Thursday, October 9, 2014

பதின்பருவம் மர்ம விளையாட்டல்ல

நன்றி - குமுதம் 


Berlin ArtParasites
ஒரு மூன்று வருடங்கள் இருக்கும். வார நாள் ஒன்றின் களைத்துப்போன இரவு. படப்பிடிப்பை முடித்துவிட்டு வழக்கம்போல நடுநிசி நெருக்கத்தில் வீடு திரும்பினேன். நான் அப்போது வசித்துக்கொண்டிருந்தது ஒரு மத்திய தர குடியிருப்பு. தாறுமாறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் கோணங்களில் மனித மனங்களின் அன்றாட அலுப்பும் சோர்வும் தெரிந்தது. மல்லுக்கட்டி என் ஸ்கூட்டிக்கு ஒரு இடம்பிடித்து நிறுத்திவிட்டு இரண்டாம் மாடியில் இருந்த என் ஃபிளாட்டிற்கு படியேறிக் கொண்டிருந்தபோது என் மூச்சே எனக்கு பலமாக கேட்டது போல இருந்தது. கொஞ்சம் நிதானித்துப் பார்த்ததில், வேக வேகமாக இரையும் வேறு மூச்சுகளின் சத்தம். இருளை விலக்கி சற்று முற்றும் பார்த்ததில் படிகளின் தாழ்வாரத்தில் இரண்டு உருவங்கள் ஆவேசமாக முத்தமிட்டுக்கொண்டிருந்தன. சில நொடிகளில் வெளிச்சம் பழகியதில் சுவரில் சாத்தப்பட்டிருந்த பெண் என் எதிர் ஃபிளாட் பெண் போல இருந்தாள். பையன் யாரென தெரியவில்லை. அல்லது மேலும் உற்றுப்பார்க்க லஜ்ஜையாக இருந்தது. அடுத்த அடி எடுத்து வைக்கும்போது, என் ஹை ஹீல்ஸ் செருப்பு சத்தம் அவர்களுக்கு தொந்தரவாக இருக்குமோ என்று யோசித்துகொண்டே செருப்புகள் இரண்டையும் கழட்டி  கையில் எடுத்துக்கொண்டு மிச்சமிருக்கும் படிகளைக் கடந்தேன். க்ரில் கேட்டைக் கூட சத்தமில்லாமல் திறந்து மூடிவிட்டு வெகு நேரமாக தூக்கத்திற்குஅழைத்துக்கொண்டிருந்த உடலைக் கட்டிலில் சாத்தினேன்.

