Saturday, January 18, 2014

மாலதி மைத்ரியின் பன்மெய் கட்டுரை? - எதிர்வினை என்ற இற்றுப்போன சூயிங்கம்!மாலதியின் கட்டுரைக்கு எதிர்வினையாற்றுவது, அவரிடம் ஏராளமாக இருக்கும் வன்மத்தையும், காழ்ப்பையும், பொறாமையையும், சூயிங்கம்மை கசப்பு வெளியேறும் வரை மெல்லுவது போன்ற அனுபவம் தான்.

இந்த கட்டுரையைப் பொருத்தவரை அவருடைய ஆண்டை, அடிமை பிரயோகங்கள், விளக்கங்கள் சுத்த பேத்தல். பிறப்பாலே ஒருவர் போராளியாகவிட முடியும் என்று எழுதுவது, பிறப்பாலே ஒருவர் "பிராமணன்" என்று நம்புவதற்கு நிகரானது. மனுதர்மத்தை நான் மூர்க்கமாக மறுப்பவள். 

தேஜஸ்வினி படம் குறித்த அவர் தர்க்கங்கள், தான்  வேலை செய்த தன்னார்வ நிறுவனங்கள், கார்பரேட் சி.எஸ்.ஆர் பிராஜக்ட் எல்லாம் எவ்வளவு உத்தமம் தெரியுமா? டாட்டா அளவுக்கு மோசமில்லை என்கிற ரேஞ்சில் தான் இருக்கிறது. சுயாதீன சினிமா வட்டாரங்களில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. கூலி படப்பிடிப்பா? இண்டிபெண்டெண்ட் படப்பிடிப்பா? என்று. தொலைபேசியில் என்ன ஷூட்டிங் என்று கேட்டுக்கொள்ளும்போது, அந்த குறிச்சொற்களை பயன்படுத்துவோம். கூலிக்கு வேலை செய்து எங்களுக்கு பிடித்த சினிமாவை அதன் சேமிப்பில் எடுப்பது என்பதில் எனக்கு எந்த குற்ற உணர்ச்சியும் இல்லை. அதை யாரும் ஏற்படுத்திவிடவும் முடியாது. எத்தனை காலச்சுவடு, எத்தனை வினவு, எத்தனை மாலதி மைத்ரிகள் வந்து தூய்மைவாதம் பேசினாலும் இது தான் யதார்த்தம். சத்யஜித் ரேவே விளம்பரப் படங்கள் எடுத்து தான் தன் அன்றாட செலவுகளை பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஒரு கடைந்தெடுத்த பார்ப்பனீய கார்பரேட் காலச்சுவடு கண்ணனால் அறிமுகப்படுத்தப்பட்டதை நியாயப்படுத்தும் மாலதியின் தூய்மைவாதம் ஒரு அழுகினி ஜோக்.

ஈழத்தமிழர் தோழமைக் குரல் குறித்த அபாண்டங்களுக்கு லீனா மணிமேகலை மைனஸ் 99 பேர் தான் பதில் சொல்ல வேண்டும். என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், படைப்பாளிகள், மாணவர்கள், மீனவர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை போராளிகள் என்று எல்லோரையும் ஏதோ நான் அழைத்து சென்ற செம்மறி ஆடுகள் போல சித்தரித்திருப்பத்தை என்னால் கண்டிக்க மட்டுமே முடியும். நெட்டும் கையுமாக இருந்தேன் என்றால், எனக்கு தரப்பட்ட வேலை மீடியா ஒருங்கிணைப்பு என்பதால் அதை முடிந்தவரை செய்தேன். ஏன் கொடுத்த வேலையை செய்யவில்லை என்று கேட்டால் பதில் சொல்லலாம். ஏன் செய்தாய் என்றால் அதற்கு எப்படி பதில் சொல்வது? புகைப்படங்களை கவிஞர் நரன் எடுத்தார் என்பது சரி. அதில் ஜெரால்ட் போட்டோ எடுத்தார் என்ற வாக்கியம் ஏன் வருகிறது. அவருக்கும்  ஈழத்தமிழர் தோழமைக் குரலுக்கும் என்ன சம்மந்தம். அவர் தனிப்பட்ட முறையில் என் நலன் கருதி, ஒரு நாள் டில்லி வந்து என்னுடன் துணைக்கு நின்றுவிட்டு சென்றார். அதில் மாலதிக்கு என்ன பிரச்சினை? திடீரென எந்தப் பொருத்தமும் இல்லாமல் ஷோபா சக்தியின் பெயரும் கட்டுரையில் வருகிறது. நம்பகத்தன்மைக்காக வேறு ஏதாவது தந்திரங்களை மாலதி முயற்சி செய்யலாம். மற்றபடி இந்த பெயர்களைப்  பயன்படுத்தும் முயற்சிகளில் படுதொல்வியடைகிறார். என் போராட்ட உணர்வை பற்றி பேசும் மாலதி, தமிழின் மூத்த படைப்பாளிகளாக அறியப்பட்ட தானும், பிரேமும் சபையில் நடந்துக்கொண்டதையும், மாலதி அழைத்து வந்த மீனவப் பெண்களே சந்தி சிரித்ததையும் நினைவுப்படுத்தி கொள்வது நல்லது. நினைவில் இல்லையென்றால், அதையும் தனியாக கட்டுரையாக எழுதலாம். என்ன எழுதுவதற்கு கைகள் கொஞ்சம் கூசும். பரவாயில்லை. தேரை இழுத்து தெருவில் விட்டபின் அதை நகர்த்த தானே வேண்டும்.

