Showing posts with label வினவு. Show all posts
Showing posts with label வினவு. Show all posts

Wednesday, June 27, 2012

தீர்ப்பு நாட்கள்


இறுதியில்
தீர்ப்புகளால் திருகியிருந்த
என் உடலின்
பாகங்களை
சரிசெய்ய
ஒரு கனவு தேவைப்பட்டிருக்கிறது

நரைத்த அந்த தாடியைக்கோதி
முத்தமிட்டுக்கொண்டிருந்த வேளையில்
ஜான் ஆப்ரகாமிடம் கேட்டேன்
உங்கள் ஒடஸ்ஸா உண்டியலை எனக்குத் தரமுடியுமா?
உடல் நொறுங்கத் தழுவிய அவர்
இழிசாவை அது தடுக்காது, வேண்டாம் என்றார்
இல்லை, நான் ஏற்கெனவே கொல்லப்பட்டவள் என்றேன்
ஒடஸ்ஸா உண்டியல்
நாணயங்களுக்குப் பதில் உயிர்களையே கேட்கிறதென்றார்.

அப்புவை அழைத்துக் கொண்டு ரேயைத் தேடிப்பிடித்தேன்.
அவர் அப்போதும், கன்னத்தில் கைவைத்து சிந்தித்தபடியிருந்தார்
வெகுநேரம் கடந்தே அவர் புருவம் சற்று நெறித்தார்
அவர் பார்வை திருப்பிய நொடியில் கேட்டேன்
ஏன் நீங்கள்
விளம்பரப்படங்களுக்கு கோட்டோவியங்கள்
வரைந்தீர்கள்
என் தலையைக் கோதிய அவர்
அவை இந்த சமூகத்தின் மேல் நான்
வைத்த விமர்சனங்கள் என்றார்

ஒரு கிராமத்தின் மாட்டுக்கொட்டகையில்
மேக தாக தாராவை திரையிட்டுக்கொண்டிருந்த
ரித்விக் கட்டக்கோடு படம் பார்த்துக் கொண்டிருந்தேன்
உங்களைப்போல படமெடுக்க தூய முதலீடு
சாத்தியமா என்றேன்
ஒவ்வொரு நாணயமும் உன்னுடையதே
ஆனால் உன்னிடம் இல்லை என்றார்
அவர் மேலெறியப்பட்ட கற்களைக் கேட்டு பெற்றேன்
அதில் பெயர்கள் அழிந்திருந்தன
அதனாலேயே படப்பெட்டிகள் கண்ணாடி கூடுகளில்
செய்யப்படுவதில்லை எனவும் சொல்லி சிரித்தார்
குலுக்கிய அவர் கைகளிலிருந்து ரேகைகளைத் திருடிக்கொண்டேன்

அதற்குள்
காப்பகத்திலிருந்து திருடிய கேமிரா
தனக்கு இனி தேவையில்லை
என்று ஹெர்சாக் திருப்பியனுப்பியிருந்த தபாலோடு
திரைப்பட மாணவனொருவன்
என்னை எழுப்பியிருந்தான்

அந்த கேமிராவை எந்த தராசில் வைத்தாலும்
எடைமுள் ஒடிந்தது


லீனா மணிமேகலை


*ஒடெஸா திரைப்பட இயக்கம், இயக்குனர் ஜான் ஆப்ரஹாமால் தொடங்கப்பட்டது. மக்களிடம் உண்டியல் குலுக்கி, அக்ரஹாரத்தில் கழுதை போன்ற திரைப்படங்களைத் தயாரித்து இயக்கினார் ஜான் ஆபரகாம். 
*இன்றைய நவீன உலக சினிமாவைக் கோலோச்சும் வெர்னர் ஹெர்சாக், படமெடுக்க நிதியில்லாமல், திரைப்படக் கல்லூரி காப்பகத்திலிருந்து 35 எம். எம் கேமிராவை திருடிக் கொண்டு போனது வரலாறு.
*ரே என்ற சத்யஜித ரே இந்தியக் கலைசினிமாவின் தந்தை
*ரித்விக கட்டக் இந்திய மாற்று சினிமாவின் ஆன்மா.

Wednesday, June 13, 2012

கண்(ணன்)காணிப்பின் அரசியல்,வினவும் ஆம்புளைத்தனம்


தமிழ் கவிஞர்களின் இயக்கம், ஈழத்தமிழர் தோழமைக்குரலின் போராட்டங்கள், செங்கடல் திரைப்படம் என என் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் அவதூறுகளாலும், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலும் இழிவுபடுத்திய காலச்சவடு இன்று என் மேல் தனிப்பட்ட முறையிலும் தாக்கி கட்டுரை வெளியிட்டுள்ளது. காலச்சுவடு என்ற பார்ப்பனீய கார்பொரேட்டின் அருள்பெறாமல் ஒரு உதிரி படைப்பாளியாக இயங்குவதும், அதன் ஆள்காட்டி அரசியலை தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவதுமான என் உறுதியை, வெறும் வாரிசுரிமையால் எடிட்டரான கண்ணன், கிஞ்சித்தும் அசைத்துவிட முடியாது. காலச்சுவடு இருக்கும் வரை பிரமிள்களும் இருப்பார்கள் !

தேஜஸ்வினி பெண்கள் மேம்பாட்டுத்திட்டத்தில் பயன்பாடு பெற்ற ஆதிவாசிப் பெண்கள், கணவனை இழந்தப் பெண்கள் , கைவிடப்பட்டப் பெண்கள் குறித்த ஆவணப்படத்தை பம்ப்கின் பிக்சர்ஸ்(மும்பை) என்ற தயாரிப்பு நிறுவனத்திற்கும் எடுத்துக் கொடுத்தேன். அதற்கு நிதியுதவி செய்வது டாடா நிறுவனம் தான் என்று தெரிந்து தான் அந்தப் பணியை செய்தேன்..அந்த ஆவணப்படத்தின் பத்து நிமிட, ஐந்து நிமிட, ஒரு நிமிட பிரதிகளை நிறுவனமே எடிட் செய்து விளம்பர படங்களாக பயன்படுத்திக் கொண்டது.இதில் எந்த உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் நான் படத்தில் சொல்லவில்லை. நேர்மையாகவே, அந்தப் பெண்களின் வாழ்க்கையை விஷுவல் செய்திருந்தேன்.

நமது நாட்டின் ஐ.ஐ.எம். ஐ.ஐ.டி, அறிவிஜீவிகளை உருவாக்கும் Tata Institute of Social Sciences ,ஒலிம்பிக்கிற்கு வீரர்களை அனுப்பும் Tata Sports Academy, என்று எல்லாமே டாடா நிதியுதவி செய்து தானே நடக்கிறது. திறந்த சந்தை பொருளாதாரத்தில் , நிறுவனங்களின் Corporate Social Responsibility செயல்பாடுகளை கவனப்படுத்துவதில் எனக்கு எந்த அரசியல் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. மூலதனம் அனைத்திலும் யார் யார் எப்படி பங்கு பெறுகிறார்கள், அவ்வாறு பங்கு பெறும் போது குறிப்பட்ட நபர் அதை எப்படி பயன்படுத்துகிறார் என்கிற அறிவார்ந்தப் பார்வையைக் கைவிட்டுவிட்டு வெறும் முதலாளித்துவ குற்றத்தினை சுமத்துவத்தின் மூலம், அவரை வர்க்கத்திற்கு காட்டிக் குடுப்பதாக "ஒழுக்க சீலர்கள்" நினைத்துக் கொண்டிருக்கலாம். எந்தப் புரட்சிகர அம்சமும் அதன் உள்நாட்டு பயன்மதிப்பைப் பயன்படுத்தித்தான் வளர முடியும். அதற்கான உழைப்பையும், அதற்கான கூலியையும் பெற உழைக்கும் வர்க்கத்திற்கு  உரிமை உண்டு.

ஆதிவாசிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தியதற்கு எதிராக காலச்சுவடு கண்ணன் எந்த பேரணி, போராட்டத்தை நடத்தினாராம்? இலக்கியம் என்ற போர்வையில், உதிரிகளை உளவு பார்ப்பதை எந்த பத்திரிகை தர்மத்தில் சேர்ப்பது?

இடதுசாரி கார்பொரேட் ஃபேக் ஐ.டி "புரட்சி புகழ்" வினவு, அறுவடை காலத்தில் வயலுக்கு எலி பிடிக்கப் போனவன் கொஞ்சம் நெல்லையும் திருடிக் கொண்டு வந்தானாம் என்கிற கதையாக "இடையில் நான் கொடுத்த பத்து ரூபாயை மறந்து விடாதீர்கள்" என்று ஜோக் அடிக்கிறது. உண்மையான விலாசம், பெயர்களையெல்லாம் சொல்லிவிட்டு புரட்சி பேசுங்கள் வினவு. அதற்கு வக்கில்லாமல் படைப்பாளிகளை அவதூறு செய்வது அறிவு நாணயமல்ல.