காலையில் டம் டம் எனக் கதவு தட்டும் சத்தம், என் தலையணையை இடித்தது. காலிங் பெல்லுக்கு நான் முழித்திருக்கவில்லை. கீழ்வீட்டுப் பையன் ஃ ப்ளாட் அசோஷியேஷன் அவசர மீட்டிங் அறிவிப்பை சொல்லிவிட்டு, இன்னும் அரை மணி நேரத்தில் செக்ரட்டரி வீட்டுக்கு வர வேண்டும் என்றான். நான் ஒரு காஃபியை குடித்துவிட்டு செல்வதற்குள் செக்ரட்டரி வீட்டில் குடியிருப்புவாசிகள் எல்லாம் கூட்டமாக கூடிருந்தார்கள். ஒரு ஓரமாக இரவில் முத்தமிட்டுக்கொண்டிருந்த பெண்ணும் அருகில் ஒரு ஒடிசலான பையனும் குனிந்த தலையுடன் நின்றிருந்தார்கள். எத்தனை யோசித்தாலும் அந்தப் பையனை, 34 ஃப்ளாட்டுகள் கொண்ட என் குடியிருப்பில் நான் பார்த்த நினைவு வரவில்லை. ஆனால் குற்றவாளிகள் போல நின்றிருந்த அவர்களைப் பார்க்க அதிர்ச்சியாக இருந்தது. காலை பரபரப்பில் அலுவலகம் செல்லும் ஆயுத்தங்களில் அரை மனமாக பெரும்பாலோர் , அடுப்பில் பாதி சமையலும் அள்ளி முடித்த தலையுமாய் பெண்கள் , விஸ்தாரமான பேச்சொன்றின் முஸ்தீபுகளில் ரிட்டையரான பெரிசுகள் , அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்த நண்டு சிண்டுகள் என கலவையாக கூடியிருந்த கூட்டத்தில் ஒருவரையொருவர் பார்த்து ஹலோ சொல்லிக் கொள்ளகூட முடியாத இறுக்கம். பிள்ளைகள் அமெரிக்காவில் செட்டில் ஆகியும், ஃபிளாட் ஒனர்களிலேயே சீனியராகவும் இருந்த  செக்ரட்டரி என்பவர் சற்று ஓங்கிய குரலில், "இந்தக் குடியிருப்புக்குன்னு ஒரு ஒழுக்கம் இருக்கு, இது  டீசன்டான குடும்பங்கள் வாழற இடம்" என்று எதேதோ சொல்லிக்கொண்டு போனார். எனக்கு கடும் எரிச்சல் மூண்டது. அந்தப்பெண் கண்ணீர் விட்டுக் கொண்டும், பையன் அவமானத்தில் குறுகிப் போயும் நின்றார்கள். பெண்ணின் அம்மா இழவு விழுந்தது போல அரற்றிக்கொண்டிருந்தார். நைட்டியும் மேலே ஷால் போட்டுக் கொண்டும்  நின்ற மற்ற அம்மாக்களும் முணுமுணுத்துக் கொண்டு நின்றார்கள். நாம் ஏன் ஃ பிளாட்டின் பொது ஏரியாவில் சிசி டிவி வைக்க கூடாது என்ற ரேஜ்சில் போய்க்கொண்டிருந்த விவாதத்தில் எனக்கு இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் போய்க்கொண்டிருந்தது. இடைமறித்து "இப்ப இந்தப்பசங்க என்ன செஞ்சிட்டாங்கன்னு இப்படி பஞ்சாயத்தை கூட்டியிருக்கீங்க செக்ரட்டரி சார்" என்றேன். எல்லோரும் அதிர்ச்சியில் சட்டென அமைதியானார்கள். " உங்களுக்கெல்லாம் என்னங்க இதுல பிரச்சினை? காலேஜ் போற வயசுல இந்த நாட்டை யாரு ஆளனும்னு ஓட்டுப் போட முடிவெடுக்கிறவங்க, யாருக்கு முத்தம் கொடுக்கணும்னு முடிவெடுக்க கூடாதா? இந்தப் பசங்களோட ப்ரைவசியில் தலையிடற உங்களைத் தான் இப்ப தண்டிக்கனும்" என்றவுடன், ஒரு அப்பா காரர் "நீ என்னமா பேசற, ஒரு ஒழுக்கம் வேணாம், பொது இடத்தில இப்படியா பண்றது?" என்று நியாயம் கேட்டார். "பொது இடத்தில் இவங்க என்ன கொலையா பண்ணாங்க, கிஸ் தான பண்ணாங்க? வீட்டிலயும் கெடுபிடி, ஸ்கூல் காலேஜ்லயும் கேர்ல்ஸ், பாய்ஸ்னு பிரிச்சு வைக்கிறீங்க, தப்பித் தவறி கோ எஜுகேஷனல சேர்த்தா ஆண் பெண் சாதாரணமா பேசினாலே பெனால்டி கட்ட சொல்றீங்க, விலக்கி வச்சு ஒருத்தரை ஒருத்தர் ஆணும் பெண்ணும் வெறிச்சு வெறிச்சு பார்க்க வைக்கிற உங்க போலித்தனமான ஒழுக்கம், கிடைச்சா பாய வைக்குது". கூட்டத்தில் சுத்தமாக முணுமுணுப்பு அடங்கியது. அந்த பெண்ணின் அம்மாவின் அழுகை  கூட அடங்கியிருந்தது.. "ஏம்மா இன்னைக்கு இதை செஞ்சவங்க நாளைக்கு இன்னும் வரம்பு மீறிப் போனா என்னமா பண்றது, அத அத அப்பப்ப கண்டிக்கனும்மா" என்றார் செக்ரட்டரி. " பசங்களுக்கு சேஃப்  செக்ஸ் சொல்லிக்கொடுத்து காண்டம் வாங்கிக்க சொல்லிப் பழக்காம  கட்டப்பஞ்சாயத்து பண்ணினா தான் ஆபத்து. நீங்க இப்படி கூட்டம் கூடி இந்தப் பிள்ளைங்கள க்ரிமினல்ஸ் மாதிரி அவமானப்படுத்தறது பத்தாம்பசலித்தனம், திருந்த வேண்டியது அவங்க இல்லை, நீங்க தான் " என்று சொல்லிவிட்டு அந்த கூட்டத்தில் இருந்து வெளியேறி விட்டேன். நம்ம பாரம்பர்யம் என்னாவாவது கலாச்சாரம் என்னவாவது என்ற வகையில் ஆளாளுக்குப்  பேசிவிட்டு முத்தம் கொடுத்த அந்த பெண்ணின் "வகையறா லிஸ்டில்" என்னையும் சேர்த்துக் கண்டனங்களை தெரிவித்து விட்டு அந்தக் கூட்டம் களைந்ததாக பின்னர் கேள்விப் பட்டேன். வழியில் பார்க்கும்போதெல்லாம் எதிர்வீட்டுப் பெண் மட்டும்  நன்றியுடன் பார்ப்பாள். 