ஈழத்தமிழர் தோழமைக் குரலின் நிதிக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. இயக்கத்தின் பொருளாளர் சுகிர்தராணி. பொருளாளர் அறிக்கையை கொடுக்கவில்லை ஆதலால் அவர் ஆட்டையைப் போட்டுவிட்டார் என்று நான் எழுதப் போவதில்லை. ஏனெனில், சென்னை திரும்பும்போது ரயிலில் வாங்கிவந்த சாப்பாடு ஊசிப்போக, யாரிடமும் காசில்லாமல், வழியில் ஆந்திராவில் இருந்த நண்பர்களிடம் சாப்பாடு பார்சல்கள் வாங்கி வரச் சொல்லி சாப்பிட்ட நிலைமையில் தான் எல்லோரும் இருந்தோம். திரும்பும் போது, மாலதி எங்களுடன் வராமல், விமானத்தில் சென்னைக்கு திரும்பியதால், அவருக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

செங்கடல் பிரச்சினைக்கு வருவோம். காலச்சுவடு, சுகிர்தராணி, மாலதி மைத்ரி மூவரும் ஒரு குரலில் சொல்வதென்ன வென்றால், செங்கடலில் பயன்படுத்தப்பட்ட அந்த 30 நொடி போராட்ட ஃ புட்டெஜுக்காகத் (Footage) நடத்தப்பட்ட படப்பிடிப்பு தான் ஈழத்தமிழர் தோழமைக் குரல். சரி, அபத்த இலக்கியத்திற்கு எப்போதும் ஒரு இடமுண்டு தானே. அந்த வகையில், முத்துக்குமரன் தீக்குளித்தது, கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது, ஜெயலலிதா ஈழத்தாயானது, சீமான் உள்ளிட்ட திரைப்பட கலைஞர்கள் போராட்டம், முள்ளிவாய்க்காலில் குண்டுகள் வீசப்பட்டது, இனப்படுகொலை காட்சிகள், பி.பி,.சியின் போர்ச்செய்திகள் . சிதம்பரத்தை பத்திரிக்கையாளர் செருப்பால் அடித்தது, நெடுமாறன்-நல்லக்கண்ணு- வை கோ - என்று தலைவர்களின் முழக்கங்கள், அந்த காலக் கட்டத்தில் தடைசெய்யப்பட்ட சேனல் ஃபோர் வெளியிட்ட சிங்கள படையினர், நிர்வாணமாக கைகள் கட்டப்பட்ட நிலையில் புலிகளை சுட்ட மொபைல் துண்டு காட்சி என்று செங்கடலில் ஆவணப்பட இயக்குனர் கதாபாத்திரம் மூலம் போலீஸ் கமிஷனர் கைப்பற்றும் டேப்புகளில் ஓடும் செய்திக்கோர்வைகள் எல்லாமும் செங்கடலுக்காக நிகழ்த்தப்பட்டவை என்று முடிவுக்கு வரலாம். இவை எதுவும் மாலதி ஏற்பாடு செய்த டில்லி போராட்ட விடீயோகிராஃபர் எனக்கு தந்தவை அல்ல, ஈழத்தமிழர் தோழமைக் குரல் காட்சிகள் உட்பட எல்லாமும் நான் 
யூ-ட்யூபில் (You tube )இருந்து டவுன்லோட் செய்தவையே! ஓபன் சோர்ஸ் (Open Source ) காலத்தில், இதையெல்லாம் விளக்கமாக எழுதிக்கொண்டிருக்க வேண்டிய தமிழ்ச் சூழலும், படைப்பாளிகளின் வன்மம் வெளிபடுத்தும் அறியாமையும் வெட்கக்கேடானது. செங்கடல் பிரதியைப் பார்த்தவர்கள் அதைப்பற்றி பிரதிரீதியாக வைக்கும் விமர்சனங்களுக்கு நான் விளக்கங்கள் தருவதில்லை. பிரதியை உருவாக்கியபின், அதற்கு வெளியே பேசுவதற்கு, ஒரு படைப்பாளியாய் என்னிடம் ஏதுமில்லை என்று நம்புபவள் நான்.