மற்றபடி ,இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லும்படி என்னைக் கேட்பவர்கள் , படைப்பாளிகளை கண்காணித்துக் கொண்டு கமிசார்த்தனம் செய்யும் இவர்களை ஏன் விசாரணைக்கு உட்படுத்துவதில்லை?

லீனா மணிமேகலை

Thursday, June 10, 2010

தனிமொழியா? தீண்டத்தகாத மொழியா?

http://innapira.blogspot.com/2010/06/2_10.html

பெருந்தேவியின் கவிதைகளில் சில எனக்குப் பிடிக்கும். அதை வெளிப்படுத்தவும் நான் தயங்கியதில்லை. எனக்கு உடன்பாடில்லாதவற்றை சுட்டிக் காட்டவும் தயங்கியதில்லை. அதன் விளைவுகள் தான் இந்த விவாதங்கள். ஆனால் அவரோ


//இனி உங்கள் பெயரோ, உங்கள் கவிதைகளோ என் எழுத்தில் வராது. நீங்கள் எழுதும் எதையும் நான் வாசிக்கவும் மாட்டேன்//

என்று அறிக்கை விடுகிறார். நல்லது. ஒதுக்குதல் அல்லது ஒதுங்குதல் என்பது பார்ப்பனீயப் பண்பு என்பார் பெரியார். பெருந்தேவிக்கு என் பிரதி தீண்டத்தகாதப் பிரதியாகியதில் எனக்கு வியப்பேதுமில்லை.

http://www.lumpini.in/a_punaivu-005.html

"பெட்டை நாயின் கூச்சல்" கட்டுரையில் மகாஸ்வேதா தேவியின் கதையில் வரும் காட்சியைக் குறிப்பிட்டது தமிழ்ப் பெண் கவிதையைக் குறித்த குறியீடே தவிர என்னைப் பற்றியதோ, பாலியல் சுதந்திரத்தைப் பற்றியதோ அல்ல. அப்படி பெருந்தேவி திரித்துக் கூறுவதை நம்புவதற்கு வாசகர்கள் முட்டாள்களும் அல்ல.

கீழே குறிப்பிட்டுள்ள கட்டுரையின் பத்தியில் தனிப்பட்ட முறையில் எங்கயும் நான் என்னை முன்னிறுத்திக் கொள்ளவில்லை.

"மகாஸ்வேதா தேவியின் "திரெளபதி" என்ற கதையில் வரும் காட்சியில் ராணுவ அதிகாரி முன்திரெளபதி நிர்வாணமாக நிற்கிறாள். அவள் தொடைகளிலும், முலைகளிலும், அல்குல்லிலுமுறைந்துப் போன ரத்தம். "இவ துணியெல்லாம் எங்க? "என்ற ராணுவ அதிகாரியின் கேள்விக்கு"உடுத்த மாட்டேங்கிறா சார், கிழிச்சுப் போட்டுட்டா" என்கிறார்கள்.மேலும் அதிகாரியின் அருகில்வரும் திரெளபதியின் கரிய உடல் குலுங்க ஆவேசமாக சிரிக்கிறாள். அவளின் குதறப்பட்டெளதடுகளிலிருந்தும் ரத்தம். "துணி என்ன துணி? யாருக்கு வேணும் துணி? என்னைநிர்வாண்மாக்க உன்னால் முடியும், ஆனால் என்னை திரும்ப உடுத்த வைக்க முடியுமா? சீ.. நீ ஒருஆம்பளையா?" என்று கேட்டுவிட்டு ராணுவ அதிகாரியின் தூய வெள்ளை சட்டையில் "தூ" என்றுதுப்பிகிறாள். "நான் பார்த்து வெட்கப்பட வேண்டிய ஆம்பளை இங்க யாருமில்ல, என்மேல்துணியைப் போட எவனையும் விட மாட்டேன். என்ன செய்வே? வா என்னை என்கெளண்ட்டர்பண்ணு" என்று சிதைக்கப்பட்ட முலைகளோடு தன்னை நெருங்கும் நிராயுதபாணியான டார்கெட்முன்னால் அதிகாரி பயப்படுகிறார். அது ஒரு அமானுஷ்ய பயம்.அந்த பயம் தான் 'பெண்கவிஞர்கள் தம்மை திடுக்கிட்டு திரும்பிப் பார்க்க வேண்டுமென்பதற்காக ஆடையை அவிழ்த்தெறிகிறார்கள்' என்ற விமர்சனத்தின் அடிப்படையும் காரணமுமாக இருக்க முடியும்"


இதை வாசிப்பவர்கள், யார் பொய் சொல்கிறார்கள்? யார் "பயனிலா சொல்லும்" பண்புடன் இருக்கிறார்கள்? என்பதை புரிந்துக் கொள்ளட்டும்.


போராளி பற்றிய பெருந்தேவியின் புரிதல் வேடிக்கையாக உள்ளது. படைப்பாளிகள் என்பவர்கள் கருத்துப் போராளிகள் தானே? தமிழ்ச் சூழலில் பொதுவாக பெண் கவிஞர்கள் தங்கள் அரசியல் செயல்பாட்டிற்காக வன்முறைக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகிறார்கள் என்ற உருவகத்திற்காக இந்தப் பத்தி எழுதப்பட்டது. பிரதிகளை வாசிக்கும் போது முன் முடிவுகளோடு வாசித்து, இல்லாத குற்றத்தைக் கண்டுபிடிக்கும் இவரின் தந்திரம் எனக்குப் புதிதல்ல. எனது இரண்டு கவிதைகள் பற்றிய "விமர்சனக்" கட்டுரையிலேயே நான் அறிந்துக் கொண்டது தான் .


அதிகாரத்தை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்து வைத்திருக்கும் பெருந்தேவி போன்றவர்களிடம் யாரும் அதிகாரம் செய்ய முடியுமா என்ன? அரசியல் நிலைப்பாடுகளில் இரட்டை வேடம் போடும் இவருக்கு நான் வைப்பது கண்டனங்கள் மட்டுமே. மற்றபடி எந்த தளத்திற்கு வேண்டுமானாலும் அவர் பின்னூட்டம் விடட்டும் , விசுவாசமாயிருக்கட்டும் . எனக்குப் பொருட்டே இல்லை.


மற்றபடி வினவு எழுதும் பொறுக்கித்தனமான, வக்கிரக் குப்பைகளை "இன்டலக்சுவலாக" சகித்துக் கொள்ளும் இவருக்கு "வக்கில்லை" "கூச்ச நாச்சம்" என்ற சொற்களை ஜீரணிக்க முடியாதா என்ன?


மேலும், லும்பினியில் வந்த கட்டுரையில் 'வினவு' குறித்த பெருந்தேவி, ஜமாலன் போன்றவர்களின் நிலைப்பாட்டைப் பற்றி பொதுவாக, "பெண் எழுத்து எம்மிடம் கோரி நிற்பவை எவை" என்ற உரையாடலில் முதல் கருத்தாக முன் வைத்திருந்தேன். என் பிரதிகளை வாசிக்க விரும்புபவர்களுக்கு மட்டும் இதை மறுபதிவு செய்கிறேன்.



"மரபிலி பிரதிகளைக் கண்காணிக்கும் அதிகார எந்திரம் தன் ஒழுங்கு நடவடிக்கைகளை பிரதியாளரின் மீது நீட்டித்து தாசி, தேவடியாள், அவிசாரி, பைத்தியக்காரி, முண்டை, வேசி,விபசாரி என்று பெயர்களிட்டுப் பாலியல் ரீதியாக ஒடுக்குவது, பெண் படைப்பாளியை திமிர்பிடித்தவள் என்றும் அவளைப் பலரும் புணர்ந்து தான் ஒடுக்க வேண்டும், யோனி வழியாக மட்டுமன்றி வாய்/குதம் வழியாகவும் புணர்ந்து ஒடுக்க வேண்டும் என்று குரலிடுவது, எழுதுவது போன்ற வன்முறைகளை செய்பவர்களின் மீது பகையை அறிவிக்க வேண்டும். அப்படிப்பட்ட சக்திகளோடு "பெண்" விசயத்தில் தானே அவர்கள் அப்படியிருக்கிறார்கள், மற்ற விசயங்களில் சேர்ந்து செயல்படலாம் என்று உடன்படும் பரந்த மனதுக்காரர்களின் இரட்டை வேடங்களை எழுத்தளவிலாவது தொடர்ந்து தோலுரிக்க வேண்டும். சாதி திமிரோடு இருக்கும் சக்திகளோடு எப்படி சகிப்புத் தன்மையைக் காட்ட முடியாதோ, அதே போல பாலினத் திமிரோடு இருக்கும் சக்திகளோடும் வேறு விசயங்களுக்கான கூட்டு நடவடிக்கைகளையும் மறுக்க வேண்டும். பாலின விழிப்பை முன் நிபந்தனையாக வைத்து பிரதிகளுக்குள்ளும், பிரதிகளுக்கு வெளியேயும் கறாராக இயங்க வேண்டும்.பெண்ணாக இருந்தும் ஆண்நிலைவாதக் குப்பைகளை எழுதுபவர்களும், அவர்களின் பிரதிகளும் இதில் விதிவிலக்கல்ல"


தனிமொழியானாலும், தீண்டத்தகாத மொழியானாலும் இதுவே என் மொழி.


