தஞ்சை பிரகாஷின் "மிஷன் தெரு" நாவலுக்கு எழுதிய முன்னுரை.
நன்றி - வாசகசாலை பதிப்பகம்
"தஞ்சை பிரகாஷ் இலக்கியம் எழுதியவர் அல்ல. அவரது நாவல்கள் சரோஜாதேவி நாவல்களே. சரோஜாதேவி நாவல்களை வாசிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஆன்ம தைரியம் இல்லாதவர்களுக்குரிய பாவனை எழுத்துக்கள் அவருடையவை" என ஜெயமோகனின் நிராகரிப்பு ஒரு பக்கம். "தமிழின் உச்சபட்ச படைப்பாளி. அசோகமித்திரனுக்கும் மேல், பி.சிங்காரத்திற்கும் மேல், தமிழில் எழுதிய எல்லாப் படைப்பாளிகளுக்கும் மேல் தஞ்சை பிரகாஷ்" என்று அவர் இருந்த திசை நோக்கித் தொழும் சாரு நிவேதிதா மற்றொரு பக்கம். உண்மையில் இதுபோன்ற மிகையுணர்ச்சிகளுக்கு எதிரானது பிரகாஷின் எழுத்து. மிக நிதானமான வாசிப்பை, கவனிப்பை கோரி நிற்கிறது பிரகாஷின் படைப்புலகம்.
மிஷன் தெரு எஸ்தரின் கதை. துடுக்கான, தைரியமான, அறிவான, அழகான, அபூர்வமான எஸ்தர் சுதந்திரமாக வாழ முற்படும்போதெல்லாம் தோற்கடிக்கப்படும் கதை. மனித நாகரிகம் தொடங்கிய காலத்திலிருந்து வாய்மொழி கதையாடல்களாகவே புழக்கத்திலிருக்கும் "Taming of the shrew" வகைமை கதை. பெண்களை "அடக்க" "நல்வழிப்படுத்த" "கீழ்ப்படியவைக்க" "சொந்தமாக சிந்திக்கும் திறனை மரத்துப்போகச் செய்ய" "பக்குவப்படுத்த" உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் விதவிதமான வன்முறைகளைப் பிரயோகிப்பதை தான் "Taming of the shrew" என்பார்கள். ஷேக்ஸ்பியர் எழுதி அதை இலக்கியமாக்க, இன்றுவரை அந்த மரபு உலகின் எல்லாப் பண்பாடுகளிலும், நாடகங்களாக திரைப்படங்களாக நாவல்களாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நடித்த படங்களில் எல்லாம் தொடர்ச்சியாக அவர் "போக்கிரி" பெண்ணாக வருவதும், நம் கதாநாயகர்கள் அவரை "அடக்கமான" பெண்ணாக மாற்றுவதையும் நாம் பார்த்திருப்போம். தமிழ் திரைப்படங்களில் இன்றுவரை சுய சிந்தனையுள்ள "திமிரான" பெண்கள் வன்புணரப்பட்டே "பாடம்" புகட்டப்படுகிறார்கள். பிரகாஷின் எஸ்தரும் அவ்வாறே வீழ்த்தப்படுகிறாள். சிறகுகள் நறுக்கப்படுகிறாள். தன்னைத்தானே தூர்ந்துப் போகவிட்டு சிதிலமாக்கி இடித்துக் கொள்ள தள்ளப் படுகிறாள். பெண்ணின் அழகு துய்க்கப்படுவதும், அறிவு தண்டிக்கப்படுவதும் தான் உலக நியதி என்று வீடும், பள்ளிக்கூடமும், தேவாலயமும், தெருவும், ஊரும் எஸ்தரை மீண்டும் மீண்டும் ரணமாக்கி நிரூபிப்பதே "மிஷன் தெரு". இதில் தஞ்சை பிரகாஷின் பங்களிப்பு, தன்னை தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்ளும் பாத்திரமாக எஸ்தரை உருவாக்கி யது தான். அந்த கேள்விகள் தான் பிரகாஷ் நமக்கு விட்டுச் செல்பவை. கேள்விகளை உறைந்துப்போக விடாமல் சதா உயிர்ப்புடன் வைத்திருப்பதும் படைப்பாளியின் வேலை தான்.