நினைத்து பார்த்தால் ஆயாசமாக இருக்கிறது. எதற்கெடுத்தாலும், இந்தக்காலத்து பிள்ளைங்க சரியில்ல, ஒழுக்கம் இல்ல, கீழ்ப்படிதல் இல்ல, விளங்காத தலைமுறை, நாங்க எல்லாம் இந்த வயசில எப்படியிருந்தோம், எந்தப்பொண்ணை யாவது/பையனை யாவது  ஏறெடுத்துப் பார்த்திருக்கிறோமா என்று பெற்றொர்கள் புலம்புவதும் அலுத்துக்கொள்வதும் அறியாமை என்று தான் சொல்ல வேண்டும். என் பதின்பருவத்தில் மொபைல் ஃபோன் இல்லை, இன்டர்நெட் இல்லை, வாட்ஸ் ஆப் இல்லை. ஆனாலும் செய்திகள் பரிமாறிக்கொண்டோம், முத்தமிட்டுக்கொண்டோம், காதலித்தோம். முத்தமிட்டவர்களையெல்லாம் காதலிக்கவும் இல்லை. காதலித்தவர்களோடு எல்லாம் பிள்ளைத்தாச்சியாகவும் இல்லை. திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தபோது ஓடிப்போகவும் இல்லை. அப்போதும் பெற்றொர்கள் இதையே தான் புலம்பினார்கள். பெற்றோர்களாக இருப்பவர்கள்  அவர்களுடைய டீன் ஏஜில் அவர்களுக்கிருந்த வாய்ப்புகளிலும் நிச்சயமாக பொதுவாக சொல்லப்படுகிற எல்லா வரம்புகளையும் மீறி இருப்பார்கள். வசையும் வாங்கித் தான் இருப்பார்கள். நிற்க. அப்புறம் எதற்காக  ஆணையும் பெண்ணையும் மறைபொருளாக்கி  மர்மப் படுத்தி வைத்திருக்க  வேண்டும். அவரவர் சொத்தையும், சாதியையும், மதத்தையும் காப்பாற்றிக்கொள்ள அறிய வேண்டிய  வயதில் இருக்கும்  வயதில் இருக்கும் ஆணையும் பெண்ணையும் கௌரவம் / கலாசாரம் என்று பேசி பிரித்து வைப்பதற்கு பெயர் தலைமுறை இடைவெளியல்ல. அதிகார துஷ்பிரோயகம். பிள்ளைகள் உங்கள் வழியாக இந்த உலகத்திற்கு வந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் உங்கள் உடைமைகள் அல்ல என்பார் கலீல் கிப்ரான்.  வளரும் பருவத்தில், முக்கியமாக பதின்பருவங்களில் ஏற்படும் உடல் மாற்றங்களையும் உள்ளக்கிடக்கைகளையும் குறுகுறுப்புகளையும் அனுபவித்துக்  கடக்கும் உரிமைகள் பிள்ளைகளுக்குரியது. மாறாக அவர்களை யங் அடல்ட்ஸ் (Young adults) ஆகப் பார்க்காமல் கொட்டகையில் கட்டிவைத்திருக்கும் ஆடு மாடுகள் போல பார்ப்பதால் வரும் நோய் தான் இளைய தலைமுறையை குறை சொல்லும் புலம்பல்.சமூகத்தில் ஜனநாயகம் வேண்டும் , குடும்பத்திற்குள் நான் ஹிட்லர் என்று சொல்லும் பெற்றோர் தாங்கள் நியாயவான்கள் தானா என்பதை பரிசீலிக்க வேண்டும். சரிபாதி சதவிகித தொகையில் ஜனிக்கும் ஆணும் பெண்ணும் வாழ்க்கையை பகிர்ந்து புரிந்து எதிர்கொண்டு வாழ்ந்து தானே ஆக வேண்டியிருக்கிறது. பாலியலை, உடலை, வேட்கையை கற்றுத் தராமல்  தடுத்து, மூடி, கட்டுப்படுத்தி ஒடுக்கி வைப்பது எவ்வளவு பெரிய ஆரோக்கிய கேடு?  