நன்றி, வணக்கம்

லீனா மணிமேகலை

Wednesday, June 9, 2010

பதிவுலகின் தரங்கெட்ட பக்கங்கள்

எக்ஸ்கியூஸ் மீ கவிஞர் பெருந்தேவி


எது கவிதை? எது கவிதையல்ல? எது உருப்படியான கட்டுரை, எது உருப்படியான கட்டுரையல்ல என்பதைப் பற்றிய உங்கள் மேலாதிக்க மதிப்பீடுகளுக்கெல்லாம் நான் முகம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது.


உங்கள் மேலிருந்த மரியாதை எல்லாம், செய்ய வேண்டிய 'உங்கள் மேலதிக வேலைகளுக்கு மத்தியிலும்' வினவு மாதிரியான பொறுக்கி அரசியல் செய்துக் கொண்டிருக்கும் இணையதளங்களுக்கு ஓடிப் போய் பின்னூட்டம் விட்டுக் கொண்டிருக்கும் இரட்டை வேடத்தில் காணாமல் போய்விட்டது. பொது வெளியில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை, அந்த டைரக்டரோடு படுத்தாள், இந்த டைரக்டரோடு கூத்தடித்தாள் என்றெல்லாம் எழுதி, ஒரு கண்டனக் கூட்டத்தில் "தேவிடியாவோடு எல்லோரும் படுங்கடா" என்றெல்லாம் கூப்பாடு போட்ட ஒரு பொறுக்கி கும்பலைக் கண்டிக்கத்தான் உங்களுக்கு வக்கில்லை. அந்த தளத்திற்கு சென்று உங்கள் "இன்டலக்சுவல்" கருத்தை எந்த அடிப்படையில் எழுதுகிறீர்கள்? ஏன் பெருந்தேவி, அதே கும்பல் உங்களையும் "அந்தப் பேராசிரியரோடு போனாள், இந்த எழுத்தாளரோடு கூத்தடித்தாள்" என்று சொல்வதற்கும், பெயர் சொல்லி எழுதுவதற்கும் எவ்வளவு நேரம் ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


நர்சிம் வக்கிரம் என்பதை ஒரு கேடு கெட்ட வக்கிர கும்பலின் இணையதளத்தில் சென்று தான் நீங்கள் பதிவு செய்ய வேண்டுமா? இதில் உங்களுக்குத் தொடர் வண்டி போல பெண்ணியம், பின்நவீனத்துவம், உடலரசியல், கோட்பாடெல்லாம் பேசும் "என்னருமை" தோழர் ஜமாலன் வேறு. அவர் "யாரெ"ன்றே எனக்கு குழப்பம் வந்துவிட்டது. வினவு, கீற்று இன்னும் புற்றீசல் போல பதிவுலகில் பொறுக்கித் தின்றுக் கொழுத்துக் கொண்டிருக்கும் வைரஸ்களுக்கான உங்கள் விசுவாசத்திற்கு நீங்கள் விளக்கம் தந்தாக வேண்டும். பெண்கள் விசயத்தில் கொஞ்சம் அப்படி இப்படி, ஆனால் அவர்கள் மற்றவற்றில் நியாயமாகப் புரட்சி செய்துவிடுவார்கள் என்றெல்லாம் நியாயம் பேசினால் நீங்கள் பேசும் அரசியல், கோட்பாடு,நம்பும் எழுத்து எல்லாவற்றையும் கைவிட்டு விடுங்கள். சும்மா அழுகுணி ஆட்டம் எல்லாம் ஆடக்கூடாது.


என் கவிதை "அரசியல் துண்டுப் பிரசுரமாகவே" இருந்துவிட்டுப் போகட்டுமே?நான் பொதுப் புத்திக்கெதிரான குற்றம் செய்யவே எழுதுகிறேன், திரைப்படங்கள் படைக்கிறேன். நான் நம்பும் விசயங்களை செய்வதற்காக, என் தேர்வுகளுக்காக என் குடும்பம், சாதி,நட்பு, வர்க்கம், மானம் என்று என்ன இயலுமோ எல்லாவற்றையும் பலியிட்டுத் தான் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.


அறிவு மரபு பற்றிய உங்கள் பார்ப்பனீய வியாக்கியானங்களையெல்லாம் வேறு யாரிடமாவது வைத்துக் கொள்ளுங்கள். விளைவுகளை மட்டுமே நம்புபவள் நான். பாசாங்குகளிலிருந்து இலக்கியத்தை காப்பாற்றுவது முக்கியம் என்பது என் தீர்மானம்.


பிறப்பால் பார்ப்பனியர் என்றால் நான் எழுதுவது பார்ப்பனியப் பிரதியா என்று நீங்கள் எடுக்கும் பால பாடங்கள் ரொம்ப உளுத்துப் போனவை.கொஞ்சமும் கூச்சம் நாச்சம் இல்லாமல் பார்ப்பனிய குழுவூக்குறிச் சொற்களை இலக்கியப் பிரதிகளில் பயன்படுத்தவும் செய்துவிட்டு, அதற்கு வக்காலத்தும் வாங்கும் உங்கள் சொந்த சாதி அபிமானங்களால், இழக்கப் போவது நீங்கள் தான். வேறு யாருமல்ல.ஒரு பிரதியில், ஒரு ஆதிக்க சாதியில் பிறந்தவர் என்ற வகையில், எந்த அடையாளத்தையும் தன்னையறியாமல் கூட பதிந்து விடக் கூடாது என்று அதிகவனமாக இருப்பது தான் சரியான, நியாயமான அரசியல் நிலைப்பாடாக இருக்க முடியும். சொல்லில் என்ன இருக்கிறது? அப்புறம் பூணூலில் என்ன இருக்கிறது, அப்புறம் அக்கிரகாரத்தில் என்ன இருக்கிறது, இந்து மதத்தில் என்ன இருக்கிறது?என்றெல்லாம் சொல்லிக் கொண்டே போனால், மன்னித்துவிடவும். தோழமை, உரையாடல் எதுவும் உங்களிடம் சாத்தியமில்லை. உங்கள் புராதன வார்த்தைகளையெல்லாம் தாண்டி தமிழ் நவீனக் கவிதை வேறு இடத்திற்கு நகர்ந்துவிட்டது.நீங்கள் நலம் பேணும் சொற்களை வரிசைப்படுத்தினால் அதன் நுண்ணரசியல் உங்கள் அடையாள விடுபடலின் உண்மை நிலவரத்தை தோலுரிக்கும்.


தலித்திய அரசியல் எழுச்சிக்குப் பின்னால், எழுத வந்த பார்ப்பனரல்லாத பெண்ணெழுத்து மிகப் பெரிய ஒடுக்குமுறைக்கும், அதை மீறிய விவாதத்திற்கும் வழிவகுத்தது. இன்றளவும் அந்த கொந்தளிப்பு நீள்கிறது. தமிழ்க் கலாசார அசைவுகளில் இது மிக முக்கியமான சலனம். இதைப் புனைவு என்று நீங்கள் சொல்வதிலேயே உங்கள் ஆதிக்க கருத்தியல் நிலைப்பாடு வெட்ட வெளிச்சமாகிறது. என்னங்க ஒரு பத்து வருடமிருக்குமா? இதற்கே இப்படி காய்கிறீர்களே? ஆயிரமாயிரம் வருடமாக அறிவு மரபிலிருந்து ஒதுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தலித் சமூகங்கள் எப்படி காய்ந்திருப்பார்கள்?


விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான், என் குடும்பத்தில்,வெளியில் வந்து படிக்கும், வேலை செய்யும் முதல் தலைமுறைப் பெண்.எனக்கு சரியென்றுப் படுவதை செய்வேன். அது எழுத்தா? கலையா? பிரச்சாரமா? இல்லை வெறும் குப்பையா? எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். இயங்குவது மட்டுமே குறிக்கோள்.நான் ஒரு ரவுடி மாணவியாகவே இருந்துவிட்டுப் போகிறேனே? என்ன குடி முழுகிப் போகிறது.


