Wednesday, August 29, 2012

தமிழ்ச்சூழலில் சுயாதீன சினிமா(Independent Cinema) – மின்மினிப்பூச்சிகளின் கல்லறை

செங்கடல் படப்பிடிப்பின் போது எடுத்த நிழற்படம்
 
எந்த ஒரு திரைப்படமும் மெய்யான சுதந்திரத்துடன் அடையாளப்படுத்திக் கொள்வது சாத்தியமில்லை. முதலீட்டை ஆதாரமாகக் கொண்ட திரைக்கலையைக் கையிலெடுக்கும் கலைஞர் நிதியாதாரம் என்ற முதல்படியேலேயே தன் சுதந்திரத்தை பேரம் பேசக்கூடியவராக. மாறிவிடுகிறார். சுயாதீனம் என்பதை சரியான அர்த்தத்தில் முழுமைப்படுத்த வேண்டிய பார்வையாளனும் செயலற்ற ஒரு நுகர்வாளனாக ஆக்கப்பட்டிருக்கிறான் ஆக, தணிக்கை,தயாரிப்பு தொடங்கி விநியோகம் வரை திரைப்படக்கலையைச் சந்தைவயப்படுத்தியிருக்கும் பண்பாட்டுச்சூழல்,தொழில் என்ற முறையிலும் சுரண்டலுக்கு ஒப்புக்கொடுத்துவிட்ட வணிகமய திரைப்பட இயல், இதற்கிடையே தன் தனித்துவமான, விட்டுக்கொடுத்தலில்லாத, காத்திரமான வெளிபாட்டிற்காக சதா ஒப்பந்த பேரங்களில் உள்ளேறுவதும் வெளியேறுவதுமாய் தத்தளிக்கும் ஒரு மனநோயாளிதான் சுயாதீன(Independent)சினிமா இயக்குநர்..

