Sunday, August 25, 2013

லெனின் விருது - தினமணி கட்டுரை

பார்வையாளர்களுக்கும் இந்த விருதில் பங்குண்டு!

First Published : 25 August 2013 08:39 AM IST
சிறந்த ஆவணப்பட இயக்குநர்களுக்கான லெனின் விருதை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 அன்று கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கி வருகின்றது "தமிழ்ஸ்டூடியோ இணைய அமைப்பு'. நான்காம் ஆண்டுக்கான லெனின் விருதை சமீபத்தில் ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு அளித்தனர். விழாவிலிருந்து சில துளிகள்:
 ""ஆணாதிக்க சமூகத்தில் கடந்த பத்து ஆண்டுகளாக தான் தேர்ந்தெடுத்த துறையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் லீனா. விருதுக்கு அவரைத் தேர்ந்தெடுத்து அறிவித்த உடனேயே நிறைய மிரட்டல்கள், கண்டனங்கள் பரவலாக எங்களுக்கு வந்தன. அப்போதே எங்களுக்குத் தெரிந்துவிட்டது, நாங்கள் சரியான ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறோம்...'' என்றார் தமிழ் ஸ்டூடியோ இணைய தளத்தின் நிறுவனர் அருண்.

 ""வெகுஜன ஊடகங்களாலும் பெரும்பாலானவர்களாலும் கொண்டாடப்படும் பிம்பங்களை தன்னுடைய "மாத்தம்மா', "தேவதைகள்' போன்ற ஆவணப்படங்களின் மூலம் லீனா தகர்த்திருக்கிறார். அருந்ததியர்கள் சமூகத்தினரிடையே இளம் சிறுமிகளுக்கு "பொட்டுகட்டி' அவர்களை மாத்தம்மாக்களாக மாற்றும் விஷயத்தை தன்னுடைய ஆவணப்படத்தில் வெளிப்படுத்திய சமயத்தில், அவருக்கு பெரும் அச்சுறுத்தல் எழுந்தது. சட்டப்பூர்வமான எதிர்ப்புகள் கிளம்பின. அந்தச் சமயத்தில் "தினமணி' வார இதழிலும் ஆவணப்படம் தொடர்பான ஆதரவான செய்திகள் வந்தன. நானும் கையில் கேமிராவை எடுத்துக் கொண்டு, அருந்ததியர்கள் வாழும் பகுதிக்குச் சென்றேன். நேரிடையாகவே அந்த மக்களிடம் பேசினேன். அந்த சமூகத்தில் மாத்தம்மாக்கள் இருந்ததை உறுதிசெய்துகொண்டேன். அதேபோல்தான், "தேவதைகள்' ஆவணப்படமும் அதிர்ச்சி அளிக்கக்கூடியது. சமூகத்தில் இப்படிப்பட்ட பணிகளைச் செய்யும் பெண்களும் இருக்கிறார்கள் என்பதை தன்னுடைய ஆவணப்படத்தின் மூலம் காட்டியவர் லீனா மணிமேகலை...'' என்றார் சிவகாமி ஐ.ஏ.எஸ்.

இயக்குநர் பாலாஜி சக்திவேல், ""போராட்ட உணர்வோடு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆவணப்படவுலகில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் லீனா மணிமேகலையின் பல படங்களும் அதிர்வை உண்டாக்கும் படங்கள். அவருக்கு என் பாராட்டுகள்..'' என்றார்.

 ""நானும் தீக்குச்சி. அவரும் தீக்குச்சி. எங்களுக்குள் நிறைய சண்டைகள் வரும். சமாதானங்களும் உடனுக்குடன் ஏற்படும். என்னை பாசமாக "அப்பா' என்று கூப்பிடும் பெண் லீனா மணிமேகலை. அவரின் சமீபத்திய ஓர் ஆவணப்படத்தைப் பார்த்தேன். இரண்டு, மூன்று முறை பார்த்திருப்பேன். அதிலிருந்து எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரியவில்லை என்பது என்னுடைய குறையே தவிர, அவருடைய குறை என்று கூறமாட்டேன். சங்க இலக்கியங்களில் சில பாடல்களை இன்னமும் பொருள் அறிந்து படிப்பதில் எனக்கு சிக்கல் இருக்கத்தான் செய்கிறது. அது என்னுடைய குறைதானே! லீனா அந்த ஆவணப்படத்தில் ஒரு நவீன ஓவியம் போன்ற ஒரு முயற்சியைச் செய்திருக்கிறார் என்று நினைக்கிறேன்... இன்னமும் மூன்று நான்கு முறை பார்த்தால் ஒருவேளை அந்தப் படம் புரியும் என்று நினைக்கிறேன்...'' என்று லீனாவை மனம் திறந்து பாராட்டினார் இயக்குநர் பாலுமகேந்திரா, அதோடு விட்டிருக்கலாம். ""நம்முடைய தமிழ்த் தாய் வாழ்த்திலும் கூட, "எத்திசையும் புகழ்மணக்க இருந்த பெறும் தமிழ் அணங்கே...' "அதென்ன இருந்த' அப்படியென்றால் இப்போது இல்லையா? எனக்குப் புரியவில்லை!'' என்றார்.

 இறுதியாக ஏற்புரை நிகழ்த்திய லீனா மணிமேகலை சற்று உணர்ச்சிவசப்பட்டு பேசினார். ""நான் அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரி. அது தொடர்பான பணியையும் சிறிது காலம் பார்த்துவந்தேன். சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க மனப்பான்மை, வெகுஜன ஊடகங்களால் காட்டப்படும் பொய்யான பிம்பங்கள் இவற்றை எல்லாம் உடைக்கும் அல்லது மறுக்கும் ஆயுதமாகத்தான் நான் ஆவணப்படங்களைக் கையில் எடுத்தேன். யோசித்துப் பார்த்தால் என்னுடைய பிடிவாதம்தான் என்னை இந்த அளவுக்குக் கொண்டுவந்திருக்கிறது. ஆனால் இதற்காக நான் கொடுத்த விலை அதிகம். குடும்பத்தினருடன் தொடங்கி நிறைய பேர்களின் எதிர்ப்பை சம்பாதித்தேன். அன்பு, காதல், நட்பு என நிறைய பிரிவுகளைச் சந்தித்தேன். என்ன செய்தாவது என்னுடைய ஆவணப்படங்களை தொடர்ந்து வெளியிட்டுவந்தேன். ஆவணப்படங்களை திரையிடுவதற்கே இடம் இல்லாத நாட்கள் அவை. ஆவணப்படங்களை திரையிடுவதில் தொடங்கி ஆவணப்படங்களை எடுப்பவர்களுக்கு விருதும் வழங்கி கெüரவிக்கும் தமிழ் ஸ்டூடியோ அமைப்புக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். நிறைய பழைய நண்பர்களை இங்கே சந்திக்கமுடிந்தது.

 என்னுடைய ஆவணப்படங்களில் பங்காற்றியவர்கள் அதில் தோன்றியவர்கள்... அவ்வளவு ஏன்... என்னுடைய ஆவணப்படங்களைப் பார்த்த பார்வையாளர்கள் அனைவருக்கும் கூட எனக்குக் கிடைத்த இந்த விருதில் பங்கிருக்கிறது. எல்லாருக்குமான விருதாகத்தான் இந்த விருதைப் பார்க்கிறேன். இந்த விருது என்னுடைய போராட்ட குணத்தை இன்னும் தீவிரமாக்கும்...'' என்றார் ஆனந்தக் கண்ணீருடன் லீனா மணிமேகலை!