Showing posts with label அந்திமழை. Show all posts
Showing posts with label அந்திமழை. Show all posts

Friday, October 4, 2013

காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் தேசம்


நன்றி: அந்திமழை 







நிலாந்தனின் கவிதை ஒன்று, 

அப்பாவுக்குப் பிதுர்க்கடன் கழிக்காத மற்றொரு ஆடியமாவாசை. அவர் காணாமற்போய் இருபது ஆண்டுகளாகிவிட்டன. அவருடைய எடுப்பான வளைந்த மூக்கையும் உறுத்தும் விழிகளையும் சலன சித்தத்தையும் எனக்குக் கொடுத்துவிட்டு கொழும்பு மாநகரின் கடற்சாலையில் அவர் காணாமற் போனார். சூதாடியான ஓரு ஓய்வுபெற்ற முஸ்லிம் படையதிகாரியுடன் அவரைக் கடைசியாகக் கண்டிருக்கிறார்கள். அம்மாவின் கண்ணீரைப்பிழிந்தால் கிடைக்கும் அப்பாவின் கறுப்புவெள்ளைக் கோட்டுருவத்தில் அவர் ஒரு விறுத்தாப்பி, அரைச்சன்னியாசி. ஆனால் எமது சுவர்களில் இன்றுவரையிலும் கொழுவப்படாத ஒரு புகைப்படமாகத் தொங்கும் ஆற்றாமையும் குற்றவுணர்ச்சியும் கலந்த நினைவுகளில் அவர் ஒரு அன்பான தோற்றுப்போன அப்பா. கவிஞர் நிலாந்தனைப்போல இலங்கையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் "காணாமல் போகடிக்கப்பட்ட" தங்கள் உறவுகளுக்காக வருடக்கணக்கில் தேடிக்கொண்டும், காத்திருந்தும் உழல்கின்றனர். கடந்த மூன்று தசாப்தங்களில் காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கணக்கின்படி உலக அரங்கில் இலங்கை முதல் இடத்தைப் பிடிப்பதற்கு ஈராக்கோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஐந்து நாளுக்குமொருவர் இலங்கையில் இன்னும் காணாமல் போகடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகள் தலையெடுக்கும் முன்னரே ஆயுதமேந்தி கிளர்ச்சி செய்த ஜே.வி.பி இயக்கத்தினரான சிங்களரை எண்பதுகளில் கூட்டம் கூட்டமாக காணாமல் போகடித்துப் பின் கொன்று புதைத்த கதைகளை ஆங்காங்கே தோண்டி எடுக்கப்பட்ட கொத்து கல்லறைகள் காட்டிக்கொடுத்தன. கடந்த வருடம் தோண்டியெடுக்கப்பட்ட மாத்தளை புதைகுழியில் இருந்த எலும்புக்கூடுகள் தங்கள் பிள்ளைகளுடையவை என்றும், தங்கள் கணவர்களுடையவை என்றும், தங்கள் அப்பாக்களுடையவை என்றும் நீதிமன்றங்களில் வாதாடிக்கொண்டிருக்கிறார்கள் உறவுகள். அவர்களோடு மாத்தளை நீதிமன்றத்தில் ஒரு நாள் கழித்ததில், வாழ்தலுக்கும் சாதலுக்குமிடையே ஊசலாடும் சித்திரவதையை வருடாந்திரமாக இந்த உறவுகள் எப்படித்தான் கடக்கிறார்கள் என்று பதைப்பாய் இருந்தது.