புகைப்படங்கள் எடுத்துக் கொள்கிறேன். பியூட்டிப் பார்லருக்குப் போகிறேன், ஜீன்ஸ் போடுகிறேன், ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றுகிறேன். ஆமாம் இப்ப என்ன? இதற்கும் என் பிரதிகளுக்கும் என்ன தொடர்பு? (அது யாருங்க மினர்வா? வினவுக்கு புரட்சிப்பெண்கள் படையணி, கீற்று ரமேஷுக்கு அவர் மனைவியா? முன்ன பின்ன பார்த்ததில்லையே? என்ன செய்ய? இந்தப் பரிதாபகரமான பெண்களுக்கும் சேர்த்து தான் வேலை செய்ய வேண்டியிருக்கு)  இலக்கியத்திற்கான எந்த வாசிப்போ, உழைப்போ, தேடலோ இல்லாத இப்படிப்பட்ட அற்பப் பதர்களின் "பெண்ணிய" "இடதுசாரி", "பெரியாரிய" கட்டுரைகள் எல்லாம் உங்களுக்கும் ஜமாலனுக்கும் கேவலமான குப்பைகளாகத் தெரியாமல் போனது ஏன்? இதில் பண மோசடி புகார்கள் வேறு. என்னோடு படித்த 63 இன் ஜினியர்களும் உங்களை மாதிரி அமெரிக்காவில், மத்திய கிழக்கில் வேலை செய்து லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள். என்னை மாதிரி குடும்பத்தில் தரித்தரப் பட்டம், ஓடுகாலி பட்டம் வாங்கி வைத்துக் கொண்டு மாதாந்திர பில்களுக்கே சிங்கியடித்துக் கொண்டிருக்கவில்லை. இருத்தலுக்கே இங்கே லாட்டரி, இதில் கவிதை எழுதி, ஆவணப்படங்கள் எடுத்து யாராவது சொந்த வீடு, கல்யாண மண்டபம் கட்டியிருக்கிறார்களா என்ன? உங்கள் "தோழர்களிடம்" முகவரி யிருந்தால் கேட்டுச் சொல்லுங்க. புண்ணியமாப் போகும். தெரிஞ்சுக்கிறேன்.


வினவு வியாபாரிகள் ஆண்குறி வகைமாதிரிகளைக் கேட்டார்கள், நீங்கள் உடல்மொழி வகை மாதிரிகளைக் கேட்கிறீர்கள்! ஒரு கும்பலாகத் தான் கிளம்பியிருக்கிறீர்கள்.


என் இரண்டு கவிதைகளைப் பற்றி நீங்க கட்டுரை எழுதியவுடன் ஏதோ இலக்கிய உந்துதலில் எழுதுகிறீர்கள் என்று ஏமாந்து போன "நான்"(இங்கேயும் சுயமோகம் வந்து தொலைக்கிறதே?) நிச்சயம் நிறைய பேருக்குப் பாடமாக இருப்பேன்.உங்க பாணியில் "கவிதை என்று அறிவிக்கப் பட்டப் பிரதி" என்ன செய்ததோ இல்லையோ, எனக்கு நிறைய பேரை அடையாளம் காட்டிக் கொடுத்து விட்டது.


நான் பிளாக்கர் இல்லங்க. ஏதோ, பத்திரிகைகளில் வெளிவரும் என் படைப்புக்களை சேகரிக்கும் கிடங்காகத் தான் என் பிளாக் இயங்குகிறது. அதனால பதிவுலகம் பற்றி விரிவாக, எதுவும் தெரியாது.என் நண்பர்கள் இந்த லிங்கைப் பாரு, அந்த லிங்கைப் பாரு என்று அனுப்பி வைப்பதைப் படித்துப் பார்ப்பது தான். அப்படி கிராஸ் பண்ணவர் அய்யனார். தனிமையின் இசையோ , பாஷையோ என்னவோ ஒரு பிளாக் வைத்திருக்கிறார் பெருந்தேவி புண்ணியத்துல இந்த அய்யனார் கணக்கையும் முடித்துவிடலாம். இவனுங்களுக்கெல்லாம் தனியா கட்டுரை போட முடியாது. ஏதோ மார்க்ஸ், ஷோபா சக்தி இவர்களோடு சேர்ந்ததால் தான் எனக்கு அறிவு வந்துவிட்டது என்று எழுதுகிறீர்களாமே? அறிவு என்ன தொற்றுநோயா? பற்றிக் கொள்வதற்கு? மார்ச் 2009ல் நீங்கள் இவ்வளவு அழகா? அதுவா? இதுவா? ஆதர்சம் என்றெல்லாம் எழுதிய மெயில்கள் என் இன்பாக்ஸில் தான் இருக்கின்றன.


என்னோடு படித்தப் பசங்க, அவங்க பிட் போடுவதை நிராகரித்தால் கழிவறையில் போய் தப்பு தப்பா படம் போட்டு எழுதுவாங்க.. பரீட்சையில் மார்க் அதிகம் வாங்கிட்டா அதே சுவரில் ஆசிரியரோடு இணைத்து எழுதுவாங்க... போனால் போகிறது என்று சிரித்து வைத்தால், ஓடிப்போய் அவர்களோடேயே சம்மந்தப்படுத்தி எழுதி அல்ப சந்தோசம் பட்டுப்பாங்க. ஒன்று மட்டும் தெளிவாப் புரியுது. இந்தப் பதிவுலகமே இப்படிப்பட்ட கேடுகெட்ட, நோய் முற்றிய அயோக்கியப் பசங்க கும்மியடிக்கிற உலகமா இருக்கு. ஆளை விடுங்க.,வேற வேலைகளைப் பார்ப்போம்.

தொடர்புடைய சுட்டிகள்

 http://innapira.blogspot.com/2010/06/1_08.html
http://www.lumpini.in/

லீனா மணிமேகலை

Monday, April 19, 2010

இ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை

இ.ம.க போலீஸில் கொடுத்த புகாரின் ஃபேக்ஸ் பிரதி /த.மு.எ.க சங்கத்தின் கண்டன அறிக்கை



தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்


மாநிலக்குழு

28/21, வரதராஜபுரம் பிரதான சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600018

பத்திரிகைச் செய்தி


இந்து மக்கள் கட்சியினருக்கு தமுஎகச கண்டனம்

எழுத்தாளர் லீனா மணிமேகலையின் எழுத்துக்கள் ஆபாசமாக இருப்பதாகவும் சமூக ஒழுங்கைச் சீர்குலைப்பதாகவும் கூறி அவரைக் கைது செய்யுமாறும் அவரது எழுத்துக்களையும் சொத்துக்களையும் முடக்குமாறும் கோரி இந்து மக்கள் கட்சியினர் சென்னைக் காவல்துறை கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.அவரும் அதை ஏற்று சட்டப்பிரிவுக்கு கருத்துக் கேட்டு அனுப்பியுள்ளார்.

ஒருவருடைய எழுத்துக்களின் மீது மாற்றுக் கருத்துக்கள் விமர்சனங்கள் யாருக்கு வேண்டுமானாலும் இருக்கலாம்.அதை வெளிப்படுத்துகிற உரிமையும் எவருக்கும் உண்டு.ஆனால் அதற்காக போலீஸ் உதவியுடன் எழுத்தை எழுத்தாளரை முடக்குவதை முடக்க முயற்சிப்பதை தமுஎகச ஒருபோதும் ஏற்காது. இந்து மக்கள் கட்சியின் இந்த அத்துமீறலை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது. இப்புகாரை நிராகரிக்க வேண்டுமெனக் காவல்துறையைக் கேட்டுக்கொள்கிறோம்.


கலாச்சார போலீஸ் வேலையின் இன்னொரு வடிவமாக வாயளவில் இடது தீவிரவாதம் பேசுகிற ஒரு சிறு குழுவினர் இரவு நேரங்களில் சில எழுத்தாளர்களின் வீடுகளுக்குப் போய் அவர்களின் எழுத்தை முன்வைத்து எழுத்தாளரின் குடும்பத்தினரையும் அண்டை வீட்டாரையும் எழுப்பித் தொல்லை செய்வதும் கலாட்டா செய்து வருவதும் எந்த எல்லைக்கும் சென்று எழுதுவதும் தாக்குவதும் நடந்துள்ளது.எழுத்தாளர் லீனா விஷயத்திலும் அவர்கள் இவ்விதமாகச் செயல்பட்டுள்ளனர்.அதையும் தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.கலாச்சாரப் போலீஸ்காரர்களாக மாறிக் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக தொடுக்கப்படும் எல்லாவிதக் தாக்குதல்களுக்கும் எதிராக தமுஎகச உறுதியுடன் போராடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


எழுத்து சுதந்திரம் என்பது எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்கிற கட்டற்ற நிலை அல்ல. நாம் வாழும் சூழலைக் கணக்கில் கொண்ட சுதந்திரமே சரியானது என்கிற நிலைபாட்டில் நின்றே தமுஎகச இந்தக் கண்டனத்தைப் பதிவு செய்கிறது.