Picasso
ஒரு மாற்றத்திற்கு, சுதந்திரமாக பிள்ளைகளை விட்டுப்பாருங்கள். அறிய வேண்டியதை அறிந்து கொண்டு வீடு வந்து சேர்வார்கள். கட்டுப்படுத்தி வைப்பதில் வளரும் வன்முறையும், குரோதமும், பொய்யும், புரட்டும் அகன்று விடும். ஈவ் டீசிங் இருக்காது. பேருந்துகளிலும், பொது இடங்களிலும், பெண்களை  ஏதோ ஜூவில் (zoo) பார்ப்பது போல பார்த்துக்கொண்டு விசில் அடிப்பதும் சீட்டியடிப்பதுமாய் ஆண்பிள்ளைகள்  நிற்க மாட்டார்கள். பாலியல் அத்துமீறல் நிச்சயம் குறையும். ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் மரியாதையாக இருக்கும் சமூகம் உருவாகும். அன்பு, காதல், நட்பு, காமம், எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவருக்கொருவர் மரியாதையாக இருப்பது தானே மனித நேயத்தின் அடிப்படை. சில வருடங்களுக்கு முன் கேரளத்து  வயநாட்டில் "கனவு" என்ற ஆதிவாசி பள்ளிக்கு சென்றிருந்தேன். பேபி  என்ற நாவலாசியர் தான் அந்த பள்ளியை நடத்திக்கொண்டிருந்தார். ஆண் குழந்தைகளும், பெண் குழந்தைகளும், ஆசிரியர்களுமாய் எல்லோரும் மிக சுதந்திரமாக சமத்துவமாக சனநாயகபூர்வமாக ஒரு கம்யூன் போல வாழும் பள்ளியது. அறிவென்பது அதிகாரம் அல்ல என்பதை சுளீரெனப் புரியவைத்த அனுபவம் அது. எல்லோரும் வட்டமாக அமர்ந்து  கலந்துப் பேசிக் கொண்டிருந்த போது, இப்படி எல்லோரும் ஒரு இடத்தில் இருப்பதில் எசகு பிசகாக நடந்து பெண் குழந்தைகள் கர்ப்பமாகி விட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி வந்தது. அதற்கு பேபி, அதில் எசகு பிசகு என்று எதுவும் இல்லை, அதுவும் இயற்கையின் அழைப்பு தான், பிறக்கும் பிள்ளை எங்கள் எல்லோருக்கும் பிள்ளை தான் என்றார். மனித நாகரீகத்தைப் கற்றுக்கொள்ள நாம் ஆதிவாசி கிராமங்களுக்கு தான் திரும்ப வேண்டும்.

லீனா மணிமேகலை