Sunday, October 19, 2014

அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!


நன்றி ரீ சிவக்குமார், ஆனந்த விகடன் 


("அந்த நாள்" தொடர் )

15.07.2004 - மணிப்பூர் அன்னியர்களின் நிர்வாணப்போராட்டம் 


அந்த நெருப்பின் வயது பத்தாண்டுகள்!

15.07.2004 - மணிப்பூர் வரலாற்றில் மறக்கமுடியாத நாள். அதிகாரத்தின் வன்முறைக்கு எதிராகத் தங்கள் உடலை ஆயுதமாக்க முடியும் என்று 12 தாய்மார்கள் நிரூபித்த நாள். தங்கள் தாய் நிலத்தை ஆக்கிரமித்த இந்திய ராணுவத்தின் முகத்தில் நிர்வாணத்தை  விசிறியடித்தார்கள் அந்தப் பெண்கள். அதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் 2004, ஜூலை 11 அன்று 17வது அசாம் ரைஃபிள்ஸ் ராணுவப்படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்ஜம் மனோரமா என்ற 34 வயதான இளம்பெண்ணின் வீட்டுக்குள் அடாவடியாக நுழைந்தார்கள். ’ராணுவத்தை எதிர்த்துப் போராடும் ஆயுதக்குழுக்களுக்கும் மனோரமாவுக்கும் தொடர்பு இருக்கிறது’ என்பது ராணுவத்தின் குற்றச்சாட்டு. மனோரமாவை கட்டிலில் இருந்து கீழே இழுத்துத் தள்ளினார்கள்.  வீட்டில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்தார்கள். தாய் மற்றும் சகோதரர்கள் முன்னிலையில் மனோரமாவைத் தாக்கினார்கள்.  அதற்குப் பிறகும்,  ரத்தச்சுவை கண்ட ராணுவத்தினர் மனோரமாவை விசாரிக்கவேண்டும் என்று அழைத்து சென்றனர். அன்று மாலை, அரைகுறை ஆடையுடன், காயங்கள் சுமந்தபடி, பலரால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டபின் கொலை செய்யப்பட்ட  மனோரமாவின் உடல் வீதியோரம் கிடந்தது. கொதித்துப்போன மணிப்பூர் போராட்டத்தில் இறங்கியது. அதுதான் அந்தத் தாய்மார்களையும்  போராட்டம் நடத்தும் முடிவை எடுக்கவைத்தது. அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் தங்கியிருந்த காங்களா கோட்டையின் இரும்புக் கதவுகளுக்கு முன்பு 12 தாய்மார்கள் திரண்டனர். திடீரென்று   தங்கள் ஆடைகளைக் களைந்தவர்கள், " இந்திய ராணுவமே,  உனக்குத் தேவை பெண்களின் உடல்தானே? இதோ எடுத்துக்கொள், எங்களை மானபங்கப்படுத்து! எங்கள் மகள்களை விட்டுவிடு"  என்ற பதாகையைக்  கையில் பிடித்தவாறு நிர்வாணமாக நின்றனர். அதிர்ச்சியில் உறைந்த ராணுவமும், போலீசும் குனிந்த தலை நிமிராமல் அவர்களின் மீது போர்வைகளைப் போர்த்தி கைது செய்தது. போராட்டம் நடந்தது என்னவோ சிலமணித்துளிகள்தான். ஆனால், அந்த  நெருப்பின் கங்கு இன்னும் கனன்றுகொண்டிருக்கிறது. 


சரியாகப் பத்து வருடங்கள் கடந்தும், மனோரமாவின்  கொலையாளிகளுக்கும் தண்டனை கிடைக்கவில்லை, தொடர்ந்து மணிப்பூரின் பெண்களை பாலியல் வல்லுறவு செய்வதற்கான அதிகாரத்தை வழங்கிக் கொண்டிருக்கும் அஃப்ஸ்பா( AFSPA) என்றழைக்கப்படும் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டமும் நீக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் தனிநபர்களாலும் அதிகார நிறுவனங்களாலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை ‘ரேப் நேஷன்’(Rape Nation) என்ற பெயரில் ஆவணப்படமாக எடுத்துக்கொண்டிருக்கும் கவிஞர் லீனா மணிமேகலை நிர்வாணப் போராட்டத்தில் பங்கேற்ற தாய்மார்களை அதே காங்களா கேட்டின் முன் வரவழைத்து அவர்களின் நினைவுகளைப் படமாக்கியுள்ளார். 