அருணன் ச.தமிழ்ச்செல்வன்

மாநிலத்தலைவர் பொதுச்செயலாளர்

Tuesday, April 13, 2010

என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை*

தொடர்ச்சியாக பெண்ணெழுத்தின் மீது கலாசார அடிப்படைவாதிகள் தாக்குதலை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைகளிலும், கூட்டங்களிலும், திரைப்படங்களிலும் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல் இணையதளங்களிலும் பரவியிருக்கின்றது. விமர்சனங்கள், வக்கிரமான கட்டுரைகள், அவதூறுகளைத் தாண்டி கலாசார அடிப்படைவாதிகளின் தாக்குதல் இப்போது போலீஸ், நீதிமன்றங்கள் வரையில் விரிவாக்கப்பட்டுள்ளன. இதன் சமீபத்திய நிகழ்வாக லீனாமணிமேகலையின் 'உலகின் அழகிய முதல் பெண்' கவிதைத் தொகுப்பையும், அவரின் வலைத்தளத்தையும் தடை செய்யுமாறு 'இந்து மக்கள் கட்சி' சென்னைக் காவற்துறை ஆணையரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். பெண்ணெழுத்துக்கு எதிரான ஒடுக்குமுறையாக மட்டும் இதை எளிமைப்படுத்தி பார்த்துவிட முடியாது. எதிர்காலத்தில் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதும் அனைத்து சக்திகள் மீதும் இவ்வாறான அச்சுறுத்தல்கள் நிகழும் அறிகுறிகள் நமக்குத் தென்படுகின்றன. இந்தக் கலாசார அடிப்படைவாதத்தையும், எழுத்துச் சுதந்திரத்தின் மீதான கண்காணிப்பையும் கண்டித்து நடைபெறும் கண்டன ஒன்றுகூடல்:



இடம் : ICSA அரங்கம், 107, பாந்தியன் சாலை, எழும்பூர் - 8

(எழும்பூர் மியூசியம் எதிரில்)

நாள் : 15.4.2010 வியாழக்கிழமை, மாலை 5 மணி

பங்கேற்பாளர்கள் :

அ. மார்க்ஸ், ச. தமிழ்ச்செல்வன், தேவபேரின்பன், வெளி ரங்கராஜன்,
சி. மோகன், கே.ஏ. குணசேகரன், கோ. சுகுமாரன், வ.ஐ.ச. ஜெயபாலன், ராஜன்குறை, இந்திரன், சமயவேல், இராமாநுஜம், ஆதவன் தீட்சண்யா, அன்பாதவன், யவனிகா ஸ்ரீராம், லதா ராமகிருஷ்ணன், பிரளயன், பா. வெங்கடேசன், ஓவியா, ரஜினி, அஜிதா, சங்கர்ராம சுப்ரமணியன், என்.டி. ராஜ்குமார், பசுமைக்குமார், கரிகாலன், மணிமுடி, லீனா மணிமேகலை, கம்பீரன், மு. சிவகுருநாதன், மணல்வீடு ஹரிக்கிருஷ்ணன், மோனிகா, மணிவண்ணன், கே.டி. காந்திராஜன், அய்யப்பமாதவன், பீர் முகம்மது, சிராஜுதீன், அசதா, அஜயன்பாலா, செல்மா பிரியதர்சன், நீலகண்டன், இசை, இளங்கோ கிருஷ்ணன், சுகுணா திவாகர், விஷ்ணுபுரம் சரவணன், பொன் வாசுதேவன், விசுவநாதன் கணேசன், யாழனி முனுசாமி, விஜய் மகேந்திரன், சந்திரா, பாக்யம் சங்கர், வசுமித்ரா, சிநேகிதன், சுபஸ்ரீ, மீனா, அமுதா, கவின்மலர், நிர்மலா கொற்றவை.

எழுத்து, கருத்து அடக்குமுறைக்கு எதிரான உங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய அனைவரும் வாருங்கள்.

தொடர்புக்கு :

கருத்துச் சுதந்திரத்தில் அக்கறையுள்ள எழுத்தாளர்கள்

3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை - 20

பேசி : 94441 20582


*கண்டன ஒன்றுகூடலுக்கான தலைப்பு ஈழத்துப் பெண் கவிஞர் பெண்ணியாவின் கவிதையிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது.

Thursday, April 8, 2010

சிட்டுக்குருவி

குறிப்பு -  புத்தகம் பேசுது - முதல் பிரேவசம் பகுதிக்காக எழுதப்பட்டது


என் முதல் பிரேவசம் என்பது என் பதினோரு வயதில், கோகுலம் என்ற குழந்தைகளுக்கான பத்திரிகையில் வெளிவந்த "சிட்டுக்குருவி" பற்றிய கவிதை தான். என் காலஞ்சென்ற தந்தை பேராசிரியர் இரா.இரகுபதி அப்போதெல்லாம் குமுதம், விகடன் கூட வாசிக்க விட மாட்டார். தாமரை, செம்மலர், கோகுலம், பூந்தளிர், ஆங்கிலத்தில் வரும் சோவியத் பத்திரிகைகள் தவிர மற்றவற்றிற்கெல்லாம், வீட்டில் தடை.நாங்கள் குடும்பமாக போவதென்றால் தாத்தா வெங்கடசாமியுடன்(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்ட செயலாளர்) கட்சியின் மாவட்ட கவுன்சில் போன்ற கூட்டங்களுக்கோ அல்லது அப்பாவுடன் கலை இலக்கியப் பெருமன்றத்தின் வருடாந்திர முகாம்களுக்கோ தான் செல்வோம். எனக்கு அந்த சமயங்களில் ஒரே கொண்டாட்டமாகிவிடும். தோழர் எம்.வி.எஸ்ஸின் சேர்ந்திசைப் பாடல்களில் கோரஸ் பாடுவதற்கும், தோழர் கே.ஏ.குணசேகரனின் நாட்டுப்புறப் பாடல்களில் தன்னானே போடுவதற்கும் எனக்கொரு வாய்ப்பு கிடைக்கும்.

பாடல்களோடு தான் கவிதைக்கான என் பரிச்சயம் தொடங்கியது. கர்நாடக இசையை முறைப்படி படித்திருந்தாலும், "அனுமதியோம், அனுமதியோம், நாட்டைத் துண்டாட அனுமதியோம்" என்ற சேர்ந்திசையிலும், "பாவாடை சட்டைக் கிழிஞ்சுப் போச்சுதே", "ஓலையக்கா கொண்டையில ஒரு கூட தாழம்பூ" என்ற தெம்மாங்கு பாடல்களிலும் தான் மொழி என் வசமாவதை உண்ர்ந்தேன். பரதத்தில் ஆடும் பதங்களிலும், வர்ணங்களிலும் சமஸ்கிருதத்தையும், தெலுங்கையும் அந்நியமாக உணர்ந்ததால்.எளிய தமிழில் அடவமைக்கப்பட்டிருந்த குறவஞ்சியையும், பாம்பு நடனத்தையும் மட்டும் விரும்பி ஆடுவேன்.

பள்ளிப் பருவங்களில் எதுகை, மோனை எல்லாம் போட்டு எளிய சொற்களில், பாடலுக்கான சந்தத்தோடு கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு. கான்வென்டில் படித்ததால்,ஆங்கில கிறிஸ்தவ கோரஸ்களை நிறைய கற்றுத் தருவார்கள். அதை தமிழ்ப்படுத்தி,அதிலிருக்கும் வார்த்தைகளையெல்லாம் புரட்சி, எழுச்சி என்று மாற்றிப் பாடி பார்த்து தீவிரமாக டைரியில் எழுதி வைப்பேன். கட்சி மேடைகளில் தலைவர்களின் உக்கிரமான பேச்சுக்களின் நடுவே எனக்கு கிடைக்கும் பாடல் வாய்ப்பில் ஒரு மக்கள் கவிஞராக என்னைக் கற்பனை செய்துக் கொண்டு சொந்த வரிகளுக்கு மெட்டுப் போட்டு போடுவேன். பல மணி நேரங்கள் தலைவர்கள் உரையாற்றுவதை என் பாடல் ஒரு சில நிமிடங்களிலேயே சாதித்துவிடும் என்றும், சமூக மாற்றத்திற்கு முதல் படியே எல்லா தோழர்களையும் சேர்ந்திசைக்க வைப்பது தான் என்றும் திட்டவட்டமாக நிம்பியிருந்த காலங்கள் அவை.கவிதைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் என்று எல்லாவற்றிலும் என் சொந்த வரிகளை எழுதும்போது,சொற்களால் சமூகத்தையே புரட்டிப் போட்டுவிடுகின்ற திமிருடன் ஒரு காவல்தெய்வத்தின் ஆணவத்தோடு திரிந்திருக்கிறேன்.