Inline images 2

ஸ்பெயின் உள்நாட்டுப்போரை குறித்த கவிதையில், நெரூடா, "என்னை ஏன் கனவுகளை குறித்து, இலைகளைக் குறித்து,  எனது நாட்டின் பிரம்மாண்ட எரிமலைகள் குறித்து கவிதை எழுதவில்லை என்று கேட்காதீர்கள். வந்து பாருங்கள்,  வீதியில் குழந்தைகளின் ரத்தம் ஒடுகிறது, குழந்தைகளின் ரத்தம் போல" என்று எழுதியிருப்பார்.  ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் நவிப்பிள்ளை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாண நூலகத்திற்கு அருகே கவன ஈர்ப்பு போராட்டத்திற்காக கூடிய "காணாமல் போகடிக்கப்பட்டவர்களின்" உறவுகளுடைய கதறல் விவரணைகளுக்கோ, ஆற்றுதலுக்கோ கூட அப்பாற்பட்டது. அடையாள அட்டைகளிலும், கடவுச்சீட்டுகளிலும், புகைப்பட சட்டங்களிலும், தங்கள் உறவுகளின் உயிரை நிழற்படமாக சுமந்துக்கொண்டு பார்ப்பவர்களிடமெல்லாம் திருப்பித் தரச்சொல்லி கேட்கிறது யுத்தம் கூறு போட்ட சமூகம். இலங்கைத் தீவென்பது கடலால் சூழப்பட்டதா கண்ணீரால் சூழப்பட்டதா என்று எண்ணவைத்தது அங்கு ஓங்கி எழுந்த ஒப்பாரி குரல்கள். புகைப்படங்கள் எடுப்பதை நிறுத்திவிட்டு அழும் ஒவ்வொருவரையும் அணைத்துக்கட்டிக்கொள்ளவே  எனக்கு தோன்றியது. எவ்வளவு சங்கடமான தருணத்தையும் ஒரு கவிஞர் விளக்கிவிட வேண்டிய  கடப்பாடுடையவர் என்று லெனின்கிராட் முற்றுகையிடப்பட்டபோது அன்னா அக்மதோவா சொன்னதாக சொல்வார்கள். எனக்கென்னவோ, இக்கட்டுரைக்கு இறுதிவரிகளை எழுதிவிட முடியாதெனவே தோன்றுகிறது.

பதினைந்து பதினாறு வயது பள்ளிக்கூட சீருடையோடு காணப்பட்ட பிள்ளைகளின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு தந்தை யானப்பட்டவரோ, தாயானப்பட்டவரோ பேரழுகை அழுதுக்கொண்டிருந்தார்கள் . தம் கணவர்கள் காணாமல் போன தேதி, நேரம், நாள் விவரக்  கணக்குகள் சொல்லி சொல்லி மாய்ந்து தேம்பிகொண்டிருந்தார்கள்  அரை விதவைமார்கள். சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள், வெள்ளைவேனில் கடத்தப்பட்டவர்கள், இயக்கப் போராளிகளாக சாட்சியங்களோடு சரண்டைந்தவர்கள், இயக்கத்தால் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டு போராளிகளாக்கப்பட்டவர்கள், பத்திரிகையாளர்கள், கார்டூனிஸ்டுகள், பாதிரியார்கள், மெளலாவிகள், கலைஞர்கள், கேள்வி கேட்டவர்கள், கேள்வி  கேட்காதவர்கள், மாணவர்கள், மீனவர்கள் என காணாமல் போகடிக்கப்பட்டவர்களின் கதைகளும் காரணங்களும் கொலைகார அரசுக்கு யாரும் தப்பவில்லை என்பதற்கு சாட்சி சொல்கின்றன. கொழும்பு நியூமகசின்வெலிக்கடைகொழும்பு தடுத்து வைத்தல் சிறைநீர்கொழும்புமகரஅநுராதபுரதிருகோணமலைமட்டக்களப்புபதுளைகண்டியாழ்ப்பாணம்பூசா என எல்லாச் சிறைச்சாலைகளின் கதவுகளையும் தட்டிப்பார்த்தும் . தடுப்பு முகாம்களுக்கும் அலைந்தும் , மனித உரிமை அமைப்புகளுக்கெல்லாம் மனுக்கள் கொடுத்தும் , எந்த துப்பும் கிடைக்காத விரக்தியிலும், யார் அழைத்தாலும்  நியாயம் கேட்டுப் போக தயாராகவே இருக்கின்றார்கள் உறவுகளைத்  தொலைத்தவர்கள். ராணுவம், போலீஸ் , சி.ஐ.டி என அச்சுறுத்தல்கள் வரும்போதெல்லாம், "நாங்கள் என்ன நாடா கேட்கிறோம். எங்கள் உறவுகள் உயிரோடு இருக்கிறார்களா எனத் தானே கேட்கிறோம்" என்று சுடச்சொல்லி நெஞ்சை காட்டுகிறார்கள். மரணச்சான்றிதழ்களைத் தந்து ஒரு லட்சம் ரூபாய் நஷ்ட ஈடும் கொடுத்து  ஏற்கச் சொல்லும் அரசாங்கத்திடம் இறுதிச் சடங்குகள் செய்ய பிணங்களையாவது தரச் சொல்லிக் கோரிக்கை வைக்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால், எல்லாரையும் சந்திக்க முடியாமல், பதினைந்து பேர் கொண்ட பிரதிநிதித்துவக்குழுவை  சந்தித்து மனுக்களைப் பெற்ற நவிப்பிள்ளை அவர்களிடம், "உங்கள் உயிருக்கு அவ்வளவு விலை   மதிப்பிருக்கும்போது , எங்கள் உறவுகளின் உயிருக்கு எந்த பதிலும் இல்லாமல் போய்விட்டதா" என்ற கேள்வியை வைக்கிறார்கள். "உயிருடன் இருப்பதற்கான தடயம் அல்லது பிணம்" என்று கேட்டு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஹேபியஸ் கார்பஸ்(Habeas Corpus) வழக்கு தொடுத்து நீதிமன்றங்களின் படிகளையும் வருடக்கணக்காக ஏறி வருகிறார்கள். 

