Tuesday, December 17, 2013

11.12.13 ஒரு கருப்பு நாள் - தமிழ் இந்துவில் வந்த எனது கட்டுரை

இணைப்பு  
http://tamil.thehindu.com/opinion/columns/111213-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/article5458638.ece



சுரேஷ் குமார் கௌஷல்-எதிர்-நாஸ் பவுண்டேஷன் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, காலனிய காலத்து இந்திய தண்டனை சட்டப் பிரிவு 377-க்கு மீண்டும் உயிர்கொடுத்து டிசம்பர் பதினொன்றை ஒரு கருப்பு நாளாக மாற்றியிருக்கிறது. பாலின சிறுபான்மையினரைக் குற்றவாளிகளாகக் கருதும் இந்தச் சட்டம் சமத்துவத்தை எல்லாவற்றுக்கும் முன்நிபந்தனையாக வைக்கும் இந்திய அரசியலமைப்புக் கோட்பாட்டையே நகைப்புக்குரியதாக்குகிறது.

ஒருபால் உறவை இயற்கைக்கு விரோதமானது என்று ஜனநாயக சோஷலிசக் குடியரசான இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் எந்த அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குகிறது? சாதி, மதம், கலாச்சாரம் என்பவற்றைக் கருதுகோள்களாக வைத்து ஒரு நாட்டின் நீதிமன்றம் குடிமக்களின் காமத்தை, அவர்கள் எப்படி உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை வரையறுப்பதும் அதன் அடிப்படையில் சட்டங்களை நிறைவேற்றுவதும் தண்டனைகளை பரிந்துரைப்பதுமான செயல், சிவில் உரிமைகள் என்ற கருத்தாக்கத்தைக் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி, கழுதையில் ஏற்றி கற்காலத் தெருக்களில் வலம்வர அனுப்பியிருக்கிறது.

இந்திய தண்டனை சட்டப் பிரிவு (இ.த.ச.) 377 ஆண்/ பெண் இடையிலான வழக்கமான உடலுறவு தவிர மற்ற எல்லாவகை உடலுறவுகளையும் குற்றமெனப் பார்ப்பதால், எச்.ஐ.வி./ எய்ட்ஸ் குறித்த மருத்துவத் தகவல் சேகரிப்பு மற்றும் சேவைகளில் சிக்கல் ஏற்படுகிறது என்பதே நாஸ் அறக்கட்டளை இ.த.ச. 377 நீக்கத்துக்கான வழக்கைப் பதிவு செய்ததன் காரணங்களில் மிக முக்கியமானது. ஆண்-பெண்-காமம்-உடலுறவு விஷயங்களை அறிவியல்பூர்வமாக அணுகாமல், இயற்கை-செயற்கை , பாவம்- புண்ணியம் என்ற மதவாத ஒழுங்கியல் பார்வையில் அணுகுவதும், மாற்றுப் பாலியல் தேர்வாளர்களை சமூக விரோதிகளாக்குவதும் மனிதநேயத்துக்கும் மேன்மைக்கும் பாதுகாப்புக்கும் எந்த வகையிலும் உதவாது.

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜவடேகரிடம், இ.த.ச. 377 நீக்கம் குறித்து கருத்து கேட்டதற்கு “சிவ சிவா” என்று கன்னத்தில் போட்டிருக்கிறார். இன்னும் பல தலைவர்கள் இதுகுறித்தெல்லாம் எங்களிடம் கருத்து இல்லை என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்கள். நமது குடியரசு என்பது இப்படிப்பட்ட ஆட்சியாளர்களால் நிரம்பியதுதான். இந்த லட்சணத்தில் சட்டப்பிரிவு 377-ஐ நீக்குவதும் மாற்றுவதுமான முடிவை நாடாளுமன்றத்திடம் தள்ளியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. அது வந்த 24 மணி நேரத்தில், மார்க்சிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் முக்கியத் தலைவர்களும் 377 நீக்கத்துக்கு ஆதரவாகப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது, என்றாலும் தேர்தலை நோக்கி மையம் கொண்டிருக்கும் நாடாளுமன்றம் ஓட்டுவங்கி அரசியலுக்கு உதவாத பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைக் குறித்து என்னவிதமான அக்கறை செலுத்தும் என்பதற்குப் பாரிய மேற்கோள்கள் தேவையில்லை.
“பண்பாட்டை அடியோடு சிதைத்து, கலாச்சாரத்தை வேரோடு பிடுங்கி எறிய இன்றைய காங்கிரஸ் மத்திய அரசும் முற்போக்குப் போர்வையில் இருக்கின்ற வக்கரித்த புத்தி உடையவர்களும் ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பது தாங்க முடியாத அதிர்ச்சியையும் மனதுக்கு வேதனையையும் தருகிறது” என்ற சனாதன ஓட்டுவங்கி குரல் கொடுத்திருக்கும் வைகோ அதில் உள்ளூர் உதாரணம். சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தேர்தல் ஸ்டன்ட்டாக கையாண்டுவரும் கட்சிகள் பெருத்திருக்கும் இந்த நாட்டின் அரசவைகளிடம் நீதியை எப்படி எதிர்பார்ப்பது?

