Thursday, October 6, 2011

இசை


361 டிகிரி ( 2 )சிற்றிதழில் வெளிவந்த கவிதை







இந்த இரவில்
தன் சிவந்த தேமல்களை 
என்னிடம் முறையிடுகிறது நிலவு

இல்லை
அவை கள்ளிப்பழங்கள் எனப் பறித்து
நாக்கும் உதடும் சிவக்க சிவக்க 
மென்று காண்பிக்கிறேன்

இப்போது புத்தன்
தன் காதலியைத் தேடி வருகிறான்

அவள் பூப்படையாததற்கு 
இந்த நிலவு தான் காரணம் 
எனக் கோபிக்கிறான்

புத்தனுக்கொரு பாம்பு புற்றுக்கு  வழிகாட்டுகிறேன்

நான் உன்னைப்போல 
இரவல் ஒளியல்ல
என்று பழித்ததற்கு
என்னைக் கூறு போடுகிறது நிலவு

மின்மினிப் பூச்சியாகிறேன்

இரவில் பகலாகவும்
பகலில் இரவாகவும்
இடையில் புனைவாகவும்

தும்பி இதைப் பாடிச் செல்கிறது 



லீனா மணிமேகலை