Friday, August 15, 2014

இரோம் ஷர்மிளா-மணிப்பூரின் அழிக்க முடியாத கவிதை!

நன்றி - புதிய தலைமுறை 


"இன்னும் என்னை மரணம் விரும்பாததால்
நான் பிறந்த மண் கங்க்லாய்
சிவந்த மையில் எழுதப்பட்ட புதிய வரலாற்றுப் பக்கமாய் 
என் கண்களுக்குள் விரிகிறது
அமைதியின் நறுமணமாய்  
கங்க்லாயிலிருந்து 
பிரபஞ்சமெங்கும் நான் பரவுவேன் 
வரப்போகும் நூற்றாண்டுகளுக்கும் "

- கவிஞர்  இரோம் ஷர்மிளா, தன்  கவிதைகளில் மரணம் என்ற வார்த்தையை திரும்ப திரும்ப பயன்படுத்துகிறார். ஆனால் சென்ற மாதம்   "ரேப் நேஷன் " (Rape Nation) என்ற என் திரைப்படத்திற்காக மணிப்பூரில்  அவரை நேர்காணல் செய்தபோது வாழ்வு குறித்த அவரது தீராத வேட்கையை தரிசித்த உணர்வு தான் கிடைத்தது. இறையாண்மை என்ற பெயரால் மணிப்பூர் மக்களை வகை தொகையில்லாமல் ராணுவம் மூலம் வேட்டையாடும் இந்திய அரசாங்கத்தின்  Armed Forces Special Power Act (AFSPA) என்ற கொடிய சட்டத்தை எதிர்த்து பதினான்கு ஆண்டுகளாக வாய்வழி உணவோ, நீரோ அருந்தாமல் உண்ணா நோன்பு மேற்கொண்டு வரும் இந்த போராளி தேவதை பேசும்போது  ஒவ்வொரு சொல்லும்  மின்னல் துண்டுகளாக விழுகின்றன. வாஞ்சையும் புன்னகையுமாய் வரவேற்கும் அவரின் முகம், தீர்க்கமான கண்கள், சுருள் முடி, வெளுத்த மெல்லிய தேகம், நீள நீளமான நகங்கள், மூக்கில் சொருகப்பட்ட  அரசாங்கத்தின் சிரிஞ்ச் என்ற விவரணைகள் இரோமை வரையறுத்துவிட முடியாது. மறுக்க முடியாத, வலிமையான எதிர்ப்பின் பாடலாய், அஹிம்சையின் குறியீடாய்  அவரின் இருப்பு  வியாபித்திருக்கிறது. 