பாலின சிறுபான்மையினரை ஏற்றுக்கொண்டு அரவணைக்கும் பெற்றோர்களையும் குடும்பங்களையும் நண்பர்களையும் மிக மோசமாகக் காயப்படுத்தியிருப்பதோடு, அவர்களுக்கான சமூகப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு. தமது மாற்றுத் தேர்வுகளுக்காக அன்றாட வாழ்க்கையில் அவமானத்தையும் புறக்கணிப்பையும் தனிமைப்படுத்தலையும் சந்திக்கும் ஒருபால் ஈர்ப்பாளர்கள் இனி, சட்டமே அனுமதிக்கும் தாக்குதல்களையும் துன்புறுத்தல்களையும் அனுபவிக்கும் கொடுமை நிகழக்கூடும். கொலை செய்தவர்களும் கொள்ளை அடித்தவர்களும் சாதி வெறியர்களும் மதவாதிகளும் பாலியல் வன்புணர்வாளர்களும் வீதிகளில் சுதந்திரமாக உலா வர, அன்புக்குக் கட்டுண்ட ஒருபால் ஈர்ப்பாளர்கள் தலைமறைவாக வாழும் அபத்தங்கள் நடந்தேறும். ஒருபால் உறவாளர்களுக்கு எதிராக நீதித்துறை தூண்டிவிடும் வன்முறை இ.த.ச. 377 என்றால் அது மிகையாகாது.

திருமணத்துக்கு முன்பு கொள்ளும் பாலுறவை 'திருமணம்' எனவும் திருமண உறவுக்குட்பட்ட வன்புணர்ச்சியை 'காமம்' எனவும், பாலியல் வன்கொடுமைக்கு எதிராக முறையிடும் பெண்கள் நம்பகத்தன்மையற்றவர்கள் எனவும் தீர்ப்புகள் வழங்கிய வரலாறு கொண்ட இங்கே, ஒருபால் உறவைக் குற்றமெனப் பார்ப்பது அதிர்ச்சியாக இல்லையென்றாலும், இப்படிப்பட்ட ‘நீதிமான்’களை எதிர்த்துப் போராடுவதும், நீதிமன்றங்களை அவமதித்தால் குற்றம் என்றால் சிறைச்சாலைக்குச் செல்வதும்தான், ஒரு போலி ஜனநாயகத்தின் குடிமக்களான நமக்கிருக்கும் மார்க்கங்கள்.
ஆண்-ஆண், பெண்-பெண் ஒருபால் உறவில் வெட்கப்பட வேண்டியது ஏதுமில்லை. அது ஒரு வகை பாலியல் செயல்பாடும், அன்பின் வெளிப்பாடுமே. அதைக் குற்றமாக்குவது மனிதத்துக்கு எதிரானது. மனிதம் எல்லா நிறுவனங்களுக்கும் மேலானது, ஆதியானது. மனிதத்துக்கு ஆதாரமான அன்பை, காதலை, காமத்தை, அரசன் அன்றோ, அல்லது நீதி நின்றோ கொல்ல நினைத்தால், அரசக் கொடி கிழியும். அரசின் வன்முறை நீதியென்றால், மக்களின் நீதி எதிர்ப்பே!

லீனா மணிமேகலை