பதினாலு வயதில் காதல் வந்த போது தான் குழப்பமே வந்தது. டைரியில் நான் எழுதத் தொடங்கியிருந்த காதல் கவிதைகளை அப்பா உளவு பார்த்து கண்டித்தது என்னை கடுமையாக பாதித்தது. வாழ்த்து அட்டைகள், காதல் கடிதங்கள், பரிசுகள், இவற்றோடு கவிதைகளையும் பதுக்குவது பெரிய சாகசமாயிருந்தது."உன் கண்களால் நான் கொஞ்சம் தூங்கி கொள்கிறேன்", "நீ நலம், நான் அங்கு நலமா" போன்ற கவிதைகள் கவர்ந்த காலங்கள் அவை.எனக்கு வந்து சேரும் காதல் கவிதைகளில் சிறிது கவித்துவம் கூடி எழுதும் பசங்களுக்கு அதிகம் கரிசனம் காட்டுவது, ஒரு கவிதை டீச்சர் போல வரிகளைத் திருத்திக் கொடுப்பது என்று அட்டகாசமாய் காதலியை விட காதலை நேசிக்கும் விடலைப் பசங்களோடு என் கவிதைப் பிரயத்தனங்கள் வளர்ந்தது. கவிதைப் போட்டிகளில் நண்பர்களுக்கு எழுதிக் கொடுத்து பரிசு வாங்கித் தருவது, அதைக் கொண்டாடுவது என்று நட்புக்கும் கவிதை உதவியது.

குடும்பத்தின் கண்களிலிருந்து கவிதையை மறைக்க ஆரம்பித்ததில் கவிதை எனக்கு ரகசியங்களின் கிடங்காக மாறியது.பெண், சாதி, குடும்பம், வர்க்கம்,நம்பிக்கைகள்,இருப்பு என்று எல்லாவற்றையும் பற்றிய கேள்விகளும், தேடல்களும் தீவரமடைந்த போது, கவிதை எனக்கு நானே நடத்திக் கொண்ட உரையாடல் களமானது. பதிப்பிக்க வேண்டும், பத்திரிகைக்கு அனுப்ப வேண்டும், மேடைகளில் வாசிக்க வேண்டும் என்று எந்த நோக்கமும் இல்லாது என் உடல்தட்ப வெப்பத்திற்கேற்ப நீளும் அல்லது மறையும் நிழலாக கவிதை என்னைத் தொடர்ந்தது.நான் படித்த முதல் நாவல் தாய் தான் என்றாலும் நம்ம ஊர் படைப்பாளிகளைத் தேட தொடங்கினேன். ரமணிச்சந்திரன், சுஜாதா, பாலகுமாரனைத் தாண்டி ஜெயகாந்தனும், அம்பையும் வாசிக்கத் தொடங்கியிருந்தேன். சுபமங்களாவை புரிந்தும் புரியாமலும் மேலிருந்துக் கீழாக, கீழிருந்து மேலாக பல தடவை வாசித்துப் பழகுவேன்.

கல்லூரி நாட்களில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தோடு சேர்ந்து, கிராமங்கள் தோறும் வீதி நாடகங்களில் பங்காற்றியிருக்கிறேன். அப்போது நான் அறிந்துக் கொண்ட கிராமத்து சொலவடைகளும், நாட்டுப் பாடல்களும் நான் எந்த புத்தகத்திலும் படித்தறியாத அனுபவத்தையும் உணர்வையும் தந்தது. அப்பா நூலகத்தில் நான் பார்த்தறிந்த அகராதிகள், நிகண்டுகள் , அபிதான சிந்தாமணிகள் எதிலும் கற்றுக் கொள்ள முடியாத கிராமத்து பெரிசுகளின் சொற்களும் அர்த்தங்களும் மொழி, அழகியல்,பண்பாடு குறித்த புதிர்த்தனமான மனநிலையை தோற்றுவித்தன..ஆனால், பொறியியல் கல்லூரியில் படித்ததால், கவிதை ஒன்று தான் என்னை மொழியோடு,நான் வாழும் சமூகத்தோடு பிணைத்திருந்தது. எனக்கென்று ஒரு அரசியல் பார்வையையும் மொழிமூலமே பெற முடிந்தது. தொழில்படிப்பென்பதால், பாடங்களும் பயிற்சி வகுப்புகளும் கடுமையாக இருக்கும். ஆனாலும் அப்பாவின் நூலகங்களிலிருந்து உருவிய புதுமைப்பித்தனும், கி.ராஜநாராயணனும்,கு.அழகிரிசாமியும் என்னை சுண்டி இழுத்தார்கள்.வாசிப்பில் கதைகள் தான் அதிகமென்றாலும், தனியே நான் எழுதிப் பார்க்கையில் கவிதை மாதிரி ஒன்றைத்தான் என்னால் எழுத முடிந்தது.ஆனால்,நவீன கவிதை என்றால் என்ன என்ற அனா,ஆவன்னா தெரியாத காலத்தில் கூட நான் எழுதும் கவிதைகள் மிகவும் நாடகத்தனமாக இருக்கிறது என்ற எண்ணம் எனக்கிருந்தது. அதனால் யாரிடமும் நான் எழுதியதைக் காட்டுவதற்கு வெட் கமாகவும் தயக்கமாகவும் இருக்கும். கணினிகளோடும், எலக்டிரானிக் சிப்களோடும், மெஷின்களோடும் வாழப் போகும் எனக்கு கவிதை சாத்தியமாகுமா என்ற கேள்வியும் அவ்வப்போது என்னை ஒடுக்கிவிடும்.

இயக்குநர் பாரதிராஜா, கவிதைக்கான என் வேட்கையை அடையாளம் கண்டவர். அவரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது ஒவ்வொரு நாளும் அவர் மேஜையில் அன்று மலர்ந்தப் பூக்களும்,என்னுடைய கவிதை ஒன்றுமிருக்கும். அவர் அதைப் படித்துவிட்டு உயர்த்தும் புருவத்திலும், சுருக்கங்கள் நெளிய காட்டும் முகபாவத்திலும் என் அடுத்தடுத்த கவிதைக்கான முகவரி இருக்கும்.என் தந்தையின் கண்டிப்புக்கும், ஒழுக்க மதிப்பீடுகளுக்கும் அஞ்சி பதுங்கியிருந்த என் மொழி, இயக்குநரின் நேசத்திலும் உரையாடல்களிலும் பாராட்டுகளிலும் ஒரு காட்டாறு போல பாயத்தொடங்கியது.

ஆத்மநாம், நகுலன், இன்குலாப், வ.ஐ.ச ஜெயபாலன், கலாப்ரியா, சுகுமாரன், சேரன், சிவரமணி என்று தேடி தேடி வாசித்தேன்."தாமரை" என்னுடைய கவிதைகளை பிரசுரித்தது. கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநாட்டுக் கவியரங்கத்தில் முதல் தடவையாக கவிஞர் லீனா மணிமேகலை என்று அச்சிட்டு வந்த அழைப்பிதழை வெகு நாள் பாதுகாத்து வைத்திருந்தேன். கவிஞர் குட்டிரேவதியின் "பூனையைப் போல அலையும் வெளிச்சம்" படித்தபோதுதான் நானும் ஒரு தொகுப்பு வெளியிடுமளவு கவிதைகள் எழுத வேண்டும் என்று உந்துதல் வந்தது. மாலதி மைத்ரி, சல்மா, கிருஷாங்கனி,லதா ராம்கிருஷ்ணன் இவர்களையெல்லாம் படித்து என் கவிதைகளைப் பலவாறு சுயவிமர்சனம் செய்து கொண்டு, இன்னும் எழுதிப் பழகனும், தொகுப்பெல்லாம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.