மைதி மொழியில் இச்செ என்றால் சகோதரி. போலீஸ் அதிகாரிகளால் கூட அன்பும்  மரியாதையுமாக  இச்செ என்றழைக்கப்படும் இரோமை   ஒவ்வொரு மணிப்பூரியும் வாழும் சிறுதெய்வமாகத் தான் நேசிக்கிறார்கள்.  அரசு மருத்துவமனையின்  ஒரு பகுதியை பூட்டிய அறையாக மாற்றி ஆயுதமேந்திய காவலர்களை சுற்றிலும் நிறுத்தி மணிப்பூர் அரசாங்கம் இரோம் ஷர்மிளாவை  சிறை வைத்திருக்கிறது.  சிறைச்சாலை கமிஷனரிடம் ஒரு வாரத்திற்கு முன் எழுதி விண்ணப்பித்து,  விளக்கங்கள் சொல்லி, குறிப்பிட்ட வார நாட்களில், இருபது நிமிட சந்திப்பிற்கான அனுமதியை பெற்றேன் .  விதவிதமான Teddy Bear மென்பொம்மைகளும், சர்வ தேசங்களிலிருந்தும் வந்திருந்த வாழ்த்து அட்டைகளும், புத்தகங்களும் பரிசுகளும் இறைந்துக் கிடந்த அறையில், மென்மையான ஆனால் திடமான பறவைக் குஞ்சு போல அமர்ந்திருந்த    இரோமிடம்,  ஆயுதமேந்திய ஒரு காவலர் அருகிருந்து கண்காணிக்க உரையாடியது 'இந்தியா' என்ற அபத்த நாடகத்தின் காட்சி போல இருந்தது.  சந்தித்த அந்தக்  குறுகிய நேரத்தில், "ஒருவர் விடாமல் நான் வீர மரணம் (Matryrdom) எய்தவேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் நான் சாவதற்காக போராடவில்லை, நீதி நிலைத்த வாழ்விற்காக போராடுகிறேன்" என்றார். "ராணுவத்தால் மானபங்கப் படுத்தப்பட்டு, கொலைசெய்யப்பட்ட மனோரமா தொடங்கி எண்ணற்ற பெண்களுக்கும், தன் போராட்டத்திற்கு காரணமான மலோம் சம்பவம் போல வகை தொகையில்லாமல்  சுடப்பட்டு இறந்த அப்பாவி   மக்களுக்கும்,  இதற்கான  எதேச்சதிகாரத்தை  ராணுவத்திற்கு வழங்கியிருக்கும் AFSPA என்ற கொலைகார சட்டத்தை திரும்ப பெறக் கேட்டு தீக்குளித்த சித்தரஞ்சன் போன்ற போராளிகளுக்கும் நீதி கிடைக்க  வேண்டும் , அதற்கு உண்மையான ஜனநாயகம் திரும்ப வேண்டும்" என்றும் ஆங்கிலத்திலும் தன தாய்மொழி மைதியிலும் அசைக்க முடியாத உறுதியுடன் பேட்டியளித்தார். என் படங்களைக் குறித்து விவரங்கள் கேட்டுக்கொண்ட அவர், இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளுக்கு தன் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டு, ஈழத் தமிழ் மக்களுக்கான  சுயநிர்ணய உரிமையைப் பெற்றுத் தர வேண்டுமென்றார். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குத்  தான் ஆதரவுக்  கடிதம் எழுதியதை நினைவு கூர்ந்தார். நேரக்கெடு நெருங்க விடைபெறுகிறேன் என்றதும், தன் காதலர் டெஸ்மாண்டின்  புகைப்படத்தை ஒரு குழந்தை போல எடுத்துவந்து  ஆதுரத்துடன் காண்பித்தார்.அவர் வாழ்க்கையையும், போராட்டத்தையும், காதலையும்  அடிப்படையாக வைத்து தோழனும் எழுத்தாளருமாகிய ஷோபாசக்தி எழுதிய திரைக்கதையைப் பற்றி பகிர்ந்துக் கொண்ட போது மகிழ்ந்துப் போனார். காதல் தன் போராட்ட குணத்திற்கு மேலும் வலு சேர்க்கிறதே தவிர  சோடை  போக வைக்கவில்லை   என்ற நம்பிக்கையை   தெரிவித்து விட்டு ஆர்வமாக என்  கண்களைப் பார்த்தார் . ஆமோதித்தவுடன் கைகளை இன்னும் இறுக்கிப்  பிடித்துக்கொண்டார். நெகிழ்வில்  உடல் சிலிர்க்க, பாதம் வியர்க்க, பூமி நழுவ, தடுமாறிப்  போனது என் நெஞ்சம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் என்ற திருக்குறளை தமிழ்க் கவிதையென எடுத்து சொல்லி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதி தர, பத்திரப்படுத்திக்  கொண்டார் . நானும் கவிதை எழுதும் பெண் தான் என்ற நினைவு குறுக்கிட்டது.  ஒன்றும் சொல்லாமல் மெளனமாக  வாளாவிருந்தேன். கவிதையின் மீதான சாத்தியங்களை மொழியிலிருந்து அசாதரணமான இருப்பிற்கும் எதிர்ப்பிற்கும்  கடத்தியிருந்த இரோமின் உடலுக்கும் உறுதிக்கும் முன்  வார்த்தைகள்  எனக்கு வசப்படவில்லை.  





 க்வெண்டானமா(Guantanamo)கைதிகளுக்கு அமெரிக்க அரசாங்கம் செய்வது போல உண்ணாவிரத போராட்டத்தை கையிலெடுக்கும் போராளிகளுக்கு பலவந்தமாக சிரிஞ்ச் மூலம் உணவளித்து கொடுமை செய்யும் இந்திய அரசாங்கம், அவரை அவ்வப்போது விடுவித்து பின் கைது செய்யும் வழக்கமான சடங்கு, சென்ற வாரமும் நடந்ததை செய்தித் தாள்களில் படித்துவிட்டு மணிப்பூர் நண்பர்களிடம்  தொலைபேசினேன். இமா (மைதி மொழியில் தாய்) மார்க்கெட் என்றழைக்கப்படும் பெண்களால் நடத்தப்படும் சந்தைக்கு, விடுதலை செய்யப்பட்ட  அந்த குறுகிய நேரத்தில் இரோம்  சென்றதாகவும்,  ஆயிரமாயிரம் மக்கள்  கூடி அவரை வாழ்த்தியதாகவும் தகவல்  சொன்னார்கள்.  அதைக் காண சகியாத அதிகாரம் குண்டுகட்டாக இரோம் ஷர்மிளாவை தூக்கிக்கொண்டு போய் சிறையில் அடைத்தது எனவும்  செய்திகள் மூலம் கேள்விப்பட்டேன். இந்தியா ஒரு தேசமாக தன்னைக் கட்டமைத்துக் கொள்வதற்காக வடகிழக்கு மக்களுக்கு வரலாறு முழுக்க செய்த அநீதிகளுக்கும், இன்னும் தொடர்ந்துக் கொண்டிருக்கும் கொடூரங்களுக்கும்  காயாத ரணமாக மணிப்பூர் சாட்சி சொல்லி நிற்கிறது. ஒரு துளி நீர் கூட வாய்க்குள் விழுந்துவிடக்கூடாது என்பதற்காக ஈரப் பஞ்சு வைத்து காய்ந்துப் போன தன உதடுகளை துடைத்துக் கொண்டு வாழும், போராடும்  இரோம் ஷர்மிளாவிற்கு முன் அதிகாரம் ஒரு நாள் மண்டியிடும். அப்போது இதுவரை வரலாற்றில் எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் அர்த்தம் பெறும்.

லீனா மணிமேகலை