என் மற்ற படங்களை பற்றிய குற்றச்சாட்டுகளையும் நான் முற்றிலும் நிராகரிக்கிறேன். என் படங்களில் பங்கு பெற்ற கதாபாத்திரங்கள் என்னிடம் நேரடியாக தொடர்பிலிருப்பவர்கள். அவர்களுக்கு முறைப்பாடுகள் இருப்பின் என்னுடன் அவர்கள் தீர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கும் எனக்கும் இடையே மாலதி, ஊடறு.காம்  போன்ற அவதூறாளர் களின் மத்தியஸ்தமும் அதிகாரமும் அனுமதிக்க முடியாதவை. மற்றபடி உன் திரைப்படத்தை அங்கு திரையிட்டாயா? இவர்களுக்கு காண்பித்தாயா? என்ற கேள்விகள், சிறுபிள்ளைத் தனமானவை. 

கூடங்குளத்தைப் பற்றிய கவிதையை அந்த மக்களின் வாசித்துக் காண்பித்தாயா? சிரியா பற்றி எழுதினாயே, அந்த மக்களுக்கு அனுப்பினாயா? உடலுறவு பற்றி எழுதியதை சம்பந்தப்பட்டவரிடம் அனுமதி வாங்கினாயா, இப்படி கவிதைகள் எழுதிவிட்டு அதை புக் போட்டு எப்படி விற்கலாம், வீடு வாங்கலாம், கார் வாங்கலாம் என்று யாரும் கேட்பதில்லை. அதில் லாஜிக்கும் இல்லை. ஏதோ பொருமுகிறார்கள் பாவம் என்று விட வேண்டியது தான். 

இதை எழுதும் நேரத்தில் மாலதியை மனநோய் மருத்துவரிடம் அழைத்து செல்வது உருப்படியான காரியமாக இருக்கும். ஆனாலும் நாம் எப்போதும் உருப்படியான காரியங்களை செய்வதில்லையே! 


பின்னிணைப்பு : 

1.சிற்பி விருது பற்றிய நான் இதுவரை அறியாத தகவலை எழுதியிருக்கிறார் மாலதி. சிற்பி இலக்கிய விருது குறித்த தகவலை எனக்கு முதலில் தெரிவித்ததும் சம்மதம் வாங்கியதும் நண்பருமான எழுத்தாளருமான இந்திரன். அவரிடம் மாலதி எழுதியதை வாசித்துக் காட்டினேன். "விடும்மா ரப்பிஷ்(Rubbish )" என்று ஒரே வார்த்தையில் முடித்துக்கொண்டார். 

2. இதற்கு வினையாற்றும் எந்த கட்டுரைக்கும் ம்றுமொழியாற்றும் ஆர்வமும் எனக்கில்லை. இந்திரனின் "விடும்மா ரப்பிஷ்(Rubbish )" என்ற விளிப்பை என் தரப்பிலும் வழிமொழிந்து என் முன் குவிந்திருக்கும் வேலைகளில் கவனம் செலுத்தும் முடிவில் இருக்கிறேன். கருத்து ரீதியான விவாதங்கள் தனி மனித தாக்குதலாகவும், அவதூறுகளாகவும் மாறும்போது சற்று விலகி நிற்பதே தொடர்ந்து இயங்குவதற்கு வழிவகுக்கும் என்பதால் இந்த முடிவு. 