’காங்க்ளா வாயில் நிர்வாணப் போராட்டம் நடத்திய 12 தாய்மார்களில் ஒருவரான லியோடெம் இபெதாம்பி இறந்துவிட்டார். மற்றவர்களிடம் பேசினேன். சிலர் வயது காரணமாகவும் தொடர்ச்சியான செயல்பாடுகள் காரணமாகவும் முதுமையிலும் நோய்வாய்ப்பட்டும் இருந்தனர். ஆயினும் அவர்களது குடும்பத்தார் வீல் சேரிலும் சிறப்பு  வாகனங்களிலும் கைத்தாங்கலாக அழைத்து வந்திருந்தனர்.  எந்த இடத்தில் அறவுணர்வும் ஆவேசமும் ததும்ப போராட்டம் நடத்தினார்களோ அதே காங்களா வாயிலில் பத்து வருடங்களுக்குப் பின் குழுமிய அவர்கள், உணர்வு மேலோங்கக் கதறி  விட்டனர். பூக்கள், ரூபாய் நோட்டுகள், மெழுகுவர்த்திகள் ஆகியவற்றை வைத்து சில நொடிகளில் காங்களா கேட்டை வழிபாட்டுத் தலமாய் மாற்றிவிட்டார்கள். தங்கள் மீது சன்னதம் வந்து போராடச் சொன்னது தங்கள் மூதாதையர்கள் தான் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர். அதனாலேயே அந்தப் போராட்டக் களம் அவர்களுக்கு வழிபாட்டிடமாக மாறியதில் ஆச்சர்யமில்லை. ஒவ்வொருவரும் தங்கள் பேட்டியில்  மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொன்ன கோரிக்கைகள் *அஃ ப்ஸ்பா(AFSPA) என்றழைக்கப்படும் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவேண்டும்,* மணிப்பூரில் நிரந்தரமாகத் தங்கியிருக்கும்   ராணுவம் விலக்கிக்கொள்ளப்படவேண்டும்’ என்பவை தான். தங்கள் மண்ணைச் சேர்ந்த பெண்கள் சுதந்திரத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ வேண்டுமென்றால் ராணுவத் தலையீடு இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களின் தொடர்ந்த  நிலைப்பாடு. "எங்கள் மகள்களை ஆடையில்லாமல் தெருவில் இறந்த உடலாய் பார்த்தபின் எங்களுக்கு இழப்பதற்கு எதுவுமிருக்கிறதா என்ன? இனி பிறக்கப் போகும் எங்கள் மகள்களின் மானத்திற்கு உத்தரவாதம் என்ன?" என்ற கேள்விகளே இந்தப்போராட்டத்திற்கு அவர்கள் ஒவ்வொருவரையும் தூண்டியுள்ளன. போராட்டத்தின்  விளைவாக அஸ்ஸாம் ரைஃபிள்ஸ்  அகற்றப்பட்டு காங்களா கேட் வளாகம் பூங்காவாக மாற்றப்பட்டு விட்டது. ஆனாலும் மணிப்பூரின் பிற பகுதிகளில் இன்னும் ராணுவம் நிலைகொண்டிருக்கிறது. அதையும் முற்றாக நீக்கவேண்டும் என்பது அந்தப் பெண்களின் கோரிக்கை. மேலும் கொலைகாரச் சட்டம் அஃ ப்ஸ்பா(AFSPA) நீக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்று  அந்தத் தாய்மார்கள் இணைந்து ‘இமா(தாய்) மூவ்மெண்ட்’ என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். தொடர்ச்சியான சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடர்ந்து நடந்துவரும் உள்நாட்டுப் போரால் கொல்லப்பட்டவர்களில், காணாமல் போனவர்களில், ஆயுதப் போராட்டத்தில் இணைந்ததில்  ஆண்களின் எண்ணிக்கை அதிகம். பெண் தலைமையில் தான் மணிப்பூரின் பெரும்பாலான குடும்பங்கள் நடக்கின்றன. மணிப்பூரின் அடையாளமாக மாறிப்போன "இமா(அன்னை) மார்க்கெட்’ அதற்கொரு சாட்சி. இயல்பாகவே மணிப்பூர் மக்களின் போராட்டத்தில் பெருமளவு பெண்கள் பங்கெடுப்பதன் காரணத்திற்கான அடிப்படையும்  இது தான். . 

