு மிக மோசமாக ஒடுக்கப்படுகின்றன. எதிர்ப்பை பற்றிய கவிதைகள் எதிர்ப்பை விட மேலோங்கி ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. அழிப்பிற்கிடையே மிஞ்சும் சொற்களில் ஒளிர்கிறது பெண் வரலாறு.

லீனா மணிமேகலை

(நாடியா, தஸ்லிமா கவிதைகள் மொழிபெயர்ப்பு - லீனா மணிமேகலை.குமுதத்தில் எடிட் செய்துவிட்டார்கள்.)

இன்றைய சூழ்நிலையில் இந்த கட்டுரையை எழுதும் வாய்ப்பளித்த தளவாய் சுந்தரத்திற்கும், விட்டேத்தியாய் இருந்த என்னை சதா பேசி பேசி எழுத வைத்த ஜெரால்டிற்கும், எழுதியதை வாசித்து ஆலோசனைகள் சொன்ன ஷோபா சக்திக்கும் நன்றிகள்

நன்றி குமுதம்(7.4.2010)