3.அரசாங்க எதிர்ப்பு, யுத்த எதிர்ப்பு, பேச்சுவார்த்தைக்கு வலியுறுத்துதல், சுயநிர்ணய உரிமை என்ற அரசியல் கோரிக்கைகளை முன்னிறுத்தி கவிஞர்கள், படைப்பாளிகள், மாணவர் இயக்கங்கள், மீனவர் இயக்கங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரவாணிகள், பெண்கள் அமைப்பினர் என்ற பல ஜனநாயக அமைப்புகள் என்று ஒருங்கிணைத்து உருவானது தான ஈழத்தமிழர்தோழமைக் குரல்(voiceforeelamtamils.blogspot.com) தமிழகத்தில், ஈழத்துக்கு ஆதரவாக தன்னெழுச்சியான போராட்டங்கள் நடந்துக் கொண்டிருந்த அந்தக் கால கட்டத்தில், அரசாங்க எதிர்ப்பை, யுத்த எதிர்ப்பை மட்டுமே முன்னிறுத்தி வெவ்வேறு போராடும் சக்திகளை ஒன்றிணைக்க முடிந்தது. புலி விமர்சனம் என்ற நுண் அரசியலோ, சிங்கள சனநாயக சக்திகளுக்குப் பின் ஒளிவதோ அரச பயங்கரவாதத்திற்கும், இந்திய அரசாங்கத்துக்கும் ஆதரவாக புரிந்துக் கொள்ளப்பட்டுவிடக் கூடிய நெருக்கடி மிகுந்த கால கட்டமது.ஆங்கில மீடியாக்களும், இந்திய தேசியவாதிகளும் அதைத் தான் ஏற்கெனவே செய்துக் கொண்டிருந்தார்கள்.நூறு பேர் அடங்கிய சனநாயக பிரதிநிதித்துவக் கூட்டமைப்பில் குறைந்தப் பட்ச கோரிக்கைகளையே முன்னிறுத்தி தொடர் போராட்டங்களை நடைமுறைப்படுத்துவது சாத்தியமாக இருந்தது. இதில் முரண்பட்டவர்கள், புலியாதரவு கோஷங்களை எழுப்ப முயன்றவர்கள் விலகி தனியே போராட்டங்களை மேற்கொண்டனர் என்பதும் அனைவரும் அறிந்ததே.டில்லியில் பாராளுமன்றத்திற்கு முன் மறியல், ஊர்வலம், தொடர் உண்ணாவிரதம், சிங்கள தூதரக முற்றுகை,பின் கைது, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எதிர்ப்பு ஊர்வலம் என்று கடுமையான தொடர் போராட்டங்களை மேற்கொண்ட மக்கள பிரதிநிதிகளை ஏதோ மந்தை போல சித்தரிக்கும் தகுதியும், தார்மீகமும் இங்கு யாருக்கும் இல்லை. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலக நாடுகளிலெல்லாம் லட்சக்கணக்காக மக்கள் தெருவுக்கு வந்து போராடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். வல்லரசுகளை தடுக்க முடிகிறதா? எதோவொரு விதத்தில் எதிர்ப்பைக் காட்டிக் கொண்டே இருந்தால், அரசாங்கங்களை அசைத்துவிட முடியும் என்ற எளிய மக்களின் நம்பிக்கையே ஈழத் தமிழர் தோழமைக் குரல். இத்தனைக்கும், ஈழத்தமிழர் தோழமைக் குரலில் பங்கு கொண்டவர்கள  எந்த கட்சி தொண்டர்களும் கிடையாது, தன்னெழுச்சியாக அணி திரண்ட உணர்வாளர்கள். கை காட்டுபவர்களின் பின்னே செல்லும் அறியாதவர்கள் இல்லை. தலை நகரத்தில் நடத்தவிருக்கும் போராட்டப் பணிகளுக்காக விளம்பரத் தட்டிகளையும், பேனர்களையும், ஆடைகளையும், இரவு பகலாக சென்னை ஓவியக் கல்லூரி மாணவர்களும், ஓவியர்களும் எந்த பிரதிபலனும் பாராமல் வரைந்துக் கொடுத்தவை.உணர்வெழுச்சியில் கொதித்திருந்த போராளிக் குழுவினர் சென்னையில் ரயில் ஏறியதிலிருந்து டில்லியிலிருந்து திரும்பும் வரை தங்கள் போராட்ட உடைகளையோ, முழக்கங்களையோ, தட்டிகளையோ எதோ ஒரு பெரும் சக்தியால் உந்தப்பட்டது போல, அகற்றாமலே இருந்தனர்.ஈழத் தமிழர் தோழமை அமைப்பினர், டில்லியிலிருந்து திரும்பியும் தொடர்ந்து தங்கள் பகுதிகளில் வெவ்வேறு போராட்ட வடிவங்களில் பங்கு கொண்டும், கைதாகியும், சிறை சென்றும் தங்கள் உணர்வுகளையும், எதிர்ப்பையும் காட்டியபடி தான் இருந்தார்கள்.

4. எவ்வளவு குழந்தமையுடனும், எவ்வளவு தீவிரத்துடனும், வேட்கையுடனும், அப்பழுக்கற்ற நோக்குடனும் தலைநகர் சென்றோம். இழப்பதற்கு ஏதுமில்லை என்ற மனப்பாங்கு மட்டுமே ஈழத் தமிழர் தோழமைக் குரல் இயக்கத்தில்  எல்லோரையும் ஒரு இறங்க மறுக்காத ஆவி போல இயக்கியது என்று நம்பினேன், இயங்கினேன் . அத்தனையையும் தனிமனித பகைக்கு பலி கொடுப்பது தாள முடியாத துயராய் என்னுள் இறங்குகிறது. சரி இதையும் கடக்கலாம். 

தொடர்புடைய சுட்டிகள் : http://panmey.com/content/?p=450

லீனா மணிமேகலை