ஜெரால்ட் தோழனான பிறகு, தமிழ் மாணவரான அவர், நான் எழுதுவதையெல்லாம் காட்டமாக விமர்சிப்பார். இலக்கியம், சினிமா, அரசியல், கலை என்று கன்னா பின்னாவென்று சுற்றித்திரிந்தபின் எழுது, அனுபவம் போதாது என்பார்.கணையாழி,தீராநதி, என்று எல்லா சிறுபத்திரிகைகளுக்கும் எழுதினேன். ஒரு தொகுப்பு வெளியிடுமளவுக்கு பிரசுரிக்கப்பட்ட கவிதைகள் சேர்ந்தபோதும் தயக்கம் தான். சரி, நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் சுகுமாரனுக்கு அனுப்பி பார்க்கலாம்.அவர் முன்னுரை அளித்தால் வெளியிடலாம் என்று தோன்றியது.கவிஞர் சுகுமாரன் "தமிழ்க் கவிதையில் கேட்கும் அசலானதும், தீவிரமானதுமான குரல்களில் லீனா மணிமேகலையின் குரலும் ஒன்று என்றும், சில ஆண்டுகளுக்கு முன் அவர் கணையாழியில் அவரெழுதிய "பெண் கவிதை மொழி, கணையாழி ஏப்ரல் 94" என்ற கட்டுரையைத் திரும்ப பெற்றுக் கொள்வதாகவும்" எழுதியது எனக்கு உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்தது. ஜெரால்டு தன் கல்லூரிக்காலங்களிலிருந்து கண்ட பதிப்பக கனவை கனவுப்பட்டறையாக உருவாக்கினார். என் "ஒற்றையிலையென" அதன் முதல் புத்தகமாக வெளியானது.அப்போது எனக்கு வயது 23.என் தந்தையிடம் காட்டவே முடியாத பிரதி.எனக்கு அவரோடு இருந்த நட்பு முரண் இன்னும் தீர்த்துக் கொள்ள முடியாத கணக்கு.

சினிமாவும், தொலைக்காட்சியும் பிரதான ஊடகங்களென நான் தெரிவு செய்து பணியாற்றத் தொடங்கியபோது சுளீரென்று உரைத்த உண்மை ஒன்று தான். கவிதை என்பது உண்மையில் நான் எழுதிப்பார்க்கும் வரிகள் மட்டும் அல்ல. கவிதை என்பது ஒரு மனநிலை.ஒன்றை கதையாக்கி விரிப்பதும், காட்சிகளாக்கி பார்ப்பதும் கவிமனம் தான். எந்த ஒரு படைப்பாளிக்கும் கவிமனம் தான் ஆரம்பப் புள்ளி. எந்த கலையனுபவமும் அடிப்படையில் கவிதானுபவம் தான். ஒரு சொல், ஒரு பிம்பம், பல சொற்கள் ஒரு பிம்பம், பல பிம்பங்கள் ஒரு சொல் என்று கலையும், உணர்வும், தொழில்நுட்பமுமாய் சினிமா எனக்கு கவிதையின் நீட்சியாய் புலப்பட்ட போது தெளிவு பிறந்தது.

இன்று வெகு தூரத்திற்கு வந்துவிட்டேன்.கவிதைகளைப் பற்றிய என் அரசியல் பார்வை தீர்க்கமடைந்திருக்கிறது. வன்முறையை மறுக்க, சகலவிதமான ஒடுக்குமுறையை எதிர்க்க,விடுதலையைக் கொண்டாட, உடலை-மனதை வியக்க, சமூக மதிப்பீடுகளை மீட்டுருவாக்கம் செய்ய,சுய விமர்சனம் செய்துக் கொள்ள, மாற்று அழகியலுக்கு களம் அமைக்க, பன்மையை நிறுவ என்று எழுத்தின் செயல்பாடுகளை கூர்மைபடுத்த விரும்புகிறேன்.என் கவிதை எதிர் கலாச்சார நடவடிக்கையாக மேலும் மேலும் தொழில்படும். எல்லா சட்டங்களையும் மீறும், வெளியேறும்,திளைக்கும். என் கலை வெட்டிவிட்ட பாதையில் ஒருபோதும் போகாது.

"உலகின் அழகிய முதல் பெண்" என்ற எனது இரண்டாவது தொகுப்பிற்கு சர்வதேச விருதும் கிடைத்திருக்கிறது, வக்கிரமான அவதூறு கட்டுரைகளும் நடந்திருக்கிறது ,போலீஸ் கேஸ், கட்சி வழக்குகளையும் இனி சந்திக்கும்.

ம.க.இ.க, இந்து மக்கள் கட்சி இன்னும் எங்கிருந்து எந்த தாக்குதல் வந்தாலும் என் படைப்பு ஒன்றே என்னிடமிருக்கும் முதலும், கடைசியுமான ஆயுதம்.



லீனா மணிமேகலை 25 . 03. 2010

Wednesday, March 31, 2010

மனிதனின் மொழி

(தணிக்கை செய்யப்படாத பிரதி)

கவிதை ஒன்றும் அழகுக் குறிப்புக் கிடையாது. வாசகருக்கு வாசிப்பு இன்பத்தை அளிப்பதைக் காட்டிலும் வாசகர்களின் கண்களில் அவர்களது சக மனிதனின் மனுஷியின் துயரத்தையும் ஆற்றாமையையும் இழிவையும் இரத்தத்தையும் எழுதிக்காட்டவே நான் விரும்புவேன். அங்கீகரிக்கப்பட்ட சொற்களால் மட்டுமே எழுதுவதற்குக் கவிதை அரசு அலுவலகக் குறிப்பல்ல. கவிதைக்கு புனிதச் சொற்கள் என்றோ விலக்கப்பட்ட சொற்கள் என்றோ விதிகள் ஏதும் கிடையாது. உண்மையின் தடத்தைப் பற்றியே நகரும் கவிதைக்குச் சட்டங்கள் குறித்து எந்த அச்சமும் கிடையாது.

அண்மையில், "உலகின் அழகிய முதல் பெண்" என்ற எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு ஆபாசங்களின் தொகுப்பாக இருக்கிறது, அதனால் அந்த புத்தகத்தையும், எனது வலைப்பதிவையும் தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியினர் போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன், ம. க. இ. க ஆதரவு இணையதளமொன்று அதே கவிதைகளுக்காக என்மீது ஆணாதிக்க வக்கிரத்தோடு அவதூறுகளைப் பரப்பியிருந்தது. அவர்கள் இந்துத்துவாவைக் கடுமையாக எதிர்ப்பவர்கள். பெண்ணுக்கான மரபுகளையும் கலாச்சாரங்களையும் காப்பாற்றி வைப்பதில் இந்துத்துவ எதிர்பாளர்களும் இந்துத்துவாக்காரர்களும் ஒரே புள்ளியில் சந்திப்பது தமிழகத்தில் திரும்பத் திரும்ப நிகழும் முரண்நகை வரலாறு.

எனது கவிதைத் தொகுப்பைத் தடைசெய்வது என்றால் முதலில் அவர்கள் ஆண்டாள் எழுதிய நாச்சியார் திருமொழியைத் தடைசெய்ய வேண்டும். ஆண்டாளைக் கடந்து நானோ, இதே வகையில் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்ட எனது சக பெண் கவிஞர்களோ காமத்தையும் வேட்கையையும் எழுதிவிடவில்லை. நமது கோயில் கோபுரங்கள், குளங்கள், தேர்களில் இருக்கிற சிற்பங்களையும், ஓவியங்களையும் கொஞ்சம் நின்று பார்த்தால், நமக்கு பக்தி வருகிறதோ இல்லையோ இங்கே கலையில் ஒழுக்கவியல் மதிப்பீடுகள் என்றும் எதுவும் இருந்திருக்கவில்லை என்பதாவது என்று புரியும். நமது பெண்கள் விலங்குகளுடன் புணரும் நிலையிலுள்ள சிற்பங்கள் சீரங்கம் கோவில் மண்டபத்திலேயே இருக்கின்றன.

காலங்காலமாக ஆண்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த இலக்கியத்தையும் மொழியையும் பெண்கள் கைப்பற்றும்போது ஆணாதிக்கம் அதிகாரமும் துடித்துப் போகிறது. அவள் தனது உடலையும் விருப்புகளையும் இச்சைகளையும் இலக்கியத்தில் பேசும்போது கலாச்சாரம் கெட்டுவிட்டதாக ஆண்கள் கொதிக்கிறார்கள். பெண் விடுதலை குடும்பத்தின் வன்முறை சுதந்திரக் காதல் ஒழுக்கத் தடைமீறல்கள் இவற்றையெல்லாம் வியக்கத்தக்க முறையில் காலத்தைத் தாண்டிச் சிந்தித்து அறிவித்த தந்தை பெரியாரின் மண்ணில் இன்று கவிதை இந்துத்துவ சக்திகளால் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. வெறுமனே புகார் மிரட்டல் என்று இதை நான் அலட்சியம் செய்ய மாட்டேன். இவ்வாறான கலாச்சார அடிப்படைவாதிகள் மிரட்டல்களில் தொடங்கிக் காலப்போக்கில் கொலைகளில் முடிப்பார்கள் என்பதே வரலாறு. மெல்ல வளரும் கலாச்சாரப் பாஸிசத்தின் தொடக்கப் புள்ளியாகவே நான் இதை அடையாளம் காண்கிறேன்.