சண்டை தீர்ந்தாலும், வழியும் வேதனையும் தீரவில்லை என்று தன்  இலங்கைப்  பயணம் பற்றிய அறிக்கையில் குறிப்பிட்டிருக்கும் நவிப்பிள்ளை அவர்கள், இலங்கை அரசாங்கத்தின் சர்வாதிகாரப் போக்கை கண்டித்துள்ளார். காணாமல் போனவர்களுக்கான நீதியை துரிதப்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். சாப்பிடும்போது காணாமல் போன தன கணவனுக்கும் தட்டில் வைத்துவிட்டு சாப்பிடும் பெண்ணுக்கு அரசாங்கம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ நாவின் காணாமல் போனவர்களைக் கண்டறியும் குழுவை இலங்கைக்குள் செயல்பட அனுமதிக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். 

நீதி காணாமல் போன , தம் குடிமக்களை அரசாங்கமே கொலை செய்யும் அராஜக நடைமுறைகள் மலிந்திருக்கும் நாட்டில் தங்களுக்கு எந்த நியாயமும் கிடைத்துவிடாதென விரக்தியிலிருக்கும் இலங்கைத் தீவின் மக்கள் ஐ.நாவையும் சர்வதேச அழுத்தங்களையுமே  மூச்சுக்கு முன்னூறு தடவை இறைஞ்சுகின்றனர். "எங்கள் உறவுகள் கிடைக்கும்வரை எங்களுக்கு போர் முடியவில்லை" என்று முறைப்பாடு செய்யும் இந்த மக்களுக்கு அவர்களின் தீராத வலி மட்டுமே மிஞ்சியிருக்கும் ஆயுதம்.  குற்றங்களில் எல்லாம் கொடிய குற்றமான உயிர்களைக் காணாமல் அடிக்கும் குற்றத்தை தொடர்ந்து செய்து வரும் இலங்கை அரசாங்கத்தை கூண்டிலேற்ற பாதிக்கப்பட்ட மக்களின் வலியை  அக்கறையுள்ள ஒவ்வொருவருக்கும் கடத்துவோம்.

Inline images 1

பேசாலையில், தன்  கண் முன்னே தன்  தந்தையை விசாரணைக்கு வெள்ளை வேனில் அழைத்துச் சென்ற ராணுவம் அவரைத் திருப்பி கொண்டு வந்து விடாததால், அப்பா எங்கேயோ இருப்பார் என்ற நம்பிக்கையோடு அவருக்கு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் பெளன்சிகாவிற்கு பதில் சொல்ல மனிதாபிமானம் உள்ள நாம் ஒவ்வொருவரும் கடமைப்பட்டிருக்கிறோம். 

லீனா மணிமேகலை