இமா இயக்கத்தின் தலைமையில் நடந்த மனோரமாவின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலிக்கூட்டத்தையும் படமாக்கினேன். அந்த நிகழ்ச்சிக்கு மனோரமாவின் அம்மா தங்ஜம் குமன்லேய் வந்திருந்தார். அவர் கையில் மலர்கள்  இருந்தன. அது மணிப்பூரில் பிரசித்த பெற்ற லெய்ஹோ மலர். அவை மனோராமாவால் நடப்பட்ட செடியில் பூத்த பூக்களாம். அதை சொல்லி வெடித்துக் கதறியழுதார் அந்தத் தாய். மேற்கொண்டு எதையும் பேசும் நிலையில் அவர் இல்லை.  பிறகு, ராணுவத்தின் நெருக்கடிகளுக்கு இடையில் இரோம் சர்மிளாவை  சிறைச்சாலை மருத்துவமனையில் சந்தித்தேன். ஒடிசலான உருவம். நாமறிந்த தேவதைக் கதைகளில் இருந்து வழி தவறி வந்த தேவதையைப் போல்தான் சர்மிளா இருந்தார். கட்டிலின் ஒருபக்கம் முழுக்க பொம்மைகள் அடுக்கப்பட்டிருந்தன. மறுபக்கம் உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் பரிசாக வந்து குவிந்திருந்த புத்தகங்கள். மொத்தம் 20 நிமிடங்கள்தான் ஆயுதமேந்திய ராணுவ வீரர்கள் எங்களுக்கு தந்த அவகாசம் . சன்னமான குரலில், ஒவ்வொரு வார்த்தைகளுக்கும் இடையில் நீண்ட   இடைவெளிகளுடன் பேசினார். உணவும் அருந்துவதில்லை; தண்ணீரும் அருந்துவதில்லை. எச்சிலைக்கூட விழுங்கக்கூடாது என்று அவ்வப்போது பஞ்சைக்கொண்டு உதடுகளைத் துடைத்துக் கொள்கிறார். அவரது மூக்கின்வழியாக 13 செ.மீ. குழாயை நுழைத்து, உணவைத் திணித்துவருகிறது மணிப்பூர் அரசு. உண்மையில் அது வெறுமனே பைப் இல்லை, 13 செ.மீ அரசாங்கம்தான்” என்கிறார் லீனா மணிமேகலை.