கதை நிகழும் காலகட்டத்தையும் அதன் உள்ளடுக்கு சிக்கல்களையும் மிக நுட்பமான சித்திரமாக்குகிறார் ஆசிரியர். தஞ்சாவூர் சமஸ்தானத்தில் இரட்டை ஆட்சி. ஏதும் அறியாத தமிழ் சனங்கள் வெள்ளைக்காரர்களுக்கும் அடிபணிந்து, மராட்டியர்களுக்கும் கீழ்ப்படிந்து, கொள்ளையிடும் முஸ்லீம்களுக்கும் வேற்று அரசர்களுக்கும் நடுங்கி வாழ்ந்துக்கொண்டிருந்த காலத்தில் 'சோற்றுக் கள்ளர்கள்' என்று கேலி பேசப்பட்ட கிருத்துவக் கள்ளர் குடும்பத்துப் பெண்ணாக வருகிறாள் எஸ்தர். கீழ்சாதி என்று கருதப்பட்ட பள்ளு பறை சாதிகளுக்கு ஏசுவை மறுதலித்த கள்ளர்கள், தங்களுக்கென்ற புதிய பள்ளிக்கூடங்களை கிராமம்தோறும் நிறுவிக்கொண்டனர். துலுக்கர்களும் மராட்டியர்களும் பெண்களைத் துணியில் போர்த்தி மூடிவைத்திருந்தபோது, இந்துக்கள்ளர் சாதியில் பெண்களை வெளியில் அனுப்பாமல் வைத்திருந்தபோது, கிருத்துவக் கள்ளர் பெண்கள் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள். எஸ்தரின் தந்தைக்கு அவளை சீமைக்கு அனுப்பி, ஆங்கிலம் படிக்கவைத்து ஒரு Madam ஆக்குவது தான் கனவு. பெண்களைக் "கொண்டு" போவதும், சிறைப்பிடிப்பதும், பூட்டிவைப்பதும், எட்டு வயதிலேயே கட்டிக்கொடுப்பதுமாய் இருக்கும் சூழலில் எஸ்தர் மட்டும் பதினெட்டு வயது வரை யாருக்கும் படியாத கன்றுக்குட்டியாய் வலம் வருகிறாள். ஆங்கிலப் புத்தகங்களின் ஞானம், லத்தீன் - கிரேக்க மொழியறிவு, சங்கீதப் பாடங்கள், உலகம் முழுவதையும் விரும்பும் பரந்த நோக்கம், சமத்துவம்-சகோதரத்துவம்-சமாதா னம் என்ற பிரஞ்சு சிந்தனை, காதல், சுயதேர்வு என்று வாழ விரும்பும் எஸ்தரை "நீ விபசாரி. நீ கேவலம். உன் உடம்பு அசிங்கம்.ஏசு இதில் குடியிருக்க மாட்டார். உன் அழகு பாவம். அதைப்பார்த்தே பலர் பாவம் செய்கிறார்கள்.எனவே நீ பாவமாகிறாய். நீ பாவ மன்னிப்பு கேட்டு அழு" என்று முதலில் வேதபாடசாலை வாத்தியார் பழிக்கிறார்.அடுத்து,"ஒரு பொண்ணை கொழுக்கவுட்டா அவ்வளவு தான், கூரை ஏறி கோளிபுடிக்கக் கிளம்பிடுவா" என்று அவளின் தாய் கண்டிக்கிறாள். தொடர்ந்து,"பொட்டை நாயீ, போடி உள்ள, கட்டை துளுத்துப் போச்சா, தெருவில வந்து பேசினா வீச்சருவால எடுத்து சீவிப்புடுவேன்" என்று தெருவில் மாமா மிரட்டுகிறார். முடிவில், "ஓடுகாலி காலில் சங்கிலி போட்டு கட்ட வேணும்" என்று லாசரஸ் என்ற ராட்சசனுக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்கிறார்கள். லாசரஸ், அவளது அபிப்பிராயங்களைக் குறித்து எந்தக் கவலையுமில்லாமல் அள்ளிக்கொண்டு போய் மூலை இருட்டில் போட்டு, மிருகம் வளர்ப்பதை போல வளர்த்து, குட்டிப்போட வைத்து, மாட்டை முகத்தில் கட்டுவதைப்போல கட்டி, பிதுங்க பிதுங்க அது முகத்தை இழுத்துக்கொண்டு சுற்றுவதை போன்ற பயங்கரமான வாழ்க்கையைப் பரிசளிக்கிறான். மிஷன் தெருவில் குடியமர்த்தப்பட்டு, தினமும் அடி, உதை எனப் பதினைந்தாண்டு கால திருமண சிறையில் உருவாகும் தன் மகள் ரூபி, அவளுக்கென துணையை தேடும் தருணத்தில் அவளை அடித்து உதைத்து தன் கணவனிடம் ஒப்படைக்கும் எஸ்தரின் Stockholm Syndrome இல் நிறைவுறுகிறது கதை. திருமணத்திற்கு முன் வரை தன் சுய தேர்வுக்காக எதிர்ப்பதும், ஓடுவதும், தப்புவதும், மீறுவதும், கொலை செய்வதற்கும் அஞ்சாதவளாய் நிற்பதுமாய் இருக்கிற எஸ்தர் வன்புணர்வின் மூலம் வசப்படுத்தப்படுகிறாள். அவளிலிருந்தே அவள் பிரிக்கப்பட்டு நிர்மூலமாக்கப் படுகிறாள். அவள் கால்களின் இடையில் நேர்ந்த