போர் ஆயுதங்கள் எப்படி பெண்டகனுக்கு சொந்தமாக இருக்கின்றனவோ அப்படித்தான் திரைப்படக் கருவிகளும், நிறுவனங்களும்,வியாபாரமும், பண்பாட்டு மேலாதிக்கமும், இன்னும் ஹாலிவுட்டிலிருந்தே உற்பத்தியாகின்றன. இன்னும் சொல்லப் போனால் Studio Cinema, Independent Cinema, Auteur Cinema, National Cinema, New wave Cinema என்ற பெயர்களும், விளக்கங்களும் கூட ஹாலிவுட் அகராதியில் பிறந்த சொற்கள் தான். அந்த அகராதியின் படி ஸ்டூடியோ நிறுவனங்களின் காலடியில் வைக்கப்படாத திரைக்கதைகளும், திரைப்படச்சுருள்களும் ”சுயாதீன சினிமா” என்று வரையறுக்கப்பட்டன. அந்த வரையறையில் பார்த்தால், தமிழ்ச்சூழலில் இன்று ’அட்டக்கத்தி’ கூட சுயாதீன சினிமா என்று அடையாளப்படுத்தப் படலாம். திரைவிமர்சகர்கள், ’பாதை தெரியுது பார்’, ’உன்னைப்போல் ஒருவன்’,’ஒருத்தி’, ’வீடு’, ’சந்தியா ராகம்’, ’மெட்டி’, ’பூட்டாத பூட்டுகள்’, ’ஊருக்கு நூறு பேர்’, ’ஏர்முனை’ போன்ற படங்களை தமிழ் சுயாதீன சினிமா “வரலாற்றின்” காயடிக்கப்பட்ட கண்ணிகளாக வர்ணிக்கலாம். வியாபார நெளிவு சுளிவுகளுக்கு கட்டுப்படாத படைப்பாளர்களின் வெளிப்பாடு என்ற வகையில் அந்த பட்டியல் தயாரிக்கப்படலாமே தவிர்த்து, இதில் பெருவாரியான படங்கள் மக்களின் வரிப்பணத்திலோ (NFDC, Films Division), ஏதொ ஒரு கட்டத்தில் நிறுவனங்களின் லெட்ஜர் இடம்பெறுபவையாகவோ தான் சாத்தியப்பட்டிருக்கின்றன. ஜான் ஆப்ரகாமின் தமிழ்ப்படமான அக்ரஹாரத்தில் கழுதை கூட அந்த அடிப்படையில் சுயாதீன சினிமா வகையில் இருத்த முடியாது.அவரின் மலையாளப்படமான ”அம்ம அறியான்” மட்டுமே அரசாங்கத்திலிருந்து, தயாரிப்பு நிறுவனங்களிலிருந்து விடுபட்ட மக்கள் தயாரிப்பு.
ஆக, தமிழில் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு ஒரு இயக்கமாக உருவாகிக்கொண்டு வரும் ஆவணப்பட முயற்சிகளை மட்டுமே உண்மையில் சுயாதீன சினிமா என்று குறிக்கலாம். இதிலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்,PSBT போன்ற அரச நிறுவனங்களின் நிதி தலையீடு சுயாதீன வெளிப்பாட்டின் வீச்சை, விட்டுக்கொடுத்தலில்லாத வடிவத்தை, கவுச்சி மொழியை சிதைக்கவே செய்கிறது என்பதை என் அனுபவத்திலிருந்தே சொல்ல முடியும். என்.ஜி.ஓ, கார்ப்பரேட், அரசு நிறுவனங்கள் என்று பல கூட்டணிகளில் வேலை செய்து பார்த்திருக்கும் என் பத்து வருட அனுபவத்தை சுய விமர்சனத்தோடு அணுகினால், சொந்த சேமிப்பில்,”தேவதைகள்” ஆவணப்படம் போன்று ”பிராஜக்டாக” செய்யாத சில படங்களில் மட்டுமே முழு சுதந்திரத்தோடு என்னால் செயல்பட முடிந்திருக்கிறது. சொர்ணவேல், அருண்மொழி, ரமணி, அமுதன், ஆர்.ஆர்.சினிவாசன் என்று ஒரு தொடர் ஓட்டம் தொடங்கியிருக்கும் இந்த காலகட்டத்திற்கு, டிஜிட்டல் தொழிற்புரட்சிக்கு பெரும்பங்கிருக்கிறது. சில ஆயிரங்களிலேயே தயாரிப்பு செலவுகளை குறுக்கியிருக்கும் கையடக்க டிஜிட்டல் கேமிராக்களும், எடிட்டிங் மென்பொருளும், டிவிடி விநியோக முறைகளும், ஒரு பைக்கில்,பேக் பேக்குடனும் (Back pack), சட்டைக்காலரில் மைக்ரோ போனுடனும் கிளம்பி சென்று கொரில்லா சினிமாக்களை உருவாக்கக் கூடிய வாய்ப்புகளைத் தந்திருக்கின்றன. சிற்றூர்களிலும், கிராமங்களிலும் திரைப்பட இயக்கங்கள் தோன்றியிருக்கின்றன. பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும்,மக்கள் இயக்கங்களும் திரையிடல்களை நிகழ்ச்சி நிரலில் சேர்க்கின்றன. ஆரம்ப நாட்களில்,படங்களை டி.வி.டி பிரதிகளாக விற்பனைக்கு வைத்தபோது மக்கள் பிரச்சினைகளை காசாக்குகிறார்கள் என்று விமர்சித்த பார்வையாளர்கள் இன்று சுயாதீன சினிமா இயக்கத்தின் பங்கேற்பாளர்களாக,புத்தகங்கள் வாங்குவது போல காசு கொடுத்து டிவிடிக்களை வாங்கி செல்வதைப் பார்க்க முடிகிறது.NDTV போன்ற தேசிய தொலைக்காட்சி சானல்கள் தணிக்கை விதிகளையகற்றி தொடர்ந்து உரிமம் வாங்கி படங்களை ஒளிபரப்புகிறார்கள். இவையெல்லாம் நிச்சயமாக மாற்றத்தின் அறிகுறிகள் தாம். ஆவணப்பட இயக்குநர்களை ஏதோ இடுப்பில் குண்டு பொருத்திக்கொண்டு அலையும் தீவிரவாதிகள் போல தொடர்ந்து ஒடுக்கும் போலீசும், நிறுவனமயமாகாத தணிக்கை ஏஜெண்டுகளான பிற்போக்கு சக்திகளும், கட்சி குண்டர்களும் கூட சுயாதீன திரைப்பட வெளிப்பாடு தீவிரமடைந்திருப்பதற்கான சாட்சிகள் தாம்.
சுயாதீன சினிமா என்பது ஒட்டுமொத்த பண்பாட்டு இயக்கமாக, கூட்டுப் பொறுப்புணர்வாக உருமாறாமல் ஒரு தனிப்பட்ட படைப்பாளியால் மட்டும் சாதித்துவிடக்கூடியதல்ல. மக்கள் பங்கேற்பு சினிமாவாக நான் எடுத்த செங்கடல் ஒரு உதாரணம். எழுதப்பட்ட பிரதியை எறிந்து விட்டு, படைப்பு செயல் உறவுகளை மாற்றி, ”நடிகர்களை” நீக்கி, பாதிக்கப்பட்ட மீனவர்களையும், அகதிகளையுமே பங்கேற்பாளர்களாகக் கொண்டு அவர்களின் வாழ்க்கையை, அவர்களின் தலத்திலேயே மறு உருவாக்கம் செயத ”செங்கடல்”, தணிக்கைக்கும் தலை குனியாது உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை நீங்கி வந்தாலும், தலையீட்டளவில் கடுமையான அடக்குமுறைகளை சந்தித்த ஒரு படைப்பு தான். கதைக்களம் இலங்கை இந்திய எல்லைக் கிராமமான தனுஷ்கோடி என்பதால், காவல் துறை, க்யு பிராஞ்ச், கடற்கரை ரோந்துப்படை, ரயில்வே காவல் துறை, நேவி என்று பொழுதும் கண்காணிப்போடும், அனுமதி விதிமுறைகளோடும் போராடி களைத்த நாட்களும், வானிலை சவால்களும்,சிக்கல் மிகுந்த மக்கள் தொகுதியை ஈடுபடுத்தியதில் இருந்த கடுமையான நடைமுறை சிக்கல்களும் படைப்பின் சாரத்தை பாதிக்கவே செய்தன. சொந்த மீனவர்களைக் காப்பாற்ற திராணியில்லாமல் ஈழக்கூப்பாடு போடும் போலித்தனமான தமிழக அரசியல், ஊடக, விமர்சனக் கோட்பாட்டு அறிவுத் துறைகளும் தயாரிப்பிற்கு முன்னும் பின்னும் படத்தை மோசமாக ஒடுக்கின. மூன்றாம் உலகப்பசியை டிராப்பிகல் சர்ரியலிசமாகப் பார்க்கும் பன்னாட்டு திரைப்பட ரசிகர்களை மட்டுமே சென்று சேர்ந்திருக்கும் செங்கடலின் தலைவிதிக்கு, படைப்பாளி மட்டுமே அவமானப்பட்டுக் கொண்டிருப்பது தான் தமிழ்ப் பண்பாட்டுச்சூழலின் சாபக்கேடு.