1947க்கு முன்புவரை மணிப்பூர் சுதேச சமஸ்தானமாக இருந்தது. 1949ஆம் ஆண்டு மணிப்பூரின் அரசர் புதசந்திரா மணிப்பூரை இந்தியாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஆனால் மணிப்பூர் மக்களில் பெரும்பாலானவர்கள் இந்தக் கட்டாய இணைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. மணிப்பூர் சுயாட்சி பெற்ற சுதந்திரபூமியாக இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். அரசர் புதசந்திராவே மிரட்டப்பட்டுத்தான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்றும் சொல்லப்படுகிறது. மணிப்பூர் விடுதலை அடைய வேண்டும் என்று அமைதிவழியில் ஆரம்பித்த போராட்டங்கள். ஈழம் தொடங்கி உலகின் பல பகுதிகளில் நடந்ததைப் போல ஆயுதப்போராட்டத்தில் முடிந்தது. பல்வேறு ஆயுதக்குழுக்கள் மணிப்பூரில் ஆயுதப்போராட்டத்தை முன்னெடுத்தன. இந்தப் போராட்டங்களை ஒடுக்குவதற்காகவும் மணிப்பூரில் ‘அமைதி’யை நிலைநாட்டுகிறோம் என்ற பெயரிலும் ராணுவம் மணிப்பூரில் குவிக்கப்பட்டது.   மக்கள் திரும்பும் திசையெங்கும் ராணுவம். செக்போஸ்ட்கள், சோதனைகள். பல   இடங்களில் ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்தன. உலகின் எல்லா இடங்களிலும் ராணுவம் என்ன செய்யுமோ, மணிப்பூரிலும் ராணுவம் அதையே செய்தது,   தாங்கள் சந்தேகப்படுபவர்களை எல்லாம் விசாரிப்பது என்ற பெயரில் வன்முறையை ஏவிவிடுவது, பெண்கள் என்றால் கூடுதலாகப் பாலியல் வன்முறையை ஏவிவிடுவது   என்று அத்துமீறலைத் தொடர்ந்தது. இதற்கு ராணுவத்துக்கு உதவியாக இருந்தது தான் ஆயுதப்படையினரின் சிறப்பு அதிகாரச் சட்டம் AFSPA . இந்தச் சட்டத்தின்படி கைது வாரண்ட் இல்லாமல் யாரையும் ராணுவம்     கைது செய்யலாம், சிட்டுக்குருவிகளைப் போல சுட்டுக்கொல்லலாம். உண்மையில் இந்தக் கொடுமையான சட்டம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வெள்ளைக்காரர்களால் கொண்டுவரப்பட்ட சட்டம்.‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம். வெள்ளையனே வெளியேறியபிறகும் இந்த சட்டம் வெளியேறவில்லை. 

இந்த சட்டத்தை நீக்க சொல்லி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும் அதன்  உச்சகட்டம்  2000ம் ஆண்டு தொடங்கியது. இம்பாலுக்கு அருகில் உள்ள மலோம் என்னும் கிராமத்தில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பத்து பேரை பாதுகாப்புப் படையினர் எந்தவித முன்னறிவிப்பும் கொடுக்காமல் சுட்டுக்கொன்றார்கள். ராணுவத்துக்குக் கொல்வதற்கு ஆட்கள் தேவையே தவிர காரணங்கள் தேவையில்லை. அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்துதான் இரோம் சர்மிளா தன் போராட்டத்தைத் தொடங்கினார். மைலமா விருது, ஆசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வாழ்நாள் சாதனை விருது என பல விருதுகள் சர்மிளாவைத் தேடி வந்துவிட்டன. ஆனால் அவரது போராட்டத்துக்கான தீர்வு மட்டும் கண்ணுக்கெட்டாத தூரத்தில் ஓர் எரிநட்சத்திரத்தைப் போல கண்சிமிட்டிக்கொண்டிருக்கிறது.

”இந்தியாவை ஆக்கிரமிக்கும் நாடாகத்தான் மணிப்பூர் மக்கள் பார்க்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்தி மொழி என்றாலே அதை நெருடலோடும் அந்நியத்தோடும் பார்க்கிறார்கள். தென்னிந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் என்றால் தனிப் பிரியத்தோடும் மரியாதையோடும் நடத்துகிறார்கள். நம்முடைய இந்தி எதிர்ப்பு போராட்டம் அங்கு பிரசித்தி. ஈழப்பிரச்னை குறித்த ‘செங்கடல்’ படத்தை மணிப்பூரில் திரையிட்டுக் காண்பித்தேன். பொதுவாக தமிழர்கள் அல்லாத மற்றவர்களுக்கு  ஈழப்பிரச்னை குறித்து விரிவாக விளக்கவேண்டும். ஆனால் மணிப்பூர் மக்களுக்கு ஈழப்பிரச்னை குறித்து ஓரளவு புரிதல் இருக்கிறது. விடுதலைப்புலிகளுக்கு அங்கிருக்கும் ஆயுதக்குழுக்களோடு நெருக்கம் இருந்ததாலும், தனிநாடு போராட்டங்களைக் குறித்த சகோதரத்துவப் புரிதல் இருப்பதாலும் ஈழப்பிரச்னை குறித்து அவர்கள் அறிந்திருக்கிறார்கள் என்று சொல்லலாம்.  மணிப்பூர் மக்களில் கணிசமான பேர் இப்போது தமிழகத்தில் வந்து வேலைபார்ப்பதற்கும்  வட இந்தியாவின் மீது அவர்களிருக்கும் ஆதார வெறுப்பும் காரணம்” என்று தன் நேரடி அனுபவங்களைப் பகிர்கிறார்  லீனா.

2013ல் .ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி ரஷீதா மன்ச்சூ மனோரமாவின் தாயைச் சந்தித்துப் பேசினார். மனோரமாவின் வீட்டை விட்டு வெளியில் வந்த அவர், ஊடகங்களிடம் கதறியழுதார். ஆனாலும் இந்தக் கதறல்களையும் அலறல்களையும் மத்திய அரசோ ராணுவமோ ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. இரோம் சர்மிளா தன் போராட்டத்தை ஆரம்பித்து 14 ஆண்டுகள் ஆகின்றன. மனோரமா சிதைக்கப்பட்டு 10 ஆண்டுகள் முடிகின்றன. இதற்கெல்லாம் கோரமான மௌனத்தையே இந்திய "ஜனநாயக" அரசாங்கம் தன் பதிலாக தந்துக்கொண்டிருக்கிறது.

"இனப்படுகொலை, ராணுவ அத்துமீறல், சாதிக்கலவரம், மத மோதல்கள் என வன்முறை நிகழும் இடங்களில் எல்லாம் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பாலியல் பலாத்காரம் என்பது வெறுமனே உடல் சார்ந்த தினவு மட்டுமில்லை. தாங்கள் வெற்றிபெற்றுவிட்டதை, தங்கள் அதிகாரம் நிலைநாட்டப்பட்டதை எழுதுவதற்கான இடமாகத்தான் பெண்ணுடல் பயன்படுத்தப்படுகிறது. அப்படி அத்துமீறும் ராணுவம் மணிப்பூரிலும் பெண்களைப் பாலியல்ரீதியாகச் சீண்டுவதும் வல்லுறவுக்கு உள்ளாக்குவதும் தொடர்கதை. அதன் ஓர் அத்தியாயமே மனோரமா சிதைக்கப்பட்ட சம்பவம். எந்தப் பெண்ணுடலை ஒடுக்குமுறைக்கான களமாக ஆக்கினார்களோ, அதே பெண்ணுடலைப் போராட்டத்திற்கான கருவியாக மாற்றமுடியும் என்று நிரூபித்த போராட்டம்தான் மணிப்பூர் பெண்கள் நிர்வாணப் போராட்டம். சாதி, இன, வர்க்க வேறுபாடுகள் தாண்டி இந்திய இறையாண்மையும்  பெண்களின் மானத்தையும், உடலையும் காவு கேட்கிறது. இந்த  நீதி செத்த நாட்டில் நாங்கள் வாழ மாட்டோம் என்று எல்லாப் பெண்களும் முடிவெடுத்துவிட்டால் என்ன செய்யும் இந்த அரசாங்கம்?‘’ என்ற லீனாவின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லிவிட முடியும்?

"தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” என்ற வாக்கியத்தை ஒரு மந்திர உச்சாடனம் போல் அடிக்கடி உச்சரிக்கிறோம். ஆனால் ஆளும் வர்க்கமும் அதிகார நிறுவனங்களும் அந்த வாக்கியத்தை ஏளனச் சிரிப்புடன் கடந்துபோகின்றன.*******************************************************************************************************