பலவந்த திணிப்பில் வஞ்சத்தைப் புரிந்துக்கொள்கிறாள். ஆனால் அதை தன் உடலின் வஞ்சமெனவும் கருதி மறுகுகிறாள். இதை மேலோட்டமாக உள்வாங்கும்போது வாசக மனம் துணுக்குறும். ஆனால் ஒரு திரைப்பட இயக்குனராக இந்தியா முழுவதும் "ரேப் நேஷன்" என்ற என் ஆவணப்படத்திற்காக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட பெண்களை சந்தித்து உரையாடிய அனுபவத்திற்குப் பிறகு எஸ்தரை இன்னும் ஆழமாகப் புரிந்துக்கொள்ள முடிகிறது. பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட பெண்களிடம் தங்கள் உடல் மீதே ஒரு தனிப்பட்ட கோபமும், கையாலாகாத்தனமும், கழிவிரக்கமும் அவ்வப்போது பொங்கி வருவதை நான் உணர்ந்திருக்கிறேன். வன்புணரப்பட்ட ஒவ்வொரு முறையும் தற்கொலை செய்துக்கொண்ட வேதனையும் விரக்தியும் வெட்டி வெட்டி இழுத்த எஸ்தரின் மீளாத துயரத்தை, நான் நேரடியாக சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்களின் கண்களிலும் பார்த்திருக்கிறேன். அத்துமீறப்பட்ட உடலும், எதிர்ப்பின் ஒவ்வொரு முனைப்பு ம் படுதோல்வியடைந்த வலியும் பெண்கள் காலம் காலமாய் சுமக்கும் சிலுவைகள். அந்தக் கொடும் உளைச்சலில் இருந்தே, எஸ்தர் தன்னை துச்சமாக எண்ணிய லாஸரஸைவிட தன்னை கொஞ்சமாகவேனும் "மதித்த" வெள்ளைக்காரத்துரையிடம் தோற்றுப் போயிருக்கலாம் என எண்ண வைக்கிறது. அதிகாரத்தின் முன் நூறு நூறு ஆண்டுகளாக பெண்ணை மண்டியிட வைக்கும் மிகச் சிக்கலான புள்ளியை பிரகாஷ் தொடுகிறார். பெண்ணைக் கொண்டே அதை விசாரணைக்கும் உட்படுத்துகிறார். எந்தக் கர்த்தரையும், எந்த ஜெஹோவையும், எந்த கிருஷ்ண மூர்த்தியையும், எந்த சைவ சிவசுந்தரத்தையும், எந்த சைன பௌத்த காளி கூலி மாடன், புலையன்,பாவாடைராயன், வாழ்முனி வங்கீசன், காட்டேரி, குரும்பன்,குள்ளன், தெரு சாமி வரை யார் கூப்பிட்டு அலறினாலும், எந்த காலத்திலும், எத்தனை ஆயிரம் கோடி வருடங்கள் கடந்தாலும் இதில் இருந்தெல்லாம் பெண்ணுக்கு விடுதலையே கிடையாதா என்ற கேள்வியை அழுத்தமாக முன்வைக்கிறார்.
பிரகாஷ் சுட்டிக்காட்டுவதைப்போல ஒவ்வொரு மனிதனும், தனக்குள் ஒரு உலகத்தை வைத்திருக்கிறான். ஒவ்வொரு பெண்ணும் தனக்குள் ஒரு இருட்டை ஒளித்து வைத்திருக்கிறாள். அந்த இருட்டில் என்னையும், நான் அறிந்த, நேசித்த, பிறந்த, பழகிய, வாசித்த, கூடி வாழ்ந்த எல்லாப்பெண்களின் சாயைகளையும் காண முயற்சிக்கிறேன். பதின்மூன்று வயதில் தன் தாய் மாமனுக்கு கட்டிக்கொடுக்கப்பட்டு, எந்த வழியில் குழந்தை தன் உடலில் இருந்து வெளியே வரும் என்று அறியாப் பருவத்தில் என்னைப் பெற்றதாய் சொல்லும் என் தாய் ரமா, தான் இழந்ததை எல்லாம் எனக்கு அளித்து விட வேண்டும் என கான்வென்டில் படிக்கவைத்து, நடனம் பாட்டு விளையாட்டு நாடகம் என எல்லாம் பயிற்றுவித்து நூறு மேடைகள் ஏற்றி அழகு பார்த்து, சாதிக்கப்பிறந்தவள் என தினமும் சொல்லி சொல்லி கனவுகளை வளர்த்துவிட்டு, எனக்குப் பருவம் வந்ததும் என் தாயமாமனுக்கு கட்டிக்கொடுத்துவிட வேண்டுமெனத் துடித்ததை, என்னைக் கட்டாயப்படுத்தியதை இன்றளவும் மன்னிக்க முடியாமல் இருக்கும் நான், தன் மகள் ரூபியை அவள் தேர்ந்தெடுத்த துணையிடமிருந்து பிரித்து அடித்து துவைத்து தன்னை அடிமைப்படுத்திய கணவன் லாசரஸிடமே அவளையும் ஒப்படைக்கும் எஸ்தரையு ம் மன்னிக்க இயலவில்லை. வாழ்க்கையை சகித்துக்கொள்வதும் வாழ்வு தான் என்றால் அதை எழுதுவதும் படைப்பு தான்.
லீனா மணிமேகலை
19 டிசம்பர் 2016