இங்கே மட்டுமல்ல உலகம் முழுவதுமே விடுதலையை எழுதும் பெண்கள் எதிர்கொள்ளும் நிலை இது தான். அவதூறு, மிரட்டல், கைது, வன்முறை, கொலை, நாடுகடத்தல், இல்லாமல் ஆக்குதல்,ஃபத்வா, என்று அதிகாரத்தின் ஆயுதங்கள் பெண்கவிகள் மீது எறிந்த ஆயுதங்கள் ஒன்றல்ல, இரண்டல்ல.

"என்னுடைய பெயர்களுள் ஒன்று

அந்த மலை முகடுகளுக்கிடையே

ஒருநாள் சூரியனாக உதயமாகும்

பெருமழையில் நனைந்துப் போயிருக்கும் இருளுக்கும்

சுழல்வெள்ளத்தில் களைத்துப் போயிருக்கும் மீனுக்கும்

நம்பிக்கையின் நினைவுகளாய் அது ஒளிவீசும்"

என்று எழுதிய ஆஃப்கான் கவிஞர் நாடியா அஞ்சுமான் 25 வயதில் கொல்லப்பட்டார். ஏனென்றால,அவர் பெண்களின் விடுதலையை எழுதினார். நாடியா தாலிபான்களால் தடைசெய்யப்பட்ட அவரது கவிதைகளை ஆஃப்கானிஸ்தான் தெருக்களில் இரகசியமாகப் பாடிச் சென்றவர்.புர்காவுக்குள் சொற்களைப் பதுக்கி, அவற்றை விடுவிக்கும் ஒவ்வொரு முறையும் தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்த ஒரே குற்றத்திற்காக நாடியா நயவஞ்சகமாக "மார்க்கத்துக்கான கொலை" என்ற பெயரில் தன் கணவராலேயே கொல்லப்பட்டார். வாப்பா ! இத்தனை நபிகளுள்ளும் ஏன் ஒரு பெண் நபி இல்லை என்று கேட்ட G.H. ரசூலின் முக்காடணிந்த கவிதைச் சிறுமி இதை எழுதும்போது என் ஞாபகத்தில் வருகிறாள்.

"அவர்கள் சொல்வார்கள்

இதெல்லாம் மிகச்சாதாரணம் என்று

பெரிதாக அலட்டிக் கொள்ளாதே என்று

சிறிது பணிவாக நடந்துக் கொள் என்று

அழுகையை அடக்கிக் கொள் என்று

அவர்கள் சொல்வார்கள் தான், ஆனால்

நீ எழுந்து நிற்க வேண்டும்

தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்

மனதை உரத்துப் பேச வேண்டும்

சத்தம் கேட்க கேட்க

அவர்கள் சொல்வார்கள்

வெட்கம் இல்லாதவள் என்று

நீ அதைக் கேட்டு இன்னும் உரத்து சிரிக்க வேண்டும்

சத்தம் கேட்க கேட்க

மேலும் அவர்கள் சொல்வார்கள்

மானங்கெட்டவள் என்று

இன்னும் நீ கத்தி சிரிக்க வேண்டும்

மேலும்,மேலும் அவர்கள் சொல்வார்கள்

பரத்தை என்று

நீ "ஆம் நான் பரத்தை" என வேண்டும்

அவர்கள் அதிர்ச்சியடைவார்கள், நம்ப மறுப்பார்கள்

ஆண்கள் நீ வேறு எதுவும் சொல்லிவிடுவாயோ என்று அஞ்சுவார்கள்

பெண்கள் உன்னைப் போல் பரத்தையாக உள்ளூர விரும்புவார்கள்"

என்று எழுதிய தஸ்லிமா நஸ் ரீன் மருத்துவராக மட்டும் பணி செய்திருந்தால் சமூகம் கொண்டாடியிருக்கும். கவிதை எழுதியதால் அவரை நாட்டை விட்டு வெளியேறச் சொன்னது. ஆணாதிக்கம் அடித்தது, உதைத்தது. மதவாதம் அவர் தலைக்கு விலை நிர்ணயித்தது.ஒரு பெண்ணாக எனக்கு நாடில்லை,ஒரு பெண்ணாக எனக்கென்று ஒரு நாடு வேண்டாம், ஒரு பெண்ணாக இந்த உலகமே என் நாடு என்று தஸ்லிமா வாழ நிர்ப்பந்திக்கப்பட்டார். தஸ்லிமா தஞ்சம் என்று வந்தபோது மேற்கு வங்கத்தின் கம்யூனிஸ்ட் அரசு கூட அவரைக் கைவிட்டது.

"அர்த்தமற்ற நாள்களில்

வாழ்ந்து கொண்டிருக்கின்றேன்

அவலத்திலும் அச்சத்திலும்

உறைந்து போன நாள்கள்…..

காலைப் பொழுதுகளில்

பனியில் குளிக்கும் ரோஜாக்களை விட

பக்கத்தில் இளமொட்டு முகையவிழ்க்கும்

தொட்டாற் சிணுங்கியில்

கண்கள் மொய்க்கின்றன

இன்னுமெப்படி களையெடுப்பவன்

இதனைக் காணாது போனான்? "

என்று காத்திரமான கேள்விகளை கவிதைகளில் கேட்டதாலேயே செல்வி ஈழத்தில் விடுதலைப் புலிகளால் கைது செய்யப்பட்டு "இல்லாமல் ஆக்கப்பட்டார்".செல்வியின் இருப்பிடத்திலிருந்து செல்வியின் கையெழுத்துப் பிரதிகள், குறிப்புக்கள், கடிதங்கள், புத்தகங்கள் அனைத்துமே அவர்களால் எடுத்துச் செல்லப்பட்டது. தமிழ் மக்களின் விடுதலையை உத்தரவாதப் படுத்தப்போகும் ஒரு இயக்கத்தினுள் சுதந்திரம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பும் தார்மீகம் ஒரு கவிக்கு மறுக்கப்பட்டது.அரசு மட்டுமல்ல போராளிக் குழுக்களும் பெண்கள் "தன்னுணர்வை" பெறுவதை விரும்பவில்லை. இயக்கங்களிலும், போராட்டங்களிலும், புரட்சிகளிலும் பெண்கள் அதிக எண்ணிக்கையில் கலந்துக் கொண்ட போதிலும், ஆண்களின் பிண்ணிணைப்புகளாகவே செயல்பட அனுமதிக்கப்படிருக்கின்றனர். தலைமை, தலையீடு, சுயேச்சயான இருப்பு என்ற இடத்தில் நசுக்கப்பட்டே வந்திருக்கின்றனர்.

சர்வதேச கவிஞர்கள் மற்றும் நாவலாசிரியர்கள் கூட்டமைப்பு உலகப் புகழ்பெற்ற 'POETRY INTERNATIONAL AWARD என்ற கவிதைக்கான சர்வதேச விருதை கவிஞர் செல்வி கைது செய்யப்பட்டிருக்கும் போது, அவருக்கு வழங்கி கவுரவித்தது.

அந்த விருது வெளியீட்டு பிரசுரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது:

'மரணத்தையோ அல்லது சிறைவாசத்தையோ கவிஞர்கள் எதிர்கொண்ட போதும் அவர்கள் மனிதனது மொழியை பேசுகிறார்கள். கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டத்திற்கு உருக்கொடுக்கிறார்கள். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் அதற்கு போராடுவதற்கும் உலகம் தழுவிய முயற்சிகள் இருந்த போதிலும், மனிதனுடைய கௌரவத்தை நேர்மையாக பகிரங்கப்படுத்தும் குரல்களுக்கான அவமதிப்பும், கவிதைக்கான அவமதிப்பும் என்பது மனித வாழ்வுக்கேயான அவமதிப்பாக அநேகமாக வெளிப்படுகின்றது'.

இன்று எல்லா மொழிகளிலும், பண்பாடுகளிலும், எழுதிவரும் பெண்களின் கவிதைகள் கலாசாரம் என்ற நுகத்தடி கொண்டு மிக மோசமாக ஒடுக்கப்படுகின்றன. எதிர்ப்பை பற்றிய கவிதைகள் எதிர்ப்பை விட மேலோங்கி ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றன. அழிப்பிற்கிடையே மிஞ்சும் சொற்களில் ஒளிர்கிறது பெண் வரலாறு.

லீனா மணிமேகலை

(நாடியா, தஸ்லிமா கவிதைகள் மொழிபெயர்ப்பு - லீனா மணிமேகலை.குமுதத்தில் எடிட் செய்துவிட்டார்கள்.)

இன்றைய சூழ்நிலையில் இந்த கட்டுரையை எழுதும் வாய்ப்பளித்த தளவாய் சுந்தரத்திற்கும், விட்டேத்தியாய் இருந்த என்னை சதா பேசி பேசி எழுத வைத்த ஜெரால்டிற்கும், எழுதியதை வாசித்து ஆலோசனைகள் சொன்ன ஷோபா சக்திக்கும் நன்றிகள்

நன்றி குமுதம்(7.4.2010)