ஆனாலும், ”சினிமா, விநாடிக்கு 24 பிரேம்ஸ் உண்மை” என்ற கோடார்டைப் படித்து வேட்கையோடு பயிற்சியை தெருவிலிருந்து தொடங்கிய திரைப்பட மாணவி என்ற அடிப்படையில், திரைப்படக்கலை செயல்பாடுகளில் தொடர்ந்து தனித்துவத்தோடு இயங்க முடியும் என்ற நம்பிக்கை இன்னும் எனக்கு மிஞ்சியிருப்பதும் நடந்துக்கொண்டிருக்கும் மாற்றங்களின் விளைவு தான். ஒரு படைப்பாளியாக, நடுநிலை சாதியைச்சேர்ந்த ஆங்கிலம் பயன்ற மத்தியதரவர்க்க நகரத்துப்பெண் என்ற அடையாளத்தை தமிழ் வட்டாரத்திலும், திரைப்படக்கல்லூரிக்கு செல்லாத ஹிந்தி கற்க மறுத்த மதராஸிப்பெண் என்ற இந்திய தேசியத்திலும், மூன்றாம் உலக ஆசியக் கறுப்பு பெண் என்று உலக அரங்கிலும் ஏவப்படும் அடையாள வன்முறைகளை எதிர்த்து மொழி,இனம், சாதி, நிறம், புவியியல் கடந்த தனித்துவமான திரைமொழியைக் கண்டடையும் வேட்கை தீரும் வரை, சுயாதீன திரைப்பட இயக்கத்தின் ஒரு செயலூக்கமுள்ள அங்கத்தினராக இருக்க முடியும் என இந்த தருணத்தில் நினைப்பதும், கூடவே மின்மினிப்பூச்சிகளின் கல்லறைப் படிமமும் தோன்றுவதும் முரண்பாட்டுமெய்ம்மை
 
லீனா மணிமேகலை
 
